மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

 

0

ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா; விஷ வைரஸ் ஒன்றின் பரவலால் ஊட்டி நகரமே ஸோம்பிக்கள் எனும் மனித மிருகங்களால் சூழப்படும்போது, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ரேணுகா மற்றும் மருத்துவர் குழுவை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் கார்த்திக் தன் பணியில் வென்றானா என்பதே க்ளைமேக்ஸ்.

‘ தனி ஒருவனாக’ படத்தை தாங்கி நிற்பது காரத்திக்காக ஜெயம் ரவி. அவருக்கு முன்பாதியில் நகைச்சுவை முட்டு கொடுப்பவர் சக ஊழியர் சின்னமலையாக வரும் காளி வெங்கட். ரேணுகாவாக லட்சுமி மேனன் அழகாகவும் அழுத்தமாகவும் உணர்வுகளை வெளிக் கொணருகிறார். குருமூர்த்தியாக ஆர்.என். ஆர். மனோகரும், நவீனாக சின்னத்திரை அஜித்தும் ஓகே. வித்யாவாக பேபி அனிகா சட்டென்று மனதில் உட்கார்ந்து விடுகிறார்.

ஒரு ஹாரர் படத்தை நகைச்சுவை தூவல்களோடு சுவையாக ஆக்கியிருக்கும் இயக்குனர் சக்தி சுந்தர்ராஜன் பாராட்டுக்குரியவர். முன்பாதி கலகல. பின்பாதி கிலி கிலி!

இமானின் இசையில்” ஏய் முன்னாள் காதலி “ கார்க்கியின் வரிகளோடு தாலாட்டுகிறது. ஷ்ரேயே கோஷல், விஜய் யேசுதாஸ் குரல்களில் ஒலிக்கும் தலைப்பு பாடல் “ மிருதா மிருதா “ காதுகளில் பாயும் கண்ணி வெடி! பின்னணி இசையில் பீதியை கூட்டுகிறது இமானின் கலவைகள்.

முன்பாதி ரம்மியமாகவும் பின்பாதி ரௌத்திரமாகவும் படமாக்கி இருக்கும் வெங்கடேஷ் பாராட்டுக்குரியவர். மூர்த்தியின் கலை வண்ணத்திற்கு சவாலாக அமைந்த படத்தில் அதிக சேதமில்லாமல் அவர் தேறியிருக்கிறார். படத்தின் ஒப்பனைக் கலைஞர்களுக்கு தனி விருதே கொடுக்கலாம்.

ஹாலிவுட் தரத்தில் தமிழ் படம் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும் வண்ணம் வெளிவந்திருக்கும் இந்தப் படம் வெறும் 106 நிமிடங்களே என்பதும் அயல்நாட்டு தரம் தான்!

நூற்றுக்கணக்கான அரசியல் தொண்டர்கள் ஸோம்பிகளாக மாறி அமைச்சரையே துரத்தும் இடைவேளைக் காட்சி ரத்தம் உறைய வைக்கும் நேர்த்தி.

இரண்டாம் பாகத்திற்கு இப்போதே அச்சாரம் இட்டுவிட்டார்கள். ரசிகன் ஆவலுடன் எதிர்பார்ப்பான்.

0

பார்வை : மிருகன்

மொழி : கனவு பாடல் இல்லாம ஒரு படத்தை தந்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம்!

0

Series Navigationஅசோகனின் வைத்தியசாலைஒற்றையடிப் பாதை