மாமழையும் மாந்தர் பிழையும்!

மேகலா இராமமூர்த்தி

mekala

 

தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.

 

விளைவு…? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் சிலநாட்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறும் தமிழகத்தின் அவலநிலையை என்னென்பது?

 

மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீரைச் சரியான முறையில் தேக்கிவைப்பதும், அதனைப் பாதுகாப்பதும் அரசின் தலையாயக் கடனாகும். இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றும் கரிகாற்சோழனைப்போல் புதிதாய்க் ’குளம்தொட்டு வளம்பெருக்க’ வேண்டியதில்லை. ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கும் ஏரிகளையும், ஆறுகளையும், குளங்களையும் ஒழுங்காய்த் தூர்வாரிப் பராமரித்திருந்தாலே போதும். அவற்றின் நீர்க்கொள்ளளவு அதிகரித்திருக்கும்; கனமழையின் தாக்கத்தால் அவை உடைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கும். அரசாங்கம் இத்தகைய செயல்களில் போதிய கவனம் செலுத்தியதாய்த் தெரியவில்லை.

 

சங்கடமான இச்சூழலில், நம் பண்டை மன்னர்களைக் குறித்துப் ’பழம்பெருமை’ பேசாதிருக்க முடியவில்லை. அவர்கள் எதில் திறன்வாய்ந்தவர்களோ இல்லையோ நீர்நிலைகளைத் தேக்கிவைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதிலும் திறன்வாய்ந்தவர்களாகவே திகழ்ந்திருக்கின்றனர்.

 

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு, அணைகளைக் கட்டிவைத்து நீரைத் தேக்கிவைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவந்த குடபுலவியனார் எனும் புலவர்பெருந்தகை,

”போரிலே பெருவிருப்பமுடைய செழியனே! நீ மறுமை இன்பத்தை நுகர விரும்பினாலும்சரி…அல்லது…இந்நிலவுலகிலேயே நிலைத்த புகழைப் பெற விரும்பினாலும் சரி…நீ செய்யவேண்டியது என்ன தெரியுமா?

நீர்நிலைகளிலெல்லாம் நீண்ட கரையெடுத்து, அந்நீரைத் தேக்கி வைப்பாயாக! அப்போதுதான் உன்னுடைய புகழ், காலத்தை வென்று நின்றுவாழும்!” என்கின்றார். ‘Conservation of water resources’ என்று இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிறோமே, இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்புலவர் பெருமான், பாண்டிய நெடுஞ்செழியனிடம் எடுத்துரைக்கின்றார்.

 

”… வயவேந்தே
செல்லு  முலகத்துச்  செல்வம்  வேண்டினும்
ஞாலங்  காவலர்  தோள்வலி  முருக்கி
ஒருநீ  யாகல்  வேண்டினுஞ்  சிறந்த
நல்லிசை  நிறுத்தல்  வேண்டினு  மற்றதன்
தகுதி  கேளினி  மிகுதி  யாள
நீரின்  றமையா  யாக்கைக்  கெல்லாம்
உண்டி  கொடுத்தோ  ருயிர்கொடுத்  தோரே
[…]
அடுபோர்ச்  செழிய  இகழாது  வல்லே
நிலனெளி  மருங்கின்  நீர்நிலை  பெருகத்
தட்டோ  ரம்ம  இவண்தட்  டோரே
தள்ளா  தோரிவண்   தள்ளா  தோரே.” (புறம் – 18)

 

”தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் யாம்” என்று மார்தட்டிக்கொள்ளும் மேலைநாட்டாரும்கூட நம்முடைய நீர்ப்பாசன வசதிகளைகளைக் கண்டு பிரமித்துநின்ற காலமுண்டு! அவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விட்டன இன்று!

சென்னை மாநகராட்சியில் மட்டும் 124 ஏரிகள், 50 (கோயில்களைச் சார்ந்த) திருக்குளங்கள் இருந்தன என்கின்றது சென்னையில் இயங்கிவரும் சி.பி.ராமசாமி ஐயர் சூழலியல் கல்விமையம் (C.P.Ramaswami Aiyar Environmental Educational Center – C.P.R.EEC). ’இறைபக்தி’யில் இணையற்ற நம்மக்கள் பிளாஸ்டிக் பைகளையும், இன்னபிற குப்பைகளையும் வீசி அந்தத் ’திருக்குளங்களை’யெல்லாம் தெருக்குளங்களைவிட மோசமான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். அவற்றில் பல, அழுக்கான நீரோடு துர்நாற்றம் வீசுகின்றன! மேலும் சில குப்பைமேடுகளாய்க் காட்சிதருகின்றன!

 

ஏரிகள் என்னவாயின? அவற்றில் பல பராமரிப்பின்றித் தூர்ந்துபோயின. தூர்ந்துபோன அந்த ஏரிகளிலும், நீரற்றுக் காய்ந்துபோன குளங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் புதிது புதிதாய் முளைத்தவண்ணமிருக்கின்றன! இக்கட்டுமானங்களுக்காக, வறண்டுபோன ஆறுகளிலிருந்து லாரி லாரியாய் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. என்ன கொடுமை இது!

’வட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்யும்’ என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்திருந்தும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளாத அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு வருந்தத்தக்கது.

 

பொதுமக்களிடமும் பிழையில்லாமல் இல்லை. மனிதவளம் மிகுந்த நம் தமிழகத்தில்,  மக்கள் நினைத்திருந்தால், எதற்கெடுத்தாலும் அரசைச் சார்ந்திராது, மழைநீர்ச் சேகரிப்பு, குளங்கள், ஏரிகள், ஆறுகள் முதலிய நீர்நிலைகளைத் தூர்வாருதல், நகரைத் தூய்மைசெய்தல் போன்ற எத்தனையோ பயன்மிகு பணிகளில் தாமே ஈடுபட்டுத் தாம்வாழும் பகுதியைச் சிறப்பாய்ப் பேணியிருக்கலாம். ஏனோ நம் மக்கள் இவற்றிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை.

 

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! ’கண்கெட்ட பின்பு சூரியவணக்கம் செய்வதே  தமிழர் வழக்கம்’ எனும் நிலை மாறட்டும்! இனியேனும் மக்கள் விழிப்போடிருந்து மழைவளத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் முறையாய்ப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கமும், (வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக) ’இலவசங்களை’ அள்ளித்தந்து மக்களைச் சோம்பேறிகளாக்காமல், சமூக நற்பணிகளில் அவர்கள் முனைப்புடன் ஈடுபட ஊக்கமும், உற்சாகமும் அளிக்கவேண்டும்; ஏன்…சிறப்பாய்ப் பணியாற்றுவோருக்குப் பாராட்டும் பதக்கமும்கூட வழங்கி அரசு கவுரவிக்கலாம்!

 

இனிய தமிழ்மக்களே!
”வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” எனும் வள்ளுவரின் வாய்மொழியை உள்ளுவோம்! வாழ்வைச் செம்மையாக்க முற்படுவோம்!

 

Series NavigationSAVE THE DISTRESSED AT UDAVUM KARANGALபடித்தோம் சொல்கின்றோம் – குழந்தைப்போராளி நவீனம்