மெய்ப்பொருள்

சத்ய தாரையில்

ஒரு துளியாய்

தெய்வம் கண்ட தருணம்.

ஆத்ம அரவத்தின்

ஒய்யாரத்தில்

கவிதையின் சயனம்.

கிடந்த

பெரிய வீணையிலிருந்து எழுந்த

புலப்படாத ராகத்தின்

உயரத்தில்

லயித்துப் பறக்கிறது

மனப்பட்சி!

கூப்பிய கைவிரல்களுக்கு

இடையில்

ஏந்திய மௌனம்

துளசியின் ஈரம்பட்டு

விழித்துக் கொள்கிறது !

சேவிக்கும்

தாமரைக்குள்ளேதான்

வாழ்வின் மகரந்தம்.

சொல்லிக் கொடுத்தவன் அருகில்.

பிரித்துக்கொடுத்தவன் எதிரில்.

இருந்தும்

புரியாது கல்லாய் நிற்கிறேன் !

கல்லே நாம் !

கல்லே நம் ஆசான் !

கல்லே தெய்வம் !

கல்லே சத்யம் !

பொய்யென்று

எதைப் பெயரிடுவது ?

எல்லாம் சத்யம் !

பொய்கூட

சத்யமில்லாத சத்யம் !

— ரமணி

Series Navigationசென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு