மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்

டாக்டர் ஜி. ஜான்சன்

சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள்.
இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும்.
இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை.
வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளின் புகை, இரசாயனப் புகை போன்றவற்றாலும் இது உண்டாகும் வாய்ப்புள்ளது. ஆனால் புகைக்கும் பழக்கம்தான் இவை அனைத்தையும்விட முக்கிய காரணமாகும்.புகைத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலோருக்கு இந்த உண்மை தெரியாது. அனால் நீண்ட காலம் புகைத்தபின்பு நடுத்தர வயதில் இது உண்டாவதால் இதை இயல்பான ஒன்றாக பலர் கருதிவிடுவதுண்டு.புகைப்பதால் வரும் இருமல் பிரச்னை என்று அவர்களே கூறுவார்கள்.

நோய் இயல்
Normal Lung
இந்த நோயில் சுவாசக் குழாய்கள் அழற்சியால் வீக்கமுற்று, சளி சுரப்பிகள் அதிகம் சுரந்து அடைப்பை உண்டுபண்ணுவதால் சுருக்கம் உண்டாகி சுவாசிப்பதில் தடை ஏற்படுகிறது. நுரையீரலின் நுரை போன்ற காற்றுப் பைகளில் மாற்றம் உண்டாகி அவை விரிவடையும் தன்மையை இழந்துவிடுகின்றன.இதனால் காற்று வெளியேற முடியாமல் தடை பட்டு மூச்சுத் திணறலை உண்டுபண்ணுகிறது. இ)தனால் ” ப்ரோங்கைட்டிஸ் “.( Bronchitis ) ” , ” எம்ப்பிசீமா ” ( Emphysema ) என்ற இரண்டு விதமான நுரையீரல் பாதிப்புகளும் இதனுடன் மிகவும் தொடர்புடையது.
COPD
அறிகுறிகள்

சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா மாதிரியே தோன்றினாலும் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஆதலால் அறிகுறிகளில் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது நல்லது. அவை வருமாறு;

* இருமால் சளி – சுவாசக் குழாய் அடைப்பில் இது தொரடர்ந்து காணப்படும். ஆஸ்த்மாவில் இது விட்டு விட்டு வரும்.
* வயது – சுவாசக் குழாய் அடைப்பு நோய் 35 வயதுக்கு மேல் உண்டாவது. ஆஸ்த்மா இளம் வயதிலேயே உண்டாகும்.
* தோல் தொடர்புடைய ஒவ்வாமை – இது ஆஸ்த்மாவில் உண்டாகும்.
* மூச்சுத் திணறல் – ஆத்மாவில் அவ்வப்போது திடீர் என்று தோன்றும். சுவாசக் குழாய் அடைப்பு நோயில் இது தொடர்ந்து காணப்படும்.
* இரவில் அறிகுறிகள் – ஆஸ்த்மாவில் இது அதிகம் இருக்கும்.
* ஸ்டீராய்ட் மருந்துகளால் நிவாரணம் – ஆஸ்த்மாவில் உடன் நிவாரணம் கிட்டும். சுவாசக் குழாய் நோயில் நிவாரணம் கிட்டாது.
* உடல் எடை குறைவு – சுவாசக் குழாய் நோயில் உடல் எடை குறையும்.
* நெஞ்சுப் பகுதி மாற்றம்.- நெஞ்சுப் பகுதியில் தொடர்ந்து காற்று அடைப்பு உண்டாவதால் அது உருண்டையாக காணப்படும்.

Xray COPD
பரிசோதனைகள்

* நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகள்.
* இரத்தப் பரிசோதனைகள்
* நெஞ்சு எக்ஸ்ரே பரிசோதனை
* சி.டி .ஸ்கேன் பரிசோதனை.
* இ .சி. ஜி. பரிசோதனை.

சிகிச்சை முறைகள்

* புகைப்பதை நிறுத்துவது- – இதுவே சிகிச்சையில் மிகவும் முக்கியமானது. பல வருடங்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உடன் நிறுத்துவது சிரமம்தான் . ஆனால் வேறு வழியில்லை. எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்.

இது நுரையீரல் தொடர்புடையதால் மருத்துவமனையில் இந்தப் பிரிவுக்குச் சென்று இது தொடர்புடைய சிறப்பு மருத்துவ நிபுணரைப் பார்த்து ஆலோசனைப் பெறுவது மிகவும் நல்லது. அவர் உங்களைப் பரிசோதனை செய்துவிட்டு அதற்கேற்ப சிகிச்சை தருவார்.

* சுவாசிக்கும் மருத்துகள் – ஆஸ்த்மா போன்றே இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். இவை உடன் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டவை.

* ஸ்டீராய்ட் மருந்துகள் – இவை வீக்கத்தைக் குறைக்கும் என்பதால் இவற்றையும் பயன்படுத்தலாம்.

* எண்டிபையாட்டிக் மருந்துகள் – கிருமித் தொற்று இருப்பின் அதற்கு எதிராக பயன்படுத்தலாம்.

( முடிந்தது )

Series Navigationதொட்டில்அம்மா