மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில்

உயிர்க்கும் ஃபீனிக்ஸே

வராதே

தோற்றுவிடுவாய்

வையத்தைப்

புரட்டும்

நெம்புகோல்

ஒரு வைரஸ்

‘தொட்டால் தீட்டு’

அட! இதுதானா?

தாமரை அறிவாளி

தொடவிடாது

தண்ணீரை

கிளிகளைத்

திறந்துவிட்டோம்

மனிதனை

அடைத்துவிட்டோம்

சிறகுகளை

வெட்டினோம்

கூட்டுக்கு இனிப்

பூட்டெதற்கு?

வானமே எல்லை

நேற்று

வீடே எல்லை

இன்று

உரசக்கூடாத

ஒரு மரத்துக்

கிளைகள்

நாம்தானோ?

‘தனித்திரு

விழித்திரு’

அட! இதுதானா?

ஆற்றுக்கும்

காற்றுக்கும்

பாதை புரியும்

நமக்கு?

ஓளியால் பார்க்கலாம்

ஒளியைப் பார்ப்பது

எங்ஙனம்?

எங்கும் மிதக்கும்

மர்மத் தூண்டில்கள்

மீன்களே ஜாக்கிரதை

மனித இனத்தின்

மரணப் பேழையில்

மாயப்பேனா

கையெழுத்து

புதைகுழிக்கு இனி

பூமியில் இடமில்லை

யுத்த காண்டம்

ஒற்றை எதிரி

வீழ்த்துவோம்

அமீதாம்மாள்

Series Navigationகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.பார்வையற்றவன்