யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4

Spread the love

 

பி.ஆர்.ஹரன்

 

சர்க்கஸானாலும், கோவில்களானாலும், தனியார்வசமானாலும், யானைகள் சரியாகக் கவனிக்கப்படாமல், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோவதற்கான காரணங்களை அலசி ஆராயாமல், இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண முடியாது. அந்தக் காரணங்களைக் கண்டறிந்தால், அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து யானைகளின் நலனைக் காப்பாற்ற முடியும். யானைகள் அனுபவிக்கும் துன்பங்களுக்கான காரணங்களைப் பார்ப்போம்.

 

யானைகளின் துன்பத்திற்கான காரணங்கள்.

 

  1. தனிமை
  2. தேவையான உணவின்மை
  3. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை
  4. பாகன்களின் சித்திரவதை
  5. முறையான சிகிச்சையின்மை

 

 

தனிமை

 

அடிப்படையில் யானை ஒரு வனவிலங்கு. பெரும் குடும்பமாக வாழக்கூடிய விலங்கு. பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தரையில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்கு அடுத்தபடியாக, (ஏன் மனிதனுக்குச் சமமான என்றும் சொல்லலாம்) அறிவுத்திறன் கொண்டவை. அதனால் தான் ஒன்றாக, ஒரே குழுவாக, ஒன்றுக்கொன்று இழைந்துகொண்டு பாசத்துடனும், அன்புடனும் வாழ்கின்றன. யானைகளிடையே, தாய்-கன்று உறவு மிகவும் பாசப்பிணைப்பு கொண்டது. அதே போல சகோதர உணர்வும் யானைகளிடம் அதிகம் உண்டு. குறிப்பாக பெண்யானைகள் தாய், சகோதரி, மகள் என்கிற உறவுடன் குடும்பமாக இருக்கும். அதனால்தான், யானை சினையாக இருக்கும்போதும், கன்றை ஈனும் முன்னரும், ஈனும் போதும், ஈன்ற பின்னரும் மற்ற வளர்ந்த யானைகள் அதனைச் சுற்றி இருந்துகொண்டு அதற்கு உதவுகின்றன. யானைக் கன்று பிறந்ததிலிருந்து அதன் கூட்டத்தாலேயே வளர்க்கப் படுகிறது.

 

இவ்வாறு பாசப்பிணைப்புடன் வாழக்கூடிய ஒரு விலங்கை, அது சிறு கன்றாக இருக்கும்போதே அதன் குடும்பத்திலிருந்து பிரித்துக் கொண்டுவந்து, அதனைத் தனிமைப்படுத்தி வளர்ப்பது, அதற்குச் செய்யப்படும் முதல் கொடுமை. பல கோவில்களிலும், தனியார் இடங்களிலும் இருக்கின்ற யானைகள் 3 வயதிலிருந்து 8 வயதுள்ள கன்றுகளாக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை தான். அவ்வளவு சிறிய வயதில் அவைகளைத் தாயிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் பிரித்துக் கொண்டுவரும்போதே அவை மனதளவில் பெரும்பாதிப்பு அடைகின்றன. பிறகு அந்த பாதிப்புடனேயே, பெரும் மனக்குறையுடனேயே அவை வளர்ந்து வருகின்றன. நாளடைவில் அந்தத் தனிமைக்கு அவை பழக்கப்பட்டுவிடுவதாக அதன் உரிமையாளர்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அவை வாழ்நாள் முழுவதும் தன் இனத்தின் அரவணைப்புக்காகவும் தோழமைக்காகவும் ஏங்கிக்கொண்டு, அது கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே வாழ்கின்றன என்பது தான் உண்மை.

 

தேவையான உணவின்மை

 

யானை வனவிலங்கு என்பதால் அது வாழ்வதற்கு மரம் செடி கொடிகள் ஏராளமாக உள்ள காட்டுப் பகுதிகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியாகத் தங்களுக்குத் தேவையான உணவுகளான இலைகள், பழங்கள், தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட மரம் செடி கொடிகளை பரித்துத் தின்றுகொண்டு, சென்று கொண்டே இருக்கும். பல பகுதிகளுக்குப் பலநாட்கள் சென்றுவிட்டுத் திரும்பவும் அதே வழியில், அவ்வழியை நினைவில் கொண்டு, திரும்பி வரும் பழக்கம் கொண்டவை. அவ்வாறு அவை சென்று வரும் பாதைகள் தான் “யானைப்பாதை” (Elephant Corridor) என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 16 மணிநேரம் உணவு சேகரிப்பில் ஈடுபடுகின்றன. யானை மந்தமான ஜீரண சக்தி கொண்டது என்பதால், அது உண்ணும் இலைகள் போன்ற உணவுகள் 40 சதவிகிதம் தான் ஜீரணம் ஆகின்றன. எனவே, அவை அதிகமான அளவில் உணவு உட்கொள்ள வேண்டியிருக்கின்றது. நன்றாக வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 150 கிலோ முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்ளுகின்றன. இலைகள், கீரைகள், தண்டு வகைகள், கிழங்குகள், பழங்கள், தானியங்கள், காய்கறி வகைகள் என்று பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகின்றன.

 

இவ்வாறு குடும்பமாக, சுதந்திரமாக, தன்னிச்சையாக பலவகைப்பட்ட உணவுகளைச் சேகரித்து உண்டு வாழும் ஒரு விலங்கை, தனியாகக் குடும்பத்திலிருந்து பிரித்துக் கொண்டுவந்து வளர்ப்பவர்கள், மேற்கூறியபடியான பலவகை உணவுகளை அதற்கு வழங்குவதில்லை. கோவில்களில் இருக்கும் யானைகளைப் பொறுத்தவரை, கோவில் நிர்வாகம் பெரும்பாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறது. அதற்கு உணவு வழங்கும் பொறுப்பை பாகன்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள். பாகன்களும் பெரும்பாலும் உண்மையாக நடந்துகொள்வதில்லை. யானைக்குத் தேவையான உணவுகள் என்னவென்று கவனித்துக் கொடுப்பதில்லை; உணவு வகைகள் தீர்ந்துபோனால், அவ்விஷயத்தை கோவில் நிர்வாகத்திடம் உடனடியாகச் சொல்லி அவற்றைக் கொள்முதல் செய்வதில்லை. கோவில் நிர்வாகமும் பாகன்களிடம் தொடர்பு கொண்டு, அவர்கள் பதிவேட்டில் முறையாகக் குறிப்புகள் எழுதிவைத்துப் பராமரிக்கிறார்களா என்பதைக் கவனிப்பதில்லை. பெரும்பாலும், புற்களும், தென்னங்கீற்றுகளும் தான் கொடுக்கப்படுகின்றன. சோளம், ராகி போன்ற தானியங்களைச் சமைத்துச் சோற்றாக்கிப் போடுவது குறைவான அளவு தான். கிழங்குகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவைக் குறைவாகத்தான் தரப்படுகின்றன.

 

மேலும், கோவில் யானைகளுக்கு மற்றொரு பிரச்சனை என்னவென்றால் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் வாழைப்பழத்தையும், தேங்காயையும் அதிகப்படியாகக் கொடுக்கின்றனர். அவைகளை அதிகமாகத் தின்பதால் யானையின் உடல்நலன் கெட்டுப்போகின்றது. சில யானைகளுக்குப் பிஸ்கட்டுகள் சாப்பிடும் பழக்கமும் ஏற்பட்டுவிடுகின்றது. பிஸ்கட்டுகளாலும் அதற்கு உபாதைகள் ஏற்படுகின்றது. வகையான, முறையான, சத்தான உணவுகள் கொடுக்கப்படாததால், கோவில் யானைகள் அடிக்கடி உடல் உபாதைகள் வந்து அவஸ்தைப்படுகின்றன. கோவில்கள் மூலம் அறநிலையத்துறைக்கு வருமானம் கோடிக்கணக்கில் வந்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பாகன்களின் பொறுப்பின்மையினாலும், யானைகள் முறையான சத்தான உணவின்றி நோய்வாய்ப்பட்டு துன்புறுகின்றன என்பதே உண்மை.

 

தனியார் வசமுள்ள யானைகளைப் பொறுத்தவரை, உரிமையாளர் கொடுக்கும் உணவு தான். அதைத்தவிர வேறு உணவு கிடைக்க வாய்ப்பே இல்லை. கோவில் யானைகளுக்காவது, நிர்வாகம் கொடுக்கவில்லையென்றாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் தனியார் வசம் இருக்கும் யானைகளுக்கு அந்த வசதியும் இல்லை.  உரிமையாளர் என்ன கொடுகிறாரோ அதைச் சாப்பிட வேண்டியது தான். உரிமையாளர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அம்மு, லக்ஷ்மி மற்றும் ஃபஸீலா ஆகிய யானைகளின் விஷயத்தில் பார்த்தோம். முறையான சத்தான உணவு இல்லாமையால், பலவீனமாகி, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து, வயிறு வீங்கி, கால்கள் பலமிழந்து, நிற்கக்கூட முடியாமல் இறுதியில் உயிர் இழப்பதைப் பார்த்தோம்.

 

ஆகவே, கோவில்களிலும் சரி, தனியார்களிடத்தும் சரி, யானைகள் போதிய உணவின்றி துன்புறுகின்றன.

 

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை

 

சர்க்கஸ்களிலும், கோவில்களிலும் மற்றும் தனியார் இடங்களிலும் பராமரிக்கப்படுகின்ற யானைகளுக்கான கொட்டாரங்கள் (தங்குமிடங்கள்) பெரும்பாலும் யானைகளுக்குத் தேவையான வசதிகள் இன்றியே இருக்கின்றன. அடிப்படையில் ஒரு வனவிலங்கான யானை காடுகள் அல்லது பெரும் தோப்புகள் போன்ற சூழ்நிலைகளில்தான் வாழக்கூடியது. காடுகள், ஆறுகள், வயல்வெளிகள் போன்ற இயற்கைச் சூழ்நிலைகள் அதற்குத் தேவை. யானைகளுக்கு நன்றாக நீந்தத் தெரியும். ஆகையால் குளிக்கும்போது நீரில் மூழ்கி, விழுந்து புரண்டு, தும்பிக்கையால் நீரை உறிஞ்சித் தன் மேல் இறைத்துக்கொண்டு குளிக்கும். எனவே ஆறுகளோ அல்லது ஏரி, குளங்களோ அதற்கு முக்கியம்.

 

அதோடு மட்டுமல்லாமல், அதனுடைய தோல் வெளியே தடிமனமாகத் தெரிந்தாலும் மெத்தென்று (மென்மையாக) இருப்பதால், அதைச் சூரியனின் வெப்பத்திலிருந்தும் கதிர்வீச்சிலிருந்தும் காத்துக்கொள்வதற்காகத் தன்னுடைய உடல் முழுவதும் மணலையும் சேற்றையும் பூசிக்கொள்ளும். சேறும் சகதியுமான இடங்களில் விழுந்து புரளும்; சேற்றையும் மண்ணையும் தும்பிக்கையால் உறிஞ்சி தன் மேல் இறைத்துக்கொள்ளும். எனவே, அந்த மாதிரியான மணல்பாங்கான இடங்களும் அதற்குத் தேவை.ஆனால் கோவில்களிலும், தனியார் இடங்களிலும் இருக்கும் யானைகளுக்கு அந்த மாதிரியான வசதிகள் கிடைப்பதில்லை.

 

அதனுடைய பாதங்கள் மிகவும் மெத்தென்று மென்மையாக இருப்பவை. புற்களும் மண்ணும் கலந்த இயற்கையான பூமியில் தான் அவைகளால் பிரச்சனையின்றி நடக்கவும் நிற்கவும் முடியும். கால்கள் செங்குத்தாகவும், பாதங்கள் அகன்றும் இருப்பதால் அவைகளால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க முடியும். ஆனால் அவ்வாறு நிற்பதற்கு இயற்கையான நிலங்கள் வேண்டும். சிமெண்டு, கான்கிரீட், கருங்கல் (கிரானைட்), தார் சாலை போன்ற இடங்களில் அதனால் நிற்கவோ நடக்கவோ இயலாது. மிகவும் சிரமப்படும். ஆனால் கோவில் நிர்வாகத்தினரும், தனியார் உரிமையாளர்களும் யானைகள் சிமெண்டு, கருங்கல் மற்றும் கான்க்ரீட் தளங்களுக்கு நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகின்றன என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அந்த நினைப்பினாலேயே அவற்றின் பாதங்களைச் சரியகக் கவனிக்காமல் விடுகின்றார்கள். அதனால் தான் கோவில்களிலும், தனியார் இடங்களிலும் பராமரிக்கப்படும் யானைகளின் பாதங்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகின்றன. கால்கள் வீங்கி, நகங்கள் உடைந்து, பாதங்களில் புண்கள் ஏற்பட்டு, ரத்தமும் சீழும் கசிந்து (Foot Rot) அவை வேதனையும் துன்பமும் அடைகின்றன. பாதங்களில் ஆழமான புண்கள் ஏற்பட்டு, அழுகி, ரத்தமும் சீழும் கசிந்து மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி இறந்ததை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே போன்று பாதிப்புகள் ஏற்பட்டு தற்போது துன்பமும் வேதனையும் அனுபவித்து வரும் பழனி தனியார் யானை லக்ஷ்மியும் நிலையையும் நாம் பார்த்தோம்.

 

யானையின் உடல் மிகவும் பெரியது. சராசரியாக 3 மீட்டர் உயரமும், 6000 கிலோ எடையும் கொண்டது யானை. ஆகவே அதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். வனவிலங்காக இருப்பதால், காடுகள், மலைகள் சூழ்ந்த பிரதேசங்களில் தினமும் நீண்ட தூரம் நடந்து சென்றும், ஆறுகளில் நீந்தியும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியும் அவை தங்களுக்குத் தேவையான அளவு உடலுழைப்பைத் தாங்களே செய்துகொள்கின்றன. உணவு சேகரிப்பதற்கே அவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் செலவழிக்கின்றன என்னும்போது, அவற்றின் உடலுழைப்பை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் கோவில்களிலும், தனியார் இடங்களிலும் இருக்கும் யானைகளுக்கு உடல் உழைப்பே இல்லை; நடைப்பயிற்சிக்குக் கூட வழியில்லை. கோவில்களில் வெளிப்பிராகாரங்களில் ஒரு முறை அழைத்துச் செல்வதெல்லாம் நடைப்பயிற்சி என்று சொல்ல முடியாது. அதுவும் கருங்கல் தரைகளாகவும், கான்கிரீட் தரைகளாகவும் இருக்கும் கோவில்களில் அவற்றை நடக்கவைப்பது சித்திரவதை என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாதிரி ஊர் விட்டு ஊர் அழைத்டுச் செல்வதற்கு தமிழக வனத்துறை அதிகாரிகளும் அனுமதி அளிப்பது கொடுமை. திருவிழாவிற்கு என்று சொல்லி அனுமதி வாங்கி, வழியெங்கும் பிச்சை எடுக்க அழைத்துச் செல்கிறார்கள். திருச்சி பஸீலா, பழனி அம்மு மற்றும் லக்ஷ்மி ஆகிய யானைகள் இவ்வாறு பிச்சை எடுக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. கோவிலுக்கு வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றாலும், அவை தார் சலைகளில் தான் நடக்க வேண்டியிருக்கின்றது; தனியார் வசம் இருக்கும் யானைகளும் தார் சாலைகளில் தான் நடத்திச் செல்லப்படுகின்றன. ஆகவே தார் சாலைகளில் நடப்பதும் சித்திரவதைதான். உடல் உழைப்பும் இல்லாமல், சரியான, முறையான, சத்தான உணவுகளும் இல்லாமல் அவை விரைவில் நோய் வாய்ப்படுகின்றன. மூட்டுவலி (Arthritis), கால்வலி, எடை குறைவு (Weakness), எடை கூடி குண்டாகுதல் (Obesity), வயிற்றுப்போக்கு (Diarrhea), பேதி (Dyssentry), ரத்த அழுத்தம் (Blood Pressure) போன்ற நோய்கள் சுலபமாகத் தாக்குகின்றன.

 

யானைகள் குளிப்பதற்கான ஆறுகள், குளங்கள் இல்லாத சூழ்நிலையில், குழாய்த் தண்ணீரைக்கொண்டு தான் அவைகள் குளிப்பாட்டப்படுகின்றன. கோவில்களில் இருக்கும் யானைகளுக்கு ஒரளவுக்குக் குழாய் தண்ணீர் வசதி இருந்தாலும், தனியார் வசம் இருக்கும் யானைகளுக்கு அந்த மாதிரியான வசதி முறையாகக் கிடைப்பதில்லை. குறைந்த பக்ஷம் அவைகளை ஓரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பாட்ட வேண்டும். ஆனால் கோவில்களில் ஒரு முறைக் குளிப்பாட்டினால் அதிகம். தனியார் இடங்களில் அதுவும் செய்வதில்லை. மேலும் மணல் குளியலும், சேற்றுக் குளியலும் இந்த யானைகளுக்குக் கிடைப்பதேயில்லை. அதனால் தோல் சுலபமாகப் பாதிக்கப்பட்டு புண்கள் உண்டாகின்றன.

 

வனவிலங்கான யானை காடுகள், மலைகள் சூழ்ந்த இயற்கையான சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசித்து வாழும் விலங்கு. ஆனால், கோவில்களிலும், தனியார் இடங்களிலும் இருக்கும் யானைகள் அந்த அளவிற்குச் சுத்தமான காற்றை சுவாசிப்பதில்லை. அவைகள் தங்குவதற்குக் கொடுக்கப்படும் இடங்கள் அளவில் சிறியதாகவும், காற்றோட்டம் குறைவானதாகவும், சூரிய வெளிச்சம் குறைந்து இருள் அதிகமாகவும், மிகவும் அசுத்தமாகவும், கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமலும் இருக்கின்றன. அவைகளின் தங்குமிடத்தைச் சுற்றிக் கோவில் பணியாளர்களின் வீடுகளும் இருக்கின்றன. தனியார் வசம் இருக்கும் யானைகளின் இடங்கள் மேலும் மோசமாக இருக்கின்றன. ஜனசந்தடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள இடங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் அசுத்தம் மிகுந்த சூழ்நிலைகளிலேயே யானைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆகவே, அவைகளுக்குச் சுலபமாக நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. உதாரணமாக, கோவில்களிலும், சாலைகளிலும் இருக்கும் யானைகளுக்குப் பொதுமக்கள் உணவுகள் வழங்கும்போதும், யானைகளைத் தொடும்போதும், அவைகளின் முதுகின் மீது ஏறி அமரும்போதும், பாகன்கள் குளிப்பாட்டும்போதும், மனிதரிடமிருந்து அவைகளுக்குக் காசநோய் எளிதாகத் தொற்றிக்கொள்கிறது.

 

உடல்நலம் குன்றிய, நோய்வாய்ப்பட்ட யானைகளைக் கொண்டு சென்று, முறையான சிகிச்சை அளிப்பதற்கான புனர்வாழ்வு மையங்கள் (Rehabilitation Centres) தமிழகத்தில் தேவையான அளவு இல்லை. இருக்கும் சில மையங்களுக்கும் இந்தக் கோவில் யானைகளும், தனியார்வசம் உள்ள யானைகளும் அனுப்பப்படுவதில்லை. அவைகள் இருக்கும் இடத்திலேயே தான் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

 

பாகன்களின் சித்திரவதை

 

சர்க்கஸ்களிலும், கோவில்களிலும், தனியார் வசமும் இருக்கின்ற யானைகள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு, மேற்கூறப்பட்ட காரணங்களை விட மிகவும் முக்கியமான காரணம் பாகன்கள் அவற்றுக்குச் செய்யும் சித்திரவதை தான். அவைகள் அனுபவிக்கும், வலிகளுக்கும், வேதனைக்கும், துன்பத்திற்கும் பெரும்பொறுப்பு பாகன்களே. தூங்கும் நேரம் தவிர, யானைகளுடன் முழு நேரமும் இருப்பவர்கள் பாகன்கள் தான் என்பதால் அவற்றின் பிரச்சனைகள் அனைத்திற்கும் அவர்கள் தான் பொறுப்பேற்கவேண்டும்.

 

யானைகளை எப்போதும் அச்ச உணர்வுடனேயே வைத்திருக்க வேண்டும்; அப்படி அவைகளைப் பயமுறுத்தி வைத்திருந்தால் தான் அவை தங்களிடம் அடங்கியிருக்கும் என்பது பாகன்களின் மனநிலை. அச்ச உணர்வு இல்லாத யானைகள் அடங்கி நடக்காது; அவைகளை அடக்குவது கடினம்; என்கிற மனநிலை இருப்பதால், பாகன்கள் எப்போதும் அவற்றிடம் கடுமையாக நடந்துகொள்கின்றனர். அவற்றின் கால்களைச் சங்கிலியால் பிணைத்து வைக்கின்றனர். அவைகளை அங்குசத்தால் அவ்வப்போது குத்துகின்றனர். குளிப்பாட்டும்போதும், நடத்திச் செல்லும்போதும், அவ்வபோது மூங்கில் குச்சிகளால் ஒங்கி அடிக்கின்றனர்.

 

தரையில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்குச் சமமான அறிவுத்திறன் கொண்டவை யானைகள். அவைகளின் கேட்கும் திறனும், மோப்பத்திறனும் சிறப்பானவை. தன்னுணர்வு கொண்டவை. மனிதர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவை. இப்பேர்பட்ட அறிவுத்திறனும், உணர்வுகளும் கொண்ட யானையிடம் கருணையுடனும், மனிதபிமானத்துடனும் நடந்துகொள்ளாமல், அவற்றை அடித்தும், துன்புறுத்தியும், எப்போதும் பயத்திலேயே வைத்திருக்கிறார்கள் பாகன்கள்.

 

யானைகளிடம் தங்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கிக்கொள்ளவே, அவைகளை அச்சப்படுத்துகிறார்கள் பாகன்கள். மிகவும் பெரியதாகவும் அதிக பலம் கொண்டதாகவும் இருக்கும் ஒரு வனவிலங்கினிடம் இயற்கையாக ஏற்படும் பயத்தினால், அவை தங்களை மீறி நடந்துகொண்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் அவற்றைத் துன்புறுத்தி, அச்சத்திலேயே வைத்திருக்கிறார்கள். யானைகளிடம் இருக்கும் பயம் காரணமாகவே பெரும்பான்மையான பாகன்கள் மதுவருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மது அருந்திய நிலையில் இருக்கும்போது யானைகளை மேலும் கொடுமைப் படுத்துகிறார்கள்.

 

யானைகள் அடிப்படையில் மிகவும் இரக்க உணர்வு கொண்டவை. யானைகளின் இயற்கையான குணநலன்கள் பற்றிய புரிதல் இருந்தால் பாகன்கள் இவ்வாறு கடுமையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை. மிகவும் அபூர்வமாக ஒரு சில கோவில்களில் பாகன்கள் நல்ல குணமுடையவர்களாகவும், குடிப்பழக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த மாதிரியான பாகன்கள் பராமரிக்கும் யானைகள் ஓரளவிற்குப் பிரச்சனையில்லாமல் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் பாகன்கள் குடிப்பழக்கம் கொண்டவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

 

குடிப்பழக்கம் கொண்டவர்களாக பாகன்கள் இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்குப் பணம் எப்போதும் தேவைப்படுகின்றது. தங்களுடைய பணத்தேவைக்காக யானைகளைப் பிச்சையெடுக்க வைப்பதையும் தொழிலாகவே கொண்டிருக்கிறார்கள். பிச்சைத் தொழிலுக்காக கன்கிரீட் தரைகளிலும், கருங்கல் தரைகளிலும் நீண்ட நேரம் நிற்கவைப்பதாலும், தார் சாலைகளில் அழைத்துச் செல்லப்படுவதாலும், சரியான உணவுகள் கொடுக்கப்படாததாலும், யானைகள் உடல்நலன் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாகத் தனியார்வசம் உள்ள யானைகள் பிச்சைத்தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

 

முறையான பயிற்சி பெற்ற, யானைகளின் குணநலன்கள் பற்றிய புரிதல் கொண்ட பாகன்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தமிழ்நாடு வனத்துறையில் மொத்தன் 39 பாகன்கள் தான் பனியில் இருக்கிறார்கள். மற்றபடி, பெரும்பான்மையான பாகன்களுக்கு யானைகளை மேய்ப்பது குடும்பத்தொழிலாக இருப்பதால், அவர்கள் பிறந்ததிலிருந்து சிறைப்படுத்தப்பட்ட யானைகளை (Captive Elephants) பார்த்தே அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையையும் சேர்த்து கடந்த இரண்டு, மூன்று தலைமுறைப் பாகன்கள் அப்பேர்பட்டவர்கள்தான். எனவே மரத்துப்போன, இரக்கமற்ற இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யானைகளை அடித்துத் துன்புறுத்தத் தயக்கம் காட்டுவதே இல்லை. குடிப்பழக்கமும், மாமிசம் உண்ணும் பழக்கமும் இருப்பதால் இவர்கள் மனதில் இரக்கவுணர்வு இருப்பதில்லை. யானைகள் படும் துன்பங்கள் இவர்களிடத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

 

யானைகளின் உடற்பரிசோதனைக்கும், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்கும் கூட பாகன்கள் தான் பொறுப்பு. அவர்களே யானைகளுடன் முழுநேரமும் இருப்பதால், அதற்கு உடல்நலன் குன்றினாலோ அல்லது எங்காவது காயங்கள் ஏற்பட்டிருந்தாலோ உடனடியாக உரியவர்களிடம் சொல்லி மருத்துவரின் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், மாதாந்திர உடற்பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் பாகன்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

 

ஆகவே, யானைகளின் குளியல், உணவு, பராமரிப்பு, உடல் பரிசோதனை, சிகிச்சை, அது தங்குமிடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, என்று அதன் முழு பராமரிப்பையும் பாகன்களே முன்னின்று நடத்துவதால், அவைகளின் உடல்நலனுக்கும், வேதனைக்கும், துன்பத்திற்கும் அவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

 

முறையான சிகிச்சையின்மை

 

சர்க்கஸ்களில், கோவில்களில், தனியார் வசம் இருக்கும் யானைகள் (Captive Elephants) உடல்நலன் குன்றி, நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறந்துபோவதற்கு, தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சை இல்லாமல் போவதும் ஒரு முக்கிய காரணம்.

 

தமிழ்நாடு கால்நடை, பால்வளம், மீன்வளத் துறையானது கால்நடை வளர்ப்பிலும் அதன் மூலம் பால்வளத்தைப் பெருக்குவதிலும்தான் கவனம் செலுத்துகிறது. கால்நடைவளர்ப்பு என்று வருகின்றபோது கூட, ஜெர்ஸி மாடுகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றது. நாட்டு மாட்டுவகைகளின் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதே போல கோழிப்பண்ணைகள் பெருக்குவதில் தான் கவனம் செலுத்துகின்றது. பால் (ஆவின்), மாட்டு இறைச்சி, முட்டை, கோழி இறைச்சி, மீன்வளம் ஆகியவற்றைப் பெருக்குவதிலும் அதன் மூலம் விவசாயிகளுக்கும் அந்தத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தான் கவனம் செலுத்துகிறது. மொத்தத்தில், இந்தத் துறையின் மூலம் அரசுக்கு வருமானம் பெருக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது.

 

அதோடு மட்டுமல்லாமல் இறைச்சித் தொழில், குறிப்பாக மாட்டிறைச்சி, பெரும் வருமானத்தைப் பெற்றுத்தரும் தொழிலாகும். தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (Tamilnadu Veterinary And Animal Sciences University) “இறைச்சி விஞ்ஞானம்” (Meat Science) சம்பந்தமாக தனியான துறையே (Department of Livestock Products Technology – Meat Science) வைத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இத்துறையில், “கசாப்புக்கள பழக்கங்கள் மற்றும் விலங்குப் பொருட்கள் தொழில்நுட்பம்” (LPT 312 Abattoir Practices and Animal Products Technology) என்றும் “இறைச்சி விஞ்ஞானம் மற்றும் விலங்கு துணைப்பொருட்கள் தொழில்நுட்பம்” (LPT 321 Meat Science Animal By-products Techonology) என்றும் பாடப்பிரிவுகள் இருக்கின்றன.

 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 கால்நடைக் கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஒன்று கோழிப்பண்ணைகள் வளர்ச்சி மற்றும் மேலாண்மையையும், மற்றொன்று உணவு மற்றும் பால்வள வளர்ச்சி மற்றும் மேலாண்மையையும் சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் ஆகும். ஆகவே, விலங்கு மருத்துவத்திற்கு 5 கல்லூரிகளே இருக்கின்றன. ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கால்நடைத்துறைகளும் இருக்கின்றன.

 

தமிழக அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் (Animal Husbandry, Dairy and Fisheries Department) கீழ் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவை (Tamil Nadu State Veterinary Council) வருகின்றது. இந்தப் பேரவையில் மொத்தம் 5351 கால்நடை மருத்துவர்கள் (ஆகஸ்டு 2013 கணக்கு) பதிவு செய்துள்ளார்கள். தமிழ்நாடு வனத்துறையும், தமிழ்நாடு கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையும் இவர்களில் எத்தனை பேரை பணியில் வைத்துக்கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

 

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கின்றது என்றால், கால்நடைக் கல்லூரிகளில் பட்டப்படிப்பும், பட்ட மேல்படிப்பும் முடித்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள், அரசு வேலைகளில் நல்ல சம்பளம் கிட்டுவதால் அரசுப் பணிகளில் தான் சேர்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பால்வளத்துறை (Dairy Development), கோழிப்பண்ணை வளர்ச்சி (Poultry Development) இறைச்சித்தொழில் (Meat Industry) ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். அரசுத்துறைகளில் வேலை கிடைக்காதவர்கள் தனியார் துறைக்குச் சென்று விடுகிறார்கள்; அல்லது சொந்தமாக மருந்தகம் நடத்துகிறார்கள்.

 

நம்முடைய எளிமையான புரிதலுக்கு, விலங்கு மருத்துவத்தை (Veterinary Science) மூன்று விதமாகப் பிரித்துக்கொள்ளலாம். சிறிய பிராணிகள் (நாய், பூனை, கோழி போன்றவை), பெரிய பிராணிகள் (கால்நடைகள், குதிரைகள் போன்றவை), வனவுயிரினங்கள் (யானை, சிங்கம், புலி போன்ற காட்டுவாழ் விலங்குகள்) ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டால், வனவுயிரினங்கள் குறித்தான அறிவுத்திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். தமிழ்நாடு வனத்துறையில் ஐந்து மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மையே இதற்குச் சான்று. இந்த ஐந்து மருத்துவர்களில், மூவர் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணி புரிகிறார்கள். மீதமிருக்கும் இருவர் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற வனவுயிரின காப்பிடங்கள் மற்றும் புகலிடங்களுக்குச் செல்கிறார்கள்.

 

இந்நிலையில், கோவில்களிலும் தனியார் வசமும் இருக்கும் யானைகள் நோய்வாய்ப்பட்டாலோ, உடல்நலன் குன்றினாலோ, அவைகளுக்குத் தக்க நேரத்தில் கிடைக்க வேண்டிய முறையான சிகிச்சை எப்படிக் கிடைக்கும்?  அவசரத்திற்கு, கால்நடைத்துறை மருத்துவர்களை அழைத்து வந்தாலும், அவர்களுக்கு வன உயிரினங்களுக்கு, குறிப்பாக யானைகளுக்கு, அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் பற்றிய அறிவுத்திறனும் அனுபவமும் இல்லாத காரணத்தால், முறையான சிகிச்சை அந்த யானைகளுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக, நோய் குணமாவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. பெரும்பாலும், நோய் குணமாகாமல் யானைகள் இறந்துபோகின்றன. அப்படியே குணமானாலும், அதன் பிறகு அவை பலவீனமாகி மெதுவாக மரணத்தை நோக்கிச் செல்கின்றன.

 

Srirangam Private Elephant Faseela

Treatment toelephant-2

Treatment toelephant-1

Maduravalli-5

Ammu - Sick with wounds

________ - 4

________ - 3

________ - 2

________ - 1

Samayapuram Private Elephant-1

Samayapuram Private Elephant-5

Srirangam Andal-1

Srirangam Andal-3

Srirangam Andal-5

Srirangam Andal-6

Koodal Azhagar Maduravalli-2

Samayapuram - Mariappan-1

(தொடரும்)

Series Navigationசீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.ஆத்மாவின் கடமை