ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

1. அமரத்துவம்

வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள்.
உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து
சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது.
கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச் செய்வதாய்
சொற்களைக் கற்களாக்கிய வன்முறையாளர்கள்
அற்புதத்தை அற்பமாகக் கற்பிக்கும் பிரயத்தனத்தில்
இனியான தலைமுறைகளை முழுக்காட்டவென்றே
நாராசமாய் ஓசையிட்டவாறிருக்கும் கழிவுநீர்த்தொட்டிகளையும் கட்டிமுடித்தாயிற்று.
அழுக்குப்பிசுபிசுப்பான அந்தப் பொதியிலிருந்து இப்பொழுது
எந்த ஒலியும் கேட்கவில்லை
என்றபோதும்
பின்னொரு சமயம் கேட்டுவிடக்கூடாதே யென்பதற்காய்
கையோடு கொண்டுவந்திருந்த குண்டாந்தடியால்
அந்தப் பொதிமீது அடுத்தடுத்து ஓங்கியடிக்கிறார்கள்.
கூடவே கைவசமிருந்த அரிவாளால் ஆழச்சொருகி யிழுக்கிறார்கள்.
அதுவும் போதாமல்
அங்கிருந்து போகும் வழியெல்லாம்
அந்த உன்னதம் அப்படியொன்றும் உத்தமியில்லை என்றும்
ஊர்மேயும் அவிசாரிதான் என்றும்
உரத்த குரலில் அறிவித்துக்கொண்டே சென்றார்கள்.
அழுக்குப் பொதிக்குள்
குற்றுயிரும் குலையுயிருமாய் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் உன்னதம்
இன்னும் இரண்டுமணிநேரங்கள் உயிரோடிருந்தால் அதிகம்
என்றொரு கண்கணக்கோடு அங்கிருந்து அகன்றவர்க
ள றியமாட்டார்கள்
ஆறாக்காயங்களை ஆற்றும் அற்புதச் சிறகுகள்
அந்தப் பொதிக்குள்
ஆயிரமாயிரமாய் முளைத்துக்கொண்டிருப்பதை.

2. உன்னதாற்புதம்!

உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி
அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது
எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.

Series Navigationநெய்தல்-ஞாழற் பத்து