மரபுக்குப் புது வரவு

 

—பாச்சுடர் வளவ. துரையன்

[சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து]

எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக் கவிதைகள் எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியன. அதனால்தான் பாரதியும் அவர் தாசனும் இன்னும் வாழ்கிறார்கள். இன்றும் பல இதழ்கள் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன. மரபுக் கவிதைக்கென்றே சில இதழ்களும் வெளிவருகின்றன. ஒருமுறை மேலாண்மை பொன்னுச்சாமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது “ஏன் நீங்களெல்லாம் மரபுக் கவிதை எழுதுவதை விட்டு விட்டீர்கள்” என்று கேட்டார்.

”மரபுக் கவிதைகளை நன்கு படித்து உள் வாங்கியவர்களால்தான் நவீன கவிதைகளைச் சிறப்பாக எழுத முடியும்” என்கிறார் விக்ரமாதித்யன் நம்பி. “ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சியை ஊட்டுவது மரபுக் கவிதைகள்தாம்” என்கிறார் பொன்னீலன் அண்ணாச்சி.

இவை எல்லாம் சந்தர் சுப்ரமணியனின் ’நினைவு நாரில் கனவுப் பூக்கள்’ மரபுக் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது எழுந்த எண்ணங்களாகும். நூலில் உள்ள 28 கவிதைகளும், கருத்தமைவோடு, யாப்பமைதியுடன், ஓசைநயத்தோடு விளங்குகின்றன. கவிஞனின் பாடுபொருள் என்பது திட்டமிட்டு உருவக்கப்படுவது அன்று. இதைத்தான் பாடவேண்டுமென்று இயந்திரத்தனமாய் எழுதப்படும் கவிதைகள் கால வெள்ளத்தில் நிற்க மாட்டா. பல காட்சிகள், பொருள்களைக் கவிஞன் கண்டாலும் சில மட்டுமே அவன் மனத்தில் படிந்து கவிதைகளாகின்றன.

மாறிவரும் நவீன உலகில் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்க போன்சாய் மரங்கள் வைப்பதைப் பர்க்கிறோம். அவற்றைப் பார்க்கும்போது, கட்டிப் போடப்பட்டிருக்கும் சிறு குழந்தையும், இறக்கைகள் வெட்டப்பட்டு ஜோசியம் பார்க்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியும்தாம் நினைவுக்கு வருகின்றன. கவிஞர் இவர் கேட்கிறார்.

புதுமை படைக்கும் துணிவிருப்பின் – உம்

புறத்தார் கரத்தை உடைத்தெடுங்கள்;

நிதம்உம் நகங்கள் பிரித்தெடுங்கள் – அதில்

நிம்மதி பெற்று நெகிழ்ந்திருங்கள்

“போன்சாய் மரங்களைப் புதுமை என்றுதானே சொல்கின்றீர்; புதுமை வேண்டும் வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களின் கைகளை வெட்டிக் கொள்ளட்டும்; தினம் தோறும் தம் நகங்களை விரல்களிலிருந்து பிரித்தெடுக்கட்டும்” என்று சந்தர் சுப்ரமணியன் சற்றுக் கோபமாகவே எழுதுகிறார் மேலும் காட்டில் அமர்ந்து தவம் செய்யும் முனிவரைக் கொண்டுவந்து வீட்டுக் கூடத்தில் உட்கார வைப்பதை போன்சாய்க்கு உவமையாக்குகிறார். ’தோப்பைத் துறந்த குறுமுனி’ என்பது சிறப்பான உவமை.

’நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே’ எனத் தொடங்கும் பாடலில் பாவேந்தர் பாரதிதாசன் நிலவுக்கு உவமைகளாக “ பூத்த தனிப் பூவோ? சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ? ஒளிப் பிழம்போ? “ என்று அடுக்கிப் பாடுவார். அதுபோல நாணலைச் சொல்ல வந்த இந்தக் கவிஞர் பல உவமைகள் கூறுகிறார். சில நயம் மிக்கவை.

”ஆறு செல்லும் திசை நோக்கி பாதம் பதித்து நடக்கும் வழிகாட்டி அது. நிலம் எனும் வில்லில் நதி எனும் அம்பைச் செலுத்தக் கட்டப்பட்டிருக்கும் நாண் அது. ஆற்றின் பரப்பை உடைக்க முயலும் வாள்முனை அது. நதியின் தூண்டில் அது. தன்னை மறந்தோடும் நதியை தலையை அடிக்கும் பிரம்பு அது.”

என்பதெல்லாம் புதிது புதிதாய் இயல்பாய் உள்ளன. ஆனால் அவர் காட்டும் ‘திரௌபதியின் கூந்தல்’ சிவனின் நர்த்தனம் என்பன செயற்கைதாம்.

தொழிலாளர் பற்றிப் பாடும் போது, அவர்களின் குடல் நாள்களைத் தின்று நகர்கிறது’ என்றும் ’தோள்களில் எப்போதும் வியர்வைக் கடல்’ என்றும் எழுதியிருப்பது யதார்த்தமானது. பாலியல் தொழிலாளர் பற்றிக் கூறும்போது ‘அவர்களை விட்டிலாக்கி அவை விளக்கு வெளிச்சத்தின் உடல் கண்டு விழுகின்றன’ என்பதால் விளக்கான ஆடவர்க்கும் அதில் பங்கு உண்டென்கிறார். பிறகு அவர்களையே விளக்காக்கி வருபவரை விட்டில்களாக்குகிறார். ஒரே கவிதையில் இவ்வாறு உவமைகளை மாற்றுவதும் புதுமைதான். ஆனால் குழப்பம் ஏதுமின்றி தெளிவாக இதைச் செய்வதில் கவிஞர் வெற்றி பெறுகிறார்.

’என் கவிதை’ கவிதைக்கணங்கள்’ ’விட்டில்களுக்கு விலையான விளக்கு’ ஆகிய கவிதைகள் சிறப்பான சிந்துக் கவிதைகள் ஆகும். ‘ஜீவநதி’ நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்தது. [எடுத்துக் காட்டு: பாரதியின் வெள்ளிக் கமலத்திலே பாட்டு]’ நீளும் நதியில் நாணலொன்று’ ’சிறு துளிகள்’ என்பன சிந்து வகையில் சேரா; அவை அறு சீர் விருத்தங்கள்.

தாரிணி பதிப்பகம் நல்ல தாளில் சிறப்பான அச்சில் நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பொருளடக்கம் போட்டிருக்கலாம்; சில கவிதைகளை எதுகை நன்கு வெளிப்படுமாறு இரண்டாம், நான்காம் அடிகளை சற்ரு உள்ளிழுத்து அச்சடித்திருக்கலாம். ’நிர்வாணம்’ கவிதையில் இறுதி அடி மட்டும் அடுத்த பக்கம் 15-க்குப் போனதைத் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் கவிதைகள் எழுதத் துடிப்போரும், நல்ல கவிதைகள் நாட விரும்புவோரும், அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு இது என்று துணிந்து கூறலாம்.

[நினைவு நாரில் கனவுப் பூக்கள்—மரபுக் கவிதைத் தொகுப்பு—சந்தர் சுப்ரமணியன்— வெளியீடு : தாரணி பதிப்பகம்—அடையாறு, சென்னை—600 020; பேசி : 044-2440 0135 / 99401 20341 ]

Series Navigation