“மூட்டை முடிச்சுடன்….”

எஸ். ஸ்ரீதுரை

எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில்

அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும்,

பருப்புவகை மூட்டைகள் பத்தும்

பித்தளையும் வெண்கலமுமாய்

பாத்திரக் கடையையே கிளப்பிவந்த

சீர்வரிசைப் பண்டங்களும்

காய்கறி அடைத்த கோணிகளும்

பட்சணவகைகளை அடைகாத்த

பலவகை சைஸு மூங்கில் கூடைகளும்

நகைப்பெட்டிகளும் பட்டுப்புடவைகளும்

நிரம்பினதால் மூச்சுத் திணறிக்

கொஞ்சம் கூட நகர முடியாமல்

மூச்சுமுட்டிக்கொண்டிருந்த பீரோவும்

எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு

ஏழெட்டு டிரங்குப் பெட்டிகளும்

பாக்கு வெற்றிலை பழங்களும் பூவுமாய்

புகுந்தவீடு வந்துசேர்ந்த பொன்னம்மாள்

ஐம்பது வருசம் கழித்து

ஆட்டோவில் இதோ பயணிக்கிறாள்….

துணிக்கடை இனாம் கொடுத்த

விளம்பரப் பையில் அடைத்த

ஐந்தாறு பழம்புடவையுடனும்

ஆம்படையான் போட்டோவுடனும்

முதியோர் இல்லம் நோக்கி….

**** **** **** ****

Series Navigationகம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி