‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. தவிப்பு

நாற்புறமும் வியூகம் அமைத்துத் தாக்கவரும் வாகனங்களற்ற

தெருவொன்றில்
உறுமியது நாயொன்று பலவீனமாக.
அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள்
வியூகமைத்துத் தாக்கத் தயாராய்…..
அடுத்த சில கணங்களில் நடுவீதியில்
வன்புணர்வுக்காளாக்கப்படும் அந்தப்
பெட்டைநாய்.
எங்கு விரைந்து பதுங்குமோ
எங்கெல்லாம் காயம்பட்டுத் துடிக்குமோ
எனக்குப் பிடிக்கவில்லை என்று அதன் உறுமலில்
தெளிவாகவே புரிந்தாலும்
பொருட்படுத்துவார் யார்?
மனித வாழ்வே இங்கே நாய்ப்பாடாக
பெட்டைநாயின் வலியை சட்டை செய்ய ஏது நேரம்?
கனக்கும் மனதுடன் மேலே நடக்க
தெருவோரம் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்:
இளம்பிள்ளைகள். இரவு நேரம்’ ’பாவம்என்ற வார்த்தைகள்
பாலியல் வன்புணர்வு செய்யும் பொறுக்கிகளுக்கு
வக்காலத்து வாங்குவதாய்
மண்டையில் சூடேற
ஒரு கணம் நின்று திரும்பிப்பார்த்தேன்.
அவர்கள் அந்த நிகழ்வைத்தான் பேசினார்கள் என்று
அத்தனை சரியாக அறிவாயா நீ?’
என்று அறிவு கேட்டு
ஒருமாதிரி நிதானப்படுத்தியதில்
நடையைத் தொடர்ந்தபோது
கால்கள் நடுங்கித் தடுமாறுவதை உணரமுடிந்தது.

  •  

2 கவிரூபம்

ஒரு காலத்தில் கவியென்பவர் நிழற்படங்களுக்கு
அப்பாலானவராக இருந்தார்.
அவர் தன்னை அருவமாகக் கண்டிருந்தார்.
காற்றாக பாவித்திருந்தார்.
கனவாகக் காட்சியளித்தார்.
கல்லுக்குள் தேரையாகத் தன் கவிதை வரிகளுக்குள் ஜீவித்திருந்தார்.
புல்லின் நுனி நீர்த்துளிக்குள் நிறைந்திருந்தார்.
கவியின் வயது காலாதீதமாயிருந்தது….

ஏழையாயிருந்தாலும் எவருக்கும் தலைவணங்கமாட்டார் கவி
என்பது சத்தியவாக்காக இருந்தது.

அசடுகள்தான் என்றாலும் அநியாயக்காரர்களல்ல கவிகள்
என்றே அனைவரும் ஒருமனதாய் எண்ணியிருந் தார்கள்.

அரசியலை விருப்புவெறுப்பற்று கவி அலசும்
அறமிருந்தது.

அன்று பெரும்பாலும் தங்களை
கவிதைக்குள்ளாக வெளிப்படுத்திக்கொண்டார்கள்…..

இன்று
அவர்கள் அரிதாரம் பூசிய நடிப்புக்கலஞர்களாகவும்
அரங்கேற

_ (இதற்குக் காரணம் வளர்ந்துவரும் தொழில்நுட்பமா?
சமூக வலைத்தளங்களா என்ற தீராப் பட்டிமன்றம்
ஒருபுறம் ஜோராக நடந்தவாறிருக்க)_

விறுவிறுவென்று நடந்தேறும் காட்சிகளில்
சமயங்களில்
சுரீரெனக் நீர் குத்திச் சுரந்து வழிகிறது
கவிதைக் கண்களில்.

  •  
  • நாவின் சூடு

தருணமிதில்
மிகச் சரியாகக் குறிபார்த்து
சுருள்வில்லாய்ச் சுண்டியிழுக்கும்
விசையில்
மொழியப்படும்
அன்றி
மௌனமாயிருக்கும்
ஒரு சொல்லின் வலியேகும் திசையில்

உருப்பெறும்
நிலமிசை நரகம்.

  •  
  • மாயவாழ்வு

எத்தனை கவனமாய் ஏந்திச்சென்றபோதும்
கைதவறி விழுந்துவிட்ட
கண்ணாடிக் கோப்பையின்
நொறுங்கல்கள்
தாமாகவே ஒவ்வொன்றாய்
உரிய இடத்தில்
உடைந்த சுவடே தெரியாமல்
பொருந்திக்கொள்ளும்
அதிசயம் நிகழ
குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டாகலாம்;
அன்றிருக்கமாட்டோம் நாம்.

  •  
Series Navigationதலை தெறிக்க ஆடினால், விலை கொடுக்க நேரிடும் !