மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்

author
0 minutes, 46 seconds Read
This entry is part 13 of 14 in the series 15 ஜனவரி 2017

-எஸ்ஸார்சி

மொழிபெய்ர்ப்பாளர் திரு.குறிஞ்சிவேலன் உள்ளத்தில் வித்தாகிய ஒன்று ‘திசை எட்டும்’ விருட்சம் எனப் பரந்து விரிந்து செழித்து ஓங்கி வாசக நெஞ்சங்களுக்கு விருந்தாகி நிற்கிறது.கடலூர் மாவட்டத்து சிறிய நகரமாம் குறிஞ்சிப்பாடியை ஒட்டியது மீனாட்சிப்பேட்டை.அங்கிருந்து முகிழ்த்துக்கிளம்பி இந்தப்பாரினை வலம் வருகிறது. இம்மொழி பெயர்ப்புக்காலாண்டிதழ்’திசை எட்டும்’ வாராது வந்த ஒரு மாமணி. மாகவி பாரதியின் வார்த்தைதனைத் தன் சிரமேற்கொண்டு செய்ல்படுவதால் கூடுதலாய்ச்சிறந்து சிந்தனைக்கு விருந்தாகி நிற்கிறது.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ வாசகனுக்குச்சொல்லும் எட்டையபுரத்து முண்டாசுக்கவியின் முகம் அதன் கீழே விரிந்து கிடக்கும் ஞானப்பொக்கிஷமாம் நூலொன்று.இவை தன் இலச்சினையாகக்கொண்டு முத்திரை பதித்துவரும் காலாண்டிதழ் தன் முதல் இதழை ஜூலை-செப்டம்பர் 2003 என எழுதித்தன்க்கணக்கைத்துவக்கியது.
அய்ம்பது இதழ்களைத்தொட்டுத் தமிழ் இலக்கிய ப்பரப்பில் தனக்கென ஒரு மொழியாக்க இலக்கிய வரலாற்றினை இவ்விதழ் எழுதிச் செல்கிறது.தமிழிலும்சரி இந்திய இலக்கிய தளத்திலும் சரி திசை எட்டும் இதழுக்கு நிகராக ஒரு மொழிபெயர்ப்பு இத்ழ் எங்கும் வந்தது இல்லை..
குறிஞ்சிவேலனுக்கு உற்ற துணையாக பெரிய மனதுக்குரிய ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இருந்து வருதலாலேயே இந்த உயரிய மொழிப்பணி தமிழ்ப்பரப்பில் சாத்தியமாகிறது.
ப.ஜீவகாருண்யன்,வேர்கள் இராமலிங்கம்,மூழிக்குளம் சசிதரன் ஆகிய நண்பர்கள் குறிஞ்சிவேலனுக்கு இதழ் தொடங்க வழிமொழிந்த நண்பர்கள்.
குறிஞ்சிவேலன் திசை எட்டும் இதழின் பெரு நோக்கத்தை முதல் இதழில் இப்படி எழுதிச்செல்கிறார்.
‘இந்திய அரசால் அங்க்கீகரிக்கப்பட்ட இருபத்திரெண்டு மொழிகளிருந்தும் நல்ல படைப்புக்களை மொழிபெயர்த்து இந்திய ஒருமைப்பாட்டை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு இதழிலும் படைப்புக்களை வெளியிட ஆர்வமாய் உள்ளோம். இதோடுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு ஒரு சிறப்பிதழ் மூலம் உலகின் பல்வேறு மொழிகளின் படைப்புக்களை வழங்கும் தனித்திட்டமும் உள்ளது’.
முதல் இதழின் மேலட்டை.எரியும் ஒரு சிம்னி விளக்கு வெளிச்சத்தில் புத்தகம் படிக்கும் சிறுவன் பின் பக்க அட்டை கங்கைகொண்ட சோழபுரத்து சிவ பார்வதி சிற்பம். இரண்டும் தனித்தனியே அதன் அதன் நிலையில் அழகுடன் ஆனந்தம் பயப்பவை.
முதல் இதழில் முதல் மொழிபெயர்ப்புக்கதை ‘ஆதாப்’ சமரேஷ் பஸூ வின் வங்க மொழிக்கதை. பெ.பானுமதி மொழிபெயர்த்து இருக்கிறார். இந்து முஸ்லிம் இனக்கலவரம் மனிதாபிமானத்தை விழுங்கிய சோகம் சொல்லும் கதை.அடுத்து சாந்தாதத் தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்த ‘குலாபி அத்தர்’ ஸ்ரீபாத சுப்ரமண்ய சாஸ்திரி யின் வாசனைப்பொருள் தயாரிக்கும் எளிய வியாபாரி கானின் மன ஓவியத்தை வெளிச்சமிடும் சிறுகதை. இந்தியில் பணீஷ்வர் நாத் ரேணு எழுதிய ‘பயில்வானின் மத்தளம்’ பாலசுப்ரமணியம் மொழிபெயர்த்திட வெலியாகியுள்ளது.டி.பத்ம நாபன் எழுதிய காலபைரவன் கதை மலயாளத்திலிருந்து ப.ஜீவகாருண்யனால் மொழியாக்கம் செய்யப்பட்டு சிறப்பாக வந்துள்ளது ரஸ்கின் பாண்ட் ஆங்கிலத்தில் எழுதிய ‘ புழுதி படிந்த மலை ‘ யை சா. தேவதாஸ் தமிழில் அழகாய் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார்.கசப்பு குப்புசாமி ராம்ஸ்வரூப் அணகி பஞ்சாபியில் எழுதிய ‘சைடு பிசினஸ்’ என்னும் கதையைத்தமிழில் தந்திருக்கிறார்.
மூல மொழியினின்று தமிழுக்கு நேராக மொழிபெயர்க்கப்பட்டு வந்தால் மட்டுமே அது சிறப்பு என்பதனை த்திசை எட்டும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய இக்கட்டுக்கு உள்ளானது.
இரண்டாவது இதழில் சு.கிருஷ்ணமூர்த்தி ,சித்தரஞ்சன் செங்குப்தா வங்க மொழியில் எழுதிய ‘ஒழுக்கக்கேடும்-சோற்றுக்கனவும்’ என்னும் சீரிய கதையை சுவைபடத் தமிழில் தந்துள்ளார்.மொழி பெயர்ப்பு இப்படிச்சரளாமாக ஊற்றெடுக்கிறது.
‘பிறகு காலம் மாறியது.சுரங்கம் தேசியமயமாக்கப்பட்டது…. இப்போது வேலை குறைவு.காசு நிறைய.முன்பு அதிகாரிகள் தொழிலாளர்களைப்பயமுறுத்தினார்கள்.இப்போது தொழிலாளர்கள் அதிகாரிகளை மிரட்டத்தொடங்கி விட்டார்கள்’
ஒன்பது எண் கொண்ட திசை எட்டும் இதழில், ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடப்படைப்பு ‘ஜோகி அஞ்சப்பனின் கோழிக்கதை’
யை தி.சு சதாசிவம் மொழிபெயர்த்து வெளியாகியுள்ளது.கே.பாலசண்முகத்தின் ஓவியம் கனம் சேர்க்க இந்தக்கதையை திசை எட்டும் வெளியிட்டுள்ளது.
‘அப்பாவிற்கு ஒரு கல்லறை’ என்னும் ஆங்கிலக்கதையை 12 ஆம் இதழில் ராஜ்ஜா மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். மூல ஆசிரியரான பி.வி.செல்வராஜ் புதுச்சேரியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.பீகாரில் பிறந்த செல்வராஜ் ஒரு தமிழர் என்கிற செய்தியையும் திசை எட்டும் சொல்லிச்செல்கிறது.
எண் 13 கொண்ட இதழ் இரா.நடராசனை சிறப்பாசிரியராகக்கொண்டு வெளிவந்துள்ளது.இது சீன மொழி ச்றப்பிதழ்.இரா.நடராசன் சீன மொழி பற்றி மிக மிக ஆழமான கட்டுரை ஒன்றை எழுதிவெளியிட்டுள்ளார்.
‘ஆங்கில க்கலப்பு சீனத்தில் இடம்பெறவில்லை’ என்கிற செய்தி சொல்கிறார்.திசைஎட்டும் இதழ் 16ல் ஆப்பிரிக்க கரோ மலை சனங்களின் பழங்கதை ‘பூலோக ஜனனம்’ வெளியாகியுள்ளது. எஸ்ஸார்சி மொழியாக்கம் செய்துள்ளார்.
இதழ் 36ல் கவிஞர் சிற்பி மொழி பெயர்ப்பு தளத்தில் ஒரு வலுவான கருத்தை நம் முன் வைக்கிறார்.
முதலில் மொழி பெயர்ப்பாளன் மொழியின் திரையை ஊடறுக்க வேண்டும்.
இரண்டாவதாக ஆசிரியரின் உள்ளத்தைத்துல்லியமாக அறிய வேண்டும்,
மூன்றாவதாகப்பண்பாட்டுக்கூறுகளை உணர்ந்தறிய வேண்டும்.
ஒவ்வொரு படைப்பாளனின் தனித்தன்மையை நழுவ விடாது செறித்துக்கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாகக் கதை நடக்கும் காலத்துடன் மொழிபெயர்ப்பாளனும் தன்னைப்பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மொழி பெயர்ப்பு என்னும் கூடுவிட்டு கூடுபாய்வது எளிதான கலை அல்ல.பாய்ந்தபின்னும் கூட்டுக்குள் உயிர் இருக்கிறதா என்பதுதான் ‘ஆசிட் டெஸ்ட்’ ..
இதே இதழில் ராஜேஸ்வரி கோதண்டம் மொழிபெயர்த்த நாமினி சுப்ரமண்ய நாயுடு வின் ‘பால் மடி’ என்னும் தெலுங்குக்கதை வெளியிடப்பட்டுள்ளது.
எருமை மாட்டுக்கு கற்பூரம் காட்டி அதனைக் கண்களில் ஒத்திக்கொள்ளும் புதிய செய்தியை ச் சொல்லிக்கதை முடிகிறது.
திசை எட்டும் பரவ வேண்டிய தமிழ்க்கதைகள் என்று பெய்ரிட்டு இதழ் 2 லிருந்து துவங்கி அது வெகு சிறப்பாக வெளியிடப்படுகிறது.’அன்புள்ள’ என்னும் தலைப்பில் தனுஷ்கோடி ராமசாமி எழுதிய சிறுகதையில் தொடங்கி இத்தலைப்பில் அனேக சிறுகதைகளை திசைஎட்டும் வெளியிட்டு வருகிறது.அத்தனையும் தமிழ் இலக்கிய படைப்புத் தளத்தில் முத்திரை பதிக்கும் படைப்புக்கள்.இவை பிற இந்திய மொழிகளில் இக்கதைகள் வெளிவரவேண்டும் என்பதனை லட்சியமாகக்கொண்டு திசை எட்டும் செயலாற்றுவதை நம்மால் காணமுடியும்.ஜெயந்தன் எழுதிய ‘ஆகஸ்ட்’
கந்தர்வன் எழுதிய ‘ஆம்பிளை’,ராஜேந்திர சோழன் எழுதிய ‘சிதைவுகள்’நாஞ்சி நாடனின்”காலக்கணக்கு’ ஆ.மாதவனின்’ஆனைச்சத்தம்’சூடாமணியின்’அடிக்கடி வருகிறான்’கொ.மா.கோதண்டத்தின் மலைக்காட்டிடையே ஒரு மாட்டுக்கிடை’பிரபஞ்சன் எழுதிய ‘மனுஷி’மேலாண்மை பொன்னுசாமி எழுதிய முட்டை வேட்டை’ ப.ஜீவகாருண்யனின்’வேட்டைக்குத்தப்பிய விதைகள்’,நீல.பத்மனாபனின்’ஜீவ காருண்யம்’ எஸ்ஸார்சி எழுதிய’யாதுமாகி’,தமிழ்மகனின்’நோக்கம்’ க்ருஷாங்கினியின்’இடப்பெயர்ச்சி
ராஜ்ஜா எழுதிய’நட்சத்திர வியாபாரி’சாரோனின் ‘ஈசல்வேட்டை’ வே.சபா நாயகம் எழுதிய ‘இனியொருதடவை’இரா.நடராசனின்’விஞ்ஞானக்கிறுக்கன்’ பாரதிவசந்தனின் ‘தம்பலா’ என திக்கெட்டும் பரவத்தேர்ந்த சிறுகதைகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்வதை க்காணும் போது தமிழ் சிறுகதைகள் உலக ப் படைப்பு அரங்கில் முதன்மை பெற்று விளங்குவன எனலாம்..
நேர்காணல் என்னும் விஷயம் இலக்கியதளத்தில் பல்வேறு செய்திகளைக்கொணர்கின்ற வாயில்.அதனை திசைஎட்டும் பயன்படுத்திய அளவு எந்த இலக்கியப்பத்திரிகையும் பயன்படுத்தி இருக்கமுடியாது.சாகித்ய அகாதெமியின் இலக்கிய வெளியீடுகள் நேர்காணலை எப்படி அமைத்தால் சிறக்குமோ அந்தப்படிக்கு திசை எட்டும் இதழ் எழுத்தாளர் நேர்காணலில் இயங்குவது போற்றுதலுக்குறிய ஒரு செய்தி.
ஒவ்வொரு மொழியின் படைப்பாளியும் இலக்கியம் பற்றி மொழி பெயர்ப்பு பற்றி எதனைத்தன் உள்ளக்கிடக்கையாகக்கொண்டுள்ளார் என்பதைக்ய கூரிய வாசகனுக்கு தெரிவிக்கும் பலகணியாக நேர்காணலை அணுகுவது திசை எட்டின் பண்பாக அமைந்து கிடத்தலை உணரமுடிகிறது. என்.எஸ் மாதவன் மலயாள இலக்கிய மேதையொடு குறிஞ்சி வேலன் இதழாசிரியர் நேர்காணலில் தொடங்கும் இந்த அரிய விஷயம் இதழுக்கு இதழ் தொடர்ந்து கொண்டேபோகிறது.மூன்றாவது இதழில் சு.கிருஷ்ணமூர்த்தியொடு குறிஞ்சிவேலன் நேர்காணல் ஆழம் கூடியதாக விவாதப்பொருள் உள்ளடக்கியதாக இருத்தலை நாம் அவதானிக்கலாம். பாரதியின் இலக்கிய ஆகிருதியைக்குறைத்து சு.கி ப்பேசுவது தமிழ் வாசகனுக்கு நெருடவே செய்யும்.வங்க மொழி நன்கு அறிந்த தமிழ் படைப்பாளிகள் மட்டுமே ரவிந்திரரை ச்சரியாக எடைபோட முடியும் என்று சு.கி கூறுவது ஆழ்ந்து நோக்கத்தக்கது.நான்காவது இதழில் இரண்டு நேர்காணல்கள்.ஒன்று மு.கு.ஜன்னாத ராஜாவோடு கொ.மா.கோதண்டம் நேர்காணல்,மற்றொன்று புருஷோத்தம லால் அவரோடு சு.கியின் நேர்காணல். இங்கு லால் குறிப்பிடும் விஷயங்கள் வாசகனால் கூர்ந்து நோக்கத்தக்கன.
1.ட்ரான்ஸ்லிடெரேஷன் -அறிவியல் சார் மொழி பெயர்ப்புக்காக 2.டிரான்ஸ்லேஷன்-உரை நடை ச் சமாசாரங்களுக்காக3.டிரான்ஸ்க்ரியேஷன்-கவிதை சார் விஷயங்களுக்காக.மூன்றாவதில்தான் தரிசனமும் உணர்ச்சியும் உண்டு.உணர்ச்சி என்பது மறு படைப்புக்கு இட்டுச்செல்வது என்கிறார் லால்.
ஐந்தாவது இதழ் சர்வ தேச சிறப்பிதழாக இரா. நடராசனின் பொறுப்பில் அற்புதமாக வெளியாகியுள்ளது.
ஃபிரன்ச் மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம்.அவர்களோடு இரா.நடராசன் நேர்காணல் செய்து இருக்கிறார்.
பாவண்ணன் – சங்கு வளவதுரையன் நேர்காணல் எட்டாவது திசை எட்டும் இதழில் அற்புதமாக வந்துள்ளது.நேர்காணலில் உடன் இருந்தவர்கள் எஸ்ஸார்சி,பால்கி,குறிஞ்சிவேலன்,வெ.நீலகண்டன் என அடிக்குறிப்பு வருகிறதுஇதழ் 12 ல் மகாசுவேதா தேவியுடன் சு.கி யின் கலந்துரையாடல்,13ல் ஆ.மாதவன்-மா.நயினார் பேட்டி,14வ்து இதழில் விஜயகுமார்குனிச்சேரியுட்ன் நிர்மால்யா பேட்டி.’என் தாய் மொழி மலயாளம் என் பாட்டி மொழி தமிழ் ‘ என்ரு பேசும் குனிச்சேரியை மறக்கத்தான் முடியுமா வாசகர்களால்.
15வது இதழில் மனோஜ்தாஸ் -ராஜ்ஜா பேட்டி,ஹெ.ச்.பாலசுப்ரமண்யம்- மைதிலி மொழி இலக்கியக்காரர் கங்கேஷ் – குஞ்சன் கலந்துரையாடல்,18வது இதழில் அவரே மற்றொரு மைதிலி மொழிபடைப்பாளி காமினி காமாயினியோடு கலந்துரையாடுதல், 19ல்போரங்க்கி தட்சிணாமூர்த்தியொடு சாந்தாதத் பேட்டி,;21வ்த் இதழில் டாரிஸ் -வெஸ்ஸிங்க் -ட்வைட் கார்னர் பேட்டி, ராஜ்ஜாவின் தமிழாக்கம்,டாவின்சி கோட்-டான்பிரவுன் பேட்டியை எஸ்.ராமன் தமிழில் வழங்கியது 22 வது இதழில்.
திசை எட்டும் 32 வது இதழில் ஆங்கில நாவலாசிரியை இந்து சுந்தரேசனை ஜெயாவெங்க ட்ராமன் பேட்டி காண்கிறார்.39வது இதழில் பஞ்சாங்கம் தனது மொழியாக்கம் ஒரு படைப்புக்கலை தொடரில் இளம்பாரதியொடு பேட்டிகாண்பது,இப்படியாக த்தொடரும் பேட்டிகளின் அணிசேர்ப்பு. ஒவ்வொரு பேட்டியும் தொடங்கும் மொழிபெயர்ப்பாளனுக்கு உன்னதமான கருத்துக்கருவூலம் என்றே சொல்லவேண்டும்.
இலக்கியக்கட்டுரைகளின் அணிவரிசையை இனி இதழ்வாரியாக பார்ப்போம். புக்கர் பரிசு பற்றி இரா.நடராசன் 7 வது இதழில் அரிய தகவல்கள் தருகிறார்.ஜெயகாந்தன் படைப்புக்கலையை கே.எஸ். சுப்ரமண்யம் 8வது இதழில் ஆய்ந்து எழுதிகிறார்.பாப்லோ நெருடாவின் கவிதை அழகு குறித்து இரா.நடராசன் 6வது இதழில் கட்டுரை தருகிறார்.11வது இதழில் தனுஷ்கோடி ராமசாமி மறைவு குறித்து அஞ்சலிக்கட்டுரையை எஸ்ஸார்சி எழுதுகிறார்.16 வது இதழில் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் குறித்து பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு ஆசிரியர் மு.ராமலிங்கம் எழுதிய ஓராண்டு நிறைவு அஞ்சலி க்கட்டுரை வெளியாகியுள்ளது.24 வது இதழில் மு.சுப்ரமணி திசைஎட்டும் விழா நிகழ்வு குறித்து அற்புதக்கட்டுரை தருகிறார்.பாவண்ணன் தனது மொழியாக்க நூல் தலைப்பு ஓம் நமோ அல்ல. மெய்யாக அது ‘ணமோ’தான்.(பற்றின்மை) அப்படித் தமிழில்’ண’ முதலில் வரமுடியாது ஆக ‘நமோ’ ஆனது என்று குறிப்பிடுகிறார்.எஸ்.ராமகிருஷ்ணன் அவ்விழாவில் பேசும்போது ‘பிக் ஆஸ்பிடல்’ என்றா பெரிய ஆஸ்பத்திரியை மொழிபெயர்க்கமுடியும்? என்று வினா வைக்கிறார். அவர் மொழியாக்க விஷயங்கள் பலவோடு விழாவுக்கு கனம் சேர்த்தலை க் காணமுடிகிறது. 27 வது இதழில் ராஜ்ஜா ‘வெள்ளைக்காரிக்கு பூ முடித்து பொட்டு வைத்துப்பார்த்தல்’ என்னும் ஆங்கில இலக்கியக்கட்டுரை தருகிறார். 30 வது இத்ழ் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் தற்காலத்தொழில் நுடபத்தின் மீட்சி- குறித்துப்பேசுகிறது.
அனேக சிறப்பிதழ்களின் வரிசை இங்கே வாசகனை திக்குமுக்காட வைத்தலை க்காணமுடியும். சர்வ தேச சிறப்பிதழ் எண் 5 இர்ர்.நடராசன் சீரிய முயற்சி யோடு கொண்டு தருகிறார்.ராஜ்ஜா ஜப்பானியச்சிறப்பிதழை 20 வது இதழாகக்கொண்டு வருகிறார்.21வது இதழ் நோபல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பார் லேகர்க்விஸ்ட் எழுதிய நரகம் சென்ற லிஃப்ட் எஸ்ஸார்சியால் மொபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ருட்யார்ட் கிப்ளிங்க் எழுதிய ‘அப்படி என்றால் நீ மனிதன்’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை ஆர்.நடராஜனால் மொழிபெய்ர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.சா.தேவதாஸ் உலக வாய் மொழி சிறப்பிதழை 23 வது இத்ழாகக்கொண்டு தருகிறார்.30 வது இதழ் பாவண்ணனால் கன்னடச்சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக்கதையை பல்லவிகுமார் நெசவாளி சிலந்தி என்னும் தலைப்பில் பன்மொழி இலக்கியச்சிறப்பிதழ் 34 ல் தந்து சிறப்பித்துள்ளார்.35வது இதழ் உலக அறிவியல் இலக்கிய இதழாக இரா.நடராசனால் கொண்டுவரப்பட்டுள்ளது.ஹெ.ச்.ஜி வெல்ஸ் பற்றிய ஒரு கட்டுரையை அதி சுவாரசியமாக ராஜ்ஜா இந்த இதழில் கொடுத்தார்கள்.28ம் 29ம் ஸ்காண்டினேவிய சிறப்பிதழ்கள். எஸ்.ஷங்கர நாராயணன் அவர்கள் நட் ஹாம்சன் எழுதிய சாதாரண ஒரு சராசரி ஈயின் கதையையும் ,’வல்லூறு’ என்னும் சிறுகதை ஒன்றை யுகமாயினி சித்தனும் ஆங்க்ிலவழி மொழிபெயர்த்துத்தந்துள்ளார்கள்.37 வது இதழ் பேராசிரியர் சு.ஆ வெங்கடசுப்ராய நாயகரால் பிரஞ்சு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.39 கொரியமொழிக்கும்.40கொங்கணிய மொழிக்கும் பெருமை சேர்ர்க்கும் இதழ்களாகும்,40வது இதழில் பஞ்சாங்கம் தனது தொடர்க்கட்டுரையில் பாவன்ணனை பேட்டிகாண்கிறார்.இளம்பாரதி ‘உயரமான சிகரங்கள்’ என்னும் கொங்கணிக்கதையை தெலுங்கு வழி வாசகர்களுக்கு வழங்குகிறார்.41 எண் கொண்ட இதழ் உலக சுற்றுச்சூழல் ஏ.சண்முகானந்தம் எழுதிய புவியின் சூழலியல் என்னும் கட்டுரை வெளியாகிச் சிறப்பு சேர்க்கிறது.42 வது இதழ் ராஜலட்சுமி சீனிவாசனால் குஜராத்தி சிறப்பிதழாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘வேலச்சா’ என்னும் பூ பென் கக்கார்ரல் எழுதப்பட்ட சிறுகதையை பட்டு.எம் பூபதி இந்த இதழில் வழங்கியிருக்கிறார்.44வது இதழாக வந்த அரபு மொழி சிறப்பிதழில் பீர்முகமது அரபு மொழி இலக்கியம் பற்றி நல்லதொரு அறிமுகம் தருகிறார்.45வது இத்ழ் பன்மொழிச்சிறப்பிதழ் அதனில் குறிஞ்சிவேலன் சேதுவின் வெள்ளைக்கூடாரங்கள் என்னும் படைப்பை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
உலகச்சிறுவர் இலக்கிய இதழாக 46 வது இதழ் வெளி வந்துள்ளது.ரஸ்கின் பாண்ட் அர்ச்சனா மாசிஹ் சந்திப்பை ‘சிறுவர் இலக்கியம் என் உயிரோட்டம்’ என்கிற தலைப்பில் இரா,நடராசன் வழங்கியிருக்கிறார்..47 மற்றும் 48 பன்மொழி இலக்கியச்சிறப்பிழ்கள்49 பஞ்சாபி இலக்கிய சிறப்பிதழ்.அஜ்மர்ரோடேயை ராஜலட்சுமி சீனிவாசன் பேட்டி கண்டு அதனை ஒரு அற்புதமான கட்டுரையாகத் தந்திருக்கிறார்கள்.
கவிதை வானத்தில் திசை எட்டும் என்னும் பறவை எப்படிப்பற்ந்து உலகை வியக்கிறது என்பதனை இன்னும் பார்க்கலாம்.முதல் இதழிலேயே பாவண்ணன் வசன இலக்கியத்துளிகள் என்னும் தலைப்பிட்டு அல்லமப்பிரபு பசவண்ணர் அக்கமகாதேவி யின் கன்னடக்கவிதைகளில் சில மொழியாக்கம் செய்து கொடுத்துள்ளார்.எடுத்துக்காட்டாக,
‘நான் பெரியவன் நான் பெரியவன்
என்றுரைக்கும் பெரியவர்கள் உண்டோ? -அல்லமப்பிரபு
உண்மையை மொழிந்தால் தேவ உலகம்
பொய்மையை மொழிந்தால் பாதாள உலகம்-பசவண்ணர்.
3 வது இதழில்’ புவனேசுவரக்கோயில்கள்ா’ -ஒரியாக்கவிதை ஹரபிரசாத் தாஸ் எழுதியது. பாலா மொழிபெயர்த்திட திசைஎட்டும் வெளியிட்டு இருக்கிறது.
‘ஒரிய மக்கள் நல்லவர்கள்
கோபம் கொப்பளித்தால் ஆங்கிலம் பேசுவர்
மாட்டிக்கொண்டால் இந்தியில் பேசுவர்
எரிச்சல் உற்றபோது சமசுகிருதத்தில் பேசுவர்
ஆனால்
அவர்தம் ஆயிரம் கடள்கள் முன்பு
நாவடைத்துப்போவர் எப்போதும்.
பாலா அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். கவி ராஜேந்திர மிஸ்ரா வாரணாசியில் சமஸ்கிருத பல்கலைக்கழகத் துணைவேந்தர். 8 வது திசை எட்டும்இதழில் ஒரு கவிதை ‘நீதிமன்றம்’ என்கிற தலைப்பில் தந்துள்ளார். அது ஏச்.பரமேசுவரன் மொழிபெயர்த்த கவிதை. பாருங்களேன் கவிதை வரியை.
‘வழக்கு விவகாரம் பிரமனின் படைப்பல்ல
முன்னைப்பிறவியின் ஊழ்வினையுமல்ல
வக்கரித்த புத்தியில் விளைந்த களை’
இத்ழ் 9ல் ஈரோடு தமிழன்பன் சண்ற்றோ தனிக்காவோ ஜப்பானிய மொழியில் எழுதிய கவிதயை மொழி பெயர்த்துத்தந்திருக்கிறார் கவிதையில் ஒரு துளி..
‘அம்மா! நதிக்கு வயது என்ன ஆகிறது?
‘எப்போதும் இளமையாக இருக்கும்
வசந்த காலத்துற்கும் அதற்கும்
ஒரே வயது’
13 வது இதழில் எஸ்ஸார்சி சீனக்கவிதை ஒன்றினை மொழிபெய்ர்த்துத்தந்துள்ளார்.’அமைதியைத்தேடு’ என்கிற தலைப்பிட்ட கவிதை.
மைதிலி மொழிக்கவிதை ‘தாய்மொழிப்பற்று’ கீர்த்தி நாராயண் மிஸ்ரா எழுதியது மூத்த மொழிபெயர்ப்பாளர் சௌரி மொழிபெயர்ப்பில் 17 வ்து இதழில் வெளிவந்துள்ளது.இராம.குரு நாதன் மொழிபெயர்ப்பில் ஸ்பானிஷ் மொழிக்கவிதை லூயிஸ் டி கொங்கரா எழுதியது ‘மாறுவது என்பது’ என்கிற தலைப்போடு 24 வது இதழில் வெளிவந்துள்ளது27 வது இதழில் கே.பாலச்சந்திரன் ஐ.கே.ஷர்மாவின் கவிதை ஒன்றை ‘அனாதக்குழந்தை ‘என்ற தலைப்பில் அற்புதமாகத் தந்துள்ளார்..திசை எட்டும் 37வது இதழில் இந்திரன் மொழிபெயர்ப்பில் லியொபோல்ட் செடார் செங்கோர் பிரன்சு மொழியில் எழுதிய ‘நட்சத்திரங்களின் நேரம்’ கவிதை வெளியாகியுள்ளது.
‘வீடுகளின் கூரைகள்
பெருமையுடன் ஒளிர்கின்றன
அவ்வளவு ரகசியமாக
நட்சத்திரங்களுடன்
அவை என்னதான் பேசுகின்றனவோ?’
இந்திரன் கச்சிதமாக கவிதை மொழியைக்கையாள்வதை வாசகன் இங்கே அனுபவிக்க முடியும்.48 வது இதழில் ஆகாசம்பட்டு வெ.சேஷாசலம் ‘முட்டைகள் காத்த முராரி ‘என்னும் தலைப்பிட்டு சக்ர வின் பார்த்தசாரதி கவிதையை க்கவினுறத்தந்துள்ளார்.’தோலில்தான் பழத்தை விட சுவையே ஜாஸ்தி’ என் கிற புதுச்செய்தி சொல்லுகிறது ஆகாசம் பட்டாரின் மொழிபெயர்ப்புக்கவிதை. 49வது இதழில் அக்களூர் இரவி சுர்ஜித் பதார் கவிதைகளை த்தமிழாக்கித்தந்துள்ளார்.
‘துக்கம்
வன்முறை
அச்சம்
ஏமாற்றம்
அநீதி
இன்றைய ஐந்து நதிகள் இவைதாம்’
பஞ்சாபிற்கு புது விளக்கம் நம்மை ரணமாக்குகிறது. மொழிபெயர்ப்பில் இரவி வென்றுவிடுகிறார்.
புதிய வரவாக வந்த இலக்கிய நூல்களை ப்பற்றிய விமரிசனம் நூல் நயம் என்னும் பகுதியில் திசை எட்டும் வெளியிட்டு இருக்கிறது.7வது இதழில் ஆர்.நடராஜன் ‘வெல்வெட் அண்டர் தி ஹாம்மர்’ என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிட்ட நா.பாவின் கதைகளை ஆய்வுசெய்து எஸ்ஸார்சி விமரிசனம் ஒன்றை நூல் நயத்தில் வெளியிட்டுள்ளார்.
என் தாத்தாவுக்கு ஒரு தூண்டில் என்னும் சீனத்துச்சிறுகதைத்தொகுதியை ஜெயந்தி சங்கர் மொழிபெயர்க்க காலச்சுவடு வெளியிட்டுள்ளது.இதனை ச.கலியாணராமன் ஆய்வு செய்து இதழ் 35 ல் எழுதுகிறார்.
ஃப்ரானிசிஸ் இட்டிக்கோரா என்னும் நாவல் ட்டி.டி. ராமகிருஷ்ணனால் மலயாளத்தில் எழுதப்பட்டுள்ளது.அதனைத்தமிழில் குறிஞ்சிவேலன் தந்துள்ளார். அதனை திசை எட்டும் இதழுக்காக ஆய்வு செய்து எழுதிகிறார் நெய்வேலி பாரதிக்குமார். நூலாய்வு 45 எண் கொண்ட இதழில் அழகாக மலர்ந்துள்ளது. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு உழைப்பு குறித்துக்குறிப்பிடும் பாரதிக்குமார் இப்படி எழுதுகிறார்.
‘இந்த நாவலை மொழிபெயர்க்கத்துணிவது ஒரு சித்திரவதைக்கூடத்தில் தன்னை அடைத்துக்கொள்வது போன்ற அவஸ்தை என்றுதான் சொல்லவேண்டும்.ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவலுக்கு நிகரான உழைப்பைச்சுரண்டக்கூடியது.போகிற போக்கில் இதனை மொழிபெயர்த்துவிட முடியாது.சுயபடைப்பொன்றை புனைவதற்கும் மேலான கவனமும் உழைப்பும் தேவைப்படுகிற புதினம் இது. குறிஞ்சிவேலனின் மொழி
பெயர்ப்புப்பணி அசாத்தியமானது.’
எண்ணத்தப்பகிர்ந்து கொள்கிறேன் என்கிற தலையங்க க்கடிதம் குறிஞ்சிவேலனால் ஒவ்வொரு இதழிலும் கொண்டுவரப்படுகிறது. எண் 23 இதழ் ஓரு விசேஷமான செய்தி ஒன்றை ப்பதிவு செய்கிறது.’தினமணி நாளிதழின் தமிழ்மணியில் கலாரசிகன் அவர்கள் திசை எட்டும் இதழ்பற்றி மிகவும் பெருமிதமாகப்பாராட்டியதுடன் நமது இதழில் ஆங்கில மொழிக்குப்பொறுப்புவகிக்கும் திரு.ராஜ்ஜா அவர்கள் கிரேக்க மென்டிரேகஸ் பற்றியும் அவர் படைத்த கவிதைகள் சில தமிழில் வெளியாகி யிருப்பது பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார்கள்.இதைப்படித்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அக்கவிதைகளின் தமிழ் முழுத்தொகுப்பாவது அல்லது ஆங்கிலத்தொகுப்பாவது இருந்தால் கேட்டுப்பாருங்கள் என்று தம் செயலரிடம் கூற செயலரின் நேர்முக உதவியாளர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் என்னிடம் கேட்க தமிழ் ஆங்கிலம் இரு தொகுப்பும் இல்லையென்றும் சில கவிதைகளை மட்டும் திரு.ராஜ்ஜா அவர்கள் அனுப்பிவைத்திருந்தார்கள் என்றும் கூறினேன்.அதற்கு நேர்முக உதவியாளர் அவர்கள் அப்படியானால் உங்கள் திசை எட்டும் இதழ்களை அனுப்பிவையுங்கள் என்று கூறினார்கள்.’
உடன் அன்றிரவே மாண்புமிகு அமைச்சர் எம் .ஆர். கே.பன்னீீர்செல்வம் அவர்களின் உத்வியாளர் குறிஞ்சிவேலன் இல்லம் வந்து திசைஎட்டும் இதழ்களைப்பெற்றுக்கொண்டு சென்னைக்கு அனுப்பிவைக்க இதழ்கள் கிடைத்தமைக்கு நன்றி சொல்லி இதழ்களுக்கான முழுத்தொகையும் தலைமைச்செயலரிடமிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து குறிஞ்சிவேலன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். எண் 34 இதழில் ஒரு செய்தி. ஊர்கூடி தேர் இழுப்போம் என்று தலைப்பிட்டு குறிஞ்சிவேலன் எழுதுகிறார்.
.’தமிழின் சிறந்த படைப்பாளியான சிவசங்கரி ரூபாய் ஐம்பதாயிரத்துக்கான காசோலை அனுப்பிவைத்து ‘திசை எட்டும் ‘இதழை வாழ்த்தியமைபற்றி மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்..
வாசகர் கடிதங்கள் திசை எட்டும் இதழை ஆராய்ந்து வாழ்த்தி செய்தி தருவதை ஒவ்வொரு இதழும் பதிவுசெய்கிறது.சேலம் சூர்ய நிலா,பட்டுக்கோட்டை நவின் குமார், நெல்லிகுப்பம் குரு.ராதாகிருஷ்ணன் இராஜபாளையம் இரா.கதைப்பித்தன், தீபம் திருமலை, எனத்தொடரும் ஆய்வுக்கடிதங்கள் பிரசுரமாகியுள்ளன.
அட்டைப்படங்களின் அழகு கச்சிதமானது. தர்மோ சொல்லிமுடியாதது.திசைஎட்டும் அழகுக்குழந்தை என த்தயாரித்து அளிக்கும் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு போற்றுதலுக்குறியது
திசை எட்டும் இதழின் சாதனையாகத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப்போன தமிழ் இலக்கியங்களின் விவரங்கள் மற்றும் தொடரும் முயற்சிகள் வெளியிடப்படுதல் வேண்டும்.வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் பகுதிகளில் இங்கிருந்து அங்கு குடியேறி இந்தி பயின்ற இலக்கிய ஆர்வலர்கள் வழி தமிழ் படைப்பு இலக்கியங்களுக்கு மொழிபெயர்ப்பு வாய்ப்புக்களை கண்டறிதல்,திசை எட்டும் ஆண்டுப்பெரு நிகழ்வை அண்டை மா நிலப் பெரு நகரங்களில் நடத்த முயற்சி மேற்கொள்ளுதல். இதழ்களில் வெளிவந்த நேர்காணல், திக்கெட்டும் பரவவேண்டிய சிறுகதைகள்,ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைகள், முதலியவற்றை இந்திமொழி தொடங்கி பிற மொழிகளில் புத்தகமாகக்கொண்டுவருதல், குறித்து ஆலோசிக்கப்படுதல் . திசை எட்டும் விருது பெற்றவர்கள் அகில இந்திய நிலையில் ஒரு மொழி பெயர்ப்பு அமைப்பினை உருவாக்க முனைதல், சென்னையில் திசை எட்டும் மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமே கொண்ட நூலகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல்,பல்கலைக்கழக பேராசிரியர்கள், மொழி இலக்கியம் பயில் மாணவர்களை இணைத்தல் ஆகியனக் குறித்து கவனம் கொள்ள வேண்டும். ..
திசை எட்டும்- இதழின் இலக்கியப் பணிகள் அனைத்திற்கும் ஊற்றதுணையாக நின்று உதவும் கரங்களை வாழ்த்த வார்த்தைகளுக்குத்தான் எங்கே போவது. திருமிகு. நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்கள் தமிழ் மண்ணுக்கு ஆற்றிடும் எத்தனையோ கலைத்தொண்டுகளில் திசை எட்டும் இதழைக்கொண்டு வருவதும் ஒன்று.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர்கள் ஆண்டுதோறும் வழங்கும் பெரும்பரிசுத்தொகையும் மிகப்போறுப்போடு நடாத்தும் கோலாகலமான தமிழ் மொழியாக்கப்பெருவிழாவும் தமிழன்னைக்கு அன்னாரின் மொழிஆராதனை என்போம்.’ தோன்றின் புகழொடு தோன்றுக’ மெய்ப்பிக்கும் நல்லியின் நல்லுள்ளத்தை வணங்கி நிறைவு செய்வோம்…
——————————————————————-

Series Navigationமாமதயானை கவிதைகள்தோழிக் குரைத்த பத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *