ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

This entry is part 8 of 31 in the series 11 ஜனவரி 2015

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.

 

ஷானின் கவிதைகள் ஒரு குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் பதிவு செய்கின்றன. அதிலும் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் இரைச்சலை எழுத்திலேயே நம்மையும் கேட்கவைக்க முடிகிறது அவரால்.

 

அன்றாடம் நாம் கடந்து செல்லும் சட்டை செய்யப்படாமல் வாழ்ந்தழியும் மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். உதிர்வும் நரமிருகமும் சந்திப்பூவும் வேலைநாளும் கிராமத்து வீடும் பிழையேதுமில்லையும் செவ்வக வாழ்க்கையும் மிச்சமிருந்த இரவும் அவதார அய்யனார்களும் அவஸ்தைப் படுத்தின.

 

விரல்முனைக் கடவுள் தொலைக்காட்சி ரிமோட் படும்பாடைச் சொன்னது. சாபவரம் மிகவும் பிடித்தது. நானும் இதையே வேண்டினேன்

 

ஒற்றை இலை உணவில் கருவாகி

காற்றசையும் கூடுறங்கிப் புதிதாகி

பூமேனி வலியாமல் பசியாறி

மகரந்தச் சுமை தூக்கிக் கடனாற்றி

எத்தனையோ கவிதைகளின் பொருளாகி

ஒரு பகையில்லாப் பட்டாம் பூச்சி போல்

பூமிக்கு வலிக்காமல் வாழ்ந்து

சிறகுதிர்த்து செத்துப் போக

என்னைச் சபித்துவிடு சித்தனே.

 

மழையும் நதியும் காதலும் ரசனையான கவிதைகள். பசி மிருகம் அயரவைத்த கவிதை.

 

குழந்தைகளின் மாறுவேடப் போட்டி வேறொரு உலகை ஸ்தாபித்தது. அம்முவின் கவிதைகளை அதிகம் நேசித்தேன். அம்முவின் உலகம், புன்னகைக் கவிதை, அம்முவின் பூக்கள், அம்முவின் தூக்கம், அதிலும் ஹிக்ஸ்போசோன் மிகவும் ரசித்த கவிதை.

 

கடவுள் சன்னதியில் கைகூப்பிக் கண்மூடி

வேண்டுதல் வியாபாரம் நான் நடத்த

முகமெங்கும் நீறு பூசி

ஓசைத் தாண்டவமாடி

கோவிலெங்கும் நிறைந்து விரிகிறாள்

கடவுள் துகளாய் அம்மு.

 

மிக ஆழமான கவிதைகள் ஷானுடையவை. வாழ்வின் அழுத்தங்களையும் சுமைகளையும் அதன் சாரத்தோடு பகிர்ந்து செல்பவை. படித்துப் பாருங்கள்.

 

நூல் :- விரல்முனைக் கடவுள்

ஆசிரியர் :- ஷான் கருப்பசாமி

பதிப்பகம் :- அகநாழிகை

விலை :- ரூ 80/ –

Series Navigationமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகைஅழகான சின்ன தேவதை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *