மாமனார் நட்ட மாதுளை

நொயல் நடேசன்


பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன்.

மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன்.

எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளைச் செடி எனது மாமனாரால் நடப்பட்டது. அவரது மகளுக்கு அது அப்பா நட்டது என்று சொல்வதில் ஆனந்தம்.அவரது காலத்தில் வீட்டில் எமது செழிப்பான வீட்டுத் தோட்டமிருந்தது. அவர் தனது பெரும்பாலான ஓய்வு நேரத்தைத் தோட்டத்திலே செலவளிப்பார். மாமியாரின் கிறீஸ்த்துவ நற்சிந்தனைகளில் இருந்தது தப்பும் புகலிடமாக இந்த வீட்டுத்தோட்டம் இருந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை

விவசாயத்திற்கும் எனக்கும் அதிக தூரமென்பதால், அவர் இறந்தபோன பின்பு பல பழமரங்கள் பட்டுவிட்டன. இந்த மாதுளைச்செடி மட்டும் அவரது பெயரை சொல்லியபடி நிற்கிறது.

அதில் தற்போது கனியாகும் மாதுளையை உண்ணும்போது எனது 18 வயதில் ஏற்பட்ட முதல் உடலுறவை நினைவுக்கு வரும். அவ்வளவு இனிப்பு. நிறமும், மாலை சூரியனை நாணம்கொள்ள வைக்கும். விதைகள் வாயில் ஒரு கடியில் கரைந்துபோகுமளவு மிருதுவானவை.கடந்த வருடத்தில் அந்த மாதுளைச் செடி நூற்றுக்குமேல் காய்த்தபோது முகநூலில் போட்டதுடன் பலருக்கு பகிர்ந்தளித்தோம். முகநூலில் பார்த்த பலர் என்மனைவியிடம் கேட்டபோது முகநூலே அறியாத எனது மனைவி

“எல்லோரது கண்ணும் பட்டுவிடும். இது தேவைதானா” என்றார்

கண்ணூறு பற்றி அப்போது அவருக்கு நம்பிக்கை இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. நானும் அதை புறந்தள்ளிவிட்டேன். ஏதோ காரணத்தால் இந்த வருடம் கடந்த வருடத்தின் அரைவாசியே காய்த்தது. கண்ணூறு வேலை செய்ததோ எனக்குத் தெரியாது ஆனால் வீட்டில் இப்பொழுது அது ஈழத்தேசியம் போல் அசைக்கமுடியாத நம்பிக்கையாகிவிட்டது

கனிகள் குறைவானதால் மிகக் குறைந்தவர்களோடு மட்டும் பகிர்ந்ததுடன், நானும் ஒரு நாளைக்கு இரண்டு என சாப்பிடத் தொடங்கியபோது எனக்குக் காலையில் இரத்தத்தில் குளுக்கோசைப் பார்க்கும் மனைவி திடுக்கிட்டபடி “என்ன நடந்தது? இரத்தத்தில் குளுக்கோசு எட்டுக்கு மேலே உள்ளதே! என்ன தின்றீர்கள்? ” எனக்கேட்டார்

மெல்பனில் இலையுதிர்காலத்தின் குளிர்காலம் தொடங்கிவிட்டது.

“உடலை சூடாக்க நானும் இரண்டு கிளாஸ் விஸ்கியுடன் இரவு உணவின்பின் மாதுளம் பழமொன்றை சாப்பிட்டேன் ஆனால் மெற்போமின் 1000 கிராம் இரவு எடுத்தேன் ” என்றேன் அடுத்த பக்கம் திரும்பியபடி

காலையில் கோப்பியை கொண்டு வந்து அம்மாவை நினைவுக்குக் கொண்டு வந்தபோதிலும் அந்தக்காலத்தில் ‘காலையில் படுத்தபடியிருந்தால் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என இரையும் ‘ அப்பனை நினைவு படுத்திய கடுமை அந்தக் குரலில் இருந்து.

” இன்றைக்கு ஜிம்மிற்கு போனதா?

” மத்தியானம் போனேன். ”

“இந்த விஸ்கி எல்லாம் விடாவிட்டால் கிட்னி போய்விடும்.
அடுத்தநாள் விஸ்கியை குடிக்கவில்லை ஆனால் இரவு சாப்பாட்டிற்கு முன்பாக ஒரு மணிநேரம் ஜிம்னாசியத்துக்கு போய் வந்த பின்பாக சிறிதாகப் பார்த்து ஒரு மாதுளம் பழத்தை உண்டேன்

அடுத்தநாள் காலை எட்டு மணியளவில் எனது இரத்தம் பரிசோதிக்கப்பட்டது அப்பொழுதும் அந்த குளுக்கோசின் அளவு அதே அளவாக இருந்தது.

நான் சொன்னேன் “விஸ்கி குடிக்கவில்லை”

“அப்ப இந்த மாதுளம் பழம்தான்போலே இருக்கிறது”

நல்ல வேளையாக விஸ்கிக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் எனக்கு மனத்துக்குள் அரிசிச்சோறின்மேல் சந்தேகமிருந்தது

மாதுளையைப் புராதன கலாச்சாரங்களில் கொண்டாடினார்கள்

சீனர்கள் சந்ததி விருத்திக்கு உதவுமென உண்டார்கள் , இந்தியர்கள் அதே நம்பிக்கையில் பிள்ளையாருக்கு படைப்பதாகவும், யூதர்கள் 613 விதைகளும் 613 ரோரா என்ற புனித புத்தகத்தில் உள்ள 613 கட்டளைகள் எனக்கொண்டாடினார்கள். கூகிளில் பார்த்த பார்த்தபோது மாதுளையில் வைட்மின்களும் உடலுக்குத் தேவையான ஆயில்களும் கொண்டது என இருந்தது.

உதிரத்தில் குளுக்கோசு கூடினாலும் மாதுளம் பழத்தை உண்டு தீர்ப்பது என முடிவெடுத்துள்ளேன்

Series Navigationபியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்உனக்குள்ளே !உனக்கு வெளியே !