மாயமனிதன்

காலையில்
நான் செய்தித்தாளில்
ஆழும் போது
அவன் தென்படுவான்
வாசிப்பில் எனக்குள்
ஓடும் எதிர்வினைகளை
அவன் பகடி செய்பவன்

என் செயல்களின்
வரிசையில்
இயந்திரத்தனமும் அடிமைத்தனமும்
அபூர்வ கிறுக்கு நொடிகளும்
அவனுக்கு
வேடிக்கையாய்

குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள்
இவற்றில் என் வேடங்கள்
அபிநயங்கள் மீது
அவன் விமர்சனம்
என்னை விரக்திக்கே தள்ளும்

எனக்கு முன்னால்
தூங்கி
நான் உறங்கும்போது
எழுந்து நடமாடி பின் உறங்கி
நான் விழித்த பின் எழுபவன் அவன்

என் இடங்களை
அவன் ஆக்கிரமிக்க
என் மௌனம் பிடிப்புள்ளதாய்
என் நடமாட்டம் அன்னியமாய்

என் கையிலிருக்கும் புத்தகத்தை
வாசிப்பான்
“உன் எழுத்தை விட இது
செறிவானது” என்பான்

ஒரு நாள்
நூலகத் தில்
என் கையிலிருக்கும்
புத்தகத்தை விட்டு
வேறு ஏதோ
தேடினான்

வெகு நேரம் கடந்து
நான் வீடு திரும்பும் போது
அவன் உடன் இல்லை

Series Navigationயாப்பு உறுப்பு: கூன்டெங்கூஸ் மரம்