யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10

Spread the love

பி.ஆர்.ஹரன்

 

WRRC அமைப்பும் மற்ற அமைப்புகளும் தொடர்ந்துள்ள (Writ Petition(s)(Civil) No(s). 743/2014) வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் போதாமை காரணமாக அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம் 20-ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

WRRC / CUPA

 

கட்டுரையைத் தொடர்வதற்கு முன்பு WRRC அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வமைப்பு வனவுயிரினங்களின் பாதுகாப்புக்காகப் போராடி வரும் அமைப்பாகும். இந்த அமைப்பு 1999-ஆம் வருடம் ஜூலை மாதம் பொது நல அறக்கட்டளையாக (Public Charitable Trust) பதிவு செய்யப்பட்டது. Miss Crystal Rogers என்கிற ஆங்கிலேயப் பெண்மணியால் 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Compassion Unlimited Plus Action (CUPA) என்கிற பிராணிகள் நல அமைப்பின் அறங்காவலர்களால் வனவுயிரினங்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் WRRC.

( http://www.wrrcbangalore.org/ )

suparna-bakshi-ganguly-getting-nari-shakti-puraskar-award-from-president-pranab-mukherjee

Crystal Rogers 1906-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். சிறு வயது முதலே பிராணிகளின்பால் அன்பு செலுத்தியவர். 1959-ஆம் வருடம் இங்கிலாந்திலிருந்து நியூஜிலாந்து செல்லும் வழியில் இந்தியாவில் இறங்கியவர், இந்தியாவில் பிராணிகள் படும் துன்பத்தைக் கண்டு மனமிறங்கி அவைகளின் நலனுக்காக இந்தியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்தார். தில்லியில் தங்கி “The Animals Friend” என்கிற அமைப்பை ஆரம்பித்தார். பின்னர் 1978-ல் ஜெய்பூர் சென்று அங்கே “Help in Suffering” என்கிற பிராணிகள் நல அமைப்பை ஆரம்பித்தார். இந்திய அரசு இவருக்கு “பிராணி மித்ரா” விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி, SEBI அமைப்பின் முன்னாள் தலைவர் டி.ஆர்.மேத்தா, ஹைதராபாத் பிளூ கிராஸ் அமைப்பைத் தொடங்கிய அமலா அக்கினேனி ஆகியோர் இவரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டவர்கள். 1991-ஆம் ஆண்டு தன்னுடைய 85-வது வயதில் CUPA அமைப்பைத் தொடங்கிய கிரிஸ்டல் ரோஜர்ஸ், 1996 ஆகஸ்டு 30 அன்று காலமானார்.

(http://cupa.wikidot.com/about-crystal-rogers )

 

CUPA அமைப்பின் குடும்பத்தில் Crystal Rogers Animal Welfare Trust என்கிற அமைப்பும் உள்ளது. ரோஸ்மேரி பூல் (Mrs.Rosemary Frances Poole) என்பவர் இந்த அமைப்பை இங்கிலாந்து நாட்டு வின்செஸ்டர் மாகாணத்தில் நடத்தி வருகிறார். இதே அமைப்பின் மறுபெயர் CUPA-UK என்பதாகும் (http://opencharities.org/charities/1083053 )

 

திருமதி சுபர்னா பக்‌ஷி கங்கூலி என்பவரு ம் CUPA அமைப்பின் இணை அறங்காவலர் ஆவார். இவரே WRRC அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவரைப்போலவே மேலும் சிலர் இரண்டு அமைப்புகளின் நிர்வாகக்குழுவிலும் உள்ளனர். அமெரிக்காவிலும் ஒரு கிளை வைத்துள்ளது. இதை டாக்டர் சுதேஷ்னா பக்‌ஷி லாஹிரி நிர்வகித்து வருகிறார். இவை எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட, ஒரே குழுமத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கிவரும் அமைப்புகள் தான். (http://cupabangalore.org/about-cupa/ )

 

சுபர்னா பக்‌ஷி கங்கூலி, ரியா கோஷ் என்கிற ஆய்வாளரைக் கொண்டு “சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கடவுள்கள்” (Gods in Chains) என்கிற புத்தகத்தை எழுதச் செய்து, அதை 2005-அம் ஆண்டு வெளியிட்டார். இந்தப் புத்தகத்திற்கு PETA அமைப்பு “Proggy Award” என்கிற விருதை அளித்து கௌரவித்துள்ளது.

 

இந்திய அரசு “பெண்கள் முன்னேற்றத்திற்காகத் தலைசிறந்த சேவை” செய்ததற்காக சுபர்னா கங்கூலிக்கு “நாரி ஷக்தி புரஸ்கார்” (Nari Shakti Puraskar) விருதை அளித்து கௌரவித்துள்ளது. மார்ச்சு 8, 2016 அன்று ராஷ்ட்ரபதி பவனில் நிகழ்ந்த சர்வதேச மகளிர் தின விழாவில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுபர்னா கங்கூலிக்கு இவ்விருதை அளித்தார்.

 

நீதிமன்ற வழக்குகளும் நிதித் திரட்டல்களும்

 

CUPA மற்றும் WRRC அமைப்புகளின் சார்பாக சுபர்னா கங்கூலி தன்னுடைய சகாக்களுடன் தொடர்ந்து பிராணிகள் மற்றும் வனவிலங்குகளின் நலனுக்காகப் போராடி வருகிறார். WRRC தொடங்கப்பட்ட பிறகு பல நீதிமன்றங்களில் பல வழக்குகள் யானைகள் நலன் சார்பாக இந்த அமைப்பு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளது.

 

கபிலா என்கிற யானைக்கன்று கர்நாடகத்திலிருந்து புதுவை சனீஸ்வரர் கோவிலுக்கு மாற்றப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து அந்த உத்தரவை கர்நாடக அரசு வாபஸ் பெறுமாறு செய்தது.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னெர்கட்டா தேசியப் பூங்காவை ஒட்டிப்போகும் யானைப் பாதைக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், அம்மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை அறிவியல் நகரத் திட்டத்திற்கு அளித்தபோது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் நியமித்த மத்திய அதிகாரக் குழுவிடம் விஷயத்தை எடுத்துச் சென்று அதைத் தடுத்தது.

 

முதுமலைக்கும் பந்திபூர் வனவுயிரினப் பாதுகாப்புக் காடுகளுக்கும் இடையே உள்ள குறுகிய யானைப்பாதையில் ஒரு உல்லாசப் பூங்கா அமைக்க நிலம் அளிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது. ஆனால் அவ்வழக்கில் தோல்வி அடைந்தது.

 

கர்நாடகத்தில் மைசூர் தசரா கொண்டாட்டத்தின் போது, விமானப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது திருவிழாவில் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பதால், அதற்கு மற்ற சில அமைப்புகளுடன் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு இறுதியில் விமானப்படைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும் யோசனை கைவிடப்பட்டது.

 

இவை தவிர பல்வேறு வனவுயிரினங்களின் நன்மைக்காகப் பல விஷயங்கள் பற்றி பொது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது WRRC.

 

யானை வன உயிரினம் என்பதால் அது இருக்க வேண்டிய இடம் காடுகள் தான் என்கிற உறுதியான கருத்தைக்கொண்ட அமைப்பாதலால், சிறைப்படுத்தப்பட்ட யானைகளும் அவைகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் போராடி வருகிறது. அதே நோக்கத்துடன் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.

 

 

எந்த அரசு சாரா அமைப்புமே, தான் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அதற்காக நிதி திரட்டத்தான் வேண்டியுள்ளது. அவ்வாறே WRRC அமைப்பும் தன்னுடைய சேவைக்காகப் பலவிதங்களில் நிதி திரட்டி வருகின்றது. WRRC, CUPA இரு அமைப்புகளுக்கும் முகநூல் பக்கங்கள் இருக்கின்றன. அவை தொடர்ந்து தினமும் அன்றாடத் தகவல்களுடன் புதுப்பிக்கப்படுகின்றன.

 

WRRC அமைப்பு அமெரிக்காவில் உள்ள Help Animals India என்கிற அமைப்பின் வழியாகவும் நிதியைத் திரட்டுகிறது (http://www.wrrcbangalore.org/index.php/donate-2/ ). ஆனால் அந்த நிதி, நேராக WRRC-க்கு வருவதில்லை. CUPA அமைப்புக்குத்தான் வருகிறது. (https://helpanimalsindia.org/recipients.html ) CUPA அமைப்புக்கு வரும் நிதி WRRC அமைப்புக்கு மாற்றப்படுகிறதா என்பதை உள்துறை அமைச்சகத்து அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்.

 

WRRC/CUPA அமைப்புகளின் நிறுவனர் சுபர்னா பக்‌ஷி கங்கூலியும், Help Animals India அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெறும் மற்றொரு அமைப்பான PFA (People For Animals) அமைப்பின் தலைவரும் மத்திய அமைச்சருமான திருமதி மேனகா காந்தியும் Help Animals India அமைப்பின் ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள்.

( https://helpanimalsindia.org/about.html ).

maneka-gandhi-and-suparna-bakshi-ganguly

 

 

இரண்டு அமைப்புகளும் FCRA (Foreign Contribution Regulations Act) சட்டத்தின்படி உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன; CUPA அமைப்பின் பதிவு எண்: 094420702R. WRRC அமைப்பின் பதிவு எண்: 094421012R. ஆனால் கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து இரு அமைப்புகளும் FCRA-Annual Returns சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை; உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்கள்படி, இவ்விரு அமைப்புகளும் வெளிநாட்டு நிதிவரவுக்கான Annual Returns அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை; என்று நிகில் நாராயணன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

( https://twitter.com/nikhilnarayanan/status/591849698148814849/photo/1 ).

 

CUPA அமைப்பு 2012-13-ஆம் ஆண்டு மட்டும் ரூ.8,72,337/- பணம் வந்துள்ளதாக Returns சமர்ப்பித்துள்ளது. (https://fcraonline.nic.in/fc3_amount.aspx – 275          094420702              Compassion Unlimited Plus Action 257, !st Cross HAL II Stage, Indira Nagar, Bangalore,Karnataka-560038 – 872337.00)

 

 

WRRC அமைப்பு தனக்கு 2009-ஆம் ஆண்டு CUPA-USA கிளையிலிருந்து ரூ.2,59,429/- வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 1, 2009 அன்று ரூ.29,429/- செப்டம்பர் 17-ம் தேதி ரூ.2,30,000/- வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

( https://twitter.com/nikhilnarayanan/status/591849698148814849/photo/1 )

wrrc-foreign-funds-1

அதே போல 5.09.2008 அன்று இங்கிலாந்தைச் சேர்ந்த Crystal Rogers Animal Welfare Trust ரூ.1,55,800/- அனுப்பியுள்ளது. “மற்றவர்கள்” (Others) என்கிற பெயரில் ஜெர்மனியிலிருந்து 63,836 ரூபாயும், “மற்றவர்கள்” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 84,989 ரூபாயும் 31 மார்ச்சு 2009 அன்று வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.பிறகு 2010-ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு நிதிவருவாய்க்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்காததால், எவ்வளவு வந்துள்ளது என்பது தெரியவில்லை. அமைப்பின் இணையதளத்திலும் நிதி சம்பந்தமான எந்தத் தகவலும் இல்லை. மேற்கண்ட நிதி எதற்காகக் கொடுக்கப்பட்டது என்கிற இடத்தில் “Activities other than those mentioned above” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (https://twitter.com/nikhilnarayanan/status/591849698148814849/photo/1 )

wrrc-foreign-funds-2

மேலும், 30.03.2008 அன்று Catholic Relief Services (CRS), Baltimore (USA) என்கிற அமெரிக்க அமைப்பு இங்கிலாந்திலிருந்து ரூ.7,26,449/- அனுப்பியுள்ளது. இந்தப் பணமானது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களுக்காக அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலிருந்து ஸெஸிலா டையெட்ரிச் (Cecila Diedrich) என்பவர் 30.03.2008 அன்று மனநலம் குன்றிய குழந்தைகளின் கல்விக்காக என்று ரூ.2,05,350/- அனுப்பியுள்ளார். அதே காரணத்துக்காக அதே தேதியில் இந்தியாவைச் சேர்ந்த “மற்றவர்” 3,569 ரூபாய் அனுப்பியுள்ளார். (https://twitter.com/nikhilnarayanan/status/591849698148814849/photo/1 ).

wrrc-foreign-funds-3

சுதந்திர தின / குடியரசு தின விழாக்கள், மனநலம் குன்றிய குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கும் வன உயிரினங்களின் நலனுக்கும் என்ன சம்பந்தம் என்பது WRRC அமைப்பைக் கேட்டால்தான் தெரியும்.

 

ஆனால் இவ்வமைப்பு, 2009-10 ஆம் ஆண்டிலிருந்து 2013-14 ஆண்டு வரை, வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையை, தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மொத்த வரவு-செலவு கணக்கு (Income – Expenditure Account) ஒரு பக்கத்திலும், குறிப்பிட்ட ஆண்டின் கணக்குப் பட்டியல் (Balance Sheet) ஒரு பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. ( http://www.wrrcbangalore.org/index.php/about-us/ ).

 

WRRC அமைப்பு நிதி திரட்டும் நோக்கத்துடன், பெங்களூரு நகரில் உள்ள பொது மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், நன்கொடை வேண்டி போஸ்டர்கள் ஒட்டி வைத்துள்ளது. அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்களில் கோவில்களைச் சித்திரவதைக் கூடங்களாகக் குறிப்பிட்டு, கோவில்களுக்கு நன்கொடை அளிப்பதையும் தவிர்க்கச் சொல்கிறது. உதாரணத்திற்கு, லக்ஷ்மி என்கிற தனியார்வசம் உள்ள யானையை அவரிடமிருந்து மீட்பதற்கும், அதற்கு மருத்துவ வசதி அளிப்பதற்கும், கோவில்களைக் குறை கூறி போஸ்டர் அடித்துள்ளது. அதாவது, அந்தப் போஸ்டரில், “You have donated to temples, where she is beaten, chained and isolated; Donate now, so that, the same elephant can live with freedom, love and dignity; The difference is You!” என்று அச்சடித்த போஸ்டர்களை பெங்களூருவில் உள்ள பல இடங்களில் ஒட்டிவைத்துள்ளார்கள்.

 

எழுப்பப்படும் சந்தேகங்கள்

 

ஆலயங்களின் ஆன்மிகப் பாரம்பரியமும், கோவில்களில் யானைகள் பயன்படுத்தப்படுவதும் தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள், கோவில் கலாச்சாரத்துக்கு எதிராக அன்னிய சக்திகள் பிராணிகள் நலன் என்கிற பெயரில் இயங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் மேற்கண்ட அமைப்புகளும் செயல்படுகின்றனவோ என்கிற சந்தேகம் நமக்கும் ஏற்படுகிறது.

 

கோவில் யானைகளின் நலனுக்குப் போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் மிகவும் கருணை மிகுந்த சேவையாகும் அது. ஆனால் அதற்காக ஹிந்துமதப் பண்பாட்டையோ, ஆன்மிகப் பாரம்பரியத்தையோ தாக்குவது என்பதை நியாயமான சிந்தனை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட அமைப்புகள் அதைத்தான் வரிந்துகட்டிக்கொண்டு செய்கின்றன என்பதைத் தெளிவாகவே பார்த்தோம்.

 

இங்கிலாந்தில் உள்ள World Society of Protection of Animals (WSPA) என்கிற அமைப்புதான் இந்தியாவில் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீது தன் பார்வையை செலுத்தியது. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள WRRC அமைப்புடன் தொடர்பு கொண்டது. இதற்கு Crystal Rogers Animal Welfare Trust (CRAWT) மற்றும் CUPA-UK ஆகிய அமைப்புகளும் உதவியிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஏனென்றால், WRRC அமைப்பும் CUPA அமைப்பும் CRAWT அமைப்பும் ஒரே குழுமம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

 

ஆகவே WSPA இந்தத் திட்டத்தைத் தொடங்கியதும் WRRC அமைப்பின் நிறுவனர் சுபர்னா கங்கூலி, ரியா கோஷ் என்பவரை வைத்து 2004-ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பற்றிய பல தகவல்களைச் சேகரித்து, அவரைக் கொண்டே Gods in Chains புத்தகத்தை எழுத வைக்கிறார். அந்தப் புத்தகமும் 2005-ஆம் ஆண்டு வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்காகப் போராட்டம் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு போடுவது, பொது மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தன WRRC மற்றும் CUPA அமைப்புகள்.

 

இவ்வமைப்புகள் AWBI என்கிற இந்திய விலங்குகள் நலவாரியத்துடன் தொடர்புக்கு வருகின்றன. AWBI அமைப்பும் இவர்களுக்கு உதவுகின்றது. இதனிடையே மேற்கண்டவாறு வெளிநாடுகளில் இருந்து நிதியும் வரத்தொடங்குகிறது. கோவில் யானைகளின் நலன் என்கிற பெயரில், ஹிந்து ஆன்மிகப் பாரம்பரியத்தின் மீது இவர்கள் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் Catholic Relief Services (CRS) போன்ற கிறிஸ்தவ அமைப்புகளின் நிதியுதவியும் உள்ளது என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள்.

 

இடையில் Save The Asian Elephants (STAE) அமைப்பின் நிறுவனர் டன்கன் மெக்னாய்ர் இவ்விஷயம் தொடர்பாக இந்தியாவிற்கு வருகிறார். இவருடைய STAE அமைப்புக்கும் WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. இவர் இந்தியா வரும்போது லிஸ் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேயப் பத்திரிகையாளரையும் அழைத்து வருகிறார்.

 

இதனிடையே கனடா நாட்டிலிருந்து தன்னுடைய தந்தையாரின் நினைவு தினத்தை அனுசரிக்க வந்த சங்கீதா ஐயர் என்கிற பத்திரிகையாளரும் இதே விஷயத்தைக் கையில் எடுக்கிறார். உடனேயே, ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிடுகிறார். அவர் ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் தான் டன்கன் மெக்னாய்ரும் லிஸ் ஜோன்ஸும் வருகின்றனர். WRRC/CUPA மற்றும் AWBI அமைப்புகளுடன் PETA அமைப்பும் எற்கனவே இணைந்துள்ளது. இவர்களுக்கு உதவியாகக் கேரளத்தை மையமாகக் கொண்டு செயல்படும் Heritage Animal Task Force என்கிற அமைப்பும் செயல்படுகிறது.

 

லிஸ் ஜோன்ஸின் கற்பனையும், பொய்யும், பாதி உண்மைகளும் கலந்துள்ள கட்டுரை லண்டனில் வெளியாகும் “தி மெயில்” (The Mail) பத்திரிகையில் பிரசுரம் ஆகிறது. அதே நேரத்தில், ஆவணப்படத்தை முடித்த சங்கீதா ஐயர் அதை வெளிநாடுகளில் வெளியிட்டுப் பல விருதுகளையும் பெறுகிறார். அதே நேரத்தில் அவருடைய பேட்டியும், வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் வெளிவருகின்றது. லிஸ் ஜோன்ஸின் கட்டுரையையும், சங்கீதா ஐயரின் ஆவணப்படத்தையும் மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகைகளும் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடுகின்றன. WRRC/CUPA அமைப்புகளின் நிறுவனர் சுபர்னா கங்கூலியின் பேட்டிகளும் வெளியாகின்றன.

gods-in-chains-book

கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மநிலங்களின் கோவில் யானைகள் பற்றிய பிரச்சனைகள் நீதிமன்றங்களில் வழக்காடப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தில் கோவில்களில் இருந்து யானைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வழக்கு பதிவு செய்யப்படுகின்றது.

 

ஆவணப்படம், கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், வழக்குகள், சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் என்று ஒரு பெரும் பரபரப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அமைப்புகளில் AWBI அமைப்பு மட்டுமே இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்திய அமைப்பு. அரசியல் சாஸனப்படி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றவை எல்லாமே அன்னிய சக்திகளின் பின்னணியில், அன்னிய நிதியுதவியில் செயல்படுபவை. கிறிஸ்தவ பின்னணியும் உள்ளது. ஆகவே தான் அவைகளின் நோக்கம் ஹிந்து கலாச்சாரத்துக்கும், ஆன்மிகப் பாரம்பரியத்துக்கும் எதிரானது என்கிற சந்தேகம் ஆன்மிக ஆர்வலர்களுக்கு எழுந்துள்ளது.

 

ஆன்மிகப் பாரம்பரிய ஆர்வலர்களின் சந்தேகங்களை நீக்கித் தெளிவு படுத்த வேண்டிய கடமை, சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்காகப் போராடும் இவ்வமைப்புகளுக்கு உண்டு.

 

கோவில்களில் யானைகள் சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்கள் பற்றியும் ஹிந்துப் பாரம்பரியம் பற்றியும் வரும் பகுதிகளில் பார்ப்போம்.

 

(தொடரும்)          

 

 

Series Navigationகதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2