ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

                        ஜனநேசன்

கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து பாடி மேடையேற்றியும்  வருகிறார். இன்றைய சிக்கலான வாழ்வியல் நிலையில் தொடர்ந்து கவிஞராக வாழ்ந்து இயங்குதல் அரிது .தூண்டிலைப் போட்டுவிட்டு ஐம்புலன்களின் கவனத்தைக் குவிமையப்படுத்தி தூண்டிலின் அசைவுக்காகக் காத்திருப்பவர் போல் கவிதைக்கான தருணத்திற்காகக் காத்திருப்பவர் ரவிசுப்பிரமணியன். அப்படி நினைவுக்கடலில் மூழ்கி சேகரித்த  முத்துக்களின் கோர்ப்பே “நினைவின் ஆழியில் அலையும்  கயல்கள் “ என்னும் கவிதைத் தொகுப்பு. இது ரவிசுப்பிரமணியனின் ஆறாவது கவிதைத்தொகுப்பு.

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்னும் தலைப்பே கவிதைக்கான  முரணழகோடு அமைந்துள்ளது. கயல்மீன்கள் நன்னீரில் நதியில், வயல்நீரில் வாழ்ந்நது அலையும் இயல்புடையது. ஆழி என்னும் கடல்நீரில் வாழா . நீரின்  இரு எதிர்முனைகளையும் நினைவு என்னும் கடலால் இணைக்கிறார் கவிஞர்.                       இத்தலைப்பு தற்செயல்ஆனதாக இருக்கக் கூடும். இதன்  பின்னணி ருசிகரமானது .ரவிசுப்பிரமணியன் கும்பகோணத்தில் காவிரி நதிதீரத்தில் வயல்சூழ் மருதநிலத்தில் பிறந்து வளர்ந்து முப்பது வயதுகளில் நெய்தல்நிலத்து சென்னை காங்கிரீட் பாலையில் இலக்கியவாழ்வு வேண்டி குடிபுகுந்தவர். வாழ்வு சென்னை   நெய்தல்நிலம் என்றாலும் அவரது ஞாபகசமுத்திரம் குடந்தை மருதநிலத்திலே அலைவுற்றுக் கொண்டிருக்கிறது .ஆகவே நினைவு ஆழியில் அலையும் கயல்களை இந்தக் கவிதைப்பேழையில் உலவவிட்டிருக்கிறார்.கவிதைகளும் இத்தொகுப்பிற்கு சிறப்பு சேர்த்துள்ளன.

அறுபத்தாறு கவிதைகள் கொண்ட  இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீனகவிதைகள் என்றாலும் சங்கஇலக்கியத்தின் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க சிலகூறுகளும் கொண்டுள்ளன. நேர்கூற்றுமுறையும், பலகவிதைகள் சிறுகதையின் கூறுகளும் கொண்டுள்ளன.

இத்தொகுப்பில் ஜானு என்னும் காதலியோடு ஊடாடும் கவிதைகள் பதினைந்துக்கு மேல் உள்ளன. அவை ஊடலின் நிமித்தம் எழும் தாபத்தையும், பிரிவின் நிமித்தம் விளையும் வருத்தத்தையும், கூடலின் விழைவையும் கவித்துவமாய் உணர்த்துபவை.

தொகுப்பில் பல கவிதைகளில்  முக்கியமான கவிதைகளில் ஒன்று: ஒளி(பக்.87.)   இந்த நட்டநடு இரவில்/ உன் அறைக்கதவைத்/  தட்டி எழுப்பி இருக்கக்கூடாதுதான்/ ஆனாலும் வேறுவழியில்லை / உண்மையெனும் / இந்த வட்டவடிவ வெளிச்சத்தை/ உன்  கைகளில் தரவே நான்வந்தேன்/ இப்போதைக்கு / இந்த வெண்ணிறஒளி/ உன்னறையில்/  மிதந்தபடி இருக்கட்டும்/  வருகிறேன்.

இப்படி பலகவிதைகள் உள்ளன. இவை இக்கவிஞருக்கும் இவரின் காதலிக்கும் மட்டும் பொருந்துவதில்லை. புரிதலில் பிணக்கு ஏற்பட்டு பிரிதலில்  உழலும் எவருக்கும் பொருந்தும் பொதுத்தன்மை பூண்டவை. வாசகரின் பங்கேற்பையும் கோருபவை .

இக்கருத்தீடுக்கு சான்றாக, புரிதல்  (பக்81)ல் சில கண்ணிகள்: 

“மௌனத்திலிருப்பது/  எனக்குப் பிரச்சினை இல்லை/ அதிலிருந்து/

நீ பிரித்தெடுத்துப் புரிந்துகொள்ளும் /எதிரிடைகளைப் பற்றித்தான் / குயுக்தி அர்த்தங்களிலிருந்தும்/ கற்பிதங்களிலிருந்தும் முதலில் விடுபடு/ அதன் நிஜமான அர்த்தத் துடிப்புகளை / உற்றுக்கேள்……”

இன்னும் சில கவிதைகள் மகளோடு பேசுபவை. இந்த வகைப்பாட்டில் பாசம் ( பக். 110), சீதனம் ( பக்.125) இதனோடு பேத்தி குறித்த கவிதை : அதுவானதருணம்   (பக்.127.)ம் ரசிக்கத்தக்கது.

இப்படியான. உறவுக் கவிதைகளோடு பெண்களின் மாதவிலக்கு வதைகள் குறித்து : தரிசனக்கணங்கள்   (பக்.51 );விலக்கு (பக். 106  ) கவிதை பெண்கள்பால் அவரது பரிவையும்,  அந்த நாட்களில் அப்பெண்களுக்கு சகபெண்கள் மட்டுமன்றி ஆண்களும் உதவவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. இதுபோலவே திருநங்கைகள் குறித்து கவிஞரின் பார்வையை  : கனம்(பக்.116.) .பதிவிடுகிறார்.

என்னதான் உலகறிந்த படைப்பாளியாக இருந்தாலும் எழுத்தாளன்  தனக்கான வீடு  ஒன்றை வாங்க எதிர்கொள்ளும் பாடுகளை (பக்.118 .) “அவர்கள்  விரும்பியதுதான் நடந்தது  “ கவிதையில் கவிஞர் பதிவுசெய்கிறார். டெல்டாநிலத்தில் புயலின் கொடூரத்தாக்குதலையும் பதிவுசெய்கிறார்.  கோவில்கள் சூழ்ந்த. கும்பகோணம் நகரில் வாழ்ந்தவரல்லவா கோவில் பிரகாரங்கள் ,ஒளிரும் சுடர்கள் குறித்த பதிவுகளும்  உண்டு. இசைஞர் என்பதால் ராகங்களும்,  சுருதிகளும் தொகுப்பில் விரவி இருக்கின்றன. சில சொற்சேர்க்கைகளும், புதுப்புது சொற்றொடர்களும் கவிதைகளுக்கு பலம் சேர்க்கின்றன. ஈர்ப்பைக் கூட்டுகின்றன .உயர்வுநவிற்சி மிகக்குறைவு. இயல்பு நவிறசியே வசிகரிக்கிறது. இதுவும்  சங்கப்பாடல்களின் தொடர்ச்சிதானே.! வாசகர்களின் பங்கேற்பைக் கோருவதால் கவிதை ஆர்வலர்கள்   அவசியம் வாங்கி வாசித்துணரவேண்டிய கவிதைத் தொகுப்பு.

எழுத்துப்பிழைகள் தென்படவில்லை. வாசிக்கத்தக்க எழுத்துரு. கச்சிதமான கட்டமைப்பு .பாராட்டத்தக்க கவிதைத் தொகுப்பு.

“நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்“

ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன்.

பக். 130. விலை :150.  போதிவனம் பதிப்பகம். பேசி :98414 50437.

தொடர்புக்கு:bodhivanam@gmail.com/ravisubramaniyan@gmail.com

 

Series Navigationதக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]திரைகடலோடியும்…