மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

This entry is part 19 of 27 in the series 6 செப்டம்பர் 2015

நாகரத்தினம் கிருஷ்ணா

 

அ. இலக்கிய சொல்லாடல்கள் –6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

“காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு விளக்கம் தருகிறார்.

வீதியில் நடந்துபோகிறீர்கள் ஆயிரம்பேரில் ஒருவர் தனித்துத் தெரிவார். எஞ்சியிருக்கிற 999 பேர்கள் நிர்ணயித்தியிருக்கிற ஒழுங்குகளிலிருந்து தோற்றத்திலோ நடையிலோ அவர் முரண்பட்டிருக்கக்கூடும். அது அம்மனிதரின் விருப்பத்தின் பேராலும் நடக்கலாம், விருப்பமில்லாமலும் நடக்கலாம். மரபுகளை மீறுவதில், மறுப்பதில், முடியாது என்பதில் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பது உண்மை.  இருட்டை மறுப்பது, அதனுடன் முரண்படுவது எடிசனுக்கு அவசியமாயிற்று. அதேவேளை மறுப்பெல்லாம் புரட்சியாகிவிடமுடியாது. அம்மறுப்பு மறுப்பாளனின் சமூகத்திற்காக அல்லது மனிதகுலத்திற்காக நடைபெறவேண்டும், அல்பெர் கமுய்யின் l’homme révolté வற்புறுத்துவது அதைத்தான். விளைவது நன்மையெனில் எவ்வித நிர்ப்பந்தமுன்றி உங்கள் மறுப்பிற்கு வலுவூட்ட பகிர்ந்துகொள்ள எஞ்சியிருக்கிற 999 பேர்களும் என்றில்லாவிட்டாலும் கணிசமான எண்ணிக்கையினர் முன்வருவார்கள், துணைநிற்பார்கள். மறுப்பின் பலனால்  நன்மையெனில், அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பைக் காலம் எடுத்துக்கொள்ளும் இரண்டு உலக யுத்தங்களும் அதன் விளைவுகளும், மேற்கத்திய கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் கோபத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுகளே இப்புதுமைகளெல்லாம். ஓர் இலக்கியப் படைப்பு கலை நுட்பத்தை அனுமதிக்கலாம், ஆனால் அதன் அடிநாதமான கலையை அதன் உணர்வுகளை, அழகியலை நிராகரிக்கிற; கலையைத் தொழில் நுட்பத்த்தால் ஆக்ரமிக்கிற முயற்சிகள் உகந்ததல்ல. சுதந்திரத்திற்குக்கூட எல்லைகள் அவசியம். எல்லைகள் மீறப்படுகிறபோது அங்கு குழப்பங்களும் கலவரமுமே மிஞ்சும். எந்தச் சுதந்திரத்தை வேண்டி நின்றார்களோ அச்சுதந்திரமே சீற்றமெடுக்கிறபோது, சம்பந்தப்பட்டவர்களைப் பலிகொண்டதாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

 

தன்நிகழ்பாடு படைப்பை மீ எதார்த்த்வாதத்திடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதென்பது உண்மைதான். ஆனால் இம்முறையிலான எழுத்துமுறை திடீரென்று வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. மெய்யியிலாளர்களுக்கும், உளவியல் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. மீஎதார்த்தவாதத்திற்கு முன்பாகவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கற்பனை நவிற்சிவாதிகளில் சிலர் குறிப்பாக ஹைன்ரிக் ஃபொன் கிளைஸ்ட் (Heinrich Von Kleist), நியாயம் நிராகரிக்கிற இருண்மைகளை இலக்கியத்தில் பயன்படுத்திக்கொள்வதென தீர்மானித்தது கி.பி 1810லேயே நடந்தது. தன்நிகழ்பாடு படைப்பூடாகத் தோற்றப்பாடு ஒப்புமைகளை, குறிப்பாக ஆழ்மனதின் விழிப்பை, ஆவி வசப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை மீ எதார்த்ததிற்கு முன்பாகவே எழுத்தாக்க முனைந்திருக்கிறார்கள், கற்பனை நவிற்சிவாதிகளின் இம்முயற்சி அப்போது பகுத்தறிவு வாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. 1889ம் ஆண்டில் ஜெர்மனைச் சேர்ந்த மெய்யியல் வல்லுனர் மெயெர் (Meyer), ஓர் உளவியல் ஆய்வு அமைப்பை நிறுவி ‘டெலிபதி’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஹிப்னாட்டிஸம், உளப்பகுப்பாய்வு போன்ற ஆழ்மனதை அறிவதற்கு எடுத்துக்கொண்ட அறிவியல் முயற்சிகள் பின்னாளில் இலக்கியத்தில் புது முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு உதவியது. ஆக மீஎதார்த்தவாதிகளுக்கு முன்பாகவே தன் நிகழ்பாடு எழுத்திற்கு வித்திடப்பட்டுவிட்டது, அதன் பலனை அறுவடைசெய்தவர்கள் என வேண்டுமானால் மீ எதார்த்தவாதிகளைக்கூறலாம். அவான் கார்டிஸ்ட்டுகள் (avant-gardistes) அல்லது நவீன கலை மற்றும் பண்பாடுகளுக்கு முன்னோடிகள் எனக்கூறிக்கொண்டவர்கள் செய்தப் பிரச்சாரமும், பேரார்வத்துடன் இலக்கியத்தில் இயங்கியவர்களை விருப்பம்போல கலையையும் இலக்கியத்தையும் கையாளவைத்தது, எனவே அதனையும் மீ எதார்த்தத்திற்கும், தன் நிகழ்பாடி எழுத்திற்கும்  ஒரு காரணி எனலாம்.

1889ல் “உளவியல் தன்நிகழ்பாடு”(l’automatisme psychologique) என்கிற சொல்லை முதன் முதலாக உபயோகித்தவர்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய உளவியல் அறிஞர் எனக்கொண்டாடப்படுகிற பிரான்சு நாட்டைசேர்ந்த பியெர் ழனெ(Pierre Janet). அவர் தன்னுடைய உளவியல் தன்நிகழ்பாட்டிற்குத் தந்த விளக்கம்: “மனிதச் செயல்பாடுகளில் எளிமையானதும் அடிப்படையானதும்”. அவர் இருவகையான தன்நிகழ்பாடுகளைக் கூறுகிறார்: ஒன்று முழுமையான தன் நிகழ்பாடு, மற்றது முழுமையல்லாத தன்நிகழ்பாடு. இவ்விரண்டு தன்நிகழ்பாடுகளும் ஆழ்மனதின் பரப்பை அடிப்படையாகக்கொண்டவை. அடுத்ததாக ஆந்தரே ப்ரெத்தோன் (André Breton), பிலிப் சூப்போ (Philippe Soupault) என்பவருடன் இணைந்து  எழுதி 1919ல் வெளிவந்த “காந்தப் புலங்கள்”(‘les champs magnétiques) பிறகு 1924ம் ஆண்டு அவரே எழுதிய “மீஎதார்த்த சித்தாந்த விளக்கம் (Manifeste du surréalisme ) என்ற நூலிலும்  மீஎதார்த்த கோட்பாட்டிற்கு விளக்கங்கள் கிடைத்தன. அதன்படி “பேச்சூடாகவோ, எழுத்தின் வழியோ அல்லது வேறு வழிமுறைகளிலோ சிந்தனையின் உண்மையான செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் உளவியல் தன்நிகழ்பாடு”. பாரீஸில்  கண்ணுக்குப் புலப்படுகிற பொருளைமட்டுமே வரைவது (Art figuratif), என்ற இயக்கம் மும்முரமாக செயல்பட்டகாலத்தில், அதற்கு எதிராக மீஎதார்த்தத்தின் தாக்கத்தில் அரூப ஓவியங்களில் நாட்டங்கொண்ட கனடா நாட்டு  ஓவியர்களில் சிலர் 1940களில் தன்நிகழ்பாட்டில் கவனம்செலுத்தினார்கள், அவர்களைத் தொடர்ந்து கவிஞர்கள் சிலரும் இத்தன் நிகழ்பாடு எழுத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். தன் நிகழ்பாடு என்ற எழுத்துமுறையின் புரவலர்கள் மீஎதார்த்தவாதிகள் (Surréalistes), கற்பனை நவிற்சிவாதத்தை(Romantisme) அதீதக் கற்பனை என்ற இவர்கள்தான் அதீதக் கற்பிதத்தை எழுத்தில் திணித்தார்கள் என்பது சகித்துக்கொள்ள முடியாத முரண்நகை.

 

ஆ.: சிரியா

சிரியா நாட்டின் குழந்தையொன்று போரின் காரணமாக ஐரோப்பிய நாடொன்றிர்க்கு அகதிகளாகக் குடும்பத்துடன் புற்றப்பட்டபோது கடல் விபத்தில் இறக்க, சடலம் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது, உலகறிந்த செய்தி. அப்புகைப்படம் உலகத்தின் மன சாட்சியை உலுக்கியதோ என்னவோ, ஐரோப்பிர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது 4மில்லியன் மக்கள், அகதிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜோர்டான், லிபி, துருக்கி, ஈராக்கென்று, அகதிகள் முகாம்களில் குவிந்ததுபோக, மற்றவர்கள் வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இம்மக்களை ஏற்பதற்கு எல்லைகளில் இருக்கிற இஸ்லாமிய நாடுகள் முன்வருவதில்லை. இதில் செல்வத்தில் கொழிக்கும் வளைகுடாநாடுகளும் அடக்கம். அவர்கள் அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லையாம், மகாக்கேவலமான  சப்பைக்கட்டு. மீண்டும் ஈராக்கில் நடந்தது போல, ஆப்கானிஸ்தானத்தில் நடந்ததுபோல அல்லது ஏற்கனவே வியட்நாமிம் பாடம் படித்ததுபோல -ஆப்பை அசைத்து வாலை மாட்டிக்கொண்ட குரங்கின் கதையாக – ஆகிவிடக்கூடாதென அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தரைவழித் தாக்குதலைக் கவனமாக தவிர்த்து வருகின்றன. யுத்தத்தை தொடர்ந்து அனுமதிப்பதிலும் அவர்களுக்கு ஏதோ இலாபம் இருக்கிறது, காலம்காலமாக காப்பாற்றிவருகிற கௌளவுரவத்திற்கும் எதுவும் நேர்ந்திடக்கூடாது என்ற சூழலில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சும் – ஜெர்மனும் அகதிகள் எந்த விகிதாச்சாரத்தில் பகிர்ந்துகொள்ளலாமென ஆலோசிக்கிறபோது,  மேற்கத்தியர்களின் மற்றொரு தரப்பு: கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேச்சே வேண்டாம் என்கிறார்கள். செக் நாடு கிருஸ்துவர்களை மட்டும் அகதிகளாக ஏற்போம் என்கிறது. ஹங்கேரி ஒருவரும் வேண்டாம் என்கிறது. பிரச்சினை அகதிகள் மட்டுமல்ல, காம்ரேட்டுகள் நிர்வாகம் வைத்துவிட்டுபோன தரித்திரம் இன்னும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிறது. அம்மி குழவியே காற்றில் பறக்கிறபோது, அவர்கள் என்னசெய்வார்கள்.  அகதிகளை ஏற்பதா கூடாதா என்ற விவகாரம் அரசாங்கங்களிடம் மட்டுமல்ல மேற்கத்திய மக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு தத்துவவாதிகளுள் ஒருவர் பெர்னார் ஆரி லெவி (Bernard-Henri Lévy): “சிரியா குழந்தையின் ஒதுங்கிய சடலத்தின் புகைப்படம் என்னை உலுக்கிவிட்டது, நமக்கொரு பாடத்தை புகட்டியிருக்கிறது” எனக்கூற , மற்றொரு தத்துவவாதி மிஷெல் ஓன்ஃப்ரே ( Michel Onfray) திரைப்பட ஆளுமை மிஷெல் ஒதியார் வார்த்தைகளில் , “அட முட்டாப் பயல்களா! அவர்கள் எதற்கு துணிந்தவர்களென்று தெரியாதா. அப்படி செய்ததால் தானே, நமக்கும் பிரச்சினை என்னன்னு புரியுது” எனப்பதிலுரைக்க, தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகளில் தலைபோகிற பிர்ச்சினை அகதிகளை என்ன செய்வது?

—————————————————-

 

 

 

——————–

Series Navigationகேள்விகளால் ஆனது  மென்மையான​ கத்தி
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகளில் தலைபோகிற பிர்ச்சினை அகதிகளை என்ன செய்வது?//

    அகதிகளை வரவேற்கத் தயாராகிவரும் ஐரோப்பிய நாடுகளைப் பாராட்டும் அதே சமயத்தில், சிரியாவின் இப்போதைய நிலைக்குக் காரணமே இதே ஐரோப்பிய நாடுகள்தான் என்பதை மறக்கவும் முடியாது. 2011-ல் சிரியாவில் உள்நாட்டுச் சண்டை மூண்டது முதல் இன்றுவரை இந்த மோதலுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி எதையும் சர்வதேசச் சமூகமும், அமைப்புகளும் எடுக்கவேயில்லை. மாறாக, சிரியாவை புவிஅரசியலுக்கான மோதல் களமாக மாற்றுவதிலேயே அவை ஆர்வம் காட்டின. ஈரானுக்கு வேண்டப்பட்டவரான சிரியா அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்தைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பிய, சவுதி அரேபியா, கத்தார் போன்ற பணக்கார நாடுகள், அவரை எதிர்த்த வெவ்வேறு கலகக் கும்பல்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகள் ஜனநாயக ஆதரவு என்ற போர்வையில், சிரியாவில் ஆட்சி மாற்றம் கோருகிறவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், இந்நாடுகளால் அஸ்ஸாதின் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை; மாறாக சிரியாவின் சீரழிவுக்குத்தான் காரணமாகியிருக்கின்றன.
    -தலையங்கம்.தமிழ் இந்து நாளிதழ்.10-9-2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *