வந்துவிடு வனிதா.. !

This entry is part 2 of 23 in the series 27 நவம்பர் 2016

 

சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.

 

தெருவில் சிலர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.கோடிவீட்டு கோதண்டம் தன் வீடு நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். சரக் .. சரக் என்று கான்கிரீட் தரையில் உராய்ந்துகொண்டு சென்ற அவருடைய சப்பாத்து அடுத்து வந்த மண் தரையில் அமைதியாக ஊர்ந்து அந்த பச்சை வர்ணம் பூசிய வீட்டு வாசலில் போய் நின்றது. ஒரு காலத்தில்  அது பரந்த விளையாட்டு மைதானமாக இருந்ததும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து மாலை நேரங்களில் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும், நொண்டி, கோக்கோ,சில்லு என  விளையாடியதும் நினைவில் ஆடியது. புலம் பெயர்ந்த உள்ளூர்க்காரர் ஒருவர் ஒரு நாள் திடுமென்று வந்து தான் அந்த மொத்த மைதானத்தையும் வாங்கிவிட்டதாகக் கூறி அடுத்த சில நாட்களிலேயே அங்கு அடுக்கு மாடி குடியிருப்பு வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. பிள்ளைகளின் அந்த மாய உலகம் மறைய ஆரம்பித்தவுடன் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்களின் மொத்த சந்தோசமும் பறிபோனது! அந்த வட்டாரத்திலிருந்த எல்லா பிள்ளைகளும் மாலையானால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் காட்சி மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. தானும் தங்கையும், அண்ணனும் விளையாடிய நினைவுகளும் மெல்ல உலுக்கியது. சாரதி அதிகமாக விளையாட வந்ததில்லை. அவனுக்கு வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவளுடைய அப்பா பிரம்பைத் தூக்கிக்கொண்டு வந்து துரத்தி துரத்தியடிப்பது அநேகமாக அன்றாட வழக்கமாக இருந்தது. ஆனால் எப்போதும் சுமாக்குட்டி அப்பா வருவதை மோப்பம் பிடித்து ஓடிவந்து எச்சரித்துவிடுவாள். இருந்தாலும் அது ஒரு பொற்காலமாகவே இருந்தது. அப்போதெல்லாம் அப்பா அவ்வளவாக மோசமாக இல்லை. அதைவிட அப்போது அம்மாவும் உயிரோடு இருந்தாங்க. இதெல்லாம் நடந்து பல காலம் ஓடிவிட்டது. தான், தங்கை அண்ணன் என எல்லோரும் வளர்ந்தாகிவிட்டது. அம்மாவும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அன்புத் தோழி சாதனாவும் மூன்று நாள் மூளைக் காய்ச்சலில் கண்ணை மூடிவிட்டாள். பலர் வீடு மாறி சென்றுவிட்டார்கள். வெளியூர் வேலைக்குப் போனவர்கள் சிலர். எல்லாமே மாறிவிட்டது. இன்று தனக்கும் அதே நிலை. தானும் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும்.

 

வீடா..  வீடா இது! சற்றே திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தாள். தன்னோடு உறவாடிய பொருட்கள், துடைத்து, துடைத்து தூசி தட்டி பல காலமாக பாதுகாத்து வந்த பொருட்கள். தான் ஒரு நாள் இவைகளைப் பிரிந்து போகவேண்டும் என்று கனவிலும் நினைத்திராத அவைகளை இனி எப்போதும் பார்க்க முடியாதவாறு ஒரேயடியாகப் பிரிந்து போகவேண்டும். ஆனாலும் இத்தனை வருடக்காலங்களில் மூலையில் பழுதுபட்டு கிடந்த பழைய வீணையும் அதற்கு மேல் சுவரில் பழுப்பேறிக்கிடந்த ஒரு மகான் படமும் யாரென்று அறிந்துகொள்ளும் ஆவலே இல்லாமல் போய்விட்டது.

 

வரதராஜன் அங்கிள் படம் மேசைமீது எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் பார்வை அந்த மேசை பக்கம் போனால் போதும். அப்பா அங்கு எப்படித்தான் வருவாரோ, சரியாக வந்துவிடுவார். செல்லக் குழந்தையை அன்பாக அணைத்து வைத்துக்கொள்ளுவது போல அந்தப் படத்தை மார்போடு அணைத்தவாறு, “என் ஃபிரண்ட், வரது” என்று சொல்லும்போதே கண்களில் ஒரு ஒளி மின்னல் அடிக்கும். வெகு நாட்கள் இதன் காரணம் ஆழ்ந்த நட்பு மட்டும்தான் என்று கணித்து வைத்திருந்தது தவறு என்பது ஒரு நாள் அம்மா அந்த இரகசியத்தைப் போட்டு உடைத்ததில் புரிந்தது. ஆம், அப்பா சின்ன வயதில் வரது அங்கிளோட தங்கையை காதலித்தாராம். அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றவரை அவர் அப்பா மிரட்டி தன்னோட தங்கை பெண்ணை கல்யாணம் செய்து வைத்துவிட்டாராம். அவர் மீண்டும் இயல்பான குடும்ப வாழ்க்கைக்கு வருவதற்கு மாதக்கணக்கில் ஆனதையும் அம்மா அதற்காக எடுத்த முயற்சிகளையும் சொல்லியிருந்தது நினைவிற்கு வரும்.

 

“அவன் இப்போது தில்லியில் இருக்கிறான்” என்பார்.

 

வீட்டை விட்டு .. இல்லையில்லை நாட்டை விட்டே வெளியில் போவதற்கு முடிவெடுத்துவிட்டாள். இந்த முடிவு சரிதானா? இந்தக் கேள்வியை ஒவ்வொரு புறத்திலும் ஆய்ந்து எடை போட ஆரம்பித்தாள். அவளுக்கு இந்த வீட்டில் எந்த குறையும் இல்லை. தன்னை நன்றாகத் தெரிந்தவர்கள் வாழும் சூழல். உழைப்பின் வலி கொஞ்சம் அதிகம்தான். வீட்டு வேலைகளோடு சேர்த்து கார்மெண்ட்ஸ் கம்பெனியிலும் ஓயாத வேலை. ஒரு நாளைக்கு 100 முதல் 130 சட்டைகளுக்காவது பட்டன் கட்டவேண்டும், இல்லையென்றால் 250 உள்பாடிக்காவது கொக்கி கட்டவேண்டும். உடம்பு முடியாத நேரத்தில்கூட சூப்பர்வைசர்கிட்ட எந்த தாட்சண்யமும் எதிர்பார்க்க முடியாது. முன்னறிவிப்பின்றி திடீரென்று நின்றுகொண்டது தெரிந்தால் அந்த சூப்பர்வைசர் முகம் போகும் போக்கை நினைத்துப்பார்த்தாள். மற்ற தோழிகள் என்ன நினைப்பார்கள்? பாலாம்மா (அவங்கதான் அங்க சீனியர்) “ஓடுகாலி நாய்..  அவ மினுக்கிக்கிட்டு கண்ட நேரத்துக்கு வரும்போதே நினச்சேன் .. இது உருப்படாத கேசுன்னு. தொலையட்டும் சனியன்” என்பாள். அவளுடைய தகிடுதத்தங்களை ஒரு முறை சூப்பர்வைசர்கிட்ட போட்டுக் கொடுத்ததிலிருந்து அவளுக்கு என்னை எப்படியும் ஒழிச்சுக்கட்ட வேணுமின்னு சங்கல்பம்.

 

“ஏம்மா.. என்னா கனவுலகத்துல மிதந்துக்கினுகீறியா.. பெரிய சமஸ்தானம்னு நினப்போ.. அவளும் அவ பார்வையும் .. தூத்தேறி.. போ, போ போய் ஒழுங்கா வேலையைப் பாரு. ஆவூன்னா பர்மிஷன் கேட்டுக்கிட்டு வந்துடுவ. இன்னைக்கு பேல் போடணும், தெரியுமில்ல” கேட்டுக்கேட்டு அலுத்துப்போன வசனங்கள்.

 

இதைவிட்டு வெளியில் போறதுல எந்த வருத்தமும் நிச்சயம் இருக்காது அவளுக்கு. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வாழ்க்கை நடத்த வழியமைத்த நன்றி மறக்கவில்லை. பள்ளிப்படிப்பைத் தாண்டாதவளுக்கு இதைவிட வேறு எங்கு ஆபீசர் உத்தியோகமா கிடைக்கப்போகிறது.. இதுவே தனக்கு அதிகம் என்பதும் அவளுக்குத் தெரியும்.

 

ஆனால் தான் போகப்போகும் தூர தேசத்தின் புதிய வீடு இப்படி இருக்கவே இருக்காது. திருமணமான குடும்பத் தலைவியாகிவிடுவாள். திருமதி வனிதா ஆகிவிடுவாள். அனைவரும் அவளை மரியாதையுடன் நடத்துவார்கள். ஒரு கம்பெனி முதலாளியின் மனைவி என்ற அந்தஸ்தும் கிடைத்துவிடும். தன் அம்மாவைப் போலவோ, தங்கையைப் போலவோ மாதிரியான வாழ்க்கை அல்ல அது. கற்பனைக்கு எட்டாத ஒரு பணக்கார வாழ்க்கை. இந்த வயதில் ‘முதிர் கன்னி’ என்று பட்டம் வாங்கிய இந்த 32 வயதில் இப்படியொரு வாழ்க்கை என்பது ஒரு வரம்தான் அவளுக்கு. தன்னைச் சுற்றிலும் பொறாமைக் கண்கள் குத்திக் கிழிப்பதை உணர முடிகிறது அவளால்.

 

அம்மா இறந்த பிறகு அப்பாவின் முரட்டுத்தனம் இன்னும் அதிகமாகித்தான் இருந்தது. சென்ற பத்தாண்டுகள் வரை பிரம்பில் அடி வாங்கிய நினைவு இருக்கிறது. ஒரு கட்டத்தில் குடித்து குடித்து குடல் வெந்த நிலையில் வேலைக்கும் ஒழுங்காக செல்லாத நிலையில் வனிதாவின் வருமானத்தில் சாப்பிடும் விதி வந்தவுடன் தான் திமிர் அடங்கியது அப்பாவிற்கு. சிவா அண்ணன் கல்லூரி படிப்பு முடித்தவுடன்  நல்ல வேலை கிடைத்தால் குடும்பம் தலை நிமிர்ந்துவிடும் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது அவன் இறுதியாண்டு படிக்கும் போது பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்து விழுந்து உயிர்விட்ட அந்த நேரத்தில். நிலைகுலைந்து போன அப்பா அதிலிருந்துதான் பெருங்குடிமகனாகி விட்டார். தங்கை சுமத்ராவும் இந்த நரகத்திலிருந்து தப்பித்தால்  போதுமென்று உடன் வேலை பார்ப்பவனை பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவனோடு திருநெல்வேலிப்பக்கம் சென்றுவிட்டாள். அக்காவின் சுமையைச் சற்றேனும் குறைக்கிறோம் என்ற மன நிறைவும் அவளை அப்படியொரு முடிவு எடுக்கச்செய்தது.

 

அன்று அப்பா பேசிய பேச்சு ஒரு பெண்ணால் தன் வாயால் வெளியில் சொல்லவொண்ணாதது. ஒரு பெண் என்று வந்துவிட்டாலே அவளைத் தாக்கும் முதல் ஆயுதம் அவளுடைய தன்மானம் மட்டுமே. அந்தத் தன்மானத்தை தனக்குச் சாதகமாக வளைத்துக்கொண்டால் காலம் முழுவதும் அவளைத் தம்வசம் அடிமைப்படுத்திக்கொள்ள எளிதாகிவிடும் என்ற மட்டமான சிந்தையே பலருக்கும் இருக்கிறது. சுமத்திராவின் சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒரு தாயாக அவளை அரவணைக்கத் தவறவில்லை அவள்.

 

வாரம் முழுவதும் கடுமையாக உழைத்தால் உரூ. 3000 கிடைக்கும். அப்பா தன் செலவுகள் போக உரூ. 1300 கொடுத்தால் அதிகம். வீட்டு வாடகை என்ற முக்கியமான செலவு இல்லாததால் வாழ்க்கை வண்டி ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரச்சனையே ஒவ்வொரு முறையும் அவரிடம் பணம் வாங்குவதுதான்.. தான் கடினமாக உழைத்த பணத்தை தெருவில் வீசுவதுபோல ஒரு நினைப்புடன் தான் தூக்கி எறிவார். ஞாயிற்றுக்கிழமை சிக்கன் பிரியாணி இல்லைனா ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார்.

 

இத்தனைக்குப் பிறகு கார்த்திகேயனுடன் ஒரு புதிய வாழ்க்கையை வாழக் காத்திருக்கிறாள். கார்த்தி பெயரைச் சொல்லும்போதே அவளுக்குள் ஏதோ இராசயண மாற்றம்  உண்டாவதை முகமும் காட்டிக்கொடுத்து விடுகிறது. கார்த்தி மிகவும் அன்பானவன். எதையும் வெளிப்படையாகப் பேசும் அவனுடைய பரந்த மனமே அவனுடன் தயக்கமில்லாமல் பேச வைத்தது அவளுக்கு. இவனோடுதான் நாட்டையும், வீட்டையும் விட்டுப்போக முடிவெடுத்துவிட்டாள். நாளை விடியலில் வீட்டைவிட்டுக்கிளம்பி பேருந்தில் கோவை விமான நிலையம் சென்று அங்கு தனக்காகக் காத்திருக்கும் கார்த்தியுடன் சேர்ந்து அவனுடைய மனைவியாக அபுதாபி பறக்கப்போகிறாள். முதன் முதல் அவனைச் சந்தித்த அந்த நாள் இன்றும் பசுமையாக இருக்கிறது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் தான் வேலை செய்யும் கம்பெனிக்கு சரக்கு ஆர்டர் கொடுப்பதற்காக வந்தான். செக்யூரிட்டி வெளியில் சென்றிருந்ததால் வெகு நேரம் கேட்டிற்கு வெளியே கார் ஒலிப்பான் அடித்தபடி இருக்க, வனிதா சூப்பர்வைசரைப் பார்க்க வெளியில் வந்தவள் கேட்டைத் திறக்கச் செல்லவும் அதற்குள் செக்யூரிட்டி வரவும் சரியாக இருந்தது. உள்ளே வந்தவன் கோபமாகக் கத்த ஆரம்பிக்க அதற்குள் வனிதா இடைமறித்து செக்யூரிட்டி கழிவறை சென்றிருந்ததைக்கூறி சமாதானப்படுத்த முயன்றாள். அவளைப்பார்த்தவன் ஒரு வினாடி தடுமாறி மீண்டும் தொடர்ந்தான். அவள் நடந்ததைச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திராமல் மளமளவென உள்ளே வந்துவிட்டாள். உள்ளே வந்தும் தான் நடந்து கொண்டது சரியில்லையோ, வந்தவரை அவமதித்ததுபோல் ஆகியிருக்குமோ என்றெல்லாம் பலவாறு யோசித்தவள் வேலை மும்முரத்தில் கொஞ்ச நேரத்தில் அதை மறந்தும்விட்டாள்.

 

சூப்பர்வைசர் வந்து சில சேம்பிள் பீசுகள் கொண்டுவரும்படி சொல்லியனுப்பவும் அவளும் எடுத்துக்கொண்டு போனாள். அங்கு கேட்டில் பார்த்த கார்த்தி தன்னை முறைத்துப்பார்ப்பது போல் தோன்றியதில் சற்று சங்கடப்பட்டவள் “இல்லை, அது வந்து, சாரி, பதில் ஏதும் சொல்லாமல்கூட வந்துவிட்டேன்” என்று ஏதேதோ சொல்லி இழுத்தாள். எங்கே மீண்டும் கோபப்பட்டு பேசிவிடுவானோ என்று நினைத்தபோது, அவன் சட்டென்று புன்னகைத்தவாறு,

“ஓ அப்ப நீங்க பொறுப்பில்லையா என்னை தெருவில் காக்க வைத்ததற்கு” என்று கிண்டலாகக் கேட்டவுடன் விகல்பமில்லாத அவனுடைய புன்னகை அவளுக்கும் தொற்றிக்கொள்ள, ஒரு சிநேகபாவம் எங்கோ முளைவிட்டது. அதன் பிறகு அவன் மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதம் ஒரு முறையோ வரும்போது பேசும் வாய்ப்பு கிடைத்து, மெல்ல மெல்ல அது நல்ல நட்பாக மலர ஆரம்பித்தது. எல்லோரிடமும் யதார்த்தமாக, வித்தியாசம் பாராமல் பழகும் அவனுடைய குணம் இவளையும் பெரிதும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. சாதாரணமாக இருந்த நட்பு ஒரு நாள் அக்கறை காட்டும் அன்பாக மாற்றிய சம்பவமும் நடந்தது.

 

கார்த்தி அன்று கம்பெனிக்கு வந்தவன் அவசரமாக ஆர்டர் வந்துவிட்டதாகக் கூறி தான் ஏற்கனவே சொல்லியிருந்ததைவிட அதிகமாகத் தேவை என்று வாதிட்டுக்கொண்டிருந்தான். அடுத்தநாள் கிளம்புவதற்குள் தயார் செய்து தரவேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தான். சூப்பர்வைசரும் வனிதாவைக் கையைக்காட்டி, அவள் மனது வைத்தால்தான் நடக்கும் என்று சொல்லிவிட்டான். உரிமையோடு கார்த்தியும் அவளைப் பார்த்து முடித்து கொடுக்கும்படி கேட்க, அவளால் தட்ட முடியவில்லை. கூட வேலை பார்ப்பவர்களையும் 2 மணி நேரம் அதிகப்படியான வேலை பார்த்தால் முடித்துக்கொடுத்து விடலாம் என்று பேசி சம்மதிக்க வைத்தாள். இந்த நேரத்தில் தான் மகள் வீட்டிற்கு வரவேண்டிய நேரம் தாண்டியும் காணாமல் அவளுடைய தந்தை நேராக வந்துவிட்டதோடு, குடித்திருந்ததால் அவளை வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டார். கார்த்தியும், சூப்பர்வைசரும் எவ்வளவோ சொல்லியும் குடி போதையில் இருந்த அவர் கேட்கும் நிலையில் இல்லை. அவமானம் பிடிங்கித் தின்றதால் நிலைகுலைந்து நின்ற வனிதாவைப் பார்க்க பாவமாக இருந்தது கார்த்திக்கு. தன்னால்தானே அவளுக்கு இந்த நிலை என்பதில் இன்னும் வருத்தம் அதிகமானது. அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாலும் வனிதாவின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு. வேலை முடிந்து ஊருக்குச் சென்றவன் ஒரு நாள் திடீரென்று அவளுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான். அவளுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. காரணம் அவளும் அவனை அவ்வப்போது நினைத்தவாறுதான் இருந்தாள். அவளைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டவன் பின் அடிக்கடி பேச ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் அது காதலாக மாறிப்போனது. வனிதாவைவிட 6 மாதம் அல்லது அதற்கு சற்று அதிகமான வயதில் இருந்தான். வியாபாரம் என்று ஓடிக்கொண்டிருந்தவன், திடீரென்று அப்பா மாரடைப்பில் காலமாக அதிலிருந்து அவனுடைய வேலைகளும், பொறுப்புகளும் கூடிப்போக அவனுடைய அம்மா எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் திருமணம் என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறான். அம்மாவின் புலம்பலுக்கும்  அவன் செவி சாய்க்கவில்லை. அம்மாவிற்கு அவன் ஒரே பையன் என்பதால் வீட்டில் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத நிலையில் அவனுக்கு வனிதாவைப் பிடித்துப்போனது. அவன் அம்மாவிடமும் பேசினான். ஒரு வழியாக நல்ல காரியம் முடிந்தால் போதும் என்று நினைத்த அவன் தாய் மறுப்பேதும் சொல்லும் நிலையில் இல்லை. அவளிடமும் தன் விருப்பத்தைச் சொன்னான். அவள் சற்றும் தயங்காமல் தன் நிலையை வெளிப்படையாகச் சொல்லி, ‘என்கிட்ட இருப்பது, இந்தத் தோடும், செயினும், 6 புடவைகளும்தான்’ என்றபோது அவனும் மிக வெளிப்படையாக தன் அம்மாவைப்பற்றி எடுத்துக்கூறி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவளை ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டார்கள் என்பதையும் சொல்லி அவளைச் சம்மதிக்க வைத்தான்.

 

அப்பாவிடம் சொன்னவுடன் அவள் எதிர்பார்த்ததுபோல் கண்டபடி பேச ஆரம்பித்தார். கார்த்தி நேரடியாக வந்து பேசியபோதும் அவனை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்தாள். இரண்டு மனதாக சம்மதித்தவர் அன்றிலிருந்து எதையோ பறிகொடுத்தது போலவே சுற்றிக்கொண்டிருந்தார். யோசித்துக்கொண்டே தன்னையறியாமல் சன்னல் கம்பியில் நங்கென்று நெற்றியில் இடித்துக்கொண்டாள். திரைச்சீலையின் நெடியும் சேர்ந்து உறுத்த ஆரம்பித்திருந்தது. அடுத்த நாள் கிளம்பிவிட வேண்டியதுதான். தங்கை சுமத்திராவிடமும் பிற்பாடு சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தாள்.

 

அப்பாவின் முகத்தைப்பார்த்து சொல்லும் துணிவு கூட வராமல், அப்பாவிற்கும், தங்கைக்குமாகச் சேர்த்து ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய உடமைகளை ஒரு சின்ன தோல் பையில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டாள். தான் இல்லாமல் அப்பா சாப்பாட்டிற்குக் கூட இல்லாமல் சிரமப்படுவாரே என்று ஒரு உறுத்தல் இரணப்படுத்திக்கொண்டேதான் இருந்தது.

 

குறித்த நேரத்தில் கிளம்பியாகிவிட்டது. திருப்பூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றவள், பேருந்தில் ஏறும்போது யாரோ தோளை தொட்டதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்தாள்.

 

“அக்கா, ஊருக்குப் போறாயாக்கா” என்று வாஞ்சையுடன் அன்பொழுக தங்கை கேட்ட கேள்வி அவளுக்குள் இருந்த தாய்மையை பீரீட்டு வெளியே கொண்டுவந்தது. சுமாவை அள்ளி அணைத்துக்கொண்டவள் “எப்படிடா இருக்கே.. ஏன் போன் கூட பண்ணல” என்றாள் உளம் நெகிழ.

 

அக்கா என்பது சுமாவைப் பொறுத்தவரை அம்மா என்ற வார்த்தையின் மறு வடிவம்தான். அந்த அளவிற்கு அம்மாவின் இழப்பே உணராதவாறு பாசத்தைக் கொட்டியவள்.

 

“அக்கா,ஒரு சந்தோசமான செய்தியை முதல்ல உங்கிட்ட சொல்லணும்னுதான் ஓடிவந்தேன். நல்ல வேளை உன்னைப் பார்த்தேன். நீ எப்பக்கா திரும்பி வருவ. நான் இன்னும் 4 நாட்கள் தங்கிட்டுதான் போகப்போறேன். உன் கையால ஒரு வாய் சோறு சாப்பிடணும்னுதான் ஆசையா வந்தேன் அக்கா” அவள் முகத்தில் தெரிந்த வெட்கத்தின் ரேகை ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது அவளுக்கு.

 

“அப்படியா, சொல்லுடா செல்லம். அப்படியென்ன சந்தோசமான விசயம்”

 

”நீ வீட்டுக்கு வந்தப்புறம் சொல்றேனே..”

 

“இல்ல, அதுவரை தாங்காது எனக்கு. இப்பவே சொல்லு. நானும் உனக்கு ஒரு விசயம் சொல்லலாம் என்றிருந்தேன்” என்றாள்.

 

அக்காவின் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்காதா என்று பல காலமாக ஏங்கிக் கிடந்தவளுக்கு நல்ல சேதி என்றவுடன் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது சுமாவிற்கு. சோர்ந்துபோய் இருந்த சுமத்திராவிடம் அன்போடு கரம் பற்றி விசார்த்தவள், 5 ஆண்டிற்குப் பிறகு முதன் முதலில் அன்புத் தங்கை குழந்தை உண்டாகியிருப்பதைக் கூறியவுடன் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியில் ஒரு நொடி அனைத்தையும் மறந்தே போனாள்…

 

பேருந்து புறப்படப்போவதை அறிவித்த நடத்துனரின் விசில் சத்தம் அவளை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவந்தது. அவசரத்தில் என்ன செய்வது என்று யோசிக்கவே முடியாமல் திணறியது தெரிந்தது. சுமா கட்டாயப்படுத்தி பேருந்தில் ஏற்றிவிட்டாள். “அக்கா, நீ போயிட்டு வாக்கா, வந்து பேசிக்கலாம். நான் உனக்காகக் காத்திருக்கிறேன்” என்றாள்.

 

வழியெல்லாம் அவள் அம்மா இறுதியாகச் சொன்னது இன்றும் பசுமையாகவே இருந்தது. “இந்த வீடு ஒருக்காலும் சிதறிப்போக விட்டுவிடாதே” என்று கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டது ஏதோ செய்தது. அம்மாவின் அந்த நம்பிக்கையும், தன் இடத்தில் அவளை வைத்துப்பார்த்த பார்வையும் கொஞ்சமும் நினைவை விட்டு அகலவே இல்லை அவளுக்கு.

 

பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் திடீரென்று அவளுடைய சுய உணர்வு விழித்துக்கொண்டது. தப்பித்துவிடு! அவள் தப்பித்தே ஆகவேண்டும்!இந்தப் பாழ் நரகத்திலிருந்து தன்னைக் காக்கப்போகிறான் கார்த்திகேயன் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு மட்டுமே இருந்தது. தான் மட்டும் ஏன் வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே கழிக்கவேண்டும். தனக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை இல்லையா என்ன என்ற கேள்வி எழுந்தது அவளுக்குள்.

 

விமான நிலையத்தின் சந்தடியில் அவளுடைய உளப்பேச்சு எடுபடவில்லை. பரபரப்பான அந்த உலகில் நுழைந்தவுடன் ஏதோ காணாத தேசத்தில் நுழைந்த ஒரு உணர்வு. கார்த்தியை எங்கே தேடுவது என்று சற்றே தடுமாறியவள், கைபேசியில் அழைக்கலாம் என்று மெல்ல புரிந்தது. கைபேசி அழைப்பை ஏற்கும் நிலையில் அவன் இல்லை என்ற வாசகம் ரொம்பவும் பயமுறுத்தியது அவளை. சில நிமிடங்கள்தான்… ஆதரவாக ஒரு கரம் தோளில் விழுந்தது. கார்த்தியின் அன்பு மொழி, “என்னடா, வனிதா பயந்துட்டியா” என்றவன் அவள் கையைப்பற்றியவாறு நடக்க ஆரம்பித்துவிட்டான். ஏதேதோ அவன் பேசியது எதுவுமே காதில் விழவேயில்லை. மனம் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது…

 

விமான நிலையத்தின் உள் வாயிற்கதவின் சோதனையின் போது கடவுச்சீட்டைக் கேட்டபோது கூட அவள் சுய நினைவில் இல்லை. கார்த்தி தானே அவள் கைப்பையை வாங்கி அதிலிருந்த கடவுச்சீட்டை எடுத்துக் கொடுத்தான். என்ன ஆச்சு இவளுக்கு என்று யோசித்தவாறு கையை இறுகப்பற்றிக்கொண்டான்.. விமான நிலையம் முழுவதும் செக்யூரிட்டி மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. யாராவது அமைச்சர் வருவார்கள் போல என்று அவன் சொல்லிக்கொண்டே வந்தான். எல்லா சோதனைகளும் முடிந்து, ஒரு வழியாக போர்டிங் பாஸ் கையில் கிடைத்தவுடன் பெரு மூச்சு விட்டவாறு அவள் கைப்பிடியை சற்றே தளர்த்தினான் கார்த்தி. அறிவிப்புகள் வந்தவண்ணம் இருந்தன. தங்கள் விமானத்திற்கான வாயில் எண் அழைப்பிற்காகக் காத்திருந்தான் கார்த்தி. அந்த அறிவிப்பும் வந்தேவிட்டது. அக்கம்பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் வரிசையில் நிற்கத் தயாராகிவிட்டார்கள். குழந்தையுடன் இருந்த பெற்றோர்களுக்கு முதல் அழைப்பும், முதியோருக்கு அடுத்த அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தன. இவர்கள் முறையும் வந்தது. அதுவரை இயந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தவளின் மனம் சட்டென்று விழித்துக்கொண்டு பரபரப்பாகிவிட்டது..கால்கள் மெல்ல பின்னிக்கொண்டு அடியெடுக்க மறுத்துவிட்டன. அவளுடைய எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கார்த்தி கையைப்பிடித்து இழுத்தும் பலனில்லை. பின்னால் நிற்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க ஒதுங்கி வழிவிட்டான் அவன்..

 

இறுதிக்கட்டம் வந்துவிட்டது. இதற்குமேல் யோசிக்க ஏதும் இல்லை. அறிவிப்பு உணர்த்தியது அதை. படபடப்பில் இதயம் துள்ளி  வாய் வழியாகவே வெளியில் வந்து குதித்துவிடும் போலிருந்தது. ஆழ்ந்த பிரார்த்தனையுடன் அமைதியாக நகர எவ்வளவோ முயன்றும் எந்தப் பலனும் இல்லை. அவள் இருதயத்தில் ஓயாமல் ஏதோ ஓலமிட்டவாறு இருந்தது.

 

“வனிதா, வா. என்ன செய்யுற!”

 

அவளை இழுக்க முயன்றான் அவன்.

 

”வந்துவிடு வனிதா! வா..”

 

முடியாது! இல்லை! இல்லை! நிச்சயமாக என்னால் வரமுடியாது.அவள் கைகள் அவன் அணைப்பிலிருந்து வேகமாக விடுவித்துக்கொண்டன.

 

“வனிதா.. வனி.. என்னாச்சு!”

காலம் கடந்துகொண்டே இருக்கிறது. இனி நொடியும் தாமதிக்க முடியாது என்ற சூழல். அவன் அவளைப் பின்தொடரச் சொல்லிவிட்டு இறுதியான தடுப்பு வாயிலினுள் நுழைய வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டான்.

 

எல்லாம் முடிந்துவிட்டது.. அவனுடைய பரபரப்பான, அதிர்ச்சியான, காரணமே புரியாத அந்தப் பார்வையுடன் கையை ஆட்டுவது தெரிந்தது! அவன் அவள் பார்வையிலிருந்து மறைந்தே போனான்..இறுதியாக வெளிறிப்போன தன்னுடைய முகத்தை மட்டுமே காட்ட முடிந்தது அவனுக்கு!யாராலும் காப்பாற்ற முடியாத கூண்டுக்குள் அடைபட்ட ஒரு மிருகமாகவே ஆகிவிட்டாள். அவள் பார்வையில் காதலோ, அன்பின் வெளிப்பாடோ, இனிய நினைவுகளோ, குறைந்தபட்சம் அவனுக்கு விடை கொடுக்கும் மன நிலையோ என எதுவுமே இல்லாத வெற்றுப்பார்வையுடன் நின்றிருந்தாள்…

Series Navigation“The Impossible Girl” – Publicationஇரு கோடுகள் (இரண்டாம் பாகம்)
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *