முதுமையின் காதல்

ரமணி

எவ்வளவு நாட்கள்
என்று தெரியவில்லை.

ஆனால்
அதிக நாட்கள் இல்லை
என்வசம்.

உயிருக்கு வயதில்லை
எனினும்
வயதான உடலைத்தான்
போர்த்திக்கொண்டிருக்கிறது
என் உயிர்.

அது சரி
முதுமையின் ஆரம்பம்
எந்த வயதில் என்று
தீர்மானித்தாகிவிட்டதா?

அரசாங்கம் வகுத்த
எல்லைகள் தாண்டியும்
எல்லைக்கு வெகு உள்ளேயும்
பல உடல்களுக்குள்
அல்லாடுகிறதே வயோதிகம்!

இந்தக் கிழ நாட்களில்
இழந்து போனவையும்
போய் இழந்தவையும்
சேர்த்துக் கொண்டவையும்
கொண்டு சேர்த்தவையும்
பேசித் தொலைத்தவையும்
தொலைத்துப் பேசியவையும்
கடந்து போனவையும்
போய்க் கடந்தவையும்
என்ற முடிவற்ற
வரிசையைக் கடந்து
இன்னபிற
ஏமாற்றங்களும்
சந்தோஷங்களும்
மனக்குஹைக்குள்
ராட்டினமாடுவதாகச் சொல்கிறார்கள்

ஆனால் என்வரையில்
வாழ்க்கைப் பயணத்தின்
பதிவுகள்
கறுப்புப் பெட்டியிலிருந்து
நெளிந்து புறப்படுகின்றன
சர்ப்பங்களாக.

தேர்ந்த பாம்பாட்டியைப் போல
மற்றவைகளையெல்லாம் கூட
முதுமையின் பெயரில்
ஆழத்தில் தள்ளி
ஏமாற்றிக் கொள்ளலாம்.
தள்ளவே முடியாதிருக்கும்
இந்தக் காதலை
என்ன செய்வது?

—- ரமணி

Series Navigationபுரட்சிக்கவி – ஒரு பார்வைகம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015