ரகளபுரம்

Spread the love

– சிறகு இரவிச்சந்திரன்

Ragalaipuram Movie Posters (3)துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு!

ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும். ஓரளவுக்கு காமெடிக்கு உத்திரவாதம் தரக்கூடிய கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா போன்றோரை சரியான பாத்திரத்தில் லாக் செய்ததும் இயக்குனரின் புத்திசாலித்தனம். காமெடி அம்மா பாத்திரத்தில் உமா பத்மநாபன் வித்தியாச நடிப்பைத் தந்திருக்கிறார். இயக்குனர் கோட்டை விட்டதெல்லாம் நாயகன் தேர்வில் தான்.

கருணாஸைச் சொல்லிக் குற்றமில்லை. நகைச்சுவை வேடங்கள் எல்லாம் வற்றிப் போனபிறகு, நாயக அவதாரம் என்பது கட்டாயமாகிவிடுகிறது. ஒரு முறை நாய், ஐயம் சாரி! நாயக வேடம் போட்டால் அதே போல் ந(க)டிக்க வேண்டியது தமிழ் சினிமாவின் கட்டளை. மினிமம் கேரண்டி வசூல் என்கிற ரீதியில், படம் எடுத்து, இருப்பதையும் காலி பண்ணி விடுவாரோ என்கிற பயம், சக தமிழனுக்கு வருவது இயல்பு.

அழகான கதை நாயகி கல்யாணியாக அங்கனா பரவாயில்லை. நாயக நிர்பந்தம் காரணமாக, டூயட் பாடும்போதும், ஆடும்போதும், ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் பார்வையாளனுக்கு. அடுத்த கண்ணைத் திறந்தால் கருணாஸ் வந்துப் பயமுறுத்துகிறார்.

அந்த நேரத்து வரவேற்பைப் பொறுத்து உதிர்க்கப்படும் மேடை நாடக துணுக்கு வெடிகள் போல், டப்பிங்கில் ஏகமாகச் சேர்த்து இருக்கிறார்கள். சிலது புன்னகை ரகம். பெரும்பான்மை பிறாண்டல் வகை.

சிரிகாந்த் தேவா, கல்லாவை நிரப்ப, அனைத்து வகை மெட்டுகளையும் கணிப்பொறியில் சேமித்து இருப்பார் போல.. பட்ஜெட்டுக்கு ஏற்றபடி அள்ளி விடுகிறார். துள்ளியெழ ஒன்றுமில்லை.

கருணாஸ¤க்கு ஒரு யோசனை. நல்ல கதைத் தேர்வு என்கிற மந்திரம் தெரிந்து இருக்கிறது உங்களுக்கு.. பேசாமல் அதை, நல்ல நாயகனைக் கொண்டு எடுத்து, துணைப் பாத்திரத்தில் நடித்தால், இன்னும் கொஞ்ச நாட்கள் பேர் நிற்கும். இல்லையேல் வண்டி காயலான்கடை கேஸ்தான்.

0
லொள்ளோவியம்
விலாவினை வருட சிரிப்பு வரும், அல்லங்கில்
பிறாண்ட குருதி பொங்கும்
0

Series Navigationதமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்ப மதியழகன் சிறு கவிதைகள்