மின்னல் கூடு

Spread the love

 

ருத்ரா 

தூக்கமே!

உன் தேனருவி

என் பாறாங்கல்லில் விழுந்து

இறுகிய என்

மனக்கிடங்கில் இந்த 

பனை நுங்குகளையும் 

சுவைக்கத்தருகிறது.

கனவுக்களின் அநிச்சப்பூக்களாய்

வருடும் மென்மையையும்

போர்த்தி விடுகிறது.

பகல் நேரத்து வியர்வையும்

கவலைகளும் 

ஒரு பசும்புல் விரிப்பாகி 

விடுகிறது.

ஆகாசத்தில் எத்தனை

நடசத்திரப்பூக்கள் என்று

எண்ணி எண்ணி விளையாடும் 

விளையாட்டையும் தருகிறது.

பஞ்சுப்பொதியாய் உலவும்

மேகமண்டலங்களை

நுள்ளிப்பார்த்து

வேடிக்கை பார்க்கத்தோன்றுகிறது.

வாழ்க்கையின் விளிம்புக்கு

வரும் வரை தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னோடு பழக்கமாகிக்கொள்ள‌

என்னோடு சினேகிதம் கொள்ள‌

அந்த மரணத்தை!

அந்த விளையாட்டுத்திடலில்

கண்ணுக்குத்தெரியாத ஒரு 

கை

தூக்கம் தழுவும் 

இதோ இந்த‌

இமைகளின் இடுக்குகளில் தான்

ஒரு மின்னல் கூடு கட்டி

தருகிறது.

பிஞ்சு அலகுகளைக்கொண்டு

உரசி

அந்த தூக்கணாங்குருவிகள் கூட‌

விசாரித்து விட்டுப்போகின்றன

இந்த தூக்கத்துள் பொதிந்து கிடக்கும்

அந்த துக்கத்தை.

_________________

Series Navigation கவிதைத் தொகுப்பு நூல்கள் 2துணைவியின் நினைவு நாள்