யார் பொறுப்பாளி? யாரது நாய்?

Spread the love

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள் வீட்டினுள்ளே வந்துவிட்டன. தற்பொழுது படுக்கை அறைவரையும் செல்கின்றன. எங்கள் வீட்டில் படுக்கையின் அருகே எங்களது சிண்டி நாய் படுத்து குறட்டை விட்டு தூங்கும். ஏதாவது கனவு கண்டால் எங்களை நித்திரையில் இருந்து எழுப்பும். தனக்கு உடல் உபாதை என்றால் நடு இரவிலும் வெளியே கொண்டு செல்லும்படி கேட்டபடி நிற்கும். காலை ஆறுமணிக்கு நடப்பதற்குத் தயாராக தனது ஈரமூக்கையும் முன்கால்களையும் வைத்து மனைவியை எழுப்பும். மாலையில் நடப்பதற்காக என்னைச் சுற்றி வரும்.

இப்படியாக செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் இணைப்பு செல்லப்பிராணிகளை வளர்க்காதவர்களுக்கு புரியாது. வீட்டில் நடக்கும் கோப தாபங்கள், விருப்பு வெறுப்புகளில் அவை பங்கேற்கின்றன். பல இடங்களில் சமாதானத் தூதுவராக எங்களிடம் தொழில்புரிகின்றன.

மகிழ்ச்சியான குடும்பத்தில் செல்லப்பிராணிகள் தான் வாழும் இடத்திலிருக்கும் மனிதர்களின் சந்தோசத்தைக் கூட்டுகின்றன. பிரச்சினைகள் நிறைந்த குடும்பங்களில் அவை பிரச்சினைகளை மேலும் வளர்த்து நெருக்கடிகளைத் தருகின்றன.

எனது வைத்தியசாலையில் மதிய நேரத்தில் ஒரு நாள் அவசரமாக கதவைத் திறந்தபடி உள்ளே வந்தவர்களை ஏறெடுத்து பார்த்தேன். முதலாவதாக எனது கண்ணுக்குத் தெரிந்த அந்தக் காட்சி இதுவரையும் நான் பார்க்காதது.
சந்தன நிறத்தில் இளம் லாபிறடோர் தளர்ந்த நடையுடன் உள்ளே வந்தது. அதனது உடலின் முன்பகுதி சிவப்பு இரத்தம், சேறாக குழைத்து பூசப்பட்டிருந்தது. அதனால் அதன் உரோமங்கள் ஜெல் போட்டதுபோல் இருந்தது. உடல் வலியால் தலையை கீழே போட்டபடி வந்தது. முன்னங்கால்களில் பல காயங்கள் கத்தியால் குத்தியதுபோல் இருந்தன. அந்த நாய் வந்த பாதையெங்கும் வடிந்த இரத்தத்தால் அதனது சுவடுகள் பதிந்திருந்தது. காதுகளிலும், முகத்திலும் இரத்தக் காயங்கள் தெரியாவிட்டாலும் வழிந்த குருதி கோடுகளாகத் தெரிந்தன.
அந்த நாயைத் தொடர்ந்து வந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். அவரது முகத்தில் இருந்தும் அவர் என்னை ‘டாக்டர’ என விளித்தது மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் புரிந்தது.

உள்ளே வந்தவரை வரவேற்று ‘என்ன நடந்தது?’ எனக்கேட்டேன்.

‘மற்றைய நாய் ஒன்று பெல்லோவை கடித்துவிட்டது’

‘யாரது நாய்?’;

’எனது மகனின் நாய்’

‘அது என்ன சாதிநாய்’

’பிற் புல் ரெரியர’

’பிற் புல் நாயை வளர்ப்பதற்கு எதிராக சட்டமுள்ளதே…! இந்த நாய் யாருடையது?’

‘இது எனது மகளினது.’

‘உள்ளே வாருங்கள்’ என அழைத்து நாயைப் பரிசோதித்தேன்.

‘ உடலெங்கும் உறைந்திருக்கும் இரத்தக்கறைகளை கழுவவேண்டும். அதன்பின்புதான் காயங்கள் எவ்வளவு ஆழமானது என்பதைச் சொல்லமுடியும். முதலில் உங்கள் நாயை குளிக்கப் பண்ணுவோம்.’

எனது வைத்தியசாலையின் பின்பகுதியில் அமைந்த நீர்த்தொட்டியில் நாயை வைத்து இருவருமாக இரத்தக்கறைகளைக் கழுவினோம்.

நான் நீர்க் குழாயை பிடிக்க, அவர் கழுவியபடி, ‘எங்களது வீட்டில் ஒரு சண்டை. இன்றிரவு இதைவிட பயங்கரமாக நடக்கும்’ என்றார்

நான் திடுக்கிட்டு, ‘ஏன்’

‘மகனும் மகளும் வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள்”

‘இப்படியான காயம் உடலெங்கும் வராமல் இருந்தால் நல்லது’ எனச்சொல்லிவிட்டு நாயை தண்ணீர் தொட்டியில் குளிக்க வைத்து விட்டு எனது தொலைபேசியில் வந்த அழைப்பை எடுத்தேன். அந்த மனிதர் நாயின் உடலைத் துடைத்தார்.

வீடுகளில் உள்ள நிலைமைகளை அறிவதற்கு அவர்கள் வீட்டு செல்லப்பிராணிகள் போதும். உடல் வெப்பத்தை அறிந்துகொள்ளும் தேமாமீட்டர் போன்று குடும்பங்களது நிலைமையைக் காட்டும்.

மீண்டும் பெல்லா என்ற அந்த நாயை பரிசோதித்துவிட்டு, ‘பெரிய காயங்கள் இல்லை. ஆனால் இரத்தகுளாய்களில் கடிக்கப்பட்டதால் இரத்தம் அதிகம் வழிந்துள்ளது. மேலும் நொண்டும் காலை எகஸ்ரே எடுக்கவேண்டும்” என்றேன்

அப்பொழுது புயல்போல் இருபத்தைந்து மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் உள்ளே வந்தாள். அவளது கழுத்தில் இருந்த பட்டியில் இருந்து வைத்தியசாலையில் வேலை செய்பவளாகத் தெரிந்தது.

‘எப்படி பெல்லா?’ என்றாள்.

‘ பெல்லா அதிஷ்டமானது கடி வயிற்றிலோ தொண்டையிலோ இல்லை. எதற்கும் எகஸ்ரே எடுத்தபின்பு என்னசெய்வது எனச் சொல்கிறேன்’

‘ டாட் இது முதல் தடவையல்ல… இதற்கு முன்பும் அந்த நாய்,பெல்லாவை கடித்தது. நீங்கள் இதற்கு ஒரு முடிவுகாண வேண்டும். அவன் சோம்பேறிப்பயல். தன்னையே பார்த்துக் கொள்ளாதவனுக்கு நாய் எதற்கு…? அந்த நாயை அவன் பயிற்சிக்கு கொண்டு போனதில்லை. கவுன்சிலில் பதிந்ததில்லை. இதெல்லாம் அவன் பொறுப்பற்றவன் என்பதைத்தான் காட்டுகிறது. இதைப்பற்றி நீங்கள் முடிவுக்கு வராவிடில் நான் பொலிசில் புகாரிடுவேன்’

மகளின் வார்த்தைகள் துப்பாக்கி குண்டுகளாக வந்தபோது தலையை தாழ்த்தியபடி அந்தத் தந்தை நின்றார்

‘பெல்லோவைக் கடித்ததற்குப் பதிலாக வேறுநாயை அது கடித்திருந்தால் உங்கள் மகன்மீது பொலீஸ் கேஸ் வந்திருக்கும்.’ என்றேன்

‘அவன் தனது நாயை பதிவு செய்யவில்லை’ இது மகளின் குரல்.

‘அப்படியென்றால் உங்கள் வீட்டில் கடித்த அந்த நாய் நின்றால் அதற்கு நீங்களே பொறுப்பாளியாகிறீர்கள்’

‘ யேஸ் டாட் உங்களைத்தான் நாயின் பொறுப்பாளியாக நினைப்பார்கள். சுயமாக வேலை செய்யாத ஒருவனுக்கு யார் நாய் வைத்திருக்கும் உரிமையைக் கொடுத்தது?’

‘பெல்லோவைக் கடித்ததற்குப் பதிலாக வேறுநாயை அது கடித்திருந்தால் உங்கள் மகன்மீது பொலீஸ் கேஸ் வந்திருக்கும்.’ என்றேன்

கடைசியில் தந்தை ‘ நான் இதற்கு முடிவு எடுக்கிறேன்’ என்றார்.

ஒரு தந்தையாக அவரது தத்தளிப்பு புரிந்தாலும், நான் ஒரு கேள்வியை இவர்களிடம் கேட்கவேண்டும்.

‘ பெல்லாவின் வைத்திய செலவை யார் ஏற்றுக் கொள்வது உங்கள் மகனா?’

‘ நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார் அந்தத்தந்தை.

இருவரையும் அனுப்பிவிட்டு பெல்லாவை மயக்கி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது நல்லவேளையாக எலும்பு முறிவில்லை. ஆனால் தசைநார்கள் கிழிந்திருந்தது.

கிழிந்த தோலையும் தசைகளையும் தைத்து பண்டேச் போட்டு வலிநிவாரண ஊசியைபோட்டுவிட்டு நான் வீடு சென்றேன்.

அடுத்த நாள் எனது நேர்சிடம் ‘என்ன நடந்தது?’ என வினவினேன்.

‘மகனின் நாயை கருணைக்கொலை செய்ய விருப்பமின்றி நாய்களை வைத்திருக்கும் இடத்தில் வைத்திருக்கிறார்கள.’

‘ இவர்கள் தங்களது பிரச்சினைக்கு தாங்களே முடிவு எடுக்காமல் மற்றவர்களிடம் அதைவிட நினைக்கிறார்கள். உடனே அந்த நாய் காப்பகத்தினரிடம் விடயத்தை சொல்லி விடவும். நாளைக்கு பெல்லா மாதிரி மேலும் நாய்கள் கடிபடும் சந்தர்ப்பத்தை தடுக்கவேண்டும்’

பெரிய விடயங்களில் மட்டுமல்ல சிறிய விடயங்களிலும் நாம் முடிவுகள் எடுக்காதபோது அது மற்றவர்களைத்தான் பாதிக்கிறது. குடும்ப உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Series Navigationகால வழுதொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்