மூளிகள்

Spread the love
ருத்ரா இ.பரமசிவன்
மூளிகள் தான்.
விழியில்லை தான்.
ஆனால்
பாச உணர்ச்சியின்
பச்சை நரம்புகள்
பால் ஊட்டிச் செல்லும்
“பூமத்ய ரேகைகள்”
அதில் ஓடுகின்றது
உங்களுக்கு தெரிகிறதா?
முல்லை முறுவல் காட்டும்
உதடுகள் மொக்கைகளாக‌
உங்களுக்கு தெரியலாம்.
பளிச்சென்று
மின்னல் விழுதுகள்
அன்பின் கீற்றுகளாய்
இழையோடுவது
உங்களுக்கு புலப்படவில்லையா?
ஒரு முத்துவை சுமக்கும்
இரு சிப்பிகளைக்
கொஞ்சம் பிசைந்து உருட்டிச்செய்ததே
இந்த குடும்பம்.
கண் எதற்கு?
இமை மயிர் படபடப்புகள் எதற்கு?
மூக்கு இல்லை.
முகவாய் இல்லை.
இதயக்கடலின் அடி ஆழத்து
மண் எடுத்து பிண்டம் பிடித்தது இது.
நாம் மூவர்.
நமக்கு மட்டுமே நாம்.
நாடு அடையாளங்கள்
இங்கு ஒட்ட வேண்டாம்.
ஊமை மானுடத்துக்குள்ளும்
உற்றுப்பார்த்தால் தெரியும்
உறங்கும் ஒரு
எரிமலையின் கரு.
அது
உமிழும்போது
உமிழட்டும்.
மனித அன்பின் கதகதப்புக்குள்
காட்டுத்தீயின் சித்திரம் எதற்கு?
தாயும் தந்தையுமாய்
கோர்த்து நின்றாலும்
தாய்மை மட்டுமே
பூசப்பட்ட உருவங்கள் அவை.
பகிர்ந்து கொள்ள்ளப்பட்ட
பசியும் தாகமுமே
அங்கு மொழிகள்.
______________________________________________________________
அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் ஃபீனிக்ஸ் நகர் அருகே தொன்மையான இந்தியப்பழங்குடிகளின் ஒரு குடும்பத்து சிற்பம் இது.
இந்திய பழங்குடிகளின் மியூசியத்தில் எடுத்த புகைப்படம்.
______________________________________________________________
ருத்ரா இ.பரமசிவன்
Series Navigation