’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. அண்மையும் சேய்மையும்

 

இடையிடையே கிளைபிரிந்தாலும்

இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே

பாவிக்கப் பழகியிருந்தது

பேதை மனம்.

அதற்கான வழியின் அகலநீளங்களை

அளந்துவிடக்

கைவசம் தயாராக வைத்திருந்தது

எளிய கிலோமீட்டர்களை.

பத்துவருடங்களுக்கு முன்

நற்றவப்பயனாய்

பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச்

சென்றடைந்த இடங்களும்

சந்தித்த சகபயணிகளும்

இன்று

ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய்

எட்டிப்போய்விட

தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும்

ஆட்டோக்கூட்டுக்குள்

பத்திரம் தொலைத்துச் சென்றவாறு

ஆயாசத்தில் அலைக்கழியும்

நேரம்

அறிவுக்குப் புலப்படும்

வயதின் அளக்கமாட்டா

தொலைதூரம்.

 

 

 

  •  

  1. பூமராங்……!

 

சுய லாபத்திற்காய் சுயநலவாதியொருவரை

சக மனிதர்களை ரட்சிக்க வந்தவராய்

சுண்டுவிரலை அல்லது கட்டைவிரலைச்

சரேலென்றறுத்து

பெருகும் செவ்விரத்தத்தால் கையெழுத்திடாத குறையாய்

சொல்லிச்சொல்லிச்சொல்லிக்கொண்டே

யிருப்பவரால்

என்றுமே ஏனோ காண முடிவதில்லை

யவ்வொரு செயலில்

தன் சாயம் வெளுத்து

சுயரூபம் சுருங்கிக்கொண்டே போவதை

Series Navigationகனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.மீள்வதா ? மாள்வதா ?