ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. நில் கவனி செல்

இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து
முடிந்தும் போகிறவர்கள்
வீதியோரங்களில் பிறந்து
வீதிவீதியாய் அலைந்து
அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும்
என்னைப் போன்றவர்கள்
ஆயிரமாயிரம் இங்கே.
இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை;
இந்தியர்களல்லவா நாங்கள்?
இன்தமிழர்களல்லவா?
இல்லையெனில் நாங்கள் யார்?
இது பற்றி யோசிக்க
அரசியல்வாதிகளுக்கோ
மனிதநேயவாதிகளுக்கோ
சமூகப்புரட்சியாளர்களுக்கோ
இனவாதப் போராளிகளுக்கோ
இந்திய வெறுப்பாளர்களுக்கோ
இவரொத்த இன்னுமின்னும் பேருக்கோ
ஏன் இன்றுவரை மனமில்லை?
ஒருவேளை எல்லா அரசிலும் நாங்கள்
இருந்தவாறிருப்பதாலா?
சாதி சமய இன நிறங்களைக் கடந்து
நாங்கள் வருந்திக்கொண்டிருப்பதாலா?

  •  
  • அந்நியமாதல்

தலைமுறை தலைமுறையாய் அருகிலிருக்கும்
சக மனிதனையே
அகதியென்று அழைக்கும் அநியாயவாதி யொருவர்
பெரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு
அரண்மனை கட்டித் தந்தாகவேண்டும் என்று
பிடிவாதம் பிடிப்பதோடு
அப்படிக் கேட்பதற்காய் தனக்கு
விருதளிக்கப்படவேண்டும் என்றும்
பரிசளித்தால்தானே அதைப் பெற
மறுக்கவியலும் என்றும்
திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

  •  
  • ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும்

கைபோன போக்கில் சோழிகளை உருட்டி
விழிகளை அகல விரித்து அச்சுறுத்தி
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
தான் சொல்லும் ஆரூடம் பலித்து
தனக்கு அருள்வாக்குச் சித்தர் என்ற பட்டமும்

பிராபல்யமும் கிட்டவேண்டுமென்ற
பெருவிருப்பில் பரிதவித்து
பயணவழியில் வண்டியின் ‘ப்ரேக்’
வேலைசெய்யாமலோ
க்ளட்ச் பழுதடைந்தோ
சக்கரங்களில்
ஒன்றிரண்டு
கழண்டு தனியே உருண்டோடியோ
கோரவிபத்து நிகழவேண்டுமென்ற
பிரார்த்தனையில்
கண்மூடிக் கரங்கூப்பி லயித்திருப்பவர்களுக்குக்
கேட்பதில்லை
குருதி பெருகத் துடித்துக்கொண்டிருப்பவர்களின்
மரணஓலம்.

 

4.நகரும் அம்மியும்
நவீனமல்லாத கவிதையும்


அடிக்க அடிக்க அம்மியும் நகருமென்று
அத்தனை நம்பிக்கையோடு

அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடியடியாக நகரும் அம்மியின் கீழ்
அப்பாவி பூச்சிகள் அரைபடுகின்றன;
அழகான மலர்கள் அரைபடுகின்றன;
அதி கவனமாய் ஒரு சோற்றுப்பருக்கையை
அப்பால் இழுத்துக்கொண்டுபோகும்
இக்கிணியூண்டு எறும்பு அரைபடுகிறது…..

இன்னும் எதையெதையோ அரைத்து நசுக்கி

அச்சுறுத்தி நகர்ந்தவாறிருக்கும் அம்மியின்
பாரமேறிய தரைப்பரப்பில்
அசிங்கமாக குழிகளும் பள்ளங்களும் நிறைகின்றன;
அவற்றின் மீது காலிடறித்
தடுமாறி விழுபவர்கள் அதிகரித்தபடி….

அடித்து அடித்து அம்மியை எங்குதான்
நகரவைக்கப் பார்க்கிறார்கள்:
எதற்குத்தான் நகரவைக்கப் பார்க்கிறார்கள்
என்று புரியாமலும்
புரிந்துகொள்ள விரும்பாமலும்
சிலபலர்
அம்மியை அடிப்பவர்களின்அயராத முயற்சியைப்
பாராட்டுகிறார்கள்…

பிறவேறு சிலபலர் அதையே
ஆயிரம் உள்நோக்கங்களுடன்
சீராட்டுகிறார்கள்.

எத்தனை முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது என்று
எத்தனை முறை சொல்லி யென்ன?

உய்யும் வழி தெரிந்தும் தெரியாமலும்
கையடக்கமாய் சில பொய்களைக்
கற்களாக வீசியெறிபவர்களும்
வண்ணம் பல வடிவம் பல அளவுகளில்
கூர்கற்களைக் கவனமாய்த் திரட்டிப்
பிறர் கையில் திணிப்போர்களுமாய்
அம்மி நகர்ந்துகொண்டிருக்கிறது
இம்மிக்கு மேலான வேகத்தில்…
.
இந்த என் கவிதை நவீனமாகவேண்டாம்;
(இது மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி கிரைண் டர்களின்

காலம் என்பதற்காகச் சொல்லவில்லை).
கவிதையாகாமலும் போகலாம்
(கவிதைக்கோ எனக்கோ அதனால் எந்த
இழப்புமில்லையாம்…);

எனில் –
என் கவிதையின் அம்மியையும்
அதை யார் நகர்த்துகிறார்கள் என்பதையும்
நான் தான் நிர்ணயிக்கவேண்டும்
இந்தக்கவிதையைப் பொறுத்தமட்டில்
என்பதொன்றே நான் விரும்பும்
எளிய சன்மானமாக _

வழியேகும் இந்நாள் இக்கவிதையும்
அரைபட்டுக்கூழாகலாம் அம்மியின் கீழ்.

Series Navigationபெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ?தீர்மானிக்க வேண்டிய நேரம்செல்லம்மாவின் செல்லப்பிள்ளை