1. புதுச்சேரி சுதந்திரம்
கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.
இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன.புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு (மொ-யன் (Mo-Yan) பட்டாசு.
1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.
இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது. இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.
இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.
‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய யுத்தத்தில் மிகக்கடுமையாக தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில் அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.
தனிமனிதனாகட்டும் ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.
————————-
2. மொ-யன் (Mo-Yan)
முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மோ-யான் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால் அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம் இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மோ-யான்’ பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச் சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.
பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.
மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே! என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom 2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.
நன்றி: C.I.D.F. 29-8-2012
————————————
- தப்பிப்பு
- திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்
- நினைவுகளின் சுவட்டில் (102)
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33
- பஞ்சதந்திரம்
- மீந்த கதை!
- நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7
- கதையே கவிதையாய்! (10)
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.
- வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்
- மொழிவது சுகம் அக்டோபர் -20
- கம்பன் விழா அறிக்கை
- கவிதையாக ஒரு கதை
- அனுராக் பாசுவின் “ பர்·பி ‘
- வானவில் வாழ்க்கை
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு
- தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?
- அக்னிப்பிரவேசம் – 6
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
- உண்மையின் உருவம்
[விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை.]
புதுச்சேரியிலுள்ள கீழூரில் வாக்கெடுப்பு நடந்தது. அதைக் குறிக்கும் விதமாக அங்கே ஒரு நினைவுச்சின்னம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது.
(A.G.Noorani Frontline இதழில் எழுதிய கட்டுரையொன்றில் கீழூரில் நடந்த வாக்கெடுப்பில் மக்கள் இந்தியாவோடு இணைவதற்கு எதிராக வாக்களித்ததாகவும், நேரு அதை வெளியிடாமல் தடுத்துவிட்டதாகவும், இதற்குப் பதில் உதவியாக வியட்நாமைவிட்டுப் பிரான்சு வெளியேறவேண்டும் என்று ஐநாவில் விவாதம் நடந்தபோது இந்தியா பிரான்சுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகவும் எழுதியிருந்தார்.)
புதுச்சேரியின் விடுதலைக்குப் பாடுபட்ட மக்கள் தலைவர் வ.சுப்பையா போன்றோரின் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்வதாகவும் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது. (இரண்டாம் உலகப்போரால் பலவீனமடைந்துபோனதுதான் பிரிட்டன் இந்தியாவுக்கு விடுதலை வழங்க முக்கிய காரணம் என்று சிலர் சொல்லுவதுபோல இருக்கிறது இது)
வணக்கம் நண்பரே,
A.G. நூரானியின் Frontline கட்டுரையை படிக்கவில்லை, அதைப் படிக்காமல் விமரிசிக்கக்கூடாது. நீங்கள் குறிப்பிட்டிருந்த தகவபற்படி அக்கட்டுரையிருப்பின் செய்தி தவறானது.
கீழூரில் நடந்தது?
உள்ளூர் காங்கிரஸ் உறுப்பினர்கள் (1954ம் ஆண்டு அக்டோபர்மாதம் 18ந்தேதி) இரகசியமாகக்கூடி (மொத்தம் 178பேர் ) De Factoவிற்கு சாதகமாகத் தங்கள் தலமைஎடுத்த முடிவைக்குறித்து விவாதித்து அவர்களுக்குள் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள் 170பேர் தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள் 8பேர் எதிர்க்கிறார்கள். முதன் முதலாக பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரதேசங்களின் விடுதலைக்கு ஆதரவாகவும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் என்றவகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. நான் குறிப்பிட்டிருப்பது பொதுவாக்கெடுப்பு.(Referendum). அது சந்திரநாகூரைத் தவிர்த்து எங்கும் நடைபெற இல்லை. 1949 ஆண்டிலேயே பொதுவாக்கெடுப்பு யோசனையை பிரெஞ்சு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தலைமுழுகிவிட்டார்கள்.
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர்விடலாமா கூடாதா என்பதை பொதுவாக்கெடுப்பிற்கு விடுவதாக வைத்துக்கொள்வோம் அதை கர்நாடகா முழுவதும் நடத்துவார்களேயன்றி எங்கோ ஒரு மூலையிலிருக்கிற ஒரு எட்டினஹல்லியில் நடத்தி முடிவுக்குவரமாட்டார்கள் என்ற உண்மையைக்கூட உணராமல் நுரானி கட்டுரை எழுதியிருப்பாரா என்றெனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
தவிரவும் கீழூர் சம்பவத்திற்கு முன்பாகவே பிரெஞ்சுக்காரர்கள் (ஜூன் 1954லேயே) வியட்நாமைவிட்டு வெளியேறிவிட்டார்கள். வியட்நாம் சண்டையில் தோற்று பிரான்சுநாடு அங்கிருந்து வெளியேற நேர்ந்தபோது கிருஷ்ணமேனன் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு உதவினார் என்பதும் உண்மை ஆனால் அவையெல்லாம் கீழூர் சம்பவத்திற்கு முன்பே நடந்துமுடிந்துவிட்டது.
நா.கிருஷ்ணா