ரயிலடிகள்

டிக்கெட் எடுத்திட்டியா

டிபன் எடுத்திட்டியா

தண்ணி எடுத்திட்டியா

தலகாணி எடுத்திட்டியா

பூட்டு செயின் எடுத்திட்டியா

போர்வை எடுத்திட்டியா

போன் எடுத்திட்டியா

ஐபாட் எடுத்திட்டியா…

அலாரம் வெச்சுட்டியா….

கேள்விகளால் நிரம்பி வழிகின்றன

தொலைதூரம் செல்லவிருக்கும்

தொடர்வண்டியின் சன்னலோரங்கள்

பார்த்துப் பத்திரமா போ

யாருகிட்டேயும் எதும் வாங்காதே

மறக்காம போன் பண்ணு

நல்லா சாப்பிடு

ரொம்ப அலையாதே

மனித சமுத்திரத்தின்

காலடியில் நசுங்கும்

நடைமேடை விளிம்புகள்

அக்கறையிலும் அன்பிலும்

மிதக்கின்றன

பிரியும் நேரம் நெருங்க

விடுபடப்போகும் விரல்களினூடே

நிலநடுக்கத்திற்கு நிகராக

நிகழும் நடுக்கத்தை

ஒவ்வொரு சன்னல் கம்பிகளும்

தன்மேல் அப்பிக்கொள்கின்றன…

ஏக்கம் துக்கம் நனைத்த

ஏற்ற இறக்கம் நிறைந்த

வார்த்தைகளை

சுமக்கமுடியாமல் சுமக்கும்

சன்னல் விளிம்புகள்

ஓடும் தடமெங்கும்

உதிர்த்துவிட்டுக் கடக்கின்றன…

அடுத்த நிலையத்தில்

அன்பாய் பற்றும் கைகளிலும்

பாசம் இளகும் விழிகளிலும்

இன்னுமொருமுறை

ஏந்திக்கொள்ளலாமென!

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10தோனி – நாட் அவுட்