மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை

This entry is part 7 of 31 in the series 11 ஜனவரி 2015

.

 

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன்.

 

முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் 100.:-

*******************************************************

 

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய முயற்சி. இதில் நான் ஆச்சர்யப்பட்டது சர்ச்சிலின் மொழி வளம் பற்றி. மிகப் பெரும் அரசியல்வாதி என்பதைத் தவிர ஆற்றலுள்ள பேச்சாளரும் கூட என்பதையும் அரிய முடிந்தது. பலமுறை இறப்பின் விளிம்புகளைத் தொட்டவர். அரசியல் சதுரங்கத்தில் சில முறை வெற்றியடைந்தவர். என்று பல தகவல்களைப் பகிர்கிறார் கோபி. இரண்டாம் உலகப் போரைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரியும் . அதன் முன் பின்னான அவரின் வாழ்வியல் பற்றி அருமையான விவரிப்பு இந்நூலில் உள்ளது. மிக அருமையான சுவாரசியமான தகவல் களஞ்சியம்.

 

 

மௌன அழுகை :-

******************************

 

கிட்டத்தட்ட 15 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் கோபி. அதில் ஒன்று மௌன அழுகை. கவிதைத் தொகுதி. முன்னுரை வழங்கியவர் கல்கியின் தலைமைத் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா. அணிந்துரை ஈரோடு சம்பத்.

 

புலம் பெயர் வாழ்வின் துயரங்கள் அங்கங்கே கவிதையாகி இருக்கின்றன. ஈழத் தமிழரின் அவல வாழ்வும் பாலசந்திரனின் மரணமும் கவிதையாகி அவஸ்தைப்படுத்துகின்றன. எழுந்து வருவோம் உன்னிலிருந்து என்ற கவிதையில்

 

புறமுதுகு காட்டா புறநானூற்றுத் தமிழன்

என அறிந்து மார்பில் சுட்டார்களோ ?

 

இத்தொகுதியில் மிகப் பாதித்த கவிதை வன்மம்

 

இடறிவிழும்

உன் ஆசைகளுக்கான

காரண ஈறுகளை

பேனாய்

பெருமாளாய்ப் பருமனாக்கி

எப்பொழுதும்

என்மீது

உமிழ்ந்து செல்ல

உனக்கு கிடைத்துவிடுகிறது

நீ ராசியில்லாதவள்

என்ற ஒற்றை வரி.

 

பெருநகர வாழ்வில் இயற்கையாய் நாமிழந்துவிட்ட பலவிஷயங்களைப் பேசிச் செல்கின்றன கவிதைகள். தடம் அப்படியான ஒன்று

 

புறநகரின்

மனைகள் தோறும்

புதைந்து கிடக்கிறது

உழுது விதைத்து

உயிர் வளர்க்க

உணவு தந்தவனின்

வறுமை தடவிய

வியர்வை ரேகைகள்.

 

நினைவுகள் குழைந்த தருணம் கண்ணீர் விட வைத்த கவிதை.

 

பெற்றோர்

மனைவி

பிள்ளைகள்

நண்பர்கள் என

எல்லோருக்கும் ஏதோ ஒரு

நினைவுகளைத் தருபவனாகவே

துயில்கொண்டிருந்தான்

 

சடங்கேந்தி வந்த உறவினர்கள்

பொணத்த எப்ப தூக்குறீங்க ? என

விசாரிக்கும் வரை.

 

மௌன அழுகையும் அப்படியான ஒன்று. மனைவியாகவும் கூடு பாய்ந்து அந்த உணர்வுகளைக் கவிதையாக்கி உள்ளது சிறப்பு.

 

கடவுளுக்கு வந்த சோதனை கண்டதேவித் திருவிழாவை நினைவுறுத்தியது. வெளிநாட்டில் வசித்து வந்தாலும் கோபியின் நினைவுகளில் சூல்கொண்டிருப்பது தாய்நாடே.. அதன் பிரதிபலிப்பாகவே கவிதைகள் வெளிப்படுகின்றன. மிக யதார்த்தமான கவிதைகள் படித்துப் பாருங்கள்.

 

நூல் :- வின்ஸ்டன் சர்ச்சில் 100

ஆசிரியர் :- மு. கோபி சரபோஜி

பதிப்பகம் :- நக்கீரன் குழுமம்

விலை ரூ :- 50/-

 

நூல் :- மௌன அழுகை

ஆசிரியர் :- மு. கோபி சரபோஜி

பதிப்பகம் :- அகநாழிகை

விலை. :- ரூ 70/-

Series Navigationஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *