மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6

This entry is part 17 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

 


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


 

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.


மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

 

 

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

 


நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -6


இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் :  வேனிற் கால இரவு

 

அரங்க அமைப்பு:  மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள்.  கூட ஃபிராங்க் வருகிறான்.  வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான். அவர்கள் பேசிக் கொண்டுள்ள போது, பாதிரியார், வாலஸ் நுழைகிறார்.  அதன் பின் உலவச் சென்ற விவியனும், வில்லியமும் வருகிறார்.  எல்லோரும் சப்பருக்கு அழைக்கப் படுகிறார்.  உண்ட பிறகு ஜார்ஜ் வாலஸ் தான் விவியனை மணந்து கொள்ள விரும்புவதாக மேடம் மோனிகாவிடம் தனியாகக் கூறுகிறார்.

(முன்வாரத் தொடர்ச்சி)

பாதிரியார்:  எங்கே ஜார்ஜ் வாலஸ்ஸை ?

மேடம் மோனிகா:  புகை பிடிக்க வெளியே போயிருக்கிறார் கோபத்தைக் கட்டுப்படுத்த.

பாதிரியார்: நாங்கள் ஓய்வெடுக்க இல்லத்துக்குப் போகிறோம்.  ஃபிராங்க் நீயும் எங்களுடன் வா.  உன் அன்னைக்கு இன்று இரண்டு விருந்தினர் தங்க வருவது தெரியாது.  பார்த்தால் அதிர்ச்சி அடைவாள்.

வில்லியம்:  (பாதிரியாரைப் பார்த்து) நாங்கள் தொல்லை கொடுக்கிறோம் உமக்கு.

ஃபிராங்க்:  வில்லியம் !  உம்மைப் பார்த்தால் என் அன்னை மகிழ்ச்சி அடைவாள்.  அவள் கூர்ந்த அறிவு உள்ளவள். கலா ரசிகை.  என் தந்தை அறிவாளியும் அல்லர், கலா ரசிகரும் அல்லர்.  அப்பா ! அழைத்துச் செல்வீர் இவர்களை.  நான் இங்கிருந்து மேடம் மோனிகாவுக்குத் துணையாய் இருக்கிறேன்.

வில்லியம்:  நீயும் எம்மோடு வா ஃபிராங்க்.  தாயும் மகளும் ஒருவருக் கொருவர் துணையாக இருப்பார்.  தாய் ஆஸ்டிரியாவிலும், மகள் கல்லூரியிலும் பல்லாண்டுகள் தனித்து வாழ்ந்தவர். அவர்களுக்குத் தனிமை அவசியம் இப்போது.

ஃபிராங்க்:  நீவீர் சொல்வதும் சரியே. மறந்து விட்டேன், நினைவூட்டியதற்கு நன்றி. நானும் வருகிறேன்.

பாதிரியார்:  குட் நைட் மோனிகா. குட் நைட் விவியன் !

பிராங்க்:  (விவியனை நெருங்கி)  உனக்கொரு குட் நைட் முத்தம் கொடுக்கலா ?

மிஸ் விவியன்:  (கடுமையாக)  உன்னை நான் வெறுக்கிறேன். போ அவரோடு !  (முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.)

(ஃபிராங்க் மோனிகா கையை முத்தமிட முனைய, அவனைத் தள்ளி விடுகிறாள். பாதிரியார், ஃபிராங்க், வில்லியம் மூவரும் கதவைத் திறந்து வெளியே செல்கிறார்)

மேடம் மோனிகா:  இவனைப் போன்ற விளையாட்டுப் பையனை நான் பார்த்ததில்லை. மாதரைச் சீண்டுபவன் அவன் !  ஆயினும் நீ அவனைக் கைவிடாதே !  ஊக்கிவிட வேண்டும்.  உருப்பிடாதவன் ஆயினும் உனக்கு ஏற்றவன்தான்.  உனக்கு அவனைப் பிடிக்க வில்லையா ?  அவன் இளம் வாலிபன்.

மிஸ். விவியன்:  நிலையற்றவன். எனக்கு இளையவன் !  மனதில் ஒருத்தி, மடியில் ஒருத்தி, மாளிகையில் ஒருத்தி.  அவனை நான் எப்போதே உதறித் தள்ளி விட்டேன்.  அவனைக் கண்டு வருந்துகிறேன்.  ஜார்ஜ் வாலஸ் என்ன எனக்கேற்றவனா ? வயதாகிப் போச்சு. வாலிபப் பெண் வேண்டுமா அவனுக்கு ?

மேடம் மோனிகா:  உனக்கென்ன தெரியும் ஆடவரைப் பற்றி ?  அப்படிப் பேசாதே நீ.  அவர் என் பழைய நண்பர்; கோமகன், செல்வச் செழிப்பில் வாழ்வாய் நீ. அவர் உன்னை மணக்க ஆசைப் படுகிறார். வந்த சீமானை நிந்தனை செய்யாதே !

விவியன்: அப்படியா ?  உன்னைப் போல் நானும் வாழ வேண்டும் என்று கனவு காண்கிறாயா ?  உன் பாதை வேறு, என் பாதை வேறு ?  உன் பாதையே முதலில் எனக்குப் புரிய வில்லை, தெரிய வில்லை.

மேடம் மோனிகா:  நீ இப்போது மணந்து கொள்வது நல்லது !  தன் சொத்து முழுவதையும் உன் மடியில் கொட்டத் தயாராய் இருக்கிறார்.  இப்படிப்பட்ட ராயல் கோமகன் உன் வாசலில் காத்திருக்க மாட்டார் !  மீண்டும் நீ கல்லூரிக்குப் போக வில்லை அல்லவா ?

விவியன்:  நான் பின்பற்றும் வாழ்க்கை முறை உனக்கு ஏற்ற தில்லை என்று நினைக்கிறாயா ?

மேடம் மோனிகா:  நீ பின்பற்றும் வாழ்க்கையா ? என்ன சொல்கிறாய் நீ ? புரியவில்லை எனக்கு.

விவியன்:  நான் என்ன செய்கிறேன் என்று உனக்குத் தெரியாதா ?  நீ என் அன்னைதானா ?

மேடம் மோனிகா:  மூடத்தனமாய் பேசுகிறாய்.  நாக்கை அடக்கிப் பேசு. கல்லூரிப் பட்டம் வாங்கி கர்வம் உனக்குத் தலைக்கேறி விட்டதா ?  நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரியுதா மிஸ். விவியன் ?

விவியன்:  தெரியவில்லை எனக்கு ! யார் நீ ? என்ன செய்து பிழைக்கிறாய் நீ ?

மேடம் மோனிகா: (கோபத்தோடு)  என்ன துணிச்சல் உனக்கு என்னிடம் இப்படிப் பேச ?  நீ யார் ? என் மகள் இல்லையா ?  அன்னியப் பெண்போல் என்னிடம் பேச ஆரம்பித்து விட்டாய்.

விவியன்:  என்னைப் பற்றி என் படிப்பு, பட்டத்தைப் பற்றி பலர் அறிவார்.  நான் பார்க்கப் போகும் உத்தியோகத்தையும் அவர் அறிவார்.  ஆனால் உன்னைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது !  ஜார்ஜ் வாலஸுடன் நீயும் நானும் சேர்ந்து நடத்தப் போகும் வாழ்வுக்கு ஏன் என்னை நீ அழைத்தாய் ?

மேடம் மோனிகா:  கவனம் வை நீ பேசும் போது.  என் வாயில் வந்ததை வருந்தும்படிக் கொட்டி விடுவேன்.

விவியன்:  உன்னைப் பார் பரிதாபம் !  உன்னால் சிறிது தூரம் நேராக நடக்க முடியவில்லை.  தள்ளாடி விழப் போகிறாய்.  மலை மீது ஏற முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. முதுகு கூன் விழுந்து விட்டது !  என்னைப் பார் ! என் இளமையைப் பார்.

மேடம் மோனிகா:  (தயங்கித் தடுமாறிக் கண்ணீருடன் சோபாவில் அமர்ந்து)  விவியன் ! என் அருமை மகளே !
போதும் உன் சொற்கணைகள் !  வயதாகும் உன் தாயை இப்படி நோகப் பேசுகிறாயே ? (அழ ஆரம்பிக்கிறாள்.)

விவியன்:  வேண்டாம் இந்த அழுகை இப்போது !  நீ அழ ஆரம்பித்தால் நான் வெளியே போய் விடுவேன்.

மேடம் மோனிகா:  நான் உன் அன்னை அல்லவா விவியன் ?

விவியன்:  அப்படியா ? அப்படி யென்றால் எங்கே என் உறவினர் ?  எங்கே என் தந்தை ?  நமது குடும்ப நண்பர் யார் ?  நீ என் அன்னை என்று சொல்கிறாய் ! யார் என் தந்தை ? இருந்தால் ஏன் அவர் ஒருமுறை கூட என்னைக் காண வரவில்லை ?  உனக்கும் அவருக்கும் என்ன சண்டையா ?  ஒருநாள் கூட என் தந்தையப் பற்றி நீ எதுவும் சொன்னதாக நினைவில்லை !  உனக்கு எப்போது திருமணம் நடந்தது சொல் ?  உன் மணநாளை நீ என்றும் கொண்டாடிய தில்லை !  என் பெயரின் பின்னால் உன் குடும்பப் பெயர் உள்ளது ஏன் ?  ஏன் என் தந்தை குடும்பப் பெயர் என் பெயரில் இடப்படவில்லை ?

 

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 3, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதார் சாலை மனசுஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *