முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

CAKES AND ALE
WILLIAM SOMERSET MAUGHAM
A NOVEL

>>
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
2011

வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத ஆரம்பித்தார். 1907ல் அவர் ‘சீமாட்டி ஃப்ரிதரிச்’ நாவல் மூலம் புகழ்பெற்றார். 1908ல் ஒரே சமயத்தில் அவரது நான்கு நாடகங்கள் லண்டனில் அடுத்தடுத்து பலமுறை அரங்கேறின. 1926ல் பிரான்சின் ஃபெரத் முனையில் வீடுவாங்கிக் குடியமர்ந்தார். அது அநேக எழுத்தாளர்களின், கலைஞர்களின், அரசியல் பிரமுகர்களின் சங்கம ஸ்தலமாக முக்கியத்துவம் பெற்றது. மாம் 1965ல் மரணமடைந்தார்.

1
நூலாசிரியர் முன்னுரை
ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இந்தக் கதையின் கரு என்னில் மேகந்திரண்டது. இந்த நாவலை ஆரம்பிக்கும்போது பெரியதாய் இது விரியும் என்ற யோசனையே இல்லை. இதன் பொறிதட்டியதுமே நான் எழுதிவைத்துக்கொண்ட குறிப்பு இதுதான்.
‘டபிள்யூ நகரத்தில் என் பால்யகால சிநேகிதர் ஒருத்தர் பின்னாளில் பிரபல நாவலாசிரியராகிறார். அவரைப் பற்றிய என் நினைவு அசைகளே கதை. ஒரு சாதாரணப் பொம்பளையே அவர் பெண்டாட்டி. கற்பு கிலோ என்ன விலை, என்று கேட்கிறவள். ஆனால் அங்கே இருந்தபோதுதான் அவர் அருமையான நூல்கள் எழுதுகிறார். பின்னாளில் அவர் தன் உதவியாளினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார். அவள் அவரைப் பேணி பராமரித்து பெரிசாய் ஆளாக்கி விடுகிறாள். எனக்கென்னன்னால் தன் வயோதிகத்திலும், தான் ஒரு பேரடையாளமாக உணரப்படுவதை அவர் பாராட்ட மாட்டார் என்றே நினைத்தேன்.’
அப்போது நான் காஸ்மோபோலிடன் இதழில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். என் கதைகள் 1200 முதல் 1500 வார்த்தைகள் வரை** அமையவேண்டும் என்கிறதாக பத்திரிகையுடன் என் ‘லட்சுமணவட்டம்.’ அதாவது அதற்கான ஓவியத்துடன் அந்தக் கதை பத்திரிகையில் ஒரு பக்கத்தைத் தாண்டல் தகாது. (** மாம் பத்திரிகைகளில் வார்த்தைக்கு இவ்வளவு காசு என்று வாங்கியதாகச் சொல்கிறார்கள். ஒரு வாசகர் அவருக்கு கடிதம் எழுதினார். வார்த்தைக்கு ஒரு டாலர் வாங்கும் மாம் அவர்களே, இத்துடன் ஒரு டாலர் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ஒரு வார்த்தை எழுதித் தாருங்கள். மாம் அவருக்கு ஒரு வார்த்தையில் பதில் எழுதினார். ”நன்றிகள்.”) பிறகு நான் கொஞ்சம் நெஞ்சுவிரிய சுவாசிக்க, ஓவியம் இன்னும் பெரியதாய், பத்திரிகையில் ரெட்டைப்பக்கமான பரவலாக நடுவாக ஆக்கிரமித்து, எனக்கும் எழுத அதிக இடம் ஒதுக்கித் தந்தார்கள்… இந்தக் கதையையும் அதேபோல எழுதி அடக்கி விடலாம் என்று வைத்திருந்தேன்.
அதேசமயம் இந்த ரோசி பாத்திரத்தை ரொம்ப நாளாகவே என்னில் ஊறப்போட்டிருந்தேன். வருட வருடங்களாக அவளை எழுத்தில் கொண்டுவர சந்தர்ப்பமும் இடமும், எனக்கு தத்தளிப்பாகவே இருந்தது. இவளை ஒருவேளை எழுதாமல் விட்டுவிடுவேன், அதனாலென்ன, என்றுகூட இருந்தது. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் இன்னும் எழுதப்படாமல் புதைந்துகிடக்கும் ஒரு பாத்திரம் உள்ளழுத்தமானது. திரும்பத் திரும்ப அந்தப் பாத்திரம் நினைவுக்குமேலே வந்து மோதிக்கொண்டே யிருக்கும்.
அப்படியே மெல்ல தானே அந்தப்பாத்திரம் உயிர்ப்புடன் உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அவனுக்குள்ளே ஒரு மாறுபட்ட சோனி ஆத்மா உருவளர ஆரம்பிப்பதை அவன், அந்த எழுத்தாளன் புளகாங்கிதத்துடன் உணர்கிறான். இவனது இழுப்புக்கெல்லாம் ஆடுகிற ஆள் அது. என்றாலும் ஒரு துடிப்புடன் அவனில் இருந்து வேறுபட்டும் காண்கிறது அது. ஆனால் அது அவன் மனசில் இருந்து காகிதத்துக்கு இறங்கியாச்சோ, அத்தோட அவனுக்கே அதனுடன் சொந்தபந்தம், பாத்தியதை, உறவு அற்றுப்போகிறது. நேற்றுவரை நீ வேறோ நான் வேறோ, இன்றுமுதல் நீ யாரோ நான் யாரோ… என்கிற தினுசில் அதற்கப்புறம் அவனே அந்தப் பாத்திரத்தை மறந்து விடுகிறான். அத்தனை வருஷம் உள்ளே ஊடாடி உறவாடிக்கிடந்த நபர் எப்படியோ அத்தனை சுளுவா தொலைந்துபோகிறது!
என்னில் உருவாகியிருந்த சின்னக் கதைக்களத்தில் திடுதிப்பென்று இந்த ரோசி பாத்திரமும் வந்தமர, கதை இளகிக்கொடுத்தது. என் கதையின் பிரபல நாவலாசிரியரின் மனைவியா இவளை ஆக்கிவிடலாமாய் இருந்தது. இப்போது இந்தக் கதை ஆயிரம் ரெண்டாயிரம் வார்த்தைகளுக்குள் ஒடுங்க இயலாது என்று பட்டது. சரி இன்னும் கொஞ்சம் போகட்டும் என ஆறப்போட நினைத்தேன். கொஞ்சம் நீளமான கதைகளோடு இதையும் எழுதலாமாய் நினைத்தேன். பதினாலு பதினைந்தாயிரம் வார்த்தை வரை எழுதவேண்டிய கதை இது. ‘ரெய்ன்’ கதைக்குப் பின் (மழை) இப்படிக் கதைகள் எனக்கு சரியான பிடியிலேயே அமைகிறாப் போலிருந்தது. இதைப்பற்றி அதிகம் நான் நினைக்கிற அதேசமயத்தில் ரோசியை இத்தனை சின்னக் கதையில் அடைக்க வேண்டுமா என்றும் ஒரு நினைவு மறித்தது.
என் மலரும் நினைவுகளை அசைபோட்டபோது டபிள்யூ ஊரைப்பற்றியே கூட இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறாப் போலத் தோன்றியது. ‘ஆஃப் ஹியுமன் பான்டேஜ்’ வாழ்க்கைச்சரிதத்தில் (மானுட நெறிகள்) என் ஊரைப்பற்றி பிளாக்ஸ்டேபிள் என்று விவரித்திருப்பேன். அது எழுதி இத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. நிஜத்துக்கு இன்னும் நெருக்கமாய் எழுதினால் என்ன? பிளாக்ஸ்டேபிள் ஊரின் மதகுருவான வில்லியம் மாமா. அவர் மனைவி இசபெல்லா. இவர்கள் இப்போது பேராயர் ஹென்ரி மற்றும் அவர் மனைவி சோஃபி என நடமாடுகிறார்கள் இந்த நாவலில். அங்கத்திய ஃபிலிப் கேரி இங்கே ‘நான்’ என்றாகியிருக்கிறது.
இந்த நூல் வெளியானதும் பல தரப்பில் இருந்தும் எதிர்க்குரல்கள் ஆக்ரோஷித்தன. தாமஸ் ஹார்டி தான் இந்த நாவலின் கதாநாயக நாவலாசிரியர் எட்வர்ட் திரிஃபீல்ட் என்று யூகங்கள் கிளர்ந்தன. ஆனால் என் நோக்கம் அப்படி அல்ல. ஒரு ஜார்ஜ் மெரிடித் போலவோ, அனதோல் பிரான்ஸ் அளவுக்கோ தாமஸ் ஹார்டி என் மனசில் இல்லை. என் குறிப்பே குறிப்பிடும்… பல்லாண்டுகள் எழுதி ஒரு ஆசிரியன் பெற்ற கௌரவமும் மரியாதையும், அவனுக்குள்ளான, சுதந்திரமாய் மிதக்கிற நிலையிலான எளிய ஆத்மாவுக்கு சம்பந்தம் இல்லாதது. அந்த பிம்பம் அவனுக்கு இடைஞ்சலே, சுமையே என்று நான் சொல்ல நினைத்தேன். நிறைய புதிரான, விநோதமான, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத யோசனையெல்லாம் அவன் மனசில் ஊடாடும். வெளியே அவனை வியந்தோதுகிறவர்கள் வைத்திருக்கிற அல்லது எதிர்பார்க்கிற பிம்பம் அவனுக்கு நிஜத்தில் இராது.
என் பதினெட்டு வயதில் ‘டெஸ் ஆஃப் தி டி’ உர்பெர்வில்லே’ நான் ஆகாவென்று வாசித்திருக்கிறேன். அதில் வருவதைப் போல ஒரு பால்காரியைத் தான் கல்யாணம் கட்டுவதாய்க் கூட வரித்திருந்தேன். ஆனால் ஹார்டியின் மத்த புத்தகங்களில் இத்தகைய ஒட்டுறவு எனக்குக் கிடைக்கவில்லை. என் சமகால எழுத்தாளர் பலரைப் போன்று அவர் என்னை பாதிக்கவில்லை. அவருக்கு ஆங்கில சமத்காரம் அத்தனை பத்தாதுதான். ஒரு காலத்தில் ஜார்ஜ் மெரிடித்திடம், பிற்பாடு அதே மாதிரி அனதோல் பிரான்சிடம், மனம் பறிகொடுத்ததைப் போல ஹார்டியிடம் நான் அடங்கியதே கிடையாது.
ஹார்டியின் வாழ்க்கை பற்றி எனக்கு லவலேசமும் தெரியாது. இப்போது கூட எனக்கு என்ன தெரியும், எட்வர்ட் திரிஃபீல்டுக்கும் ஹார்டிக்கும் ஒத்துமைன்னு பார்த்தால் பெரிசாய் எதுவும் இல்லை என்று சொல்ல முடியும். என்ன, ரெண்டுபேரும் ரொம்ப நொம்பலப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்கள். அவருக்கும், இவருக்கும் ரெண்டு தாரம். அவ்வளவே.
நான் தாமஸ் ஹார்டியை ஒரேயொரு தரம்தான் சந்தித்திருக்கிறேன். சீமாட்டி புனித ஹெலியர்சில் நடந்த இரவு விருந்தில் அவரை சந்தித்தேன். அந்த வீட்டை ‘சீமாட்டி ஜுவான்’ என்று பிரபலமாய் அழைக்க அந்த அம்மையார் அவாவுற்றார். (இந்தக் காலத்தில் விருந்தோம்பல் எல்லாம் போச்சு. நான் சொல்வது அந்தக் காலம்.) ஏதோவொருவிதத்தில் சமூகத்தில் பிரபலமாக இருந்த எல்லாருமே அங்கே வருகை புரிந்தார்கள். அப்போது நான் பிரசித்தியான ஆசாமி. நவீன நாடக எழுத்தாளன். யுத்தகாலத்துக்கு முன் வழக்கத்தில் இருந்த மகா விருந்துகளில் ஒன்று அது. எத்தனை வித விதமான சீராடல்கள், உணவு வகைகள், கடைந்த சுத்தமான பழச்சாறுகள், வடிகட்டிய தெளிவான சூப்புகள், மீன், விருந்துக்கான சிறப்புத் தயாரிப்புகள், சர்பத், (அதை அருந்திவிட்டு மீண்டும் பசித்து அடுத்த கட்டு கட்டலாம்.) குலாவல். விளையாட்டுக் கும்மாளம். பனிக்கட்டி வகைகள். இனிப்பு என்ன. காரம் என்ன…
மொத்தம் 24 பேர் விருந்தாளிகள். எல்லாரும் பெரிய பதவியாளர்கள். அரசியல் பிரமுகர்கள். கலை வித்தகர்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் ஒசத்தி. தையலர் மெல்ல கூடத்துப் பக்கமாய் ஒதுங்கவும், நான் கவனித்தேன். தாமஸ் ஹார்டிக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன் நான். சின்ன உருவில் கிராமத்து ஆசாமியாக அவரை இப்போதும் நினைக்க முடிகிறது. வெள்ளாவியில் எடுத்து உடுத்த சட்டை. உயரமான கழுத்துப்பட்டி என மாலைஉடை அணிந்திருந்தார். ஒரு விநோதமான வட்டாரத்தன்மை இருந்தது அவரிடம். இதமான மென்மையான மனிதராகவே தெரிந்தார். ஒரு தன்சார்ந்த விறைப்பும், சபைக் கூச்சமும் அவரிடம் உணர்ந்தேன். என்னிடம் அவர் என்ன பேசினார், ஞாபகம் இல்லை. ஆனால் நாங்கள் முக்கால் மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம், அது ஞாபகத்தில் இருக்கிறது. அதன் முடிவில் எனக்கு பெரிய மரியாதை செய்தார் அவர். என்னிடம் அவர் கேட்டார் ஒரு கேள்வி. (என் பெயரை அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை.) சார், நீங்க என்ன ஜோலி பண்ணிட்டிருக்கீங்க?
நான் கேள்விப்பட்டேன். ரெண்டு மூணு எழுத்தாளர்கள், இந்த நாவலில் வருகிற அல்ராய் கியர் என்ற நாவலாசிரியன் தாங்களேதான், என்று நம்புகிறார்களாம். ரொம்பத் தப்பான நம்பிக்கை அது. அந்தப் பாத்திரம் எந்தத் தனி நபரையும் குறிக்காது, பல ஆசாமிகளின் கூட்டுக் கதம்பம். உருவ அளவில் அது ஒரு எழுத்தாளன். சமூகத்தின் மேல்மட்ட பாவனையுள்ள ஆள் அவன். அவனது எண்ணவோட்டங்கள் வேறொரு எழுத்தாளனின் சாயல். நாலாவது எழுத்தாளனின் அம்சமாக அவனது தற்பெருமைக் குணம். நாலுபேரைப் பார்த்துவிட்டு தான் ரொம்ப உசத்தி என்று கற்பனை மிதப்பு. அத்தோடு என்னின் நிறைய அம்சங்களும் அவனுக்கு, அல்ராய் கியருக்கு உண்டு.
எனது அசட்டுத்தனங்களையிட்டு எனக்கே ஓரளவு தெரியும். என்னையே நான் நிறைய நெளிசல் எடுக்க வேண்டியிருக்கிறது. என்னைப் பத்தி பிறத்தியார் என்னிடம் சொன்னதையும், என்னைப்பற்றி பிறத்தியார் எழுதிய விஷயங்களையும் வைத்துப் பார்க்கையில், எனக்கே இதுபத்தி ஒரு யோசனை – என்னாண்ட உள்ள சிக்கல்களாலேதான் நான் மத்தாளை அத்தனை அதிரடியா நக்கலடிக்கிறேன். மத்த எழுத்தாளர்கள் போலல்ல நான். என்னைப்போல அவர்கள் துரதிர்ஷ்டம் பிடிச்ச மூளைப்பிராந்துகள் இல்லை. அட நிஜத்தில், எந்தப் பாத்திரம் படைச்சாலும் என்ன, எல்லாமே நமது நக்கலடிக்கப்பட்ட நகல்தான். அவைகள் உண்மையில் நம்மைவிட பண்பாடானவர்களாக இருக்கலாம். நம் ஆர்வக்கோளாறுகள் அவர்களிடம் இல்லாதிருக்கலாம். என்னைவிடவும் நல்லொழுக்க சீலர்களாக, ஆன்மிகவாதிகளாக அவர்கள் இருக்கக் கூடும்.
புனிதக்கூறுகளைக் காட்ட மனுசாள் தன்னையே அடையாளங் காட்ட முனைவது இயல்பே. இந்தக் கதையில் வருகிற இந்த நாவலாசிரியன் ராய் தன் புத்தக விற்பனைக்கான விளம்பர பந்தாக்களை மிக கவனமாக கணக்குப்போட்டு ஒல்லும் வாயெல்லாம் காய் நகர்த்துகிறான்… என நான் பாத்திரப் புனைவு செய்தேன். ஆனால் இதைச்சொல்ல யாராவது குறிப்பிட்ட எழுத்தாளனை நான் கோடிகாட்ட வேண்டியது இல்லை. எல்லாவனும் அத்தன்மையராகவே தானே இருக்கிறான்கள். இதில் நான் பாவம்பார்க்க ஏதுமில்லை.
வருடா வருடம் நூத்துக்கணக்கான நல்ல புத்தகங்கள் கண்டுகொள்ளாமல் பின்தள்ளப் படுகின்றன. கொள்வாரில்லை. அவை ஒண்ணொண்ணும் மாதக்கணக்கில் மெனக்கிட்டு எழுதப்பட்ட புத்தகங்களே. அதையும் அந்த மனுசன் வருடக்கணக்கில் உள்ளேபோட்டு குலுக்கியிருப்பான். தன்னுடைய சில அடையாளங்களை அதில் ஆர்வமாய்ப் பதித்திருக்க, அப்படியே அது புத்தகங்களுக்குள் காணாமல் அடிக்கப்பட்டு, காயடிக்கப்பட்டு விடும். விமரிசகர்களின் பார்வைக்கே வராமல் அவமரியாதையடைந்த அந்தப் புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள் பாவம். விமர்சகர்களின் கரிசனப் பார்வை கிடைக்காமல் போனதில், கடைக்காரனுக்கும் போணியாகாதபடி புத்தகங்கள் தேக்கம் ஆகிப்போகும்.
இந்தநிலையில் அந்த எழுத்தாளன் எப்படியாவது பொதுசனத்தின் கவனத்துக்குள் தான் வந்துவிட பிரயத்தனம் எடுப்பது பற்றியும் குற்றஞ் சொல்ல ஒன்றுமில்லை. தானே அடிபட்டு அவன் கற்றுக்கொண்ட பாடம் அது. பிரபலம் அடைந்தாக வேண்டும் அவன். அவன்பேரைச் சொன்னால், ஆ தெரியுமே, என அவர்கள் சொல்லவேண்டும். அதற்கு அவன் பேட்டிகள் தரவேண்டும். பத்திரிகையில் அவன் படம் வரவேண்டும். ‘தி டைம்ஸ்’ போன்ற இதழ்களுக்குக் கடிதங்கள் வரைய வேண்டும். இலக்கியக் கூட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். சமூகப் பிரச்னைகளை அலசியபடி, அதைப் பேசியபடி, எழுதியபடி அவன் இருக்கவேண்டும். இரவு விருந்துகளுக்குப் பின் அட்டகாசமான உரையை அவன் நிகழ்த்தவேண்டும். பதிப்பாளர் தருகிற விளம்பரங்களில் தனக்குப் பிடித்த பிற புத்தகங்கள் என்று பட்டியல் தரவேண்டும். தனக்கு முக்கியத்துவம் கிடைக்கிற சரியான இடங்களில், மிகச் சரியான நேரத்தில் அவன் கட்டாயம் தரிசனப்பட வேண்டும். எவனும் அவனை மறந்துவிட அனுமதித்துவிட முடியாது. கடினமான, கலவரமான ஜோலி இது. இதில் சின்ன விடுதலும் அவனைத் தூரத் தள்ளிவிடும். அந்த இடத்துக்குப் போட்டி இருக்கிறது.
இந்த எழுத்தாளனிடம் நாம் கரிசனப்பட வேண்டும், கடுகடுப்பாய் அவனிடம் சிடுசிடுத்தல் தகாதுதான். இந்த லோகத்தை வாசிப்புருசியில் திளைக்க வைக்க முயல்கிற அந்த மகானுபாவனை கருணையுடன் தான் நாம் எடுத்துச்சொல்ல வேண்டும். தனக்குப் பிடித்த புத்தகத்தைத் தான் அவன் நம்பி பட்டியல் இடுகிறான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். காட்ச்!
ஆனால் இந்த விளம்பர முஸ்திபுகளில் ஒருவிஷயத்தில் எனக்கு வெறுப்பு உண்டு. புத்தக வெளியீடு என்று காக்டெய்ல் பார்ட்டி அளிக்கிறார்கள். குடியும் கூத்துமாய் அமர்க்களம். படம் கூட எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களே கிசுகிசு எழுத்தாளர்களை அதற்கு அழைப்புவிடுத்து வரச்சொல்கிறார்கள். ஒருத்தன் பத்தாது, எத்தனை கிசுகிசுக்கள் கிளம்புகிறதோ சிலாக்கியம் என்று நிறையப்பேரை வரவழைக்கிறார்கள். அந்த கிசுகிசுக்காரர்கள் நம்மைப் பத்தி எழுதுகிறார்கள் பத்தி. புகைப்படங்களும் இதன்கூடவே வெளியாகின்றன. இந்த மகா ஆசாமிகள் எழுத்தாளரிடம் கையெழுத்திட்ட புத்தகப் பிரதியையும் ஓசிவாங்கிக் கொள்கிறார்கள். கேடுகெட்ட இந்தப் பழக்கத்தைத் தட்டிக்கேட்பாரோ, மறுதலிப்பாரோ இல்லை. இதை எழுத்தாளர்களே புன்னகையுடன் சகஜமாய் அங்கிகரித்தாகிறது. இதற்கெல்லாம் துட்டுச்செலவு? பதிப்பாளர் பாடு.
இந்த ‘கேக்ஸ் அன்ட் ஏல்’ வெளியானபோது இம்மாதிரி வழக்கமெல்லாம் இத்தனை சீரழியவில்லை. அட இருந்திருக்கலாம். இருந்திருந்தால் இதிலேயே ஒரு சுவாரஸ்யமான அத்தியாயமாய் அது வளர்ந்திருக்கவும் கூடும்.

>>>
அடுத்த இதழிமுதல் நாவல் தொடரும்
storysankar@gmail.com

Series Navigationஇயற்கை வாதிக்கிறது இப்படி……பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்