மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்

 

–  நாகரத்தினம் கிருஷ்ணா

 

அ. இயற்கை தரிசனம் : அம்மா ;     ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்

 

அ. இயற்கை தரிசனம் : அம்மா 

 

நீர், நிலம் நெருப்பு, ஆகாயம் இவற்றின் சங்கமத்தால்  ஏற்பட்ட விளவுகள் அனைத்துமே இயற்கைதான். மனிதர் உட்பட அனைத்துஜீவன்களும் இயற்கையின் பிரதிகள்தான், இயற்கையின் கூறுகள்தான், இயற்கையின் கைப்பாவைகள்தான், இயற்கையினால் ஆட்டுவிக்கப்படுவர்கள்தான். இயற்கை வேறு நாம் வேறு அல்ல என்ற உணர்வுதான் கடந்த சில கிழமைகளாக என்னிடத்தில் மிஞ்சுகிறது. ஒளியும், நிலமும், நீரும் இவற்றின் கூட்டுவிளைவான தட்ப வெப்பமும் தாவரங்களின் வாழ்வைத் தீர்மானிப்பதைப்போலவே மனிதர் கோபத்தையும், அன்பையும், பிற செயல்பாடுகளையும் வரையறுக்கின்றன என்பதென் நம்பிக்கை. இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகள் எங்கிற  அழிச்செயல்களைப் போலவே, இயற்கைக்குப் பாதுகாப்பென நிகழ்த்தும் விவாதங்கள், எடுக்கும் நடவடிக்கைகள் முதலான ஆக்கச்செயல்களும்   இயற்கையோடு இணைந்தவைதான். இந்த இயற்கையின் முடிவில்லா அவதாரங்களைத்தான், அவைகளின் ஓர் அங்க்கமான நான் தரிசிக்க முயற்சிக்கிறேன். ஆக மொத்த த்தில் இயற்கை தரிசனம் என்பது எனது சக மனிதனைத் தரிசிப்பது அல்லது   என்னைத் தரிசிப்பது ஆகும். இத்தரிசனம் எதைக்குறித்ததாவும் இருக்கலாம்.  இறந்தக்  காலத்திற்குரியனாவகவும்,  நிகழ்காலத்தைவையாகவும் இருக்கலாம்.  அனுபவங்களைக் களைத்துபோகும்வரைத் தொடருவேன்.

 

  1. அம்மா

நான் சந்தித்த முதல் இயற்கை. சொந்தங்களின் எல்லைகளற்ற அன்புவெளி. இவ்வுலகை உயிர்ப்பிக்கிற உயிர்களால்  நிரப்புகிற, உயிர்வாழ்க்கைத் தொடர காரணமாக இருக்கிற  முதலும் முடிவுமான ஜீவன். இயற்கையின் சகலமுமான அம்மாவுடனான  முதல் சந்திப்பு எப்போது நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது ? நொடிகளைச் சார்ந்ததா ? நிமிடம் சார்ந்ததா ? என்பதைத் துல்லியமாகச் சொல்லப் போதாது. எனக்கு, எனது சகோதரருக்கு இரு சகோதரிகளுக்கு, அம்மா என அறிமுகமான இயற்கைக்கு  நடுத்தரவயது, கனத்த உடம்பு, வட்டமான முகம், பயண நாட்களைத் தவிர்த்து, விசேடக் காலங்களைத் பிற  நாட்களில்  நூற்புடவை என்கிற பருத்திப் புடவைகள், வெள்ளை இரவிக்கைகள் என்றிருப்பவள். அதிகம் பேசி அறியோம். அப்பா என்ற இல்ல எஜமானுக்கு அடிமை. சமூகக் தோப்பில் மரமல்ல படர்ந்துவாழச் சபிக்கப்பட்டக்கொடி.  பொது இடங்களில் புழங்குவதற்கு அனுமதி உண்டென்கிறபோதும் , அவர்  நிழலன்றி  நிஜமல்ல.  எனினும், என் வெளியில் ‘அம்மா’வெனும்  இவ்வியற்கை எச்சமிட்ட விதைகளும், முளளைவிட்டு  நிமிர்ந்த, ஊர்ந்த செடிகொடிகளும், மலர்களும், கனிகளும், புதர்களும், காடுகரம்பைகளும், விளை நிலங்களும் அளவிட முடியாதவை.

 

எனது மனவெளியின் வரப்புகளைத் தாண்டுகிறபோது வெக்ககையான பாலை நிலங்களை எதிர்கொள்வதும்,  நெய்தல் நில புதைமணலில் அமிழ்வதுமான சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன, அத்தகைய  இக்கட்டான காலத்திலும் முல்லையும் மருதமுமாக என்னுடன் இன்றைக்கும் இருப்பவள். தந்தை என்ற இயற்கைக் காட்டியது பாதையெனில், தாய் என்றவகையில் அவள் எனக்கு அளித்த து இளஞ்சூரியனின் புத்தொளி. பாதையும் ஒளியும் இணைகிறபோதுதான் வாழ்க்கைக் கலையாகுமென்ற உண்மைக்கு அவள் மஞ்சள் முகமும், கருணை  நிரம்பிய கண்களும் சாட்சி. மெத்தப்படித்தவளல்ல. ஆனால் ஓய்ந்த  நேரங்க்களிலெல்லாம் மகாபாரதம், இராமாயணம், விக்கிரமாதித்தன் கதை  என ஆரம்பித்து மு.வ., கலைமணி, விந்தன்,கல்கி, சாண்டில்யன், ஜாவர் சீதாராமன், புனிதன் ஜெயகாந்தன் என பலரின் அறிமுகம் அவளால்தான் கிடைத்தது. அந்த அம்மாவுக்குள் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் கூடுகட்டின, குஞ்ச்சுகள் பொரித்தன, சிறகு  முளைத்ததும் உரியகாலத்தில் எம்பிப் பார்த்தன. அவற்றையெல்லாம் மொழியாக்க முனைந்து, புனவாக்கமுடிந்து வெற்றிபெற்றது சொற்பம். இயற்கையும் அம்மாவும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்த மறு நாள்தான் எழுத த் தொடங்கியதாக நினைவு. சிறுபிள்ளைத்தனத்துடன் முதல் சிறுகதையை எழுதியபோது ஒன்பதாவது வகுப்பில்  இருந்தேன். தனது  நண்பனுக்காகச் சொந்தக்கண்களைத் தியாகம் செய்வதுபோலக் கதை.அம்மா முகத்தைச் சுளித்தார், சிரித்தார். விபத்துகளை எழுதாதே இயற்கையை எழுது என்றார். இதைத்தான் சொன்னாரா என்பது குறித்த ஐயம் இருப்பினும் இந்தப்பொருளில் அறிவுறுத்தினார் என்பது மட்டும் உறுதி. எனது வளர்ச்சியை அதிகம் அறியாதவராகவே போய்விட்டார். ஆனால் எப்போதாவது அம்மாவுக்கு வாசிக்கிற எண்ணத்தில்  நன்றாக வந்திருக்கிறது என்ற பகுதியைப் இயற்கையின் மற்றொரு பிரதிநிதியிடம் (அது மனைவியாக க்கூட இருக்கலாம்) இன்றைக்கும் வாசிக்கவே செய்கிறேன்.

 

ஆ. பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல்

 

அடுத்த  ஞாயிற்றுக்கிழமை பிரான்சு  நாட்டின் அதிபர் தேர்தல் இரண்டாம் சுற்று. அன்றிரவே இரவு எட்டுமணி அளவில் அதிபர் பெயர் தெரிந்துவிடும். முதல் சுற்றின் முடிவில் இரு வேட்பாளர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். ஒருவர் எம்மானுவெல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென் என்ற பெண்மணி. இருவருமே  வழக்கமான கட்சி வேட்பாளர்கள் அல்ல. அதிலும் மக்ரோன் என்பவர் இளைஞர். பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்காது தற்போதைய அதிபர் ஹொலாந்துவின் தயவினால்  நிதியமைச்சராகி உரியகாலத்தில் முடிவெடுத்து, அமைச்சரவையில் வெளியில்வந்து, இன்றைக்கு இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகி அதிபர் ஆவதற்கு ஓரளவிற்கு வாய்ப்புள்ள மனிதர். இரண்டாவது வேட்பாளர் தீவிர வலதுசாரி பெண்பணி, பெயர் மரின் லெப்பென். இப்பெண்மணியின் கட்சி Front National . தேசியவாத கட்சி மட்டுமல்ல இன வாத கட்சியுங்கூட. இனி எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிலும் பிறச்சலுகைகளிலும் பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்கிறார். பயங்கர வாத த்தை ஒடுக்க குற்ற பின்புலமுள்ள அன்னியமக்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என் கிறார். பிரான்சு  நாடு ஐரோப்பாவிலிருந்து வெளியேறவேண்டும், அகதிகளை குடியேற்றத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்பதெல்லாம் கொள்கைகள். பிரச்சினை  அவர் ஜெயிப்பது எப்படி ? இவருடைய கட்சியை தீண்டத் தகாதக் கட்சியாக அறிவித்து   இக்கட்சிக்கு வாக்களிப்பது  நாட்டின் குடியரசு அமைப்புமுறைக்கு உதவாதென  இத் தேர்தலிலும் பெரிய கட்சிகள் மட்டுமின்றி  நாட்டின் நலனில் அக்கறையுள்ள தலைவர்களும் கூறிவருகின்றனர். தவிர பெண்மணிமீது ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. தேர்தலில் தோற்றால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஜெயித்தால் பதவிக்காலம் வரை தண்டனையைத் தவிர்க்கலாம். ஒன்றிரண்டல்ல ஆறு குற்றங்கள்.

  1. ஐரோப்பிய ஒன்றிய நிதியிலிருந்து கட்சிபணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கியது.
  2. தேர்தல் செலவில் முறைகேடு
  3. வருமான வரித்துறைக்கு தமது சொத்தை குறைத்து மதிப்பிட்டுத் தெரிவித்தது.
  4. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பைவளர்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்த பிரச்சாரம்.
  5. 2012 தேர்தலில் மாவட்ட நிர்வாகசபை உறுப்பினர் என்ற வகையில் ஊழியர்களையும் அரசு சாதனங்ககளையும் தவறாக முந்தையப் பிரச்சாரத்திற்குப்  பயன்படுத்தியது.
  6. 2017 பிப்ரவரி 20ல், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட்டபோது, இவருக்கு எதிரான விசாரணை ஆவணங்கள் அரசின் ரகசியமென நம்பப்பட்டவை இவரிடம் எப்படி வந்த து என்ற விவகாரம்.

 

குற்றச்சாட்டுகளைப்பொருட்படுத்தாது எப்படியேனும் ஜெயிக்கவேண்டுமென  நினைக்கிறார். தமது தந்தைக்கு 2002ல் கிடைத்த தோல்வி தம்மை  நெருங்க்காதென  நம்புகிறார். அவர்  நம்பிக்கைக்குக் காரணம் தீவிர கிறித்துவமதவாதிகள், தீவிர வலது சாரிகளில் ஒருபிரிவினர், மற்றும் எதிரி ஜெயித்தாலும் பரவாயில்லை,  அண்டைவீட்டுக்காரனும், அரசியலுக்கு  நேற்று வந்த இளைஞனுமான ஒரு நபரை  எப்படி அதிபராக அனுமதிப்பது என் கிற நல்லெண்ணங்கொண்ட  மெலான்ஷோன் என்கிற பொதுவுடமை ஆசாமி மௌனம் இவருக்குச் சாதகமாக  உள்ளன.

—————————————————–

Series Navigationகண்கள் மாற்றும்…!உமர் கயாம் ஈரடிப் பாக்கள்