மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17

மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம்.

18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். அக்குரல்களில் மனிதர்கூட்டத்தின் எல்லாவயதும் இருப்பதாகப்பட்டது. ஆண்கள், பெண்களென்று குரல்களைப் பிரிந்துணர முடிந்தது. நீர்ப்பாசிப்போல அத்தனை சுலபமாக பிரிக்கவியலாத நிராசையும், தவிப்பும், விரக்தியும் ஏமாற்றமும், அவமானமும் அவற்றில் படிந்திருப்பதை பாதரே பிமெண்ட்டா சிறிது நேரம் படுத்தபடி கேட்டார். அவை எங்கிருந்து வந்ததென்பதை யூகிக்க ஒரு சில நொடிகள் பிடித்தன. அநேகமாக அவர் நினைப்பதுபோல கோயிலிருக்கும் திசையிலிருந்தே வந்திருக்கவேண்டும். இரண்டு நாட்களாக சிதம்பரத்தையும் அதன் மக்களையும் பார்க்கிறார். கோவில்களில் தீட்சதர்கள் பணிகளில் ஒரு மெத்தனத்தைப் பார்க்க முடிந்தது. பக்தர்கள் தீட்சதர்கள் நலன் விசாரிப்பில் கவலைகள் தொனிப்பதையும் அவதானிக்க முடிந்தது. கூடிக்கூடி பேசுகிறார்கள். அந்நியர்களைப் பார்த்ததும் விலகி திசைக்கொருவரராய் நடக்கிறார்கள். நகரில் வீசிய காற்றிலும் பகல் பொழுதிலுங்கூட அசாதரன வெப்பத்தையும், இறுக்கத்தையும் விளங்கிக்கொள்ள முடிந்தது.. திண்ணையில் வெற்றிலை செல்லத்துடன் உட்கார்ந்து உரையாடிய ஆண்களிடம் பேசலாமென்று இவர் நெருங்கினால், அவர்கள் கலவரமடைந்து கலைந்துபோனார்கள். பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நேற்று படுக்கபோகும் முன் பாளையக்கார இளைஞன் வெகு நேரம் பிரச்சினையை விளக்கினான்.

தக்க நேரத்தில் தலையிட்டு, முகம்மதியர்களால் தொடரவிருந்த ஆபத்துகளிலிருந்து வைணவத்தையும் சைவத்தையும் விஜய நகர இராயர்கள் காப்பாற்றி பீடங்களிலும், மடங்களிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றாலும் அவர்களின் கூடுதலான வைணவ நம்பிக்கை அவ்வப்போது நிர்வாகத்தில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவந்தன. சிதம்பரத்தை பொறுத்தவரை இரண்டாம் குலோத்துங்கன் என்பவன், கோவிந்தராஜர் சிலையை கடலில் எறிந்து சைவர் -வைணவ பிரச்சினையை ஆரம்பித்துவைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கான மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு அங்காங்கே கோவிந்தராஜரை அச்சு அசலாக நிர்மாணித்து வைணவர்கள் சமாதானம் அடைந்தாலும் சிதம்பரத்தில் சிவனுக்கு அருகே மீண்டும் பெருமாளையும் கொண்டுசேர்த்துவிட வேண்டுமென்ற முயற்சியில் அவர்கள் சோராமலிருந்தனர். அவ்வாறான கனவை புணருத்தானம் செய்யவேண்டிய கடமை ஒரு வைணவனான தமக்கிருப்பதாக கிருஷ்ணப்ப நாயக்கரும் நம்பியதும், அதனை சைவர்களென்ற வகையில் தடுக்கவேண்டிய கடமை தங்களுக்கிருப்பதாக உள்ளூர் தீட்சிதர்கள் நம்பியதும் வழக்கம்போல விபரீதத்திற்கான காரணங்கள்.

படுக்கையிலிருந்து பிமெண்ட்டா எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் துடைத்தார். காலையில் முடிந்த அளவு வேளையாய்க் கோவிலுக்குப் போகவேண்டுமென வேங்கடவன் கூறியிருந்தான். பயண அலுப்பும் இந்திய வெப்பமும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக கண்ணயர செய்துவிட்டன. முழங்காலில் நின்று: அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. ஆமேன் என சிலுவைப்போட்டுக்கொண்டு எழுந்தார்.

காலை கடனை எங்கேயாவது வெளியிற்சென்று முடிக்கவேண்டும் நிர்ப்பந்தமில்லை, காத்திருக்கமுடியும். திரையை விலக்கி கூடாரத்தின் மறுபக்கம் நுழைந்தார். முழங்கால் தோய தரையில் அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண்மணி எழுந்து பவ்யமாக கும்பிடுபோட்டாள். பெரிய பாத்திரமொன்றில் வெந்நீர் வைத்திருந்தது. “நீ போகலாம்” என்று கையை அசைத்ததும் அவள் மீண்டும் இடுப்பை மடித்து மார்புகள் தொங்க வணங்கி கால்களை பின்வாங்குவுவதுப்போல நடந்து சென்று மறைந்தாள். ஒரு துவாலையைத் சுடுநீரில் நனைத்து அழுத்தத் துடைத்து திருப்தியுற்றவராய் தமது சேசுசபையினருக்குரிய அங்கியை அணிந்து இடுப்பில் சுற்றியிருந்த நூல் கயிற்றை இறுக்கி முடிச்சுபோட்டார். மேசையிலிருந்த தொப்பியை ஒருமுறைக்கு இருமுறை தலையில் பொருத்தி தமக்குத்தானே நிறைவு கண்டவராய் புன்னகைத்துக்கொண்டார். பாடம் செய்த தோலில் குறிப்புகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்துக்கள் ராச்சியத்தில் குறிப்பாக தென்பகுதிகளில் எழுத உபயோகிக்கும் ஓலைசுவடிகளும், எழுத்தாணியும் அவருக்கு வசதியாக இருந்ததோடு எளிதில் கிடைக்கக்கூடினவைகளாக இருந்தன. நான்கைந்து ஓலை நறுக்குகுகளையும், எழுத்தாணியைம் மறக்காமல் அங்கியிலிருந்த பையில் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் தமது அலுவல் பற்றிய முழுவிபரத்தையும் எழுதிவைத்து பின்னர் சேசு சபையினரின் பொதுச்சபைக்கு அதை அனுப்பவேண்டிய கடமைகள் அவருக்கு இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அருகிலிருந்த மேசையில் ஒரு தட்டில் கிழங்கும், அடையும் இருந்தன. அதனை வேண்டாமென்று தவிர்த்துவிட்டு கூடாரத்தின் வாசலில் மனிதர் மனிதர் நடமாட்டம் தெரிவதுபோலிருக்க; யாரங்கே! என குரல் கொடுத்தார்.

காவலன் ஒருவன் உள்ளேவந்தான். கோவிலுக்குப்போகத் தயாராக இருக்கிறேனென உங்கள் எஜமானரிடம் சொல், என்றார். உத்தரவுக்குக் கீழ்படிந்தவன்போல அவன் கூடாரத்தை விலக்கிக்கொண்டு வெளியிற் சென்ற அடுத்த சில நிமிடங்களில் பாளயக்கார இளைஞன் உள்ளே நுழைந்தான்.

– வந்தனம் ஐயா, நன்றாக உறங்கினீர்களா? நீங்கள் தயாரென்றால் உடனே கிளம்பலாம். ஏற்கனவே மன்னர் இராஜகுரு, பிரதானி, காரியதரிசிகளோடு கோவிலுக்குச்சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. முடிந்த அளவு விரைவாக செல்லமுடியுமெனில் நல்லது.

– தில்லை தீட்சிதர்களுக்கு செஞ்சி மன்னர்மீது கோபம் இருக்கிறது போலிருக்கிறதே?

– அவர்களுக்கு சிதம்பரம் எல்லைக்குள் வைணவக் காற்று வீசிவிடக்கூடாது. செஞ்சி நாயக்கரோ, கோவிந்தராஜருக்குக் கொஞ்சம் இடம்கொடுப்பதால் மூலட்ட நாதருக்கு நட்டமில்லை என்கிறார். தீட்சதர்கள் காட்டும் பிடிவாதமும் எரிச்சல் தருகிறது. நிறைய பேச இருக்கிறது. உங்கள் தேசத்திலும் மதச்சண்டைகளுண்டா?

– இல்லாமென்ன ஏராளமாக இருக்கின்றன. மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம்.

இருவரும் வெளியில் வந்து நின்றதும், காவலரிருவர் இரண்டு குதிரைகளை கொண்டுவந்தனர். ஒரு குதிரையில் பிமெண்ட்டா ஏறி அமர்வதற்கு காவலர்கள் உதவினார்கள்; மற்றொன்றில் இளைஞன் ஏறி அமர்ந்தான். பாளையக்கார இளைஞனும் பிமெண்ட்டாவும் தெற்கு வாசல் கோபுரத்தினருகே இறங்கிக்கொண்டதும் காவலர்கள் இருவர் ஓடிவந்து குதிரைகளுக்கு அருகில் நின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கோபுரத்தை பலமுறை கண்டிருந்தார். அன்றைய தினம் அதன்மீது கருநிழல் படிந்திருப்பதைப்போல பாதிரியார் உணர்ந்தார். கோபுரத்திற்குமேலே சுற்றிவந்த கழுகுகள் அவரது எண்ணத்தை உறுதிசெய்தன

– உங்கள் தலைவன் யார்? – வேங்கடவன் தன்னை நெருங்கியிருந்த காவலர்களிடம் கேட்டான்.

– பரட்டையன்

– அவரை நான் கூப்பிடுகிறேனென அழையுங்கள்.

சற்று தள்ளி வேறு சில காவலர்களுடனிருந்த பரட்டையன் என்பவன் புரிந்துகொண்டதுபோல வேகமாய் நடந்துவந்து இளஞனை வணங்கினான்.

– எங்கள் காவலர்கள் எங்கேபோனார்கள்?

– உள்ளூர் மக்கள் அதிகமாக உபயோகிக்கும் இவ்வாயிலில் செஞ்சிக் காவலர்கள் இருப்பதுதான் நல்லதென்று உங்கள் தந்தையார் தெரிவித்த யோசனைப்படி நாங்கள் இருக்கிறோம்.

– கோவிந்தராஜர் திருப்பணி ஆரம்பித்துவிட்டதா?

– இல்லை ஆரம்பிக்கவேண்டிய தருணம்தான். மன்னர், சோழகனார், ராஜகுரு, கட்டுமான பணி ஆட்கள், கல்தச்சரென எல்லோருமே நேரத்திற்கு திருப்பணியைத் தொடங்க அங்கே வந்துவிட்டார்கள். ஆனால் பூஜை செய்யவந்த தீட்சதர்களும் பிறரும் நேற்றிலிருந்தே கோவிலே கதியென்று தங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களெல்லாங்கூட இரவோடு இரவாக கோவிலுக்குள் நுழைந்தவர்கள், உள்ளேயே இருந்திருக்கிறார்கள். திருப்பணியைத் தொடங்கக்கூடாதென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஊர்ப்பெரியவர்களை அழைத்துவந்து சமாதானமும் படுத்தியாயிற்று கேட்பதாக இல்லை. இனி ஒருவரையும் ரையும் உள்ளே விடக்கூடாதென்று உங்கள் தந்தையின் உத்தரவு.

– அப்படியா? உத்தரவுப்படி நடவுங்கள். இவர் என்னோடு வந்திருக்கிறார். வெளிதேசத்தவர். மன்னரைப்பார்ப்பதற்கென கடல் கந்து வந்திருப்பவர்.

காவலர்கள் ஒதுங்கிக்கொண்டதும் பிமெண்ட்டாவும், வேங்கடவனும். பிரகாரத்தினுள் நுழைந்தார்கள். மூலட்டநாதர் சன்னதியிலிருந்தபடி நடராஜரை இளைஞன் வணங்கிமுடித்ததும் இடப்புறம் தெரிந்த கோவிந்தராஜர் சன்னதியை நோக்கி நடந்தார்கள். நெருங்க முடியாதாவகையிற்கூட்டம். கல்தச்சரும், அவரது ஊழியர்களும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர். கனகசபையில் அமர்ந்தபடி அவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த மன்னர் நாயக்கர் கருத்த முகமும் சிவந்த விழிகளுமாக இருந்தார். வேல்பிடித்த காவலர்களும், துப்பாக்கிப்பிடித்த வீரர்கள்களும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

– எங்களை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளேவைக்க அனுமதிக்கமாட்டோம். சபேசதீட்சதர் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். கையை அசைத்துப் பேசினார், அவர் சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது.

– தீட்சிதரே, நீங்கள் என்ன பேசுகிறோமென்று தெரிந்துதான் பேசுகிறீர்களா? உங்கள் முன்னே இங்கே அமர்ந்திருப்பவன் யாரோ எவரோ அல்ல? மன்னன். உங்கள் தலையைச் சீவச்சொல்லி உத்தரவிடுவது எனக்குக் கடினமான பணியல்ல. கோவிலில் எதற்கு இரத்தத்தை சிந்தவைத்து அபகீர்த்திக்கு ஆளாக வேண்டுமெனப் பார்க்கிறேன். மஹாராயரையே பல நேரங்களில் அச்சமுறுத்திக்கொண்டிருக்கும் எனக்கு கோவில் நைவேத்தியம் செய்து பிழைக்கு நீர் சவால் விடுகிறீரா? நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள்.

– கோபுரத்தில் ஏறி உயிரைவிடுவோம்.

– அதை தடுப்பபோவதில்லை. உங்களுக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாக..

கிருஷ்ணப்ப நாயக்கர் சொல்லி வாய்மூடவில்லை.

சங்கரா! மகாதேவா! ஒருகுரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம் கேட்டது. காலைபரப்பிக்கொண்டு இறந்துகிடந்தார். தலையைச்சுற்றி குருதி கரும் சிவப்பில் மெல்ல பரவிக்கொண்டிருந்தது. பார்க்கச் சகியாதவர்கள் தலையைத் திருப்பிக்கொண்டார்கள். பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! சம்போ மகாதேவா! எனக் குரல்கள் கேட்டன.

திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தொடங்கிய பணியை நிறுத்திவிட்டு என்ன செய்யலாம் என்பதுபோல தங்களுடைய எஜமானர்கள் ஆணைக்குக் காத்திருந்தார்கள்.

– திருப்பணி காரியதரிசி பிரதானியையும், மன்னரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றார். பிரதானி, மன்னரின் உத்தரவுக்கு காத்திருப்பதுபோல தெரிந்தது.

– பிரதானி, என்னைப் புரிந்துகொண்டுமா, காத்திருக்கிறீர்கள். இந்தக்கோவிலை கட்டி முடித்துவிட்டே கிருஷ்ணபுரம் திரும்புவதாக சபதம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். கோவிந்தராஜர் சன்னிதானம் இங்கே சீரும் சிறப்புமாய் எழுந்தே தீரும். அதை எத்தனை தீட்சதர்வந்தாலும் தடுத்து நிறுத்தமுடியாது.
வேலைகள் நடக்கட்டும்.

மீண்டும் சங்கரா! மகாதேவா! என்ற குரல். குரலைத் தொடர்ந்து ஐம்பது வயது முதிய தீட்சிதரின் சரீரம் ஏதோ கிணற்றில் விழுவதுபோல குதித்தார். தோண்டியைப்போட்டு உடைப்பதுபோல சத்தம் கேட்டது. கிழவி ஒருத்தி மார்பிலடித்துக்கொண்டு ஓடி வந்தாள். .ஐயா! என்னை இப்படி தவிக்கவிட்டுப் போவீரென நினைக்கலையே! என்று கதறினாள்.

கிருஷ்ணப்ப நாயக்கர் இவற்றாலெல்லாம் பாதிக்கப்பட்டவர்போல தெரியவில்லை. நிதானத்திற்கு வந்திருந்தார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். சோழகனாரும், பிரதானியும், அரசகுருவும், அரசாங்கத்தின் காரியதரிசிகளும் பிறரும் கைகளைப் பிசைகொண்டு அமர்ந்திருந்தனர். திருப்பணி ஊழியர்கள் புரிந்துகொண்டனர். வேலையை நிறுத்தினால் தங்கள் தலை தப்பாது என்பதைப்போல வேலையில் கவனம் செலுத்தினர். கழுகுகளின் கூட்டம் தெற்கு பிரகாரத்தில் அதிகரித்திருந்தன. காக்கைகள் ஒன்றிரண்டு பிணங்கள் மீது அமர முயற்சிப்பது தெரிந்தது.

நாயக்கர் திடீரென்று அமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து வெகுண்டு எழுந்தார்.

– எதற்காக ஒவ்வொருவராகச் செத்து மடிகிறார்கள். அனைவரையும் சுட்டு தள்ளுங்கள்- கணீரென்று ஆணை பிறந்தது.

துப்பாக்கிய ஏந்திய காவலர்கள் தயங்கி நின்றார்கள். அரசரின் சொல்லுக்குள்ள மகிமையை உணர்ந்தவர்களாய் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். இருவர் சுருண்டுவிழ கூட்டம் சிதறி ஓடியது.
அன்றைக்கு சபேச தீட்சதர் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ குதித்து தன்னை பலிகொடுத்திருந்தார். ஈஸ்வரர் தீட்சதரை அடுத்து மகள் சிவகாமியோடு பரமேஸ்வரி குதிப்பாளென தீட்சதர்களிலேயே பலர் எதிர்பார்க்கவில்லை. நடுத்தர வயது பெண்ணொருத்தி வேகமாய் ஓடிவந்து கிருஷ்ணப்ப நாயக்கரிடம் ஆவேசமாய் வாதிட்டாள். பின்னர் சட்டென்று கழுத்தை அறுத்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். பிமெண்ட்டா யார் அந்தப் பெண்மணி எனக்கேட்டார்? சபேச தீட்சதரின் மனைவியென்று பதில் வந்தது. சில உடல்களில் வெகுநேரம் உயிர் இருந்ததென குளக்கரை பெண்கள் பேச்சில் தெரியவந்தது. இரவு, பிமெண்ட்டா தமது நாளேட்டில் கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சிதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்.

———————————————–

Series Navigationஇராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்புதியதோர் உலகம் – குறுங்கதை