மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
This entry is part 13 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 



           கிறிஸ்டி நல்லரெத்தினம்
 – மெல்பன்

 

” எங்கும் கும்மிருட்டு….. நடுநிசி….. “கி….ரீ…. ரீ… ரீ…ச்”  என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும்  சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது.  படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து……

                              “என்ன, ‘மர்மக்கதை மன்னன்’ பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ?  “


அது தான் இல்லை!
ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும்  பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது!

அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது.
அதை பின்னர் சொல்லட்டுமா?

சரி, கதைக்கு வருவோம்.

ஏப்ரல் 10, 1912 இல்  இங்கிலாந்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள செளதாம்ப்டன் எனும் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடனும் 892 மாலுமிகளுடனும் தன் கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது 46,328 தொன் எடையுள்ள டைட்டானிக். அக்காலங்களில் இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல் என பெயர் பெற்றது.


ஏப்ரல், மே மாதங்கள் கடல் பயணங்களுக்கு பிரபலம் அல்லாததால் கப்பலின் மொத்த 2,453 பயணச்சீட்டுக்களில் பாதியே விற்பனையாகிற்று.  மேலும் அந்நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய நிலக்கரி ஊழியர்களின் வேலை நிறுத்தமும் பயணிகளின் பயணத்தை பின்போட வைத்தது.


கப்பலின் முதலாம் வகுப்பில் பயணம் செய்த 325 பயணிகள் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ( இரு படுக்கை அறை ) செலுத்திய தொகை $4,350. இது இன்றய மதிப்பீட்டில்  $50,000 ஐ தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! 
இவர்களுக்கென ஜிம், நீச்சல் தடாகம், வாசிகசாலை, உயர்தர உணவகங்கள் உட்பட பல சொகுசு வசதிகள் இருந்தன என்றால் சும்மாவா? ஆம், கோடீஸ்வரர்களின் சொர்க்கம்தான்!


மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் தமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவுடன் ஆமேனியா, இத்தாலி, சீரியா, சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து வந்த சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களே நிரம்பியிருந்தனர். இவ்வகுப்புப் பயணிகளுக்கு ஆடம்பரமான வசதிகள் இல்லாவிட்டாலும் அக்காலகட்டத்தில் இருந்த மூன்றாம் வகுப்பு வசதிகளை விட டைட்டானிக் மேலாதானதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.


பயணிகள் மட்டுமல்லாது பல தொன் பொதிகளையும் அதிலும் விசேடமாக பிரித்தானிய – அமெரிக்க தபால் பொதிகளையும் கடிதங்களையும் கனவுகளையும் கரைசேர்க்கும் கடமையையும் சுமந்து கொண்டு புறப்பட்டது அப்பாரிய கப்பல்.


ஏப்ரல் 10 ஆம் திகதி தன் பயணத்தை ஆரம்பித்த டைட்டானிக் ஆங்கில கால்வாயூடாக  பிரான்சின் சேர்பூர்க்கையும் அயர்லாந்து குயீன்ஸ்டவுனையும் தொட்டு மேலும் பல பயணிகளையும் விழுங்கிக்கொண்டு 4,546 கி.மீ தொலைவில் உள்ள  நியூயார்க் நோக்கி 2,224 பயணிகளுடன் தன் ஆறு நாள் பயணத்தை ஆரம்பித்தது.


‘முதல் கோணல் முற்றும் கோணல் ‘  எனும் முதுமொழிக்கிணங்க டைட்டானிக்கின் பயண  ஆரம்பமே அபசகுணத்தில்தான் தொடங்கிற்று!
செளதாம்ப்டன் துறைமுகத்தில் நிகழ்ந்த ஒரு சிறு அசம்பாவிதத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது டைட்டானிக்!


துறைமுகத்தில் தரித்து நின்ற SS நியூயார்க் எனும் கப்பலுடன் டைட்டானிக் முத்தமிடுவதை தவிர்க்க அக் கப்பலை பாரிய கம்பிகளால் கட்டி வைக்கும் தேவை வந்தது. அகோர நீர் ததும்பல்களால் அக்கம்பிகள் ஒடிந்து தெறிக்க டைட்டானிக்கும் நியூயார்க்கும்  முட்டிக்கொள்ளும் ஆபத்து!  டைட்டானிக்கின் காப்டன் எட்வர்ட் ஜோன்  ஸ்மித் தன் சாதுரியத்தால் ஒரு பாரிய விபத்தை தவிர்க்கும் வண்ணம்  என்ஜினை முடுக்கி முழு வேகத்தில் செலுத்தி ‘தாட்டு வெட்டி’ கப்பலை  காப்பாற்றினார்.

கப்பலின் என்ஜின் அறையை  அண்மித்த நிலக்கரி  கிடங்குகளில் ஏற்பட்ட  தீ வேறு பத்து நாட்கள் எரிந்து  அணைந்த வேளை அது.  இவற்றை விட வேறென்ன ‘ஆசீர்வாதங்கள்’ வேண்டுமாம்!?

இதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர்தான் டைட்டானிக்கின் வெள்ளோட்டம் பெல்பாஸ்டின் கப்பல் கட்டும் துறையை ஒட்டிய கடல்பரப்பில் நடைபெற்று முழு வெற்றியுடன் ‘ஆல் பாஸ்’  சான்றிதழை பெற்றிருந்தது. எனவே இந்த அனர்த்த தவிர்ப்பு கப்பலில் தொழில்நுட்ப திறனுக்கு கிடைத்த வெற்றி. கேப்டன் ஸ்மித்தின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி!

ஆனால் இன்னும் சில நாட்களில்  அவரின் வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரு பெரிய ஆபத்து பனிப்பாறை வடிவில் காத்திருப்பதை அவர் உணரவில்லை. கப்பலை தாங்கிய திரவமே திண்மமாகி  அதை அழித்த அவலம்!

கேப்டன் ஸ்மித் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல.  கப்பலின் உரிமையாளர்களான வைற் ஸ்டார் லைன் கம்பெனியின் மிக மூத்த கப்டன் அவர். தன் 62 வயதில் நாற்பது வருட சேவையை பூர்த்தி செய்த ஜாம்பவான். ஆனால்,  அவரின் கீழ் வேலை செய்த அனேக மாலுமிகள் மிகக் குறைந்த கப்பல் வேலை அனுபவம்  உள்ள தற்காலிக தொழிலாழிகள் என்பது உண்மை. கப்பல் வேறு புதிது.


அதனால் என்ன, எழுதிச் செல்லும் விதியின் கையின் பாதையை யார்தான் மாற்ற முடியும்?

டைட்டானிக்கின் முதல் மூன்று நாள் பயணம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இனிதே  கழிந்தன. தினமும் சராசரியாக 850 கி.மீ  தூரத்தை மணிக்கு 44 கி.மீ வேகத்தில் கடந்து சென்றது கப்பல். ஆரம்பத்தில் பாரிய அலைகளை எதிர்நோக்கினாலும் போகப்போக கடல் அமைதியான நதிபோலானது. குளிரும் பனி மூட்டமும் மெதுவாய் கடல் மேல் படரத் தொடங்கிற்று.

ஏப்ரல் 14 மதியம்: டைட்டானிக்குக்கு முன் சென்ற RMS கறோணியா, RMS பல்டிக் கப்பல்கள் எதிரே பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதப்பதாயும் கவனமுடன் வரும்படியும் வானொலி சமிக்கைகளை அனுப்பின.  கேப்டன் ஸ்மித்,  இச் செய்திகள் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தி பதில் சமிக்கைகள் அனுப்பியதுடன் கப்பலின் பாதையில் சிறு மாற்றத்தை செய்து தெற்கு பக்கமாய் கப்பலை செலுத்த ஆணையிட்டார்.

நாழிகைகள்  நத்தையாய்  நகர்கின்றன…..

ஆதவன் அஸ்தமித்து எங்கும் இருள் சூழ்ந்த நேரம்… கடல் மீது குளிர் மேகம் படிந்து ஒரு மாயான அமைதி…… பயணிகள் இரவு போசனத்தை முடித்து தூங்க தயாராகும் வேளை.  பல முதல் வகுப்பு பயணிகள் கப்பலின் மேல் தளத்தில் கூடி சல்லாபித்து பாண்ட் இசையை கண்மூடி  ரசிக்கும்  நேரம்.

இரவு மணி 9:40 – வானொலி சமிக்கை அறையில் SS அமெரிக்கா மற்றும் SS கலிபோனியன்  கப்பல்களில் இருந்து வந்த இரு அவசர செய்திகள் சமிக்கை  நாடாவில் நடனமாடி   பதிவேற்றப்படுகின்றன. ” பனிப்பாறைகளை கடந்து செல்கிறோம். பாறை வயல்கள் இவை. கவனம்!”
“மூன்று மிகப் பெரிய பனிப்பாறைகளை கடக்கின்றோம். கவனம்!”
வந்த செய்திகள் கேப்டனுக்கு வந்தடையவில்லை. இச்செய்திகளின் தாற்பரியம் அவ்வேளையில் புறக்கணிக்கப்பட்டு பயணிகளுக்கு வந்த சமிக்கை செய்திகளை கொண்டு சேர்ப்பதில் சமிக்கை ஆபீசர்கள் முன்னுரிமை வழங்கி செயல்படுகின்றனர்.

இரவு 11.30 : பனிப்பாறைகள் பனிமூட்டத்தில் தோன்றி கப்பலை தாண்டி சாதுவாக கடந்து செல்கின்றன. ஏதோ காரணத்தினால் கேப்டன் ஸ்மித்தின் கப்பலின் வேகம் குறைக்கப்படாமல் மணிக்கு 41 கி.மீ வேகத்திலேயே பயணிக்கிறது. முன்னால் செல்லும் கப்பல்களில் இருந்து டைட்டானிக்குக்கு பனிப்பாறை எச்சரிக்கை சமிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இரவு 11.39: டைட்டானிக்கு எமனாய் வந்த ஒரு பாரிய பனிப்பாறை கப்பலின் முற்பகுதியில் நின்ற கண்காணிப்பு ஆபீசரின் கண்களுக்கு எட்டுகிறது. அபாய மணியை மூன்று முறை பலமாக அடித்து சமிக்கை தொலைபேசியில்  தன் கண் முன் காண்பதை விபரிக்கிறார்.
கேப்டனிடம் இருந்து கப்பலை உடனடியாக திசைதிருப்பி பாறையை தவிர்க்கும் ஆணைகள் பிறக்கின்றன.

 

இயந்திரங்கள் பெருமூச்சுடன் எதிர்புறம் சுழலுகின்றன. என்ஜின் தளத்தில் எங்கும் நீராவியும் நிலக்கரி புகையும் மூக்கை அடைக்கின்றன. வேகத்தை குறைத்து பாறையை தவிர்த்து தடவிச் செல்லத்தான் இந்த முயற்சி.
டைட்டானிக் பனிப்பாறையை தவிர்ப்பதில் பாதி வெற்றி அடைந்தாலும் நீருக்கடியில் நீட்டிக் கொண்டிருந்த கூரிய பனிப்பாறை கப்பலின் வயிற்றை கிழித்து கடல் நீருக்கு ஒரு முகத்துவாரத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

கப்பலின் உள்ளே கடல் நீர் கொட்டி ஆறாக ஓடி தளங்களை நிரப்பத்தொடங்குகிறது. பத்து மாடிகள் கொண்ட கப்பலின் தளங்கள் ஒவ்வொன்றாய் உப்பு நீரில் நனைகின்றன. கதவுகள் தட்டப்பட்டு தூங்கும் பயணிகளை எழுப்பும் முயற்சிகள் ஆரம்பம்!


எங்கும் அழுகையும் கூக்குரலும்!

நடுநிசி 12.05: கேப்டன் டைட்டானிக்கின்  உயிர்காப்பு படகுகளை கீழே இறக்க உத்தரவிடுகிறார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. யார் முதலில் படகில் ஏறுவது என்ற இழுபறி ஆரம்பம்.
ஒரு உயிர்காப்பு படகில்  65 பேர் ஏற முடியும். இருந்ததோ 20 படகுகள். இப்பாரிய கப்பவில் 68 படகுகள் இருந்திருக்க வேண்டும். மேலும் படகில் ஏறுவதில் இருந்த  இழுபறியினால் பல பாதி நிரம்பிய படகுகள் கடலிறக்கப்படுகின்றன. படகுகளை கப்பலை விட்டு தூர விலகிச் செல்ல தண்டுவலிக்கும் திறமையும் இல்லாமல் இருளில் தவிக்கும் பயணிகள்.


இவர்ளுக்கு உதவ கையாலாகாத மாலுமிகள். குளிர் காற்றும் ஜில் என்ற  7°C  கடல் நீரும் நீச்சல் தெரிந்தவர்களுக்கும் ஒரு சவாலாகவே இருந்தது.

ஏப்ரல் 15, 1912 காலை 01. 20 : எங்கும் கூக்குரல். கணவனை பிரிந்து படகில் ஏற மறுக்கும் மனைவிகள். வீரிட்டு அழும் குழந்தைகள். படகில் ஏற பரிதவிக்கும் மூன்றாம் வகுப்பு  கனவின் காவலர்கள்.

அருகில் இருக்கும் கப்பல்களுக்கு சமிக்கைகள் அனுப்பப்படுகின்றன. டைட்டானிக்கிற்கு மிக அருகில் – 93 கி.மீ தூரத்தில் – இருந்த RMS கர்பத்தியா செய்தி கேட்டு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைகிறது. ஆனால் அது அங்கு வந்து சேர நான்கு மணி நேரமாவது செல்லும். எங்கும் பணிப்பாறைகள் மிதந்த வண்ணம் இருப்பதனால் எல்லாக் கப்பல்களினதும் வேகம் தடைப்படுகிறது.

அதிகாலை 02.15 : கப்பலில் நீர் புகுந்து கப்பலின் முன்பகுதி கடலில் சரிந்து மூழ்கிறது. கப்பலின் சுமை கூடிய பின் பகுதி இந்த சரிவின் பழுவை தாங்க முடியாமல் இரண்டாக வெடித்து உடைந்து விடைபெறுகிறது.
கப்பலின் முன்பகுதி முதலில் கடலில் மூழ்கி மறைகிறது.

அதிகாலை 2.28 : கப்பலின் பின்பகுதி ஒரு ராட்சத திமிங்கிலம் போல் கடலில் செங்குத்தாக நிமிர்ந்து நின்று பின் நீரைக் கிழித்துக் கொண்டு மூழ்கி மறைகிறது.

“மூழ்க முடியாத கப்பல்’ என பெயர் பெற்ற டைட்டானிக்கை மூழ்கடித்த தலைக்கனத்துடன் அட்லாண்டிக் கடலலைகள் ஆர்ப்பரித்து அமைதியடைகின்றன!

எல்லாம் முடிந்தது!

X.          X.        X.        X

டைட்டானிக்கின் மூழ்கடிப்பு உலக வரலாற்றிலேயே, போர் காலங்கள் தவிர்த்து,  நடந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் அனர்த்தம் எனலாம்.
இக்கப்பலைப் பற்றிய வெளிவந்த ஆராய்ச்சிகளும் ஆவணப்படங்களும் புத்தக வெளியிட்டுகளும் எண்ணிலடங்கா.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் 1997 இல் வெளிவந்த ஜேம்ஸ் கேமரன் இன் “டைட்டானிக் “ திரைப்படம் இப் பேரிடர் பற்றிய விழிப்புணர்வை  உலகின் பல மூலைகளுக்கும் கொண்டு சேர்த்தது.
ஆழத் தோண்டி நீளப் புதைத்து விட்ட சோகங்களை மீளத் தோண்டியெடுத்து காசாக்கினார் ஜேம்ஸ்.  உலகளாவில் $2.2 பில்லியன்களை சம்பாதித்து திரைப்பட வரலாற்றிலேயே ‘பில்லியன் டாலர்  வசூல்’ எல்லையை  முதலில் தொட்ட திரைப்படம் என சாதனை படைத்தது.
1998 இல் இத்திரைப்படம் 14  ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை வென்று குவித்தது.

இத்திரைப்படத்தால் கவரப்பட்ட பலர் ‘ஏன் இன்னொரு ‘மாதிரி’ டைட்டானிக்கை உருவாக்கக் கூடாது?’  என்ற முன்னெடுப்பில் இறங்கி அதில் பாதி வெற்றியும் கண்டனர். இதில் இரு முயற்சிகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமே.

சீனாவின் சிஸுவான் மாகாணத்தில் 260 மீ நீளத்தில் ஒரு பாரிய மாதிரி டைட்டானிக்கை ஸு ஸாஜொன் என்ற செல்வந்தர் கட்டி முடித்துள்ளார். $153.5 மில்லியன் செலவில் கட்டிய  இக் கப்பல் சுற்றுலாப் பயணிகள் கவரும் விதமாகவே அமைக்கப்படுவதால் இது கடலில் மிதக்காமல் அம்மாகாணத்தில் உள்ள Romandisea  எனும் ‘தீம் பார்க்’ இன் அருகில் உள்ள Qijiang ஆற்றில் மிதக்கும். கப்பலின் என்ஜின் நடுக்கத்தை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கும் வகையில் மாதிரி இயந்திரங்கள் வேறு கர்ஜிக்குமாம்!


இக் கப்பலில் ஒரு சொகுசு ஹோட்டல் போல் பயணிகள் இரவில் தங்கிச் செல்ல முடியும். இக்கப்பலிலும் வகுப்பு வாதம் உண்டு. முதல் வகுப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கவனிப்பு!
இது எப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

1912 அனர்த்தத்தில் உயிர் தப்பிய ஆறு சீன பயணிகள் பற்றிய  The Six  எனும் சீன ஆவணப்படம் இத்திட்டத்திற்கு மேலும் மக்கள் ஆவலை தூண்டியுள்ளது. ஜேம்ஸ் கேமரனால் தயாரிக்கப்பட்ட இப்படம் டைட்டானிக்கின் 109 ஆம் வருட நினைவாக இவ்வருடம் ஏப்ரல் 16 இல் வெளியிடப்பட்டது. கப்பவில் இருந்து உயிர் தப்பிய ஆறு சீன பயணிகளின் வாழ்க்கை எப்படி அமெரிக்காவினால் இருட்டடிக்கப்பட்டது என்பதை  விளக்கும் ஆவணப் படம் இது. அமெரிக்காவில்  1822 முதல் 1943 வரை அமுலில் இருந்த Chinese Exclusion Act உம் இச் செயல்பாடுகளுக்கு துணை போனது.

இப்படத்தைப் பற்றிய காணொளியை தட்டிப் பாருங்கள் :


https://youtu.be/mlvAtxMCp-0



மாதிரி டைட்டானிக்கை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புகள் இல்லாமலும் இல்லை. ஒரு அனர்த்தத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு இது ஒரு அவமதிப்பு என பிரித்தானிய டைட்டானிக் சபைக்கு  பல புகார்கள் வந்துள்ளன.  எனினும் உயிர்நீத்தவர்களை எந்த விதத்திலும் அவமதிக்காதவாறு செயல்படுவோம் என சொல்கிறார் சீன முதலீட்டாளர் ஸு.
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

டைட்டானிக்கின் நினைவுகளை காசாக்குவதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான கிளைவ் பாமரும் 2012  இல் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

‘டைட்டானிக் II’ எனும் ஒரு மாதிரி.  ஆனால் உண்மையில் கடலில் பயணிக்கும் ஒரு கப்பலை $500 மில்லியன் செலவில் கட்டுவதுதான் அத்திட்டம். முழு உலகமே இச்செய்தியை வியப்புடன் வரவேற்றது.  ஆனால்,  சில திரைப்படங்கள் பூஜையுடன் நிற்பது போல் இதுவும் அறிவித்தலோடு சரி! 
” வலிமை” அப்டேட் ஆவல் போல் இல்லாது இக் கப்பல் செய்தி பற்றி யாரும்  அலட்டிக் கொள்ளவில்லை.


கப்பல் எங்கே கட்டப்படுகிறது எப்போது நிறைவு பெறும் என்ற செய்திகள் இன்னும் இல்லை. கப்பல் கட்ட ஒரு ஆணி கூட வாங்கினார்களா என்பது சந்தேகமே!
மேலும் கிளைவ் அரசியலில் வேறு கால்வைத்து பல கோடிகளை இழந்து காலி கஜானாவுடன் அடங்கிவிட்டார்.
மிதக்கும் முன்னரே மூழ்கிவிட்டது இந்த டைட்டானிக் II.
மேலும் இது பற்றி அறிய ‘டைட்டானிக் ll’ முகநூலை திறந்து பாருங்கள்.

1,517 உயிர்களை பலிகொண்ட டைட்டானிக் மனித மேம்பாட்டின் வெற்றிச் சின்னமாய்  தன் பயணத்தை தொடங்கிற்று. ஆனால்,  இறுதியில் இயற்கையின் சீற்றத்தின் முன்னால் தன் கன்னிப் பயணத்தை முடிக்காமலேயே ஒரு துரும்பாய் மறைந்து போனது!

உலக சரித்திரத்தில்  மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு என்றும்  ஒரு புரியாத புதிர் என்பதில் ஐயமில்லை!

 

——0—–

chrisanz27@gmail.com

 

 




 

Series Navigationநவீன பார்வையில் “குந்தி”கூலி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *