வட்டத்துக்குள் சதுரம்

Spread the love

சில சதுரங்கள் கூடி
தம்மைக்கொண்டு
ஒரு வட்டத்தை
உருவாக்க முனைந்தன

சில சதுரங்கள்
அதற்கு ஒத்துக்கொண்டன
சில அவற்றை
சற்றுத்தள்ளி நின்று
வேடிக்கை பார்த்தன

ஒரு சதுரம்
நாம் எவ்வளவு தான்
முயன்றாலும்
வட்டத்தை உருவாக்க முடியாது
என வாதிட்டது

அதனை பல சதுரங்கள்
கூடி நையப்புடைத்தன
அந்தச்சதுரம் வளைந்து
நெளிந்து கோணல்மாணலாகியது
அதைப்புறந்தள்ளி விட்டு
மற்ற சதுரங்கள் மீண்டும்
தம் வேலையைத்துவங்கின

எவ்வளவு முயன்றும்
அவை தம்மைக்கொண்டு
ஒரு வட்டத்தை உருவாக்க
இயலவேயில்லை
தமது தோல்வியை
ஒத்துக்கொள்ளவும்
அவை தயாரில்லை.

தம் முனை மழுங்கினால் தான்
வட்டமாக முடியும் என்று
அவற்றுக்கு தெரியவேயில்லை
கடைசி வரை.

– சின்னப்பயல்.

Series Navigationவலி2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7