முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]

 


triple-parrots

 

[முன்வாரத் தொடர்ச்சி]


“உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது.”

அடுத்து சிவா எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

 

அன்புள்ள அப்பாவுக்கு,

 

வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மை தான்!  பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது, தங்கையின் திருமணம் மூலம் எனக்கு. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் ஒருத்திபோல் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

 

உங்கள் நலம் நாடும்,
சிவகுரு நாதன்.

 

“உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

“இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே!  பெற்றோர் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்!  நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

“துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

“தங்கை இருக்கிறாள். நான் மாதா மாதம் பணத்தை அனுப்பி அவள் மூலமாகத் தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்வேன்”.

“சித்ராவின் பிரச்சனையைத்தான் எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை எனக்கு”

“எளிய முறையில் சிக்கனமாய் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா” என்று கேட்டான் சிவா.

“அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

“நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

 

பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

 

அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த மகள் சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும், கவலையும் அடைந்தாள்.

தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன!

புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்து கடிதத்தைப் படித்தார்கள்.

 

அன்புள்ள அம்மா,

 

நான் முட்டாள்தனமாக கண் காணாத ஏதோ ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன். முடிப்பேன்.

உங்கள் இரண்டாம் கல்யாணத்தை நடத்தி முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் மணக்க விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என்  உள்ளம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய  அந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு நான், உங்கள் இருவரது முகத்திலும், விழிக்கப் போவதில்லை.

பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

 

அன்பு மகள்,
சித்ரா

 

சிவா தனக்கு வந்த கடிததைப் படித்தான்.

அன்பு  உணராத குருவே,

 

உங்களைப் பற்றி அம்மாவிடம் அபத்தமாகப் பேசி  அன்று நான் அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்க வேண்டும்.  அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி எப்படியாவது அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாயே பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

 

அபாக்கியவதி,
சித்ரா

 

பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

 

கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது.

ஆயினும்  அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள். பொங்கிய பூரிப்புடன் சிவா புனிதாவின் பொன்னிறக் கன்னங்களைத் தடவினான்.

“கண்ணே புனிதா ! உன் புது வாழ்வில் பழைய கதவு மூடி, புதிய கதவு திறந்திருக்கிறது!  ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒரு வெகுமதியைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ பறித்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா!  நமது நூதன உறவைப் பாதிக்க இப்போதே பிரச்சனைகள் கிளம்வி விட்டன!  நாமிருவரும் இப்போதுதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

சிவா புனிதாவைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். இருவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கிப் பொழிந்தது.

 

[முற்றியது]

++++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  [September 26, 2013]

http://jayabarathan.wordpess.com/

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26