மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

Spread the love

puthiyamad1.

இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர்

செங்கோட்டை ஆவுடையக்காள்.

 

செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு” – 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. “பிரம்மயோகம்” என்ற பெயரில் ஆவுடையக்காளின் சிறுபாட்டு புத்தகம் 450 ஆண்டுகளுக்கு முன்னரே

வெளிவந்துவிட்டது. செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில்

மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாதித்த ஆளுமைமிக்கவர் எனலாம்.

என்ன காரணத்தாலோ நம் மகாகவி செங்கோட்டை ஆவுடையக்காவைப் பற்றி

எவ்வித குறிப்புகளையும் பதிவு செய்யவில்லை. இச்செய்தி தனிப்பட்ட

ஆய்வுக்குரியதுதான்.

 

ஜாதி வர்ணாசிரமம் போச்சே

வேத சாஸ்திரம் வெறும் பேச்சே – ஆவுடையாக்கா

 

இதையே பாரதி தன் வரிகளில்,

 

ஜாதி சண்டை போச்சே- உங்கள்

சமயச் சண்டை போச்சே

 

என்கிறார்.

 

“தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து

மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே –

என்கிறார் ஆவுடையக்கா.

 

பாரதி,

 

மோகத்தைக் கொன்றுவிடு அல்லால்

எந்தன் மூச்சை நிறுத்திவிடு

 

என்கிறார்.

 

பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடக்கிறது.

பால்யவிவாகத்தின் கொடுமையை அனுபவிக்கிறார்

ஆவுடையக்கா. ஆம், ஆவுடையக்காவின் கணவர் இறந்துவிட

இளம்வயதிலேயே கைம்பெண் கோலம், ஆனால் அதுவே

அவர் அறிவுதேடலின் ஆரம்பமாகிறது. கல்வி ஞானம் பெறுகிறார்.

அத்வைத தத்துவத்தில் ஆளுமை உடைய ஞானப்பெண்ணாக

ஆவுடையக்கா தன்னை வளர்த்துக் கொள்கிறார். பாடல்கள் புனைகிறார்.

விளைவு? இந்தச் சாதி சமூகம் ஆவுடையக்காவை “ஜாதிபிரஷ்டம்” செய்கிறது.

செங்கோட்டை பகுதியில் ஆவுடையக்காவைப் பற்றி

அக்ரஹாரத்து பெண்களுக்கு தெரிர்ந்திருக்கிறது. அதுவும் இன்றும் ஆவுடையக்காவின் பெயரை உச்சரித்துவிட்டாலே போதும்,

கண்களில் கண்ணீர் மல்க கரைந்து போகின்றார்கள்: அந்தப் பெண்கள்.

(கோரேகான் தமிழ்ச் சங்கத்தில் 30 ஜனவரி 2014 அன்று அமரர் கி.

நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவு ஆற்றியபோது எனக்கு ஏற்பட்ட

அனுபவம் இது)

 

 

ஆண்டாளும் மீராவும் கோவிலுக்குள் சென்றவர்கள் திரும்பிவரவில்லை.

ஆண்டவனுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அக்காமகாதேவி அவள் வாழ்ந்த குகைக்குள் மறைந்தாள்.

காஷ்மீரின் லல்லா ஆகாய மேகக்கூட்டத்தில் மறைந்தாள்.

நம் ஆவுடையக்கா குற்றால அருவிக்கு குளிக்கப் போனவள்

மலைமீதேறி மறைந்துவிட்டாள் என்கிறார்கள். சிலர் அருவியில் விழுந்து

விட்டாள் என்கிறார்கள்.

 

மெய்வழி பயணத்தில் இந்தப் பெண்கள் அனைவருக்குமே ஏன்

ஒரேமாதிரியான முடிவு?

சமூகத்தில் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன?

 

இவர்களின் ஆன்மீகத் தேடலில் இந்தப் பெண்ணுடல்கள்

எங்கே காணமால் போனது? ஏன் காணமல் போனது?

இந்தப் பெண்ணுடல்கள் மீது அப்படி என்ன ஓவ்வாமை?

இக்கேள்விகள் கேட்கும் பெண்களை ஒதுக்கலாம்,

இருட்டடிப்பு செய்யலாம், கள்ளமவுனத்தில் வழக்கம் போல

கடந்து செல்லலாம். உயிருடன் எரித்துவிடலாம், உடலைக் கூட

காணாமல் ஆக்கி அதற்கும் வேதாந்த ரீதியாக காரணங்கள்

சொல்லலாம். ஆனால் இந்தக் கேள்விகளை எவராலும்

ஒன்றும் செய்ய முடியாது,

மீராவின் கவிதையுடன் நிறைவு செய்கிறேன்:

 

 

ஓ நண்பர்களே..

இந்தப் பாதையில் என் விழிகள்

இவை இனி என் விழிகள் அல்ல

விழிகளின் ஊடாக வியாபித்த ஆனந்தம்

என் இதயத்தை துளைக்கிறது.

சாலையை வெறித்தப்படி

இன்னும் எவ்வளவு காலம்

உடல் என்ற வீட்டில் காத்திருப்பேன்?

வாழ்க்கைப் பிணி தீர்த்த மாமருந்து

அவனே மூலிகை

எல்லோரையும் தாங்கும் வல்லமைப்படைத்தவன்

அந்தக் கிரிதரன்

அவனுக்குச் சொந்தமானவள் இந்த மீரா

எல்லோரும் சொல்கிறார்கள்

அவளைப் “பிச்சி” என்று.

 

 

துணை நின்ற குறிப்புகள்:

 

> தமிழ்நேயம் – மெய்யியல் கட்டுரைகள்

 

> www.poemhunter.com

> http:www.sssbpt.info/vahinis/Prasnottara.10.pdf

 

 

Series Navigationகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18