மொழிவது சுகம் ஜூலை 10 2014  

Spread the love

நாகரத்தினம் கிருஷ்ணா

 

 

  1. உண்டாலம்ம இவ்வுலகம்:  செல்வேந்திரா

 

அச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

இந்த மெய்யும் கரணமும் பொறியும்

இருபத்தேழு வருடங்கள்  காத்தனன்;

வந்தனம்; அடி பேரருள் அன்னாய்!

வைரவீ! திறர் சாமுண்டி! காளி!

சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன்

திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்!

நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். ‘தமிழ் வானொலி -தொலைபேசி’- ஆசை: ஒருமுக்கோண வாழ்க்கை. இலண்டனிலிருந்து ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்றின் தீவிர ரசிகர். ஆசுகவி ! கவிதைகள் அவர் கவனமெடுத்து செய்யும்போதெல்லாம் பரவாயில்லை என எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு கவிதையா? தமிழ் வானொலியா? எதுவேண்டும் எனக்கேட்டால், தமிழ் வானொலியென்று பதில் வரும். கவிதையை என்றைக்குத் தேர்வு செய்கிறாரோ அன்றைக்கு நன்றாக கவிதை வருமென சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  நண்பர் க.பஞ்சாங்கம் ஸ்ட்ராஸ்ஸ்பூர் வந்திருந்தபோது, எங்களுடன் ஜூரிச் வரை வந்தார். அவருக்கொரு வானொலி நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்து தமது அன்பினை வெளிப்படுத்திக்கொண்டவர். பிள்ளைகள்,  மனைவி இருக்கிறார்கள். நண்பர் பெருமிதத்துடன் மற்ற்வர்களிடம் பகிர்ந்துகொள்ளுபடியான வாழ்க்கையை அவர்கள் நடத்துகிறார்கள்; இருந்தும் அவர் தனிமனிதராக “உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்” என ஒரு சித்தரைபோல வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த இருமாதங்களுக்கு முன் அவர் அறிவித்த செய்தி ‘இறந்த பிறகு’ எனது உடலை மருத்துவ கல்லூரிக்குப் பயன் படவேண்டும் என முடிவெடுத்து எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்றார். அவர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் என்னிடம் காட்டினார்.  ஊரெல்லாம் கண்தானம் பற்றி பேசுகிறார்கள். சிலர் துணிச்சசலாக அதை செயல் படுத்தவும் செய்கிறார்கள். இறந்த பிறகுதானே? என நக்கலாக சிரிப்பவர்களுமுண்டு, அந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இதுவரை எனக்கில்லை. “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்/தமியர் உண்டலும் இலரே வகை மக்களால்தான் “உண்டாலம்ம இவ்வுலகம்” என பாடப்பட்டது.  நமக்கு எழுதவும் சொல்லவும் அழகாகவும் வருகிறது. ஆனால் செயல்படுத்த துணிச்சலில்லை. செல்வேந்திராவைப் போன்றவர்கள் சொல்வதில்லை. நற்காரியங்கள் என நாம் நினைப்பதை அல்லது சிந்தனைகளை வாய்கிழிய பேசி சாதித்ததென்ன என பல முறை யோசிக்கிறேன்.  பேசும் மனிதர்களால் அல்ல செயல்படுத்தும் மனிதர்களால் ‘இவ்வுலகம் உண்டாலம்ம!

 

2. பிரியங்களின் அந்தாதி – இவள் பாரதி

இன்றைக்குக் கவிதை என்பது உருவகங்களாற் கட்டமைத்த படிமங்களாக; பரவசங்கள், குமுறல்கள், கோபங்கள் ஆகியவற்றை அடர்த்தியான சொற் சிக்கனத்துடன் மன அனுபவத்தின் வரிசையில் சொல்வது என்றாகி இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை ஓகோவென்றிருந்த கவிதை இடையிற் சோர்ந்து இன்றைக்கு மீண்டும் இளைய தலைமுறையினரின் வரவால் புத்துயிர் பெற்றுள்ளது. இலக்கியம், ஓவியம், சிற்பம் எனச் சொல்லப்படும் மூன்றுமே கலையின் பன்முக வெளிப்பாடுகள். கலைத்துறை, உணர்ச்சியும் அறிவும் இணைந்து செயல்படும் களம். கலைத்துறைக்கு இரண்டும் வேண்டும். உணர்ச்சியோ அறிவோ தனித்து சாதிக்க முடியாது. எனினும் கலைஞன் என்பவன் அறிவைக்காட்டிலும் புலன்களால் வழிநடத்தப்படுபவன். புலன் உணர்வுகளை அறிவூடாக புரிந்துகொள்வதும், மற்றவருடன் பகிர்ந்துகொள்வதும் கலை ஆகிறது. ‘கலை’ என்பது அழகின் ‘ஞான’ வடிவம் என்றும் பொருள்கொள்ளலாம்.  படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறுகதை, பெருங்கதை என்கிற பிற வடிவங்களைக் காட்டிலும் ‘அழகின் அறிவு வடிவமாக அடையாளப் படுத்த உதவும் மொழியாடல். சாபக்கேடுபோல அண்மைக்காலங்களில் கவிதைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை, கவிஞர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. (வருகிற தகவல்கள் சிறுகதை, நாவல்களுக்கும் சாதகமாக இல்லை. கட்டுரைகள வாசிப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறதாம். கட்டுரைகள், பிரமுகர்களின் சுயசரித்திரம் ஆகியவற்றைப் பதிப்பிக்கவே, பதிப்பகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.

 

இளம்பாரதி

இக்கவிஞருடைய ‘பிரியங்களின் அந்தாதி  என்ற தொகுப்பை அண்மையில் வாசித்தேன். கவிதைக்கு கலை வடிவமென்று ஒன்றிருக்கிறது. அது அழகியல் சார்ந்தது. அக்கலை வடிவம் வார்த்தைத் தேர்வுகளிலும் வாக்கியங்களைச் செதுக்குவதிலும் கிடைப்பதாகும். இவரது கவிதையிலுள்ள  பூடகமற்ற மொழி, நேரான வாக்கியங்கள், அவர் கவிமனத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கின்றன. நவீன இலக்கியம் வகுத்துள்ள கருத்தியம் இவரது கவிதைகளுக்குப் பொருந்தவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவைமட்டுமே ஒரு கவிஞனை எடைபோடக் காணுமா?  அதனால் ஒட்டுமொத்த கவிதைகளையும் குறைத்து மதிப்பிட முடியாதில்லையா? சொல் அலங்கராத்தை தவிர்த்த அவர் கவிதைமொழி, பாசாங்கற்ற தொனியில் உரையாடுவதே கூட அழகுதான். எதிர்காலத்தில் பல நல்ல கவிதைகளைப் படைக்ககூடிய ஆற்றல் கவிஞருக்கு உண்டென்பதை இத்தொகுப்பு தெரிவிக்கிறது. . இன்றைய தேவை இயற்கையைக் கண்டு பரவசப்படும் கவிஞர்கள் அல்ல, இச்சமுதாயத்த்தைக்குறித்து சில கணங்களேனும் அக்கறைகொள்ளும் கவிஞர்கள். எது நடந்தால் என்ன? யார் எக்கேடு கெட்டால் என்ன? ‘நான்’ ‘எனது’தான் வாழ்க்கையென வாழப்பழகிய உலகில் ( படைப்பிலக்கிய உலகும் இதில் அடங்கும்) தமது கவிதைகள் கொண்டு ஊழியம் செயும் கவிஞராக இவரைப் பார்க்கிறேன்.  காட்சிகளைக் கண்டு குதூகலிக்கும் மனநிலைக்கு மாறாக, அக்காட்சிக்கான காரண காரிய தேடல்களில் பங்கெடுப்பவராக, இச்சமுயாதத்தின் ஒழுங்கிசைவுக்குக்குக் குரல்கொடுப்பவராக – கலை மக்களுக்காக – என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தும் கவிஞராக இருக்கிறார்.

புவி, ‘வெப்பமயமாதல்’ குறித்து அவருக்குள்ள கவலையும், அக்கவலையூடாக அவர் கட்டுகின்ற நம்பிக்கையும் இக்கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

வெப்பமயமாதல்

 

வெப்பமயமாதல் பற்றி

அடிக்கடி கனவு வருகிறது

தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக

வேரோடு அறுத்தெரியப்பட்ட

ஆண்டுகள் பலவான மரங்களைக்

கடந்து சென்ற பயணத்திற்குப்பின்

 

கனவிலிருந்து தப்பிக்கும்

உபாயம் ஏதும் தெரியாதபோது

நான் சாப்பிட்டுத் தூக்கியெறிந்த

மாமரத்தின்கொட்டை

கொல்லையின் ஈரப்பதம் உள்வாங்கி

முளை விட்டிருந்தது

 

அன்று முதல் நீரூற்றி வளர்க்க

ஆரம்பித்தேன்

அதற்கடுத்த நாளிலிருந்து

அந்தக் கனவு வருவது

நின்றுவிட்டது.

‘தப்பிய சொல்’ என்றொரு கவிதையும் இக்கவிஞர் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

 

இரு சக்கர வாகனத்தில்

மேம்பாலத்தில்

ஏறிக்கொண்டிருக்கையில்

கவிதைக்கான ஒரு சொல்லை

காதுகளில் வழிந்திருந்த

ஒரு பாடலில் இருந்து

பிடித்துக்கொண்டேன்

 

அலுவலகம் வந்த பின்பு

நெடுநேரம் கழிந்து வந்தது

அந்தச் சொல்லுக்கான நினைவு

மீண்டும் மீண்டும்

நினைவு படுத்திப் பார்க்கிறேன்

அந்தப் பாடலையும் முணுமுணுக்கிறேன்

உள்ளிருந்து தப்பிய அந்த சொல்

அகப்படவில்லை

 

பல பிரயத்தனங்களிலிம் சிக்காத

அது ஒருவேளை

என்னைத் தேடியபடியிருக்குமோ

எனும் ஆதங்கம் மேலிட

அனைத்து வேலைகளையும்

அப்படியே விட்டுவிட்டு

இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்

மேம்பாலம் நோக்கி

காதுகளில் இசை வழிய

 

‘காதலை’ பாடாத கவிஞர்கள் இருக்க முடியுமா? இளங்கவிஞர்கள் தாண்ட முடியாத சொல். இத்தொகுப்பிலும் காதல் கவிதைகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை. இவரும் தன் பங்கிற்கு நிறையவே எழுதியுள்ளார். ‘வெற்றிடத்தின் கடைசிப்புள்ளி’ என்ற கவிதையில் இடம்பெறும்  இவ்வரிகள்  முக்கியமானவை:

 

இருவருக்குமிடையில்

விழத் துவங்கியிருக்கும்

வெற்றிடத்தை

எதைக்கொண்டு நிரப்புவதென

சிந்திக்கிறேன்

………………….

…………………….

 

வெற்றிடத்தின்

கடைசிப்புள்ளி மறையும்போது

நாம் மேற்கொண்டு பேசலாம்

ஒரு நண்பனைபோல நீயும்

ஒரு தோழியைபோல நானும்

—-

இத்தொகுப்பில் ஓரிடத்தில் கவிஞர் “எதில் தொடங்கப்படுகிறதோ அதிலே முடியவும் கூடிய விசித்திரங்களைக்கொண்டது வாழ்க்கை” எனக் குறிப்ப்டிருப்பார். அவ்வரியே இத்தொகுப்பைப் பற்றி நான்கைந்து வரிகள் எழுத தூண்டுகோலாக அமைந்தன.

 

பிரியங்களின் அந்தாதி

ஆசிரியர்: இவள் பாரதி

முகவரி வெளியீடு

6/25 பத்மாவதி நகர்,

இரண்டாவது குறுக்குத் தெரு

விருகம்பாக்கம், சென்னை-92

 

3.The Land of Green Plums

the-land-of-green-plumsHerta Muller என்பவரின் இந்த நாவலை அண்மையில் வாசித்தேன். . தன்மையில் சொல்லப்படும் கதை. கதை சொல்லி ஓர் இளம்பெண் அவள் பெயர் நாவலில் இல்லை. ஆசிரியரின் சுயசரிதைதான் நாவல் என்று சொல்லப்படுகிறது. ருமேனிய கம்யூனிஸ அரசாங்கத்தின் இறுதிக்கால சர்வாதிகாரியாக இருந்தவர் நிக்கோலா சௌசெஸ்கு(Nicolae Ceausescu).  மிக்கேல் கார்பச்சேவின் பெரெஸ்றோயிகா,  ருமேனியாவையும் விட்டு வைக்கவில்லை. பிற இடங்களில் அமைதியாக கம்யூனிஸம் வீழ்ந்தது. இங்கே மட்டும் இரத்த களறியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. பலியான உயிர்களில் (1989) சர்வாதிகாரியும் அவருடைய துணைவியாரும் அடக்கம். புரட்சியாளர்கள் தம்பதிகளை கைது செய்து அவசரமாய் தீர்ப்பளித்து  தீர்ப்பின் மை உலர்வதர்க்குள் சுட்டுக்கொன்றார்கள். இன்றளவும் இப் புரட்சிகுறித்து மர்மம் நீடிக்கிறது. இந்த ருமேனிய அதிபர் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடந்துகொண்டவர். அன்றைய செக்கோஸ்லோவோகியா தன்னிச்சையாக செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களை தடுத்த நிறுத்த சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நேசநாடுகளின் உதவியோடு பிராகு நகரை ஆக்ரமிக்கிறது(1968) இந்த ஆக்ரமிப்பின்போது வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் போலந்து, அங்கேரி போன்ற நாடுகள் தங்கள் படைகளை சோவியத் யூனியன் படைக்குத் துணையாக அனுப்பிவைத்தன.  இதில் பங்கேற்காத நாடு ருமேனியா. இதுபோல பல விஷயங்களில் சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்கத்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சௌசெஸ்கு. எனினும் வடகொரிய நாட்டின் அப்போதைய அதிபரை ரோல் மாடலாகக்கொண்டு ஆட்சி செய்தமையால் அமெரிக்கர்களின் கோபத்திற்கும் ஆளானவர் எனவே இவரை வீழ்த்த  KGB, CBIஇரண்டுமே காத்திருந்தன. இந்த சர்வாதிகாரியின் ருமேனியாவிலிருந்து, ஜெர்மன் மொழிபேசிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞர் கூட்டம் தப்பநினைக்கிறது. இடையில் நாம் எதிர்பார்ப்பதுபோல கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளிள் அசல் முகத்தை எதிர்கொள்கிறோம். பேசகூட உரிமையற்ற மக்கள், சிறைக்கைகதிகளின் உபயோகம், பன்றிகள், மாடுகள் இறைச்சிக்காக கொல்லும் இடங்களில் இரத்தத்தைக் குடித்தும், அதன் வயிற்றிலிருக்கும் கழிவுகளை வீட்டிற்குக் கடத்திச்சென்றும் பசியாறும் தொழிலாளிகள். சர்வாதிகாரியைப்பற்றிய துதிபாடல்கள். செக்யூரிட்டேட் உளவுப்படை காவலர்களின் சந்தேக வளையம், நண்பர்களைக்கூட நம்பமுடியாத கொடூரம், கேள்விமுறையற்ற கைதுகள், சிறைவாழ்க்கை என கதை சொல்லி ருமேனிய நாட்டின் சர்வாதிகார வாழ்க்கையை விவரிக்கிறார். ஆனால் அவ்வளவும் அங்கத மொழியில் உருவகக் கதைபோல சொல்லப்படுகிறது. நாவலாசிரியர் கவிஞர் என்கிறார்கள்; கதை கவிதை மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மிகமிக எளிமையாகசொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நாவல் நெடுக குறுக்கிடும் ஐரோப்பிய தாவரங்களின் பெயர்கள் நம்மை அந்நியப்படுத்துவதைபோன்ற உணர்வை ஏற்படுத்தித் தருகின்றன.

Series Navigationதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டைவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]