‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. மம்முட்டிக்கு வயதாவதில்லை!

மம்முட்டி
மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.

மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.

மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.

மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.

மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.

வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.

மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.

மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.

மம்முட்டிக்கு வயதாவதில்லை.

மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..

 

***

 

  • கவிதையாதல்

ஒரு சொல் என்னைப் பின்தொடர்ந்தவாறே….
அல்லது, நான் அதை விட்டு விலகிச்செல்கிறேனா…?
ஒரே சீரான இடைவெளி பராமரிக்கப்படுகிறது
தண்டவாளங்களிலும்……
’அவ்வுலகில் அரைவட்டங்களும் பொருட்படுத்தப் படும்’

என்று சொல்லிச் சென்ற கவி ராபர்ட் ப்ரவுனிங்கை(என்று ஞாபகம்)

நான் முழுதாகப் படித்தேனில்லை….
என்றாலும், அவருக்கு என் நன்றி உரித்தாகிறது.
இத்தனை வார்த்தைகளை இறைத்த பின்னரும்
என்னைப் பின் தொடரும் அந்தச் சொல்லின்
ஒலி வரி வடிவங்கள்
கனவுங்கற்பனையுமாய்…..
இருந்தபோதும் அந்தகாரத்திலிருந்து அதன் கண்கள்
என் மனதின் முதுகை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன.
சிறு சிறு திருப்பங்களில் அதன் மூச்சுக்காற்றை
என் பின்கழுத்திலும் காதுமடல்களிலும் உணரமுடிகிறது.
சமயங்களில் முதுகைச் சுரீரெனத் துளைத்து
உள்ளிறங்கி இலவம்பஞ்சின் இதமாய் வருடித் தந்து
பிரமிப்பில் நான் திக்குமுக்காடி நிற்கும் நேரத்தில்
சமச்சீராகப் பராமரிக்கப்படும் தொலைவிலிருந்து
Zoom செய்யப்பட்ட தன் விழிகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு
என்னைத் தொடரும் சொல்
வழித்துணையாய்
வாழ்வாய்……

 

***

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 7அப்பாவும் பிள்ளையும்