முன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்

 

ஹெச்.ஜி.ரசூல்


1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன.  வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.  அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை.  அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) என்பதாக பல நிலைகளில் இது அறியப்படுகிறது.

இந்த ஏகத்துவக் கொள்கை, புராதான இந்திய சமூகத்தின் கி.மு.7 முதல் 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வேத, உபநிடத காலங்களில் இயற்கை கடவுள்வணக்கம் தாண்டிய மற்றொரு நிலையில் ஓரிறை தத்துவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறையின் அவதாரமா, தூதரா – உருவமா, அருவமா என்பதான எல்லை தாண்டி இது செயல்படுகிறது.

ரிக், யசூர், சாம அதர்வண வேதங்களில் ஏக இறை குறித்த கருத்தாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. உபநிடதங்களின் சில சுலோகங்கள் கீழ்கண்டவாறு உள்ளன.

அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (ஏகம் ஏவம் அத்விதயம்)

அவனுக்கு பெற்றோர்களும் இல்லை. பாதுகாவலரும் இல்லை (நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்)

அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (நா தஸ்தி பிரதிம அஸ்தி)

 

யசூர் வேதத்தின் சில பகுதிகளிலும் இத்தகையதான ஏக இறை சார்ந்து சிந்தனை வெளிப்படுகிறது.

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (நா தஸ்ய பிரதிம அஸ்தி) என்பதாக வெளிப்பட்டுள்ளது.

படைப்பவன் என்கிற அர்த்தத்தில் பிரம்மா வென இறைவனை ரிக் வேதம் சுட்டிக் காட்டுகிறது.

தெய்வீகக் தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டும் வணங்குங்கள்.  (மா சிதன்யதிவி சன்சதா) என்பதான இதன் நீட்சி தொடர்கிறது.

அல்லாஹு அக்பர் – அல்லா பெரியவன் என்ற முஸ்லிம்களின் கூற்றை அதர்வண வேதத்தின் வரிகள் நிச்சயமாக கடவுள் மிகப் பெரியவன் ஆவான் (தேவ் மஹாஓசி)

இதுபோன்றே இந்து மத பிரம்ம சூத்திரம் இறைவன் ஒருவனே, வேறு இல்லை இல்லவே இல்லை. (ஏகம் பிரஹ்மம் தவித்ய நாஸ்தே, நஹ்னே நாஸ்தே கின்ஜன்) என்பதாக பேசுகிறது.  தமிழ் மரபில் சமண பௌத்த சமய சாயல்களையும் வேறுவிதமாய் அர்த்தப்படுத்தலாம்.

கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே வானுறையும் தெய்வம் / இவ்வுலகு இயற்றினான் / ஆதிபகவன் / மெய்ப்பொருள் – என்பதான ஏகச் சிந்தனையை கடவுள் கோட்பாடான தோற்றத்தில் வள்ளுவம் கூறுவதையும் சொல்லலாம்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாரசீகத்தின் ஜெராஷ்ட்ரிய மதமும் ஆஹுராமஷ்டா எனும் அறிவில் மிகைத்த கடவுள் பற்றி குறிப்பிடுகிறது.

 

பார்சிகளின் புனித நூலான தசாதிர் இறைவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன், வடிவமோ அமைப்போ இல்லாதவன், அவன் ஒருவன், அவனைப்போல எவருமில்லை என்பதாக குறிப்பிடுகிறது. இம்மத கோட்பாடுகளெல்லாம் நபிமுகமது(ஸல்)வழியாக குரானின் மூலம் இஸ்லாத்தை வடிவமைப்பதற்கு முற்பட்ட காலத்தின் தத்துவக் குரல்களாகும்.

Series Navigationபூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவுபஞ்சதந்திரம் தொடர் 57