றெக்கைகள் கிழிந்தவன்

Spread the love

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும்
அடுக்கு மலைத் தொடர்

விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம்

புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும் ’ஒத்தப்’ பனை

புறப்பட்டுச் செல்ல ஐயனாரை ஏற்றிக் கொண்டு எந்தச் சமயத்திலும் கம்பீரமாய்க் காத்திருக்கும் கல் குதிரை

என்றோ தண்ணீர் கரை புரண்டோடிய காலம் எண்ணி எண்ணி மனம் திரைத்து மணல் திரளாகிய வறண்டாறு

நெடுஞ்சாலைச் சந்திப்பில் நின்று கொண்டு கூடும் பாதைகளில் கூடும் ‘மெய்மை’ தேர்வது போல் யோசிக்கும் ஒரு கிழட்டு நாய்

கீதாரி ’பத்திக்’ கொண்டே செல்லும் கிடையில்
நின்று போக முடியாமல் நடந்து கொண்டே ‘ஒன்றுக்குப்’ போகும்
ஒரு குட்டி வெள்ளாடு

எதற்கென்று தெரியவில்லை
சாலையும் சேர்ந்து வேகமாய் ஓட உதவுவது போல் தனித்தோடும் ஓர் இளம் பெண்

முட்செடிகள் கிழித்து
முகத்தலடிக்கும் முகந் தெரியா இரத்தக் காற்று.

காட்சிகளில் ‘றெக்கை’ கட்டிப் பறக்கும்
காணுலகம்.

தலை புதைத்து ’செல்’ பேசியில் உழக்கில் தொலைந்தது போல் தொலைந்திருப்பான் விளையாட்டில் அவன்.

’றெக்கைகள்’ கிழிந்த அவன் உடலைச் சுமக்க முடியாமல் சுமந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பயணிகள் பேருந்து.

கு.அழகர்சாமி

Series Navigationஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.