முகங்கள் மறைந்த முகம்

Spread the love
ரா.ராஜசேகர்
உள்வெளிப் பயணமேகினேன்
ஒளியடர்ப் பெருங்காடு
கேட்டிராப் பறவைகளின் குரலிசை
கேள்வியுற்றிரா மிருகங்களின் நடமாட்டம்
பறவைகளைப் போலவே மிருகங்களிலும்
என் முகமொத்த சாயலன்று
என் முகமே
அடர்வனத்தின் பூக்காட்டிலும்
என் மணம்
செடிகொடிகளென அடர்பச்சையத்தினூடே
தொடர் பயணம்
திடீர் மழையில்
திசைகள் நனைய
விப்ஜியார் மழையின் பேய்ப்பொழிதல்
அகம்புறமென வேறுபாடழித்து
வண்ணங்களாக்கியதென்னை
மொத்தக் கானகத்தையும் அதிரவைத்தது
என் இன்றைய முகமொத்த குழந்தையின் மென்சிரிப்பொலி
தெரிந்ததெனக்கு உள்மனவெளி
என் பரிமாணங்களின் காடாகவே
முகங்கள் மறைந்த முகமா இது?
புறவெளிக்குப் புறப்பட்டேன்
அங்கு
கேள்விகள் மறைத்த(து)
எனக்குப் பிடித்த என் வெளிமுகம்
Series Navigationரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்‘பங்கயம்’ இட்லி!