யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17

பி.ஆர்.ஹரன்

யானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அரசு, அரசுத்துறைகள், விலங்குகள் நல அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் உட்பட்ட ஹிந்து இயக்கங்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். அவர்களுக்குப் பொது மக்களும் ஆதரவு தரவேண்டும். மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனைக்குப் பின்வரும் செயல்பாடுகளின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.
Elephants-1
• தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011 (Tamil Nadu Captive elephants (Management & Maintenance) rules, 2011) முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

• யானைகள் அனைத்தும் அரசுத்துறை, குறிப்பாக வனத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தனிநபர் வசம் எந்த யானையையும் கொடுக்கக்கூடாது. ஆன்மிக மடங்கள் போன்ற நிறுவனங்கள் வைத்திருக்க உரிமம் தரலாம். ஆனால் அந்நிறுவனங்கள் தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011-ன்படி யானைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். யானைக்கொட்டாரங்கள் அமைக்கத் தேவையான வசதிகளைச் செய்துதர அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

• மிகவும் விசேஷமான பெரிய கோவில்களில் மட்டும் யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒவ்வொரு கோவிலிலும் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று யானைகளை வைத்துகொள்ள வேண்டும். கோவிலுக்கு யானைகளைக் கொண்டு வரும்போது, கன்றுடன் அதன் தாயையும் சேர்த்துக் கொண்டுவரவேண்டும். ஒரு கோவிலில் ஒரு யானையை மட்டும் வைத்துப் பராமரிக்கும் வழக்கம் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.

• இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கும் மற்ற தனியார் வசம் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கும் நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் குறைந்த பட்சம் 20 அல்லது 30 ஏக்கர் நிலத்தை யானைக் கொட்டாரங்கள் அமைக்கத் தயார் படுத்த வேண்டும். உதாரணத்துக்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள கோவில் யானைகள் அனைத்துக்கும் பொதுவாக சுமார் 20 ஏக்கர் நிலத்தில் கொட்டாரங்கள் அமைத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். அதே போல கோவைப் பிராந்தியம், மதுரைப் பிராந்தியம் என்று தமிழகத்தைப் பல்வேறு பிராந்தியங்களாகப் பிரித்து கோவில் நிலங்களில் யானைக் கொட்டாரங்கள் அமைக்க வேண்டும்.
Elephants-2
• அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நிலங்கள் இயற்கை வளம் கொண்ட நிலங்களாக இருத்தல் நலம். அவ்வாறு இயற்கைச் சூழல் நிறைந்த நிலங்கள் கிடைக்காத பட்சத்தில், இருக்கும் நிலங்களில் மா, தென்னை, பலா போன்ற மரங்களை வளர்த்து, கீரைவகைகள், மற்றும் செடிகொடிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

• அந்நிலங்களில் இரண்டு அல்லது மூன்று குளங்களாவது அல்லது குட்டைகளாவது வெட்டி, தண்ணீருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். யானைகளின் சேற்றுக்குளியலுக்கும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். பாகன்களும், காவடிகளும் யானைகளைக் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரங்கள் குளிப்பாட்ட வேண்டும். வெயில் நேரங்களில், யானைகள் குளிப்பதற்கு மழைபோலப் பொழியுமாறு நீர்த்தாரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

• யானைகள் காலார நடைப்பயிற்சி செய்யத் தேவையான இடமும் இருக்க வேண்டும்.

• யானைகளுக்கான தங்குமிடம் நல்ல காற்றோட்டத்துடன் இயற்கையான மண்தரை உடையதாக இருக்க வேண்டும். கொட்டாரத்தில் வேலியிடப்பட்ட பகுதிகளிலும், யானைகள் தங்குமிடத்திலும் CCTV காமிரா வைத்திருக்க வேண்டும். யானைகள் மற்றும் பாகன்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

• யானைகளைக் கட்டுவதற்குத் தாம்புக்கயிறு தான் உபயோகிக்க வேண்டும். சங்கிலிகள் பயன்படுத்தினால், அந்தச் சங்கிலிகளைச் சுற்றி ரப்பர் (டியூப்) சுற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது சங்கிலிகள் ரப்பர் குழாய்களின் உள்ளே செலுத்தப்பட்டது. பிறகு யானைகளின் கால்களில் கட்டப்பட வேண்டும். முட்கம்பிகள் நிறைந்த சங்கிலிகளைப் பயன்படுத்தக் கூடாது.

Elephants-4
• இவ்வாறு ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்த கோவில்களின் யானைகள் அனைத்தும் ஒன்றாக ஒரே குடும்பமாக இயற்கைச் சூழலில் ஒரே இடத்தில் இருக்கும்போது, மனதளவில் அவை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். அவைகளின் தேக ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும்,

• யானைக் கொட்டாரங்களுக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படக் கூடாது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதிப்பது, நுழைவுக்கட்டணம் வசூலிப்பது, போன்ற செயல்களில் அரசுத்துறைகள் ஈடுபடக்கூடாது.

• மருத்துவர்கள் மேற்பார்வையில் அவர்கள் குறிப்பிட்டுக் கொடுத்துள்ள உணவு அட்டவணைப்படி யானைகளுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். யானைகளின் உயரத்துக்கு ஏற்றவாறு உணவு அளிக்கப்பட வேண்டும்.

• ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு யானை மருத்துவரும் இரண்டு கால்நடை மருத்துவர்களும் நியமிக்க வேண்டும். அவர்கள் யானைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது யானைகளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

• ஒவ்வொரு யானைக்கும் ஒரு தலைமைப் பாகனும் இரண்டு உதவிப் பாகன்களும் (காவடிக்கள்) நியமிக்க வேண்டும். கோவில் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் சமயத்தில் மட்டும் யானைகளைக் கோவில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மற்ற நேரங்களில் அவை கொட்டாரத்தில் தான் இருக்க வேண்டும். யானைகளைத் திருவிழாக்களுக்கும் கோவில்களுக்கும் கொண்டு செல்லும்போதும். திரும்பவும் அவைகளைக் கொட்டாரத்திற்கு அழைத்துவரும் போதும். போக்குவரத்துச் சட்ட விதிகள் கடைப்பிடிக்கப் படவேண்டும்

• யானைப்பாகன்களுக்கென பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கே யானைகளைப் பராமரிப்பது பற்றிய பயிற்சியை நல்ல முறையில் வழங்க வேண்டும். பரம்பரை யானைப்பாகன்கள் தற்போது குறைந்து வருகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். யானைப்பாகன்களுக்கென வீடுகள் கட்டித்தரவேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி உதவிகளும் செய்து தரவேண்டும். அவர்களை அரசு ஊழியர்களாகக் கொண்டு மாதாந்திரச் சம்பளம் வழங்க வேண்டும். யானைப்பாகன்களுக்கும் காவடிகளுக்கும் ஒவ்வொரு வருடமும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். குறிப்பாகத் தொத்து வியாதிகள் எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையானப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். தேவைப்படும் தடுப்பூசி மருந்துகளும் அளிக்கப்பட வேண்டும்.
Elephants-3
• தமிழக அரசின் (G.O. Ms. No: 118 dated 17.10.2016) ஆணைப்படி, மாநில அளவிலான யானைகள் நலக்குழுவும், மாவட்ட அளவிலான யானைகள் நலக்குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட யானைகள் நலக்குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொட்டாரங்களுக்குச் சென்று சோதனைகள் செய்து, பதிவேடுகள் எலலாம் முறையாகப் பராமரிக்க்கப்படுகின்றனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். பிறகு விவரமான ஒரு அறிக்கையை மாநில யானைகள் நலக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

• ஒவ்வொரு யானைக்கும் ‘மைக்ரோ சிப்’ (MICRO CHIP) என்கிற கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அவற்றைக் கண்காணிக்கக் கூடிய ஸ்கேனர் கருவிகளையும் ஒவ்வொரு கொட்டாரத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

• தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள்(நிர்வாகம் மற்றும் பராமரிப்பு) விதிகள்-2011 (Tamilnadu Captive elephants (Management & Maintenance) rules, 2011) கூறியுள்ள வகையில், ஒவ்வொரு யானைக்கும் மருத்துவப் பரிசோதனைப் பதிவேடு, உணவு அட்டவணைப்பதிவேடு, தடுப்பூசிப் பதிவேடு, பாகன்கள்-காவடிகள் சுகாதார/மருத்துவப் பதிவேடு, பணிகள் பதிவேடு போன்ற அனைத்து விதமான பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படவேண்டும்.

• ஒவ்வொரு கொட்டாரத்தைப் பற்றிய தகவல்களும், அங்கேயுள்ள யானைகள் பற்றிய அனைத்துத் தகவல்களும், அவைகள் மேற்கொள்ளும் கோவில் திருப்பணிகள் பற்றிய தகவல்களும் வனத்துறையின் இணைய தளத்தில் அவ்வப்போது முறையாக ஏற்றப்பட வேண்டும். அதே போல இந்து அறநிலையத்துறையில் இணையதளத்திலும், கோவில் யானைகள் பற்றிய தகவல்கள் முறையாகக் கொடுக்கப்பட வேண்டும்.

• கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் “சிறைப்பிடிக்கப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள்” (Captive Elephants – Management and Maintenance – Rules) அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் “சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல்கள்” (Guidelines for Care and Management of Captive Elephants) உள்ளன. மேலும், இந்திய விலங்குகள் நலவாரியம் (Animal Welfare Board of India) விதிகளும் உள்ளன. இவை மட்டுமல்லாது, வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் “வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம்-1972” மற்றும் “பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் – 1960” ஆகியவையும் இருக்கின்றன. மேற்கண்ட சட்டங்களின் படி, மத்திய மாநில அரசுகளின் விதிகளையும், வழிகாட்டுதல்களையும், கோவில்களும், தேவஸ்தானங்களும் பின்பற்றி நடக்க வேண்டும். அதை அரசு அதிகாரிகள் லஞ்ச ஊழலின்றி உறுதி செய்ய வேண்டும்.

• யானைகளுக்கான புத்துணர்வுக் காப்பகங்கள் அல்லது புனர்வாழ்வு மையங்கள் தொடங்க ஹிந்து அமைப்புகளும் முன்வர வேண்டும். கோவில்களைப் போல மடங்களுக்கும் சொந்தமாக நிலங்கள் இருக்கின்றன. யானைகளுக்கென சில ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி யனைக்காப்பகங்கள், கொட்டாரங்கள் நடத்த அவை முன்வரவேண்டும். அவற்றுக்கு மத்திய மாநில அரசுகள் தேவையான கட்டுமான வசதிகளும் நிதியுதவியும் அளிக்க வேண்டும்.

• இந்து அறநிலையத்துறை, கால்நடை மருத்துவத்துறை, வனத்துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள், விலங்குகள் நல அமைப்புகளின் பிரதினிதிகள், ஹிந்து (ஆன்மிக, கலாச்சார) அமைப்புகளின் பிரதினிதிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் மாவட்ட (அல்லது பிராந்திய) அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் சேர்ந்து யானைகள் காப்பகங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா, யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, யானைப் பாகன்கள் குறையின்றிப் பணியாற்றுகின்றனரா என்கிற விஷயங்களை உறுதி செய்ய வேண்டும். அவற்றைப் பற்றிய அறிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.

• பொது மக்களும் அரசுத்துறைகளுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். எங்காவது குறைகள் இருப்பது தெரியவந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புகார் அளிக்கவும் செய்யலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து முறையாகச் செயல்படுத்தினால், யானைகளின் நலனும் காக்கப்படும்; கோவில் கலாச்சாரமும் ஆன்மிகப் பாரம்பரியமும் தொடர்ந்து நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு முறையாக நடக்கும்போது, அன்னிய நாட்டு நிதியுதவியுடன் செயல்படும் அரசு சாரா அமைப்புகள், விலங்குகள் நலன் என்கிற பெயரில் நமது ஆன்மிகப் பாரம்பரியங்களில் தலையிட வாய்ப்பே இருக்காது.

(முற்றும்)

Series Navigationசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்