மூன்று பேர் மூன்று காதல்

யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, ‘ஆதிபகவன்’ என்று இடையே சில ஆல்பங்கள் யுவனிடமிருந்து வந்திருந்த போதும் அவற்றில் சில பாடல்களைத்தவிர மற்ற எவையும் அவ்வளவாக ரசிக்க இயலவில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் படி இந்த ஆல்பத்தில் எந்தப்பாட்டை விடுவது எதை ரசிப்பது என்று திக்குமுக்காடச்செய்திருக்கிறார் யுவன்.!

ஆஹா காதல் கொஞ்சிக்கொஞ்சிப்பேசுதே

வசீகரிக்கும் ஒரு குரலுடன் நந்தினி ஸ்ரீரிக்கர் (‘ஆப்பிரிக்கா காட்டுப்புலி’ என்று ஆளவந்தானில் பாடிய அதே குரல் இவருடையது  ) . அருமையான பியானோவுடன் ஆரம்பிக்கும் மனதைக்கொள்ளை கொள்ளும் பாடல். Repeating Rhythm உடன் கட்டிப்போட வந்திருக்கிறது இந்தப்பாடல். எப்பவும் வஸந்த் படங்கள்ல கர்நாடக இசை ராகப்பின்னணியில் ஒரு பாடலாவது வரும்படி பார்த்துக்கொள்வார்.நித்யஸ்ரீ குரல்ல பூவெல்லாம் கேட்டுப்பார்-ல் ‘பூவே உந்தன்’  ‘சத்தம் போடாதே’வில் ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ இங்கு ‘ஆஹா காதல்’. கணீர்க்குரலுடன், சரியாகப் பொருந்தி வரும் ராகம் இவருக்கானது, என எல்லாம் ஒருங்கே கூடி திளைக்கவைக்கும் அனுபவம் இது. இந்தப்பாடலை முதல் சரணத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் பல்லவி வரும் வரை காத்திருந்து கேட்டுப்பாருங்க,,சுகானுபவம்யா..! கூடவே பாடும் பியானோ கட்டைகள் மனதின் அடியாழத்தில் போயி தட்டித்தட்டி எழுப்பிவிடுகிறது , நம்மை வேறு புறம் செல்ல விடாமல் தடுத்து உள்ளுக்குள்ளேயே ஒலிக்கச்செய்கிறது.

பொதுவா ராஜா’வின் பாடல்களில் தான் இந்த அற்புதங்கள் அநாயாசமாக நிகழும்.எடுத்துக் காட்டாக ‘பாண்டி நாட்டுத்தங்கம்’ படத்தில் வரும் அந்த ‘சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு’ பாட்டில் முதல் சரணத்தில் இருந்து தொடங்கி பின்னர் அதிலேயே பயணித்து சிறு இடையிசை ஏதுமின்றி பல்லவியை எட்டிப்பிடிக்கும்போது , அந்த Connection எந்தப்பிசிறுமின்றி ஒட்டிக்கொள்ளும் நம் மனதில், இன்னொருமுறை வராதா என்று ஏங்கிக்கிடக்கும்போது இரண்டாவது சரணம் ஆரம்பித்து , பயணித்து பின்னர் பல்லவியைப்போய் அடையும் , ஹ்ம்…அதுதான்யா பாட்டு….அப்படி ஒரு அற்புதம் வெகு நாட்கள் கழித்து இந்த “ஆஹ்ஹ்ஹா
காதலில்’ அனுபவிங்க..!

இல்லை அப்படிக் கேட்கப் பிடிக்கவில்லையெனில் முதலில் பல்லவியில் தொடங்கி பின்னர் சரணம் வந்து உள்ளுக்குள் உலவவிடுங்கள்..ஆஹ்ஹா சரக்கு இறங்கியிருக்குது மச்சி.. 
‘பெண்கள் மனமொரு ஊஞ்சல் இல்லை, ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை, இழுப்பது நீயா, வருவது நானா ?! …ஆஹ்ஹா என்ன வரிகளடா..!’ ( ந.மு’வின் வரிகள் )

2:25ல் தொடங்கும் அந்தப்புல்லாங்குழல் சிறுதூறலினூடே வந்து செல்லும் தென்றலைப்போல நம்மை நனைத்துச்செல்கிறது. இடை இசை என்று சொல்லிக்கொளும்படியாக இந்தப்பாடலில் இருப்பினும் அதைக்கவனிக்க வைக்காது, அதை விரைவில் முடிந்து நந்தினியைப் பாடவைத்து நம்மை சொக்க வைக்கிறார் யுவன்.பாடல் முழுக்கவே பியானோவும், வயலினும் கூடவே பாடிக்கொண்டிருக்கிறது. வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கூற்றுக்கே இடமில்லை இந்தப்பாடலில். Lead Guitar முழுக்க பின்னணியில் இருந்து ஒலித்து எடுத்துக் கொடுக்கிறது அவர் பாடும் வரிகளை , எந்த இடத்திலும் அவரின் குரலை மீறாமல்.( நந்தினியே ஒரு Guitarist தான் ..:) )

‘பாரதி கண்ணம்மா’ பாட்டில் வரும் சரணத்தில் ‘நிலாக்காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி” என்பது போல கொஞ்சம் ( கொஞ்சமே தான் அதிகமில்லை  ) பாடலின் தொடக்கத்தில் ஞாபகப்படுத்துகிறது இந்த ஆஹா காதல்  .மேலும் ராஜாவின் “Nothing but Wind “ ஆல்பத்தில் வந்த “Song of the Soul “ போல பின்னணித் தாளம் இசைக்கிறது  இருப்பினும் அதிலிருந்தே வேறுபட்டே நிற்கிறது இந்த ‘ஆஹ்ஹ்ஹா பாடல்’.கூடவே பாடிவந்த அந்த வயலின் 2:09ல் பெருங்குரலெடுத்து நந்தினியை ஓய்வெடுக்கச்சொல்லி தானே இசைக்கிறது பாடலை,,அதோடு பாடல் முடியும் நேரத்தில் 3:38லும் 3:56லும் இடையிடயே தம் குரலெடுத்து நம்மை தாலாட்டுகிறது….. ஆஹா காதல்… காதல் ‘எப்பவுமே’ நல்லாத்தானிக்கு இல்ல..?!  அதுவே ‘ஆஹா காதல்’ங்கறப்போ இன்னும் நல்லா இருக்கு  

காதல் எந்தன் காதல்

‘பேசுகிறேன் பேசுகிறேன்’ என்று சிறு உச்சரிப்புப் பிழையுமின்றி பாடி நம்மை கொஞ்ச காலம் முன்பு இதே வஸந்தின் ‘சத்தம் போடாதே’ படத்தில் மகிழ்வித்த அதே ‘நேஹா பஸீன்’ தமது ஐஸ்க்றீம் குரலுடன் பாடி மகிழவைக்கிறார் இங்கு “ காதல் எந்தன் காதல் “ என்று  கொஞ்சம் அரேபிய பின்னணி இசையில் அமைந்த பாடல் இது. கைதட்டி ரசிக்க வைக்கும் ராகம். ‘முகர்சிங்’ என்ற அதிகம் இப்போது கச்சேரிகளில் இடம்பிடிக்காத காற்று இசைக்கருவி கொண்டு (அப்டித்தான் நினைக்கிறேன் , இப்ப எல்லா வாத்தியங்களும் Synthலேயே இசைக்கமுடியும்  ) இசைக்கப்படுகிறது. பல இடங்களில் தனித்து “தனியாவர்த்தனம்” செய்து நமது உணர்வுகளை நிமிண்டி விடவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதற்கு.! 3:30ல் ‘ஏலேல ஏலே’ என்று நேஹா பாடும் போது நமக்கும் கூடவே பாடத் தோன்றுகிறது.

படபடக்குது மனமே

மூன்று விதமான ராக பாவங்களுடன் இந்தப்பாடல் அமைந்திருக்கிறது. Blaze இங்கிலீஷ்ல பாட்றார் ஹிப் ஹாப்பில், க்ரிஷ் பாட்றார் சாதாரணமா நம்ம பாட்டுமாதிரி.கேட்க இனிமையாகத் தானிருக்கிறது. ஒரே பாடலில் ராகங்களின் பலவித Variations  ஐக் கேட்க முடிகிறது,இடை இசையில் ஒலிக்கும் அக்கார்டியனும், ட்ரம் பீட்ஸும் , மங்காத்தா’வின் ‘பல்லேலக்கா’ பாடலை நினைவு படுத்துகின்றன. Blue வின் ‘One Love “ போல இதுவும் ஒரு addiction ஆகத்தான் போகிறது எல்லோருக்கும். இடையில் வந்து செல்லும் வரிகளைப்பாடாமல் சொல்லிச்செல்வது போல அமைத்திருப்பது அருமை. முன்பு பழைய படங்கள்ல வகையறா , தொகையறா’ங்கற மாதிரி வெச்சு பாட்டு ஆரம்பிக்கிற முன்னால அதுக்கு கட்டியம் கூறுவது போல அமைத்திருப்பர்.அது மாதிரி இங்கே பாட்டின் இடையில் வந்து செல்கின்றன இந்த சொல்லிச்செல்லும் வரிகள்.

கொஞ்சம் அமைதியா உட்கார்ந்து , இரண்டு மூன்று முறை தொடர்ந்து கேட்கும்போது மட்டுமே இதைப்புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் இந்தப்பாட்டின் கட்டமைப்பு ஒரு புதிய வகையில் இருக்கறதால. தொடர்ந்து கேட்டுப்பாருங்க, பிடிக்கும்!

ஸ்டாப் த பாட்டு

“Start music” ன்னு சொன்ன எல்லாரும் இப்ப  “stop the paatu” ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க thats what called as addiction :) ரமேஷ் விநாயகம் குரல் கொஞ்சம் “கங்கை அமரனின்” குரல் போல ஒலிக்குது சில இடங்கள்ல.ஜாலியா ஒரு பாட்டு போடலாம்னு நினைச்சு போட்ட மாதிரி இருக்கு. ‘புதுப்புது அர்த்தங்கள்’ல வர்ற ‘எடுத்து நான் விடவா” ங்கற பாட்டு மாதிரி
அதே Genre-ல்  ஒலிக்கும் பாடல் , இது ஒரு வைரஸ் போல எல்லொரையும் அஃபெக்ட் பண்ணியே தீரும்.  பாடலின் இடையிடையே வரும் க்ளாரினெட்டும், தாளக்கட்டும் நம்மைத்தாளம் போட வைக்கிறது.

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

Mild Rock தான் இது…”Touch by an angel” என்று சொல்லும்போது தெளிவாகத்தெரிகிறது Rock ஐத் தொட்டுச்செல்கிறது பாடல் என்று. யுவனுக்கு எப்பவும் Rock ல அமைந்த பாடல்கள் தான் அவரோட Range க்கு ஒத்து வருகிறது.அது ‘நீஎபொவ’ படத்தில் வரும் “பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா “பாட்டு பாடியபிறகு தான் எனக்கு தெரியவந்தது இவருக்கு அமைந்து வரும் பாடல்கள் எல்லாம் Rock based  என்று. இப்ப அவர் பாடின பழைய பாடல்களக்கொஞ்சம் கேட்டுப்பாருங்க “கண்ணோரம் காதல் வந்தால் (நான் மகான் அல்ல) ”, “எதோ ஒன்று என்னை(பையா), என் காதல் சொல்ல நேரமில்லை (பையா), வெண்ணிற இரவுகள் (பேசு) எல்லாமே Rock based தான்.இதயும் புரியவைக்கறதுக்குக்கூட ராஜா தான் தேவைப்பட்றார் நமக்கு  சோகப்பாடல் தானிது. “தீபாவளி’யில் வந்த “போகாதே” Genre ல் ஒலிக்கிறது பாடல். என்னவோ இந்தக்காதல் தோல்விப்பாடல்கள்னாலே யுவன் தான்.அவர் குரல்ல பாடும்போது நமக்கே நம்மை அறியாம சோகம் நம்மைச்சூழ்ந்து கொள்கிறது.

மழை மழை

பியானோவின் சிணுங்கல்களில் ஆரம்பிக்கும் இந்த இன்னுமொரு மழைப்பாடல். “ நான் உன்னைப் பார்த்த நாளிலே ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை” என்று கார்த்திக் பாடும்போது நம் மனதுக்குள்ளும் அந்தச்சாரல் எட்டிப்பார்க்கிறது. கார்த்திக் கேட்க ஷ்வேதா பதில் சொல்வத் போல அமைந்திருக்கும் சரணங்களில் கொஞ்சம் குழப்பத்தான் செய்கிறது பாடல் ,பின்னர் பல்லவியில் மீண்டும் சரியாகிவிடுகிறது பாடல். இடையிசையில் humming ஒரு பெரும் புல்வெளிப் பிரதேசத்திற்கே இட்டுச்செல்கிறது. ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் வரும் ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே “ பாடல் போல ஒரு ஹாயான பாடல், மயக்கத்தில் ஆழ்த்தும் மழை இது  “துளித்துளித்துளி மழையாய் வந்தாளே”, “அடடா மழடா” மாதிரி அடித்துப் பெய்யும் மழையில்லை இது , உங்களுக்குத்தெரியாமலேயே மெல்ல நனைத்துச்செல்லும் சாரல் இது 

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்மதிப்பும் வீரமும்