முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

2011

>>>

அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ”சார் இருக்காரா?” – ”இல்லையே, வெள்ல போயிருக்கார்…” – ”அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?” என்னத்த முக்கியமான விஷயம், அநேகமாய் அவருக்குத்தான் அது அதிமுக்கியமானது, நமக்கல்ல, என்று பிற்பாடு தெரியவரும். நம்மைப் பாராட்டி எவனாவது பரிசளித்தாலோ, எவனாவது நமக்கு உபகாரம் செய்தாலோ, அவன் மனசாரச் செய்கிறான் என்பதில்லை… பல்கடித்து பொருமலை மறைத்து பொறுமை காக்கிறான் என்பதே நிஜம். லோகம் அப்படி.

திரும்ப உடனே கிளம்புகிற கதியிலேயே விடுதிக்கு வந்திருந்தேன். ஒரு சிறு மிடறு பானம், சிகெரெட். நாளேட்டைப் புரட்ட… அடுத்து ராச்சாப்பாட்டுக்குக் கிளம்ப வேண்டும். நான் நுழைய, வீட்டுத்தாதி மிஸ். ஃபெல்லோஸ் தகவல் சொன்னாள். அல்ராய் கியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. உடனே நான் அவரிடம் பேச வேண்டும்.

ச், … என அலட்சித்தேன்.

”பேசியது… எழுத்தாளர் அல்ராய் கியர்…. அவர்தானே?” என்று அவள் கேட்டாள்.

”சாட்சாத்.”

அவள் தொலைபேசியை இணக்கப் பார்வை பார்த்தாள்.

”நான் எண்ணைப் போட்டுக் கொடுக்கவா?”

”வேணாம்…. நன்றி.”

”திரும்ப அவர் கூப்பிட்டால் நான் என்ன சொல்வது…?”

”என்ன தகவல்னு கேட்டு வெச்சிக்க.”

”சரிங்க.”

அவள் உதட்டைக் கோணினாள். தரையை அலம்பிவிட்டுக் கொண்டிருந்தாள். தண்ணிக்குழாயைத் திரும்பத் தூக்கினாள். தரையை வாரியலை வீசி பெருக்கிவிட்டு ஒரு நோட்டம் சுத்தம் பார்த்தாள். பின் வெளியே போய்விட்டாள். மிஸ் ஃபெல்லோஸ் புதினப் பிரியை. புத்தகப் பூச்சி. அவள் எப்படியும் ராயின் அத்தனை நாவல்களையும் வாசித்திருப்பாள். அத்தனாம் பெரிய எழுத்தாளர், அவசரம்னு கூப்பிடறார், இந்த சாம்பிராணி இம்மா அலட்சியமாய் நடந்துக்கிறாரே என்று அவள் நினைத்திருக்கலாம். அவள் முகச்சுளிப்பே சொல்கிறது, அவள் ராயின் தீவிர ரசிகை.

இரவு நான் வீடு திரும்பியபோது கடிதங்களின் செருகுபலகையில் அவளது குறிப்பு. திருத்தமான அழகான கையெழுத்து.

திரு கியர் ரெண்டு முறை பேசினார். நாளை மதியம் நீங்கள் அவருடன் உணவுகொள்ள முடியுமா? முடியாதபட்சம் உங்களுக்கு உகந்த நாள் எது?

அட, என்றிருந்தது. இந்த மூணு மாசத்தில் நான் அவரைப் பார்க்கவில்லை. பிறகு ஒரு விருந்தில் பார்த்தேன். ரொம்ப சிநேகபூர்வமாய் இருந்தார். எப்பவுமே நல்ல தன்மையான ஆள்த்தான் அவர். முடிவில், நாங்கள் அடிக்கடி சந்திப்பதில்லை என்கிறதாய்க் குறைப்பட்டுக் கொண்டார்.

”லண்டன் எக்குத்தப்பான ஊர்” என்றார். ”யாரையாவது சந்திக்கணும்னு நினைச்சால் சட்னு போனோம் பாத்தம்னு ஆகறதில்லை. நாம ஒரு மதியம் ஒண்ணா சாப்பிடலாமே? அடுத்தவாரத்ல ஒருநாள்… என்ன சொல்றீங்க?”

”அதுக்கென்ன…” என்று பதில் சொன்னேன்.

”வீட்டுக்குப் போயி எனது நியதிக்குறிப்புகளை ஒருவாட்டி பாத்திட்டு, உங்களுக்குத் தகவல் சொல்றேன்…”

”சரி”.

எனக்கு இருபது வருஷமாய்த் தெரியும். ராய் எப்பவுமே மேல்கோட்டின் இடதுபையில் சிறு குறிப்பேடு வைத்திருப்பார். நாள்நிரலை அதில் அவ்வப்போது குறித்துவைத்துக் கொள்ளும் வழக்கமுள்ளவர். வீட்லபோயிப் பார்த்துச் ¢சொல்கிறதாய்ச் சொல்கிறதால், வெறும் சம்பிரதாயப் பேச்சு அது, என்னை அழைத்தது, என்று புரிந்தது. அவர் அதன்பின் பேசவும் இல்லை. எனக்கு அதில் ஆச்சர்யமோ இழப்போ இல்லை.

இப்ப திடீர்னு அவருக்கு விருந்தோம்பல் வேகம் வந்திருக்கிறது, என்பதால் அதில் நான் அதிகம் ஆர்வப்பட ஒன்றுமில்லை. புகைக்குழாயைப் பற்றவைத்துக்கொண்டே படுக்கப் போனேன். அவரது ரசிகை எவளாவது என்னிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டாளோ? லண்டனுக்குச் சிலநாட்கள் வந்திருக்கும் யாராவது அமெரிக்கப் பதிப்பாளர் கேட்டுக்கொண்டபடி என்னை ராய் அழைத்திருக்கக் கூடும். என்னைப்போன்ற இன்னொரு எழுத்தாளனுக்கு கவரிவீச நேர்கையில் ராய் அதைத் தவிர்க்கிற சமத்காரம் தெரியாதவரா என்ன? பூனையை மடில கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கக்கூடாது. என்று அறியாதவரா. மாத்திரமல்ல, இந்தச் சந்திப்புக்கு நானே ஒருநாள் சொல்லலாம் என்று என்னிடமே விட்டுவிட்டார் விஷயத்தை. ஆக நான் ‘அவரைச்’ சந்திப்பதையே அவர் நினைக்கிறார். வேறொருவரை அவர் எனக்கு அறிமுகம் செய்கிற சோலி அதில் இல்லை.

இப்போது என் நாவல்கள் வெகு பிரசித்தம். எல்லார் உதடுகளிலும் என் பெயர் நர்த்தனமாடுகிறது. சக எழுத்தாளராக என்னோடு உசாவ அவர் பிரியப்படுகிறார் என்றால் அதுதான் ராயின் பெருந்தன்மை. அ, என்ற சோம்பேறித்தனமான அலட்சியத்திலும், நம்ம கதை போணியாகாத துவளலிலும், அட இவன்கூட நாம நின்னா நம்ம அடையாளம் மங்கிருமே என்கிற உள்சுதாரிப்பிலும் யாரும் அவரை – அவரது அந்த விருந்தை நிராகரிக்க முடியாது. என்னைத் தவிர. எல்லாருக்கும் அவரோடு விருந்துண்ண விருப்பமாகவே இருக்கும்.

எழுத்தாளனுக்கு ஏறுமுகம், இறங்குமுகம் இருக்கத்தான் இருக்கிறது. எனக்கே, இந்த சமயத்தில் சனங்க கடாட்சம் என்பக்கம் இல்லை, என்று ஒரு உள்சுருட்டல். ராயின் அழைப்பை மறுக்காமல், அதேசமயம் ஏற்காமல், நிறைய புளுகுகளில் நான் சமாளித்திருக்க முடியும். ஆனால் ராய் காரியப்புலி. என்னைப் பார்க்கிற நோக்கம் இருந்தால் அவர் எப்படியும் முனைந்து என்னைப் பிடித்துவிடுவார். எதற்கு என்னைப் பிராகாரம் சுற்றுகிறார், தெரிந்தால் நல்லது. தெரிஞ்சிட்டா ஃபூ, இதொரு விஷயமா என்று அவரை ஒதுக்கித்தள்ளிறலாம். ஆனால் என்ன சமாச்சாரம் என்று தெரியாதது உள்ளே காற்றுக்கிளையாய்ப் படபடக்கிறது. ச், நல்ல மனுசன்தான்… இப்படி ஒரேடியா அவரை வேணான்றதும் மனசொப்பவில்லை.

சமீபகாலமாய் அவரது கடிதப் போக்குவரத்துகள் பிரசித்தியாகி வருகிறதைக் கேள்விப்பட்டு எனக்கு ஆச்சர்யம். இலக்கியம் கிலக்கியம்னு திரிய ஆர்வங்கொண்ட இளைஞர்களுக்கு அவரது எழுத்துவாழ்க்கை ஒரு முன்மாதிரி என்றுகூடச் சொல்லலாம். என் சகவட்ட எழுத்தாளர் யாரொருத்தருக்கும் இத்தனை பரந்த வெற்றி, இத்தனை குறைந்த திறமையுடன் சிக்கியதே இல்லை. சரக்கு முறுக்கோ இல்லையோ, செட்டியார் முறுக்கு இருந்தது அவரிடம்… தினசரி ஒரு தேக்கரண்டி டானிக் குடித்து மூளையை வளர்த்து, ஆரோக்கியம் காக்கும் பழக்கம் ராய்க்கு. சமகால இலக்கியப் புத்தக்ஙளையெல்லாம் அவர் ஒரு வெறியோடு வாசித்துத்தள்ளினார். கடும் நியதிகளில் இதற்கு அவர் போராடினார். எத்தனை பாட்டில், எத்தனை தேக்கரண்டி டானிக்… யாரறிவார். ஆனால் இதை திட்டமிட்டே செய்தார் ராய்.

கிட்டத்தட்ட தான் ஒரு அற்புதம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறதாக அவருக்கே மயக்கந் தட்டியிருக்கவும் கூடும். ஏற்கனவே அவர் முப்பது புத்தகத்துக்கு மேல் எழுதிவிட்டிருந்தார். ஒரு இரவுவிருந்து முடிந்த உரையில் அவர் வாசித்துக்காட்டிய தாமஸ் கார்லைலின் வைர வரிகள், அவர்தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்ட பாவனையை அவரே நிர்மாணித்துக்கொண்டார். ‘வாழ்க்கையின் தேடல்கள் சார்ந்த பாடுகள் நம் மேதமைத்துவத்தை வானம் வரை விரிக்க வல்லவை.’ ஆக கடுமையான முயற்சியே, பயிற்சியே அறிவின் வாசல் என்பதுதான் விஷயம்… அதை அவர் தனக்குள்ளே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் அதை. ”எலேய், மத்தாளுகளைப் போல நீயும் பேசாம மேதையா ஆயிற வேண்டிதான்…”

ஒரு பெண்கள் பத்திரிகையின் விமர்சகி இந்தப் பேச்சைக்கேட்டு அயர்ந்துவிட்டாள். அவரை மேதை என்று அவள் தனது மதிப்புரையில் அழைக்கத் தலைப்பட்டாள். (அது முதல் அட்சதை. பிறகு இப்போதெல்லாம் வேறு விமர்சகர்களும் ராயை மேதை என்று அடிக்கடி தலையாட்டியபடி எழுதத் தோள்ப்ட்டார்கள்.)  மண்டைய ஒடைச்சிக்கிட்டு ஒரு குறுக்கெழுத்துப் புதிரை முடிச்சபின் கிடைக்கிற ஆசுவாசம் போல, ஹா, என்று நிம்மதிப் பெருமூச்சு வந்திருக்கும் அவருக்கு. வருட வருடங்களாய் எழுதிக் குவிக்கிறார் ஆசாமி. எழுத்துத் தொழிற்சாலை ஊழியன். முதலாளியும் அவரே. எந்த இடத்திலும் மேதை என்ற அவருக்கான பதவியை யாருமே இடறிவிடவே இல்லை.

ராய் எழுத ஆரம்பித்தபோது சில சௌகர்யங்கள் கிடைத்தன அவனுக்கு. ராணுவத்தில் வேலைபார்க்கிற அப்பாவின் ஒரே பிள்ளை அவன். அவன்அப்பா ஹாங் காங்கில் குடிகளின் நிர்வாகச் செயலதிகாரியாகப் பலவருடங்கள் பணிபுரிந்தவர். பதவிஓய்வு பெறுகையில் அவர் ஜமெய்க்காவின் கவர்னர். எழுத்தாளர் யார் எவர், புத்தகத்தை நீங்கள் புரட்டிப் பார்த்தால், அல்ராய் கியர் பற்றி இப்படி எழுதப்பட்டிருப்பதை வாசிக்கலாம். சர் ரேமண்ட் கியரின் இலக்கியத் தடம் – பெயருக்குப் பின்னால் கேசியெம்ஜி, கேசிவிவோ, க்யு. வி. என்று பட்டங்கள். கூடவே எமிலி பற்றி – இந்திய ராணுவத்தின், பெர்சி காம்பர்டௌனின் மறைந்த மேஜர் ஜெனரல், ஒய். டி. என்று குறிப்பும் காணலாம்.

ராய் வின்செஸ்டர் சரக்கு. ஆக்ஸ்ஃபோர்டு, புதுக் கல்லூரியில் வாசித்தவன். கல்லூரி மாணவர் சங்கத் தலைவனாக இருந்தான். ச், தட்டம்மை போட்டு உடம்பைப் படுத்தியது. அதனால் சுரத்து அடங்கிவிட்டது. இல்லாவிட்டால் அவன் கொடி அங்கே படபடத்துப் பறந்திருக்கும். வெறும் பந்தா என்று இல்லாமல் அவனது கல்வி மரியாதைக்குரியதுதான். அவனும் பல்கலைக்கழகத்தில் இருந்து அரியர்ஸ் வைக்காமல் கரையேறி வந்தான். ராய் ரொம்பச் சிக்கனம். வரவை நோக்காமல் செலவு இல்லை, என்பது அவன் சித்தாந்தம்.

அத்தோட ராய் தந்தைக்கேத்த நல்ல தனயன். இத்தனை ஒசத்தியான கல்வியைத் தனக்குப் புகட்டிய அப்பா அம்மாவுக்கு தான் கட்டுப்பட்டுவன், என்றும் அவர்களின் ஆசை அபிலாஷைகளின் ஆதர்ச புத்திரன் தான் என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அப்பா எளிமையான வெளிப்படையான ஓய்வுகால வாழ்க்கையே வாழ்ந்தார். கிளவ்செஸ்டர்ஷைர் பிரதேசத்தில் ஸ்ட்ரௌன்ட் பக்கத்தில் வீடு. அவ்வப்போது லண்டன் போய் தான் நிர்வாகம் புரிந்த குடிகள் சார்ந்த விவகாரங்களையிட்டு கூடும் கூட்டங்களிலும், அதுசார்ந்த இரவு விருந்துகளிலும் கலந்துகொண்டு திரும்புவார். அதனீயம் அமைப்பிலும் அவர் உறுப்பினர். லண்டன் போகையில் அங்கேயும் ஒரு விசிட் அடிக்கிறது உண்டு. (Athenaeum – கல்வி கலாச்சார அமைப்பு. அருங்காட்சியகம், நூலகம் மற்றும் கல்வித்துறை சார்ந்த, அந்தஸ்துமிக்க சமூக ஆர்வலர்களின் சங்கம், என்று தெரிகிறது. நம்ம ஊர் ரோட்டரி, லயன்ஸ் கிளப் வகையறா.)

ஆக்ஸ்போர்டில் இருந்து வரும்போது, இந்த சங்கத்தின் ஒரு அப்பாமூலம்தான் தன் பிள்ளைக்கு ஒரு உபாத்தியாயர் வேலை ஏற்பாடு செய்துகொடுக்க முடிந்தது. ஒரு கண்ணியம் மிக்க பிரபு அவர். அவரது மென்மையான ஒரே மகனுக்கு மேன்மையான ஒரு ஆசிரியர் என அமைவதை சாதாரண விஷயமாய்ச் சொல்வதற்கு இல்லை.

ஆக ராய் அந்தச் சிறு பிராயத்திலேயே பேருலகப் பழக்க வழக்கங்களுக்குள் புழங்க ஆரம்பிச்சாச். கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் சமத்காரமாகப் பயன்படுத்திக். கொண்டான். அவன் கதைகளில் தரக்குறைவான அநாச்சாரங்கள் இல்லை. உயர்மட்டக் குடிமகனின் உயர்ந்த எழுத்தாக அவனால் அமைத்துக்கொள்ள முடிந்தது. படம்போடும் மலினப் பத்திரிகைக் கதைகள் அல்ல அவை. அதனினும் உயர்ந்தவை. புனிதமானவை. மேல்தட்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்கிற நாகரிகம் அவனுக்கு அத்துப்படி. ஒரு பாராளுமன்ற மாண்புமிகு, ராணுவ அதிகாரி, அல்லது புத்தகப் பதிப்பாளர்  அத்தகைய மக்களை எப்படி மரியாதையுடன் விளித்துப் பேசுவார் என அவன் அறிவான்.

அவனது ஆரம்ப நாவல்களில் வைஸ்ராய்களையும், வெளிநாட்டுத் தூதர்களையும், பிரதம மந்திரிகளையும், அரச வம்சத்தினர் மற்றும் சீமாட்டிகளையும் அவன் எழுதிக்காட்டும் அழகு மிகக் கவர்ச்சிகரமாய் இருந்தது. ஆக யாரும் புகழாமலேயே, சிபாரிசு செய்யாமலேயே, அவன் எல்லார் மனதிலும் நட்புபாராட்டப் படவேண்டியவன் என்று தோற்றந்தந்தான். எந்த முட்டலும் இல்லாமலேயே அவனுக்கு சமூகத்தில் அடையாளமும் சித்தித்தது. எந்தப் பிரமுகரைப் பற்றி எழுதினாலும் அவரது பதவியை மறக்க முடியாதபடி அழுத்தமாய்ப் பதிவுசெய்தான். அவர்கள் நம்மைப் போல, அதைவிட அவரைப் போலத்தான்… சதையும் எலும்புமானவர்கள் என்கிற இயல்பான பதிவாகவும் அது இருக்கும்.

இந்தக்கால நவீன இலக்கிய எழுத்தில் இப்படி பணக்காரத்தனங்கள் அதன் கவர்ச்சியை இழந்துபோனது என்பதுகுறித்து ச், எனக்கே வருத்தம் உண்டு. ராய் எப்பவும் வயதொத்த மனக் கிலேசங்களில் கவனமானவன். அவனது பிற்கால நாவல்களில் அவன் வக்கீல்களின், கணக்காளர்களின், வணிகத் தரகர்களின் ஆன்மிக உறுத்தல்களை யெல்லாம் அலசிப் பார்த்தான். முந்தைய காலகட்டத்தில் போல பிற்காலத்தில் அவனது இந்தவகை எழுத்தில் அவனது ஆளுமை அத்தனை இறுக்கமாய் இல்லை.

தனது ஆசிரிய வேலையைக் கைகழுவிவிட்டு முழுக்க இலக்கியத்தின் பால் கவனத்தை அவன் குவித்த பிறகுதான் அவனை எனக்குத் தெரியும். ஸ்டாக்கிங் அணிந்த கால்களுடன் ஆறடி உயர ஆஜானுபாகு. அகண்ட தோள்கள். தன்னம்பிக்கை தெறிக்கும் அருமையான நெஞ்சுநிமிர்த்திய இளவல். அழகன், மன்மதக்குஞ்சு என்று சொல்வதற்கில்லை. பார்க்க விகாரமில்லாத ஆம்பிளைத் தோரணை. விரிந்த நீலமான நேர்மையான கண்கள். சுருள்சுருளான செம்பட்டை கேசம். சப்பையான அகல மூக்கு. சதுர ஒத்தை நாடி. பார்க்கவே நியாயஸ்தமும் சுத்தமும் உடல் வளமையும் தெரிகிற உருவம். ஒரு விளையாட்டுவீரனைப் போன்ற உடல்வாகு. சுறுசுறுபபு. ஆரம்பகால நாவல்களில் வேட்டைநாயுடன் ஓடும் கதாபாத்திரங்கள் அவன் எழுதியதை வாசித்தவர்கள், அவனை நேரில்பார்க்க நேர்ந்தால், எல்லாம் சொந்த அனுபவம்… என்று நம்புவார்கள். ஆனால் அப்பவெல்லாம் அவனுக்கு எழுதவே நேரம் பத்தவில்லை. சொல்வேட்டை யாடிக்கொண்டிருந்தான்.

சமீப காலங்களாகத்தான் அவர் எழுத்தைக் குறைத்துக்கொண்டு எதோ ஒருநாள்வேட்டை என்று வெளிக்கிளம்ப ஆரம்பித்திருக்கிறார். அவனது முதல் நாவல் வந்தபோது, அவனையொத்த பிற அறிவுஜீவிகள் தமது ஆகிருதியைப் பறைசாற்றுமுகமாக பீர் அடிப்பதும், கிரிக்கெட் ஆடுவதுமாய்த் திரிந்தார்கள். நம் ராயும் நாவல் எழுதி அந்த ஜோதியில் ஐக்கியமானான். அடுத்த சில ஆண்டுகளில் இலக்கியக் கிரிக்கெட் அணியின் பதினொருவரில் எங்கெங்கும் அவன் பெயர் ‘அடி’பட்டுக் கொண்டேயிருந்தது. இவன் இயங்கிவந்த குழு மெல்ல தொய்ந்து, கிரிக்கெட் மாத்திரம் தொடர்ந்தது. அவர்கள் படைப்புகளையும் கொள்வார் இல்லை. இதற்கு சில ஆண்டுகள் முன்பே ராய் கிரிக்கெட் ஆட்டத்துக்குத் தலைமுழுகியாச். அவனது ருசியும் பீரில் இருந்து கிளாரெட் அளவுக்கு தரம் உயர்ந்தாச்.

ராய் பரவாயில்லை, தனது முதல்நாவல் குறித்து பணிவான அடக்கம் இருந்தது அவனிடம். சின்ன நாவல். குழப்பமில்லாத நடை. பிற்பாடு அவன் எழுதிய பிற நாவல்களைப் போலவே நல்ல விறுவிறுப்பு. அந்தக்கால பிரபல எழுத்தாளர்கள் எல்லாருக்கும் ஒரு இனிமையான கடித்ம் வைத்து அதன் பிரதியைத் தட்டிவிட்டான். அந்தக் கடிதத்தில் அந்த எழுத்தாளரை இந்திரன் சந்திரன் என்று வானளாவப் புகழ்ந்தான். உங்கள் படைப்பை நான் எத்தனை ஒசத்தியாய் மனசில் ஏந்துகிறேன்… எங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் படைப்பு ஒரு பாடம். நீங்களே எங்கள் கல்விக்கூடம். உங்களைப் பின்பற்றி எழுத்துலகில் முன்னேறுவதே என் லட்சியம். கொஞ்சம் தள்ளிநின்று பவ்யமாய் அனுப்பப்பட்ட கடிதம் அது. என்றாலும் வேலை செய்தது அந்த உத்தி. பெரிய ஓர் ஓவிய மேதைக்கு அவன் தன் நாவலை சமர்ப்பணமும் செய்திருந்தான்.

நுழைவாயிலில் நிற்கும் இலக்கியவாதியிடமிருந்து பழுத்த கலைஞனுக்கு, எக்காலமும் எங்கள் ஆதர்சம் நீயே, உன்னை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

ஒரு கத்துக்குட்டியின் சவலைப் படைப்புதான் இது. உங்களது பொன்னான மணித்துளிகளை நிங்கள் விரையமாக்குங்கள் என்று கேட்க எனக்கு தைரியம் இல்லை. அது தவறு என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் தங்கள் மேலான கருத்தை சிரமேல் ஏற்க சித்தமாகி தெண்டனிட்டு இறைஞ்சி என் நாவலை விமரிசிக்க, வழிகாட்டக் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள்வீட்டுப் பிள்ளை.

ஏனோதானோ என்ற சம்பிரதாயமான பதில் ஒன்றுகூட வரவில்லை. ராய் எழுதிய புகழுரையில் உச்சி குளிர்ந்து அந்த எழுத்தாளர்கள் விரிவாய் பதில் எழுதினார்கள். அந்தப் புத்தகத்தை அவர்கள் கரித்தார்கள் இல்லை, அங்கிகரித்தார்கள். நிறையப்பேர் அவரை மதியவிருந்துக்கு என்று அழைக்கவும் செய்தார்கள். அவனது வெள்ளந்தியான பேச்சையும் துறுதுறுப்பையும் அவர்கள் ரசித்தார்கள். அவர்கள்முன்னால் அவன் கைகட்டி வாய்பொத்தி அறிவுரை கேட்டு நின்றான். என்ன சொன்னாலும் ஹா, என சிலிர்ப்புடன் கேட்டுக்கொண்டு, அதையெல்லாம் உன்னித்து, அவசியம் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தான். அதையெல்லாம் காணக் கண்கோடி வேண்டும். அட இந்தக் காலத்தில் இப்பிடியொரு பிள்ளையா. நல்ல கத்துக்கற ஆர்வமுள்ள பிள்ளை. இவனைக் கொஞ்சம் நெளிசல் எடுக்க நம்மாலானதைச் செய்வோம்… என நினைத்தார்கள் அவர்கள்.

முதல்நாவல் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுவிட்டது. அவனது இலக்கிய நட்பு வட்டமும் விகசித்தது. வெகு சீக்கிரத்திலேயே பொது இடங்களில், தேநீர் விருந்துகளில், ப்ளூம்ஸ்பரியில், காம்ப்டன் ஹில் விடுதியில், அல்லது வெஸ்ட்மினிஸ்டரில் அவனை சந்திக்காமல் தவிர்க்க முடியாதபடி எங்கும் நிறைந்தான், காற்றாய்க் கலந்தான் ராய். யாரேனும் ஒரு மூதாட்டிக்கு வட்டமான ரொட்டியும், வெண்ணெயும் உணவுமேஜை வரை அல்லது அவளது காலி தேநீர்க் கோப்பையை வாங்கி திரும்பக் கொண்டுபோய்க் கொடுக்கிறதாகவோ அவனது அனுசரணையான பாவனையைக் காணலாமாய் இருந்தது. மகா இளமை, மிடுக்கு, துடிப்பு. பிறத்தியார் ஜோக் அடிக்கிறபோது கண்விரிய ரசித்து உற்சாகமாய்ச் சிரித்தான். கைக்காசா குறையுது, சிரிச்சிட்டுப் போயேன்… யாராலுமே அவனை நேசிக்காமல் இருக்க முடியாது. உணவுசங்கம் எல்லாவற்றிலும் அவன் வகித்தான் அங்கம். விக்டோரியா சாலையின் உணவுவிடுதிகளில், ஹால்பார்ன் அறிவுஜீவிகள் கழகத்தில், இளம் பாரிஸ்டர்கள் நடுவே, சன்னமான பட்டாடை, பவளமாலை அணிந்த சீமாட்டிகளுடன் ‘மூணு புள்ளி ஆறு’ பென்னி உயர்ந்த ரக இரவு விருந்து சாப்பிட்டான். சாப்பிட்டபடியே கலை மற்றும் இலக்கியம் பேசினான். இரவு விருந்து தாண்டி உரை நிகழ்த்த அவனுக்கு தனித்திறன் இருந்ததையுதம் கேட்டவர் அறிந்தார்கள்.

நகைமுகம், இனிய சொற்கள். பதவிசான பழக்கங்கள். சமகால எழுத்தாளர்கள் அல்லது எதிரிகள்… அவன் ஒரு நாகரிகமான நல்ல மனிதன் என்பதை பெருந்தன்மையுடன் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. மத்தாட்களின் அரைவேக்காட்டுப் படைப்புகளைக் கூட அவன் புன்னகையுடன் கடுஞ்சொல் அற்றே பாராட்டிப் பேசினான். கைப்பிரதிகள் என அவர்கள் அனுப்பி விமர்சிக்கச் சொன்னபோதும், விமரிசனம் என்று மூச்சுக் காட்டமாட்டான். தங்கமான மனுசம்பா என அவர்கள் அவனை நினைக்கவைத்தான். அவன் பாராட்டைக் கேட்டு அவன் கருத்து சரியாக இருக்கும் என்பதாய்க் கொண்டாடினார்கள்.

ரெண்டாவது நாவல் எழுதினான் அவன். கடும் உழைப்புடன் எழுதினான். செய்நேர்த்தியில் தேர்ந்த மூத்த எழுத்தாளர்களின் அறிவுரை அவனுக்கு இப்போது பயன்பட்டது. அவனுக்குத் தெரிந்த பத்திரிகையில் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்களை அவன் தெரிந்தாட்கள் மூலம் எழுதவைக்க வேண்டியிருந்தது. அந்த விமர்சனம் கடுமையாக நாவலை விமர்சிப்பதாக இருக்க அவனே கேட்டுக்கொண்டான். அந்த ரெண்டாவது நாவலும் வெற்றி உலா வந்தது, என்றாலும் முதல் நாவலைப்போல அத்தனை காத்திரமான வெற்றி அல்ல அது. களத்தில் அவனொத்த சக எழுத்தாளர்களை வெந்து தணிய வைக்கிற வெற்றியாக அது அமையவில்லை. வாஸ்தவத்தில் அவர்கள், நம்மை எட்டிவர ஏணி அவனிடம் இல்லை… (தேம்ஸ் நதியை அவனால் பற்றவைக்க முடியாது, என்கிறார் ஆசிரியர்.) உற்சாகமான நல்லாத்மா. எந்த த்வனியும் அவனிடம் இல்லை. ஆத்தோடு போகிற தண்ணி. அவன் எதிரி இல்லை, என்று தீர்மானித்ததும் அவர்கள் அவனை கழிவிரக்கத்துடன் கைதூக்கி விட, குறைந்தபட்சம் அவனைத் தாக்காமல் விட முடிவு செய்தார்கள்.

பிழைத்துப் போ தம்பி, என அவனை அலட்சித்துவிட்டு, இப்போது அடடா தப்பு பண்ணிட்டமே, என என்முன் விரக்திப் புன்னகை பூக்கிறவர்களை இன்றும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவனா, அவன் தலைவீங்கித் திரிகிறான், என்று சொன்னால், அது பிழை. ராய் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னிலை பிறழ்ந்ததே கிடையாது. சிறு வயசில் இருந்தே அந்தத் தன்னடக்கத்தைக் கற்று வைத்திருந்தான்.

”எனக்குத் தெரியுது, நான் ஒண்ணும் அத்தனை பெரிய நாவலாசிரியன் கிடையாது…” என்பான் நம்மிடம். ”ஒவ்வொருத்தர் நாவல் உலகத்தில் பண்ணிய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் கொசு. ஆனால் என்னிக்காவது ஒருநாள் நான் அற்புதமா ஒரு நாவலை எழுதணும்… (யானையா ஆகணும்) அப்டின்னு ஆசை உண்டு எனக்கு. ஆனால் எப்பவோ அதும் காலாவதியாயிட்டது. என்ன, மக்கள் என்னைப்பத்தி, முடிஞ்ச அளவு நல்லாதான் எழுதிட்டிருக்கிறான்னு சொல்லணும். அதுக்காக நானும் பாடுபடறேன். எந்த விஷயத்தையும் நாவலில் அசிரத்தையா அலட்சியமா விட்றப்டாதுன்னு நான் கவனமாயிருக்கிறேன். என்னால ஒரு நல்ல கதை சொல்ல முடியும். ஒரு கதையை நல்லா சொல்ல முடியும். அதில்வரும் பாத்திரங்களை உயிர்ப்புடன் அமைத்துக்கொள்ள முடியும். எது எப்பிடின்னாலும், ஒரு நாவல் ஜெயிக்கிறது ரசிகர்கள் கையிலதான் இருக்கு. சமையல் நல்லாருக்குன்னு சமையல்காரனே சொல்ல முடியாது இல்லியா? ‘தி ஐ ஆஃப் தி நீடில்’ (ஊசிக்கண்) இங்கிலாந்தில் 35,000 பிரதிகள் வித்துத் தீர்ந்தது. அமெரிக்கால 80,000 வித்தது. என் அடுத்த புத்தகத்தின் தொலைக்காட்சித் தொடர் உரிமைக்காக என் ஆயுசிலேயே அதிகப் பணத்துக்குப் பேசுகிறார்கள்…”

இந்தத் தன்னடக்கத்தை மீறி லோகத்தில் எது வெல்ல முடியும்? இதே தன்னடக்கத்துடன் தன்னைப் பற்றி மதிப்புரை எழுதும் நபர்களுக்கு, அவர்கள் பாராட்டும்போது நன்றிசொல்லி ஒரு வரி எழுதிப்போட்டான். வாங்களேன், ஒரு மதியம் என்னோட சாப்பிடலாம், என அன்போடு அழைப்பு விடுத்தான். விஷயம் அத்தோட போச்சா, இன்னும் இருக்கிறது. எவனாவது கொடுக்கால போட்டாப்ல ஒரு விமர்சனம் எழுதினான் என்றால்… ராய் தான் ரொம்பப் பெரிய மனுச தோரணை பாராட்டினானே… அதனால் கெட்ட வார்த்தையால் திட்ட முடியாது அவனால். அட விட்றா, என தோளை அலட்சியமாய்க் குலுக்கிக் கொண்டான் என்பதும் இல்லை. தன் படைப்பை வெறுக்கிற அந்த முரடன் சார்ந்து தூக்கமிழந்தான், அப்படியே அதை மறந்தான் என்பதும் இல்லை. அந்த விமரிசகனுக்கு ஒரு பெரிய கடிதம் எழுதினான் ராய்.

என் புத்தகம் மோசம் என உங்களை உணர வைத்துவிட்டதற்கு வருந்துகிறேன். ஆனால் உங்கள் மதிப்புரை தன்னளவில் வெகு சுவாரஸ்யமான ஒன்றுதான். சொல்லப்போனால், நல்லா ஊனியடித்திருக்கிறீர்கள், தேர்ந்தெடுத்த கனமான வார்த்தைகள், அதனாலேயே உங்களுக்கு பதில் எழுதத் தோன்றியது எனக்கு. என்னைத் தரமுயர்த்த உங்களைப் போல வேறு யாரும் இத்தனை மெனக்கிட்டிருப்பார்களா தெரியவில்லை. இன்னும் நான் கற்றுக்கொள்ள இருக்கிறது, என்னால் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன் நான்… உங்களுக்கு அசுவாரஸ்மாக நான் ஆக விரும்பவில்லை, இன்னாலும், வர்ற புதன்கிழமை நீங்கள் ஓய்வாக இருந்தால் – அல்லது வெள்ளிக்கிழமை யானாலும் சரி – சவாயில் என்னுடன் ஒரு மதிய உணவு கொள்ளலாமே… என் புத்தகம் அத்தனை மட்டம் என்று நீங்கள் நினைப்பதை தாராளமாக நீங்கள் நேரில் சொல்லி நான் கேட்கவிரும்புகிறேன்.

ராய் போல சிறப்பாக மதிய உணவு வகைகளைத் தேர்வு செய்வார் யாருமில்லை. ஒரு அரை டஜன் நத்தையை, அப்படியே இளம் ஆட்டு முதுகுக்கறி ஒரு விள்ளல்… அந்த விமர்சகன் உள்ளே தள்ளுமுன், வெடுக்கென பேச வந்த விமர்சகனின் வார்த்தைகளையும் சேர்த்து உள்ளே தள்ளிவிடுவான் ராய். கவிதைக்குப் பொய் அழகு என்கிறாப் போலத்தான் விமர்சகன், ராயின் அடுத்த  நாவல் வரும்போது, முன்னைவிட எத்தனையோ தேறியிருப்பதாக எழுதுவான்.

>>>

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரிகார்ட்டூன்