மௌனத்தின் பக்கங்கள்

லதா அருணாச்சலம்

ஒவ்வொரு உரையாடலுக்குப்
பின்னாலுமான
உணர்வுகளின் விழிப்பு
கோடை மழை சிலிர்ப்பாய்
மலர்த்தி விடுகிறது மனதை.

மீண்டுமொரு சந்திப்புக்காய்
யாசிப்பின் தவிப்புகள்
நிறைந்து வழிகின்றன
தாழப் பார்க்கும்
இமை மறைத்த விழிகளில்

கைகோர்த்திருந்த விரல்களின்
ரேகைகள் வாசிக்கும்
உயிரோடு உயிர் உரசிக் கொண்ட
நாதங்களின் சுரங்களை..

விடை சொல்லும் கையாட்டலில்
வீசிச் செல்கிறாய்
எனை நோக்கி
ஓர் மௌனப் பக்கத்தை..

குட்டி இடுமென்று பத்திரமாய்
அடைகாத்த சிறு மயிலிறகால்
உன் பிரியத்தின் ஈரம் தொட்டு
வரைந்து வைக்கிறேன்
மையலின் காவியத்தை..

அடுத்த சந்திப்பில் அதை
வாசிக்க வேண்டும் நீ..
ஆனால் நேசிக்க மட்டுமே
நேரமுண்டு என்று
நானும் அறிவேன்..

நீயும் அறிவாய்…
இந்தக் கவிதையும் ஒரு
குறுஞ்சிரிப்பை உதிர்த்துச் சொல்கிறது..

Series Navigation13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)புத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )