முழுக்கு

This entry is part 14 of 25 in the series 17 மே 2015

கைப்பேசி ஒலித்தது. எடுத்து யாரென்று பார்த்தேன். கோவிந்தராசனின் அழைப்புதான் அது.
”வணக்கம் கோவிந்து, சொல்லுங்க” என்றேன்.
”ஒண்ணுமில்ல, அதான் நேத்திக்கு சொன்னேன்ல; சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்”
“சரி கோவிந்து, பயணத் திட்டமெல்லாம் சரியாய்த்தான் இருக்கு. ஆனா நான் வரணுமான்னுதான் இன்னும் யோசிக்கறேன்.”
”நீ ஒண்ணும் யோசிக்கவே வாணாம். போன வாரமே முடிவு செஞ்ச மாதிரி நீயும்தான் வரே”
“இல்ல கோவிந்து, அவங்க ரெண்டு பேரும்தான் வராங்களே?”
கோவிந்தன் சிரித்துக் கொண்டே “இருந்தாலும் ஒரு எழுத்தாளரு, அதுவும் இலக்கியவாதி கூட வந்தா எங்களுக்கும் பெருமைதானே? நாலு பேரும்தான் போறோம்” என்றான்.
“சரி வார்த்தையாலயே குளிப்பாட்டுட்ட; வராமே இருக்க முடியுமா?” என்று சொல்லி விட்டுப் பேசியை நிறுத்தினேன்.
கோவிந்தன் சொன்னபடியே வண்டி வந்தது. கோவிந்தனும், சடகோபனும், பழனிவேலுவும் இறங்கி வந்தனர். “வாங்க, வாங்க, என்று என் மனைவி வாசலிலேயே வந்து வரவேற்றாள்.
”வாங்க வாங்கக் கடன்தான் தங்கச்சி” என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டு கோவிந்தன் உள்ளே வர இருவரும் தொடர்ந்து வந்தனர்.
“கடனை எப்பவும் மறக்காதீங்க” என்றார் சடகோபன். அவர் முழுப்பெயர் சடகோப ராமானுஜதாசன். பழுத்த ஸ்ரீவைஷ்ணவர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். காவி வேட்டியும் நெற்றியில் திருமண்ணும் அணிந்து அப்போதுதான் குளித்து விட்டு வந்தவர்போல் காட்சியளித்தார்.
”கொஞ்சநாள் மறந்து விட்டதாலதானே இப்ப போறோம்” என்றுகூறி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார் பழனிவேலு. இவர் எப்பொழுது கறுப்புப் பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருப்பார். ரியல் எஸ்டேட் வணிகம் நடத்தும் ஓர் அரசியல்வாதி. பஞ்சாயத்து, பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றிலும் மிகவும் கறாராகச் சரியாகப் பேசுபவர்.
வந்த மூவரும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். மேலே மாட்டப்பட்டிருந்த அண்ணா, பெரியார், கண்ணதாசன், புதுமைப்பித்தன் படங்களை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, “இவர எதுக்குப் போயி கூட்டிட்டுப் போறிங்க? பூனையைக் கண்டாலே பயந்து செத்துடுவாரே? என்னா பேசப் போறாரு?” என்று கூறிக்கொண்டே ஒரு தட்டில் நான்கு குவளைகளில் காப்பி எடுத்து வந்தாள் என் மனைவி.
உடனே பழனிவேலு, “நாங்களெல்லாம் பொம்பளங்களே மொறத்தால புலியை தொரத்தின பரம்பரையாக்கும்” என்றார்.
”ஆமாமாம்; அதெல்லாம் அந்தக் காலத்துலதான். அன்னிக்கு அனுமாரு கூட லங்கையைத்தாண்டினாரு. இன்னிக்குக் கதையைப் பாருங்க” என்று பதில் சொன்னாள் என் மனைவி.
”சண்டைக்குப் போற எடத்துல சமாதானத்துக்கும் ஓர் ஆளு வேண்டுமில்ல; அதான் நானுன்னு வச்சுக்குயேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினேன் நான்.
கார் இப்போது பண்ருட்டியைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வானம் திடீரென இருட்டுவதுபோல் இருந்தது. சில்லென்று காற்று வீசத்தொடங்கியது. “மழை வரும் போல இருக்கு” என்றான் கோவிந்தன்.
“ ஐப்பசியில மழை வராட்டாதான் ஆச்சரியம்.” என்றார் சடகோபன். “ஆமாமாம். போன வாரம்தானெ நல்ல மழைபேஞ்சுது. நம்ம பெண்ணையாத்துலயே வெள்ளம் வந்ததே” என்றார் பழனிவேலு. ”இது ஐப்பசி கடைசி வாரம்; நானும் ஒவ்வொரு வருஷமும் ஐப்பசியில மாயவரம் போயி அங்க காவேரியில ஒரு முழுக்கு போடணும்னு பாக்கறேன். முடியில. இதோ மாசமே முடிஞ்சுடும் போல இருக்கு” என்று குறைபட்டுக் கொண்டார். கோவிந்தன்.
”மாயவரம் காவேரி விசேஷந்தான். முடியாட்டா பரவாயில்ல. நாளைக்கு காலையில சீரங்கம் காவேரியில குளிச்சுடுவோம். மேட்டூர் தெறந்து காவேரியில நெறைய தண்ணீர் போறாப்பல இருக்கே” என்றேன் நான்.
”அப்ப மாயவரம் போக வேண்டாமா?”
“இல்ல கோவிந்து; ஐப்பசி மாசம் முழுவதும் போய்க்குளிக்கிற புண்ணியம் ஐப்பசி கடைசி நாளில்போய்க்குளித்தாலும் கெடக்கும்”
சடகோபன் சொன்னார். ”அதைதான் கடைமுழுக்குன்னு சொல்றாங்க;”
நான் சொன்னேன் “கோவிந்து, இந்த வருஷம் எப்படியும் உன்னைக் கடை முகத்தன்னிக்கு மாயவரம் காவேரியில போய்க் குளிப்பாட்டறேன். கவலைப்படாதே”
வண்டி இப்போது மடப்பட்டு வந்து சென்னை திருச்சி நெடுஞ்சாலையைப் பிடித்துப் போய்க்கொண்டிருந்தது. லேசாகத் தூறல்கள் விழ ஆரம்பித்தன. “அது சரி; நீ ரொம்பவும் ஜாக்கிரதையான ஆளாச்சே: எப்படி திண்டுக்கல்காரருகிட்ட மாட்டின?” என்று கேட்டேன் நான். “எல்லாம் ஒரு பரிதாபம் பாத்துத்தான்; இல்ல கோவிந்து” என்றார் சடகோபன். ”ஆமாம்பா; அவரு பெரிய வெவசாயி. அதுவும் திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்கத் தலைவரு. நான் என்கடைக்காக அந்தப் பக்கம் கொள்முதலுக்குப் போவேன் இல்லையா? அப்பப் பழக்கம் ஆச்சு;”
”அதுக்காக இப்படி ஒரு சீட்டோ, கையெழுத்தோ இல்லாம அஞ்சு லட்சம் தூக்கிக்கொடுத்துடறதா?” இது பழனிவேல்.
”மொத்தமா குடுக்கலேப்பா; சில்லறை சில்லறையா குடுத்ததுதான்; இப்படி சேந்து போச்சு. ஒருதடவை அவருக்கு ஆப்பரேஷன். இன்னொரு தடவை பையனை வேலைல சேக்க டெபாசிட்டு கட்ட வாங்கினாரு; அப்பறம் பெண்ணுக்கு சிகிச்சைக்கு ; இப்படி சேந்ததுதான்.”
”ஒங்க வீட்ல ஒண்ணும் சொல்லலயா?” என்று கேட்டேன் நான். “நீ வேற ரெண்டு தடவை குடுக்கச்சொன்னதே அவதாம்பா;” என்றான் கோவிந்தன்.
”ஏன் அவங்களுக்கு என்னா அவங்கமேல அப்படி கரிசனம்” என்று நான் கேட்டதற்கு “திண்டுக்கல்காரரு மனைவி ஐஸ்கூல்ல வேல செய்யறாங்க. என் மனைவி மாலாவும் ஐஸ்கூல்லதான; மூணு வருஷம் முன்னாடி ஆசிரியர்களெல்லாம் ஒண்ணா சேந்து ஒரு பெரிய போராட்டம் நடத்தி ஜெயிலுக்கெல்லாம் போனாங்களெ; அப்ப இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வேலூரில இருந்தாங்க. அதுல ரொம்ப பழக்காமாயிடுச்சு: கடலூர்ல நடந்த வணிகர் மாநாட்டுக்கு வந்த அவங்க குடும்பம் எங்க வீட்லதான் தங்கி திருவந்திபுரம், திருவதிகை எல்லாம் போய் பாத்துட்டு வந்தாங்க. நாங்களும் அங்க போய்த் தங்கிப் பழனியெல்லாம் போயி வந்தோம்.” என்று நீண்ட பதில் சொன்னான் கோவிந்தன்.
”வட்டியெல்லாம் ஒழுங்காய் வருதா?” என்று கேட்டார் சடகோபன்.
“அதாங்க பிரச்சனையே; வட்டி பாங்கிலதான் போட்டிடுவாரு; இப்ப நாலு மாசமா போடவே இல்ல; ஃபோன் போட்டாலும் எடுக்கறது இல்ல” என்று பதில் சொன்னான் அவன். மேலும் தொடர்ந்த அவன் “ரெண்டு மாசம் முன்ன போயிப் பாத்தேன்; வெவசாயம் சரியா வெளயலன்னாரு; கடையும் நஷ்டமாயி மூடிட்டாரு; இப்ப வணிகர் சங்கத்திலியும் இல்ல. அதான் எனக்கும் பயமாயிடுச்சு; ஒங்களைக் கூட்டிகிட்டுப் போயி இவங்க கிட்ட இருந்துதான் வாங்கிக் கொடுத்தேனுன்னு சொல்லறதுக்குத்தான் இப்ப போறோம்” என்று சொன்னான்.
சமயபுரம் கோயிலில் கூட்டம் அதிக இல்லை’ சீக்கிரமே அம்மனைத் தரிசித்துவிட்டு சீரங்கம் போனோம். அங்குதான் சற்று கூட்டம் அதிகம். சிறப்பு தரிசனம் கூடாதென்று சொல்லும் நாங்கள் எல்லாருமே அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டோம். நமக்கு என்று வரும்போது தவறுகளும் சரியானவை ஆகின்றன.
முன்பே சடகோபன் சொல்லி வைத்திருந்ததால் ராமானுஜ கூடத்தில் தங்க இடம் கிடைத்தது. படுக்கும் போதே சடகோபன் சொல்லிவிட்டார். ”காலைல இங்கியே குளிச்சுட்டுக் கெளம்பிடுவோம். காலைல காவேரிக்குப்போனா அங்கே ஒரே இருட்டாயிருக்கும்.” நாங்கள் மூன்று பேரும் அவரை மறுத்தபோதும் அவர் ஒரே பிடிவாதமாய் இருந்து வெற்றி பெற்று விட்டார். காலையில் திருச்சியில் கிளம்பும்போதே மணி ஆறரையாகிவிட்டது. வழியில் ஓரிடத்தில் சிற்றுண்டி முடித்தோம். திண்டுக்கல்லை அடையும்போது மணி ஒன்பது இருக்கும். அங்கு மழை பெய்து அப்போதுதான் விட்டது போல இருந்தது. மழைநீர் சிறு வாய்க்கால்களாக தார்ச் சாலையின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
மதுரை செல்லும் புறவழிச்சாலையில் எட்டு கிலோமீட்டர் சென்று கிழக்குத் திசையில் ஒரு மண்சாலையில் வண்டியைத் திருப்பச்சொன்னார் கோவிந்தன். “இன்னும் எவளோ தூரம்ப்பா; திண்டுக்கல்தானு சொன்னே?” என்றேன் நான். “இன்னும் அஞ்சுகிலோமீட்டர்தான்; அவரிங்கே இருந்தாலும் அவருக்குத் திண்டுக்கல்காரருன்னுதான் பேரு” என்றார் கோவிந்தன். அவர் வீடு முன்பக்கம் சிறிய ஓட்டு வீடாகவும் பின்பக்கம் பெரிய மாடி வீடாகவும் இருந்தது. வண்டி வந்த சத்தம் கேட்டு வெளியில் வந்த அவர் மகன் “வாங்க மாமா வாங்க; வாங்க, எல்லாரும் வாங்க” என்று கோவிந்தனையும், அனைவரையும் வரவேற்றான். ”வரோம்ப்பா; நீ வேலைக்குக் கெளம்பலியா?” என்று கேட்டார் கோவிந்தன். அதற்குள் வந்த அவன் அப்பா அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.
எங்களது அறிமுகப் படலம் முடியவும் அவர் மனைவி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. ”மாலா நல்லாஇருக்கா?” என்று அவரும் விசாரித்தார். சில சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்தன. அதற்குள் வந்த அவரின் மகள் போல தோற்றமுடைய ஒரு பெண் வந்து கோவிந்தனைப் பார்த்து, ‘வாங்க மாமா; நான் வேலக்குப் போயிட்டு வரேன்” என்று கூறிச் சென்றாள். ”என்னா இந்தப் பக்கம்” என்ற அவரிடம், ”ஆமா நீங்க போனு போட்டாதான் எடுக்க மாட்டேன்றீங்க; அதான் நேரில பாக்கலாம்னு வந்திட்டோம். நான் கொடுத்தது இதோ இவங்ககிட்ட வாங்கிக் கொடுத்ததுதான். இவங்க நாள் தள்ள தள்ள நம்ப மாட்டென்றாங்க; அதான் உங்களைக்காட்டி நீங்களே நேரே கேட்டுப் பாருங்கன்னு கூட்டிட்டு வங்திட்டேன்” என்று சிரித்தார் கோவிந்தன்.
அவரோ “நீங்க பேசும்போது சில சமயம் வீட்லயே போனை வச்சுப்போயிடறேன். சில சமயம் சரியா சிக்னல் கிடைக்கலே; ஒரு ரெண்டு மாசம் பொறுத்துக்குங்க; பைசல் செஞ்சுடறேன்” என்றார். ”நீங்க வட்டியையும் நிறுத்திட்டீங்க; என்பொண்ணுக்கும் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு; சீக்கிரம் குடுக்கப்பாருங்க” என்றார் சடகோபன். “ஒரு நாலு மாசமா ரொம்ப கஷ்டங்க; அதான்; இந்த மாசம் சேத்துப் போட்டுடறென்” என்று அவர் பதில் சொல்ல, ”நாங்க கோவிந்தனுக்காகத்தான் கொடுத்தோம். இப்ப அவசரத்துக்கு எங்களுக்கு வாணாமா? அவரு உங்களைக் காரணம் காட்டறாரு” என்று சற்று இறுக்கமான முகத்துடன் கேட்டார் பழனி.
”ஐயா, நீங்க வந்தது குறிச்சு ரொம்ப சந்தோஷம்; இன்னும் ரெண்டே மாசம்தான், எல்லாப் பணமும் அடைச்சிடுவோம்.” என்று கூறிக்கொண்டே அவர் மனைவி காப்பி எடுத்து வந்தார். ”ஏன் நீங்க கெளம்பலியா” என்று கோவிந்தன் கேட்டதற்கு ”நான் ரிடயர்டு ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சுங்க” என்று அவர் பதில் சொன்னார். ”பணம் எல்லாம் வந்திடுச்சா” ன்னு திரும்ப கோவிந்தன் கேட்க,”அதில ஒரு சிக்கலுங்க; இன்னும் பூரா வரல, பென்ஷந்தாங்க வருது” என்று அவர் பதில் சொன்னார்.
”சரி இவ்வளவு தூரம் வந்திருக்கமே; இப்ப ஏதாவது குடுங்க” என்று கேட்டேன் நான். வந்ததுக்கு நானும் ஏதாவது கேட்க வேண்டுமல்லவா? அவர் சும்மா இருக்க ”வட்டியாவது ஏதாவது குடுங்கய்யா” என்றர் சடகோபன். ”இன்னும் மூணு நாளுக்குள்ள வட்டி பூராவுமே போட்டுடறேன்” என்றார் அவர்.
பேச வேறு என்ன இருக்கிறது? கிளம்பினோம். அப்போது முன்பக்க அறையினுள் இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்டிலில் இருந்ததைப் பார்த்தேன். கோவிந்தன் அங்கு அழைத்துச் சென்றார். கட்டில் பக்கத்தில் ஒரு சக்கர நாற்காலி இருந்தது. ”இவருதாம்மா நான் சொன்ன எழுத்தாளரு” என்று என்னை அப்பெண்ணிடம் காட்டிய கோவிந்தன் என்னிடம் ”ஒங்க புத்தகம் எல்லாம் இது படிச்சிருக்குங்க; நான் வாங்கற ஒங்களது எல்லாத்தையும் இவங்களுக்கு அனுப்பிச்சுடுவேன்” என்று என்னிடம் சொன்னார். அதற்கு அந்தப் பெண் என்னை பார்த்து, ஆமாங்க; கடைசியா வந்த சின்னசாமியின் கதை நாவல் கூட படிச்சுட்டேங்க” என்றார். எனக்கும் இவ்வளவு தொலைவில் ஒரு வாசகர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
வண்டி கிளம்பியதுமே சரியாக மழை பிடித்துக் கொண்டது. பத்து கிலோமீட்டர் போனதும் மழை நின்று விட்டது. சடகோபன் கேட்டபடி பன்னிரண்டு மணிக்குள் அழகர் கோவில் போய் கள்ளழகரையும் சேவித்து திருச்சி நோக்கிப் புறப்பட்டோம். வழியில் உணவு முடித்துத் திருச்சி தொடும்போது மணி மூன்றாகிவிட்டது. ”ஏம்பா, அப்படியே சீரங்கம் போயி அம்மா மண்டபத்துல நிறுத்து; காவேரியில இப்பவாவது காவேரியில குளிச்சிட்டுப் போயிடுவோம்” என்று கோவிந்தன் ஓட்டுநரைப் பார்த்துச் சொன்னதற்கு யாரும் மறுப்பு சொல்ல வில்லை.
காவிரி ஆறு முழுக்கத் தண்ணீர் ஓடிப் பார்க்க அழகாகவும், பயமாகவும் இருந்தது. கரை ஓரத்தில் இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டோம். சடகோபன் மட்டும் குளிக்க வரவில்லை. எங்கள் உடைமைகளைப் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அதுவும் நல்லதாகப் போய்விட்டது. நாங்கள் இறங்கும்போது லேசாக ஆரம்பித்த சிறு தூறல் கனமழையாகப் பெய்யத் தொடங்கியது. அவர் எங்கள் உடைகளை நனையாமல் எடுத்துக் கொண்டு போய் விட்டார். தண்ணீர் இடுப்புக்குக் கீழே சூடாகவும் மேலே மழை நீர் குளிர்ச்சியாகவும் இருந்தது.
”ஏன் கோவிந்து யாருமே கொஞ்சம் கூட சூடா கனமாக் கேக்கலையே? நான் அடிக்கறாப்பல அடிக்கறேன்; நீ அழறாப்பல அழுன்ற மாதிரில்ல இருந்தது” என்று கேட்டேன் நான்.
”எப்படீங்கய்யா கேக்கறது? அவரு நெலமையைப் பாத்திங்கல்ல; அவருக்கு வியாபரத்துல நஷ்டம்; பெரிய பொண்னு விவாகரத்தாகி வீட்டோட வந்து ஏதோ கம்பியூட்டர் வேலைக்குப் போகுது. நடக்க முடியாத சின்னப் பொண்ணு; இப்பதான் ஒரு வருஷமா அதுக்கு மாற்றுத் திறனாளிங்கறதானல தமிழாசிரியர் வேல அரசுபள்ளியில பக்கத்துலயே கெடச்சிருகு, அவங்க மனைவிக்கும் இன்னும் பணம் வரலையாம். எப்படிக் கேக்கறது பாத்தாலே பரிதாபமா இல்ல?”
”இப்படிப் பாத்துப் பாத்துத்தான் எல்லாம் கோவிந்தா கோவிந்தான்னு போடறாங்க; நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்குங்க; அவர் மனைவிக்கு எப்படியும் இருபதாயிரம் பென்ஷன் வரும். புள்ள எப்படியும் கொரைஞ்சது ஐம்பதாயிரம் சம்பாதிப்பான். சின்ன பொண்ணுக்கும் இருபதாயிரம் வரும்; ஆனா அவரால வட்டியைக் கூட போட முடியல; நீங்க அவருக்குப் பரிதாபம் பாக்கறீங்க?”
கோவிந்துக்கு என்னமோ போலாகிவிட்டது. என்னைப் பார்த்து ”அய்யா, நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டான்.
அவன் கையைப் பிடித்து இழுத்தேன். என்பக்கத்தில் நிறுத்தினேன். ”இதோ பாரு; கடை முழுக்குப் போகணும்னு கேட்டயே? சூரியனைப் பாத்து ஒரு கடன் முழுக்குப் போடு” என்று நான் கூற அவன் திகைத்தான்.
——————-

பேசி : 93676 31228. Valavaduraiyan@gmailcom.

Series Navigation“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”பல்லக்கு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *