மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014

This entry is part 2 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

நாகரத்தினம் கிருஷ்ணா

 

  1. பிரான்சில் என்ன நடக்கிறது?

Le Pont Des Arts and The Love Padlocks in Paris

காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். தொடக்கத்தில் அழகாகத்தான் இருந்தது, வருடந்தோறும் பூட்டுகளை அகற்றும் செலவு அதிகரித்துவருவதால், இன்று தொல்லைதரும் பிரச்சினையாக முடிந்திருக்கிறது. குறிப்பாக le pont des Arts பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள மொத்தப்பூட்டுகளின் எடை Le Parisien என்ற செய்தித்தாளின்படி 54 டன். பாரீஸ் நகரின் புதிய மேயர் புதியதொரு யோசனையை அரங்கேற்றியிருக்கிறார்.  “பூட்டுகள் இல்லாத காதலை” வரவேற்போம் என்ற ஸ்லோகத்துடன் கூடிய காதலர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துமாறு காதலர்களை கேட்டுகொள்ளப்போகிறா¡ராம். ஆயிரக்கனக்கில் ஸ்டிக்கர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

 

  1. அருந்ததிராய் – யு.ஆர் அனந்தமூர்த்தி

 

காந்தியைபற்றி மிகப்பெரிய நூலை எழுதியுள்ள ரொமன் ரொலான் (Rimain Rolland ), காந்தியின்நண்பர். நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், இருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான இலக்கியவாதி. அருந்ததிராயைக் காட்டிலும் உலகளவில் நன்கறியப்பட்டவர். காந்தியின் மிகப்பெரிய சாதனை ஆப்ரிக்க கண்டத்திற்கு ஒரு மண்டேலா, அமெரிக்கக்கண்டத்திற்கு ஒரு மார்ட்டின் லூதர் கிங்  என இரு மாமனிதர்களை தமது அனுதாபிகளாக உருவாக்கியது. உலக வரலாற்றில் வேறொருவருக்கு இப்படியொரு புகழில்லை. கேரளப் பல்கலைக்கழக கருத்தரங்கில் கலந்துகொண்ட அருந்ததிராய் “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது'” என்று பேசியதும் அதற்கு நாடெங்கும் பரவலாக கண்டனமும் எழுந்துள்ளது. காந்தியை அருந்ததிராய்தான் ஏதோ முதல் முறையாக விமரிசிப்பதுபோல கண்டனக்குரல்கள் எழுகின்றன. காந்தி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. காந்தியைத் தொடுவதால் எழுத்தாளர் அருந்ததிராய்க்குக்கூடுதலாக விளம்பரம் கிடைக்கக்கூடும். எல்லா மனிதருக்கும் இயல்பாக வரக்கூடிய வியாதிதான். அருந்ததிராயைக் கண்டிப்பதன்மூலம் அருந்ததிராயின் எதிர்பார்ப்பை காந்தியின் பக்தர்கள் நிறைவேற்றிவைக்கிறார்கள். “ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” எனச் சொல்வதுண்டு.  வியாபாரம் ஆவதைத்தான் சந்தைக்குக்கொண்டுவரமுடியும். புக்கர் பரிசு வாங்கிய அருந்ததிராய்க்கு இந்த அடிப்படை ஞானங்கூடவா இருக்காது. காந்தியைப் புகழ்வது இகழ்வதும் சம்பந்தப்பட்டவரின் ‘இருப்பை’ அடையாளப்படுத்தும் விஷயம். தற்போது “எழுதி சோர்ந்தவர்கள்” பலருக்கும் தங்களை இருப்பை நிலை நிறுத்திக்கொள்ளும் தந்திரமாக இதுபோன்ற சர்ச்சைகள் பெரிதும் உதவுகின்றன. காந்தி சலவை செய்யப்பட்ட மனிதரல்ல. அப்படி அவர் சொல்லிக்கொண்டவரும் அல்ல. ஆனால் அவர் ஓர் அசாதாரண மனிதர், அபூர்வ மனிதர்.

 

இந்த நேரத்தில் யு.ஆர் அனந்தமூர்த்தியும், அல்பெர் காம்யூவும் எனது நினைவுக்கு வந்தார்கள். பாரதிபுரம்  நாவலைப் படித்தபோது அவருள் ஓர் ‘அல்பெர் காம்யூ” இருந்தார். பாரதிபுரகதைநாயகன் ஜகன்னாதனும் ஒரு கலகக் காரன்தான். காந்தியத்தின் தாக்கத்தில் பிறந்த கலகக்காரன். அருந்ததிராய் போன்றவர்களின் கலகக்குரலுக்கும் பாரதிபுர ஜெகன்னாதனின்(அனந்தமூர்த்தியின்) கலகக்குரலுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருப்பதை ஒர் அப்பிராணி வாசகன்கூட அறிவான்.

 

“கலகக் காரன் என்பவன் யார் ( உபயம் – அல்பெர் காம்யூ)?

 

“மறுப்பவன்”, “கூடாது” என்பவன்” “இனி முடியாது” என்பவன். அதாவது அவன் மறுப்பவனேயன்றி நிராகரிப்பவனல்ல என்பதை கவனத்திற்கொள்லவேண்டும். ஓர் அடிமை, தனது வாழ்நாள்முழுவதும் எஜமான், முதலாளி  அல்லது அதிகாரி இடும் ஏவல்களுக்கு அடிபணிந்து பழக்கப்பட்டவன் – அது ஒரு கொள்கையாகக்கூட இருக்கலாம் -மரபாகக் கூட இருக்கலாம் – திடீரென்று ஒருநாள் முடியாது என்கிறான். இந்த ‘முடியாது’ என்ற சொல்லை எப்படி விளங்கிக்கொள்ளலாம். “ஐயா! ஏதோ என் தலையெழுத்து இதுவரை சகித்துக்கொண்டேன், இனி ‘முடியாது’ என்பதாகக் கருதலாம். இதுவரை நீங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினேன், வாஸ்த்துவம். இனி ‘முடியாது’ என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது “போதும் சாமி! அததற்கு ஓர் அளவிருக்கு, நீங்க அந்த அளவைத் தாண்டினா எப்படி? நானென்ன மாடா மனுஷனா? ‘முடியாது’ என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இக்கலககுரலில் வேறொரு உண்மையும் இருக்கிறது. மறுக்கிறவன் தனக்காக மறுப்பதில்லை, தன்னிலையில் இருக்கும் பெருவாரியான அடிமைகளின் நிலமையிலிருந்து அக்குரல் எழுகிறது. ஒற்றைக்குரல் அல்ல ஒட்டுமொத்த அடிமைகளின் குரல். தன்னலம் சாராத கலகக்குரலாக அந்த மறுப்பு அமையவேண்டும். உலகில் எல்லா புரட்சிக்கும் இதுதான் அடிப்படை. அது ர்ஷ்யப் புரட்சியாக இருக்கட்டும், பிரெஞ்சு புரட்சியாக இருக்கட்டும் அல்லது வேறு புரட்சியாகக்கூட இருக்கலாம். காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டமும் அத்தகையதுதான். இக்கலகக்குரல் பிறமைக்கு எதிராக தனிமனிதனுக்குள்ளும் ஒலிக்கும். பாரதிபுர நாவலின் ஆரம்பவரியே ஜகன்னாதன் உள்ளிருக்கும் கலககாரனை அடையாளப்படுத்துகிறது; ” தனியாக நடக்கும் ஜகன்னாதன் குழிகளைச் சுற்றிக்கொண்டு போவதில்லை, பறப்பதுபோலத்தான் தாண்டுவான்”.

 

பாரதிபுர ஜகன்னாதன் மஞ்சு நாதர் மீது கட்டமைக்கபட்ட ஒரு சமூகத்தின் பழமை நியாயங்களைத் தகர்க்க நினைக்கிறான். அவன் தனது முன்னாள் இங்கிலாந்து காதலிக்கு எழுதும் கடிதத்தைப் பாருங்கள்: « Life has ceased to be creative here – மஞ்சு நாத சுவாமி இந்த உலகவாழ்க்கையின் புற்று நோய். இந்த கடைவீதி அவனுக்காக வளர்ந்த கேன்ஸர் »

அனந்தமூர்த்தியின் ஜகன்னாதன் உடை உள்ளம் இரண்டிலும் கோவணாண்டிகளாக வாழும் புலையர்களுக்கு கோவில் பிரவேசத்தினூடாக விமோசனத்தை ஈட்டுத் தரலாம் என நினைக்கிறான். பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த மனிதர்கள் ஒரு நாள் ஆலயப் பிரவேசத்தினால் உயர்ந்திடமாட்டார்கள். ஆனாலும் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்கு ஜகன்னாதனைக்கொண்டு அனந்தமூர்த்தி நடத்துவதும் புரட்சிதான். இக்காந்திய புரட்சி உலகில் நடந்த ஏனைய புரட்சிகளுக்கு எந்தவிதத்திகும் குறைந்ததல்ல. காந்தியப்பிரட்சியில் குறையுண்டு என்றால். உலகில் ஏனைய புரட்சிகளும் தோல்வியில் முடிந்ததாகத்தான் இன்றையை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அனந்த மூர்த்தியைகுறித்து நேரமிருக்கும்போது தனியே எழுதவேண்டும். இந்திய எழுத்தாளர்களில் யு.ஆர் அனந்தமூர்த்தி முக்கியமானவர். மாண்டெலா, மார்ட்டின் லூதர்கிங் போல பாரதிபுர ஜெகன்னாதனும் காந்தியின் வாரிசுதான். அருந்ததிராய் போன்றவர்களின் விமர்சனங்கள் காந்தியையோ காந்தியத்தையோ ஒரு போதும் பாதிக்காது.

 

பாரதிபுர நூலுக்கு மதிப்புரை எழுதிய டி.ஆர்.நாகராஜ் சொல்கிறார்:

 

” ஒரு கருத்தை மறுப்பதற்குச் செய்கின்ற நடவடிக்கை, அதை மேலும் உறுதிபடுத்துவது வேடிக்கைதான்”.

 

எனவே காந்தியத்தின் அனுதாபிகள் கலகக்குரல் எழுப்பவேண்டியது அருந்ததிராய்க்கு எதிராக அல்ல, காந்தியத்திற்கு ஆதரவாக.

——

 

Series Navigationதமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடுதொடுவானம் 28. திருப்புமுனை
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். //

    “முட்டாத்தனமான மூட நம்பிக்கை இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல… உலகிற்க்கே சொந்தம்!” –தந்தை பெரியார் சொன்னது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *