’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Spread the love

  1. தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம்

அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித்
தோளில் கையிட்டு அரவணைத்து

 புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில்
மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து
அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
அலமலங்க விழிக்கிறான்.
அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும்
இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென

இழுபறியிலிருக்கும்
ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட
இருதரப்பினர்களாக்கி
சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து
அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு
எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள்.
அவர்களிருவரும் இன்று அப்படிச் சிரித்தபடி

யொருவருக்கொருவர் நெருங்கிநின்றிருப்பதை
அன்பின் அடையாளமாய்
சகோதரத்துவத்தின் சிறப்புணர்த்துவதாய்
மனித மாண்பைப் பற்றி மடக் மடக்கென்று நீரருந்தும்
வேகத்தின் பன்மடங்கில்
நிகழ்ச்சித்தயாரிப்பாளர் போற்றிப்புகழ
நீளும் வழிகளெல்லாம் அடைபட்டுப் போய்
நிராயுதபாணியாக நிற்கும்
நிஜத் தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
நாளையேனும் பெறுவாரோ ஞானம்….

  •  
  • இயல்பு

முகபாவங்களை முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்
மொழியும் வார்த்தைகளுக்குள்ளிருந்து

முழுப்பூசணிக்காய்கள்
மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கின்றன
மிகப் பெரிதான ஒரு சிரிப்பால்
அவற்றின் மீது ஒரு திரையைப் போர்த்த
அவர்கள் மும்முரமாக முனைந்துகொண்டிருக்கையிலேயே
அவர்தம் பொய்மையிலிருந்து புதிதாய் முளைக்கும்
சில பூசணிகள் போகப்போக
அவர்களாகவே உருமாறிவிடுகின்றன.

  •  
Series Navigationஅளித்தனம் அபயம்பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.