மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

 

பெய்யெனப்

பெய்யும் மழை

என்பது போல்

சொல்லெனச் சொன்னவுடன்

வெடித்து வடிக்க

என்னிடம் ஒன்றும்

கவிதைக் கற்பு இல்லை.

குளிர்ந்து இறங்கும்

மேகத்தாரை

காற்றுடன் மோகித்துச்

சல்லாபிக்கும்

ஆனந்தக் கூத்தை

ரசிப்பது மட்டுமே

மழைத் தருணங்களுக்கு

நான் தரும் மரியாதை

என்றிருப்பினும்

இடியையும் மின்னலையும் போல

மழைக் காற்றின்

மூர்க்க முயக்கத்தை

வியந்து சொல்லும்

விந்தையாற்றலும் என்னிடம் இல்லை

எனக்குள்

எங்கெங்கோ சிதறிக் கிடக்கும்

சின்னச்சின்ன வார்த்தைகளை

மழை முடிந்து

அடங்கின பின்தான்

கோர்க்க முடிகிறது

மழையின் நினைவாய்த்

தேங்கி நிற்கும்

குட்டை நீரில்

குழம்பி நிற்கிற

கூளத்தின் நடுவில் மிதக்கும்

ஒரு காட்டுப்பூ போல

எனக்குள்ளும்

மழையின் பின் நினைவாய்

ஒரு கவிதை நிற்கலாம்.

என்றாலும்

ஒரு குடை, ஒரு மங்கை

இவற்றோடு நானும் என்ற

ஓர் அமைதியான

சித்திரக் காட்சியாக

மழை நாட்கள்

எனக்குள் தீட்டிவிட்டுச் செல்லும்

சந்தோஷம்

மழை இல்லாத நேரங்களிலும்

சாரல் தெளித்துவிட்டுப் போகும்

—–   ரமணி

Series Navigationநகுலன் கவிதைகள்மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி