வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்

வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் !

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விலாவாரியாக பேசுகிறது புத்தகம்.

காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு

– முதல் வேலையில் “பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது
– விலை மாதர் இல்லம் சென்றது
– பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது
– முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது
– நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் ஆவலுடன் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

இப்படி எத்தனையோ சம்பவங்கள் சொல்கிறார்.

செட்டியார் சமூகத்தில் சுவீகாரம் செய்வது குறித்து பல தகவல்கள் தெரிய வருகிறது. ” ஏழைகளுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். பணக்காரர்கள் சிலருக்கு குழந்தைகள் இருக்காது. அவர்கள் ஒரு குறிப்பிட தொகை கொடுத்து தெரிந்த உறவினரிடம் குழந்தைகள் தத்தெடுப்பர்” என்கிறார்.

வாழ முடியாதவர்கள் என்கிற தலைப்பில் கலைஞர் எழுதிய சிறுகதையை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார். மனைவியை இழந்த கணவன். தன் மகளுடனே உறவு கொள்கிறான் என்கிறதாம் இக்கதை. இது பற்றி இவ்வாறு சொல்கிறார் கண்ணதாசன் ” வெளி நாட்டவர்கள் கூட வறுமையை சித்தரிக்கும் போது பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால் மகளை கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்கு ஆசிரியர்”

கண்ணதாசனின் அனுபவம் ஆங்காங்கு தத்துவமாக/ கருத்தாக வெளிப்படுகிறது

” தன் துயரத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது !”

” சில நேரங்களில் துணிவை மட்டுமே மூல தனமாக கொண்டு முன்னேற்றத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தை மனிதனால் ஆக்கி கொள்ள முடியும்.”

” அரசியல் வாதிகளுடன் சில காலம் பழகியதிலேயே பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தது. தாம் கொண்ட கொள்கைகளில் யாருமே உறுதியாக இல்லை. ஜனங்கள் முட்டாள்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே அரசியல் நடத்துகிறார்கள் ”

அரசியல் வாழ்க்கையில் பல சம்பவங்களை மிக விரிவாக விவரிக்கிறார். குறிப்பாக எம். எல். ஏ வாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க சொல்லி தி.மு.க சொல்ல, இவரோ தன் சொந்த ஊரான காரைக்குடி அருகே ஒரு தொகுதியில் நின்று தோற்றது ( ஆயிரம் விளக்கில் நின்றவர் வென்று விட்டாராம்)

சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, ” நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்” என்றாராம் !!

டால்மியாபுரம் போராட்டம் பற்றி மிக விரிவாக சொல்கிறார். அப்போது தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிகழ்சிகள் நடந்தேறி உள்ளன. முதல் குருப் ஓடாத ரயில் முன் படுத்து கைதாகி விட்டது. அடுத்த குழுவிற்கு கண்ணதாசன் தலைமை ஏற்றிருக்கிறார். அந்த குழு சென்ற போது ரயில் நகர துவங்க, ஓடும் ரயில் முன் போய் விழ சொன்னார்களாம் ! ஓடும் ரயில் முன் விழுந்தால் நேரே சாக வேண்டியது தான் என கண்ணதாசன் செய்ய வில்லை. இந்த போராட்டத்தில் சிறைக்கு போய் பல மாதம் சிறையில் வாடி, குடும்பம் பணம் இன்றி கஷ்டப்பட்ட பின் தான் அரசியல் சற்று புளிக்க துவங்கி உள்ளது அவருக்கு !

கடைசி நூறு பக்கங்களில் தி.மு.கவில் அண்ணா- சம்பத் இடையே இருந்த சண்டை பற்றி விரிவாக பேசுகிறார். இவர் சம்பத் பக்கம் நின்றிருக்கிறார். அண்ணாவின் கருப்பு பக்கங்களும் இந்த புத்தகத்தில் பேச படுவது ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை நேரடியாக பல இடங்களிலும் ” கலை ரசிகர்” என மறைமுகமாக பல இடங்களிலும் தாக்குகிறார்.

பெரிய சம்பவங்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுகள் எடுக்கும் போது தான் நமக்கெல்லாம் தூக்கம் பாதிக்கும். ஆனால் கண்ணதாசனோ பல முறை அத்தகைய சமபவங்கள் பற்றி சொல்லும் போதெல்லாம் அன்று இரவு நன்கு உறங்கினேன் என்று தான் முடிக்கிறார் !

வனவாசம் என அவர் சொல்லுவது தி.மு.கவில் இருந்த கால கட்டத்தை தான் ! கண்ண தாசனின் பாடல்களுக்கு ரசிகனான நான் அவர் அந்த பாடல்கள் குறித்தும் அவை எழுதிய சூழல், சில சுவையான சம்பவங்கள் எதிர் பார்த்தேன். ஆனால் இந்த நூல் எழுதிய கால கட்டத்தில் அவர் ஒரு புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்தும், இந்த நூல் அவர் சுய சரிதை என்றாலும் அவர் பாடல்கள் குறித்து அதிகம் பேசாதது சற்று ஏமாற்றமே.

இது முழுக்க முழுக்க கண்ணதாசன் என்கிற தனி நபரின் தி.மு.க எதிரான நிலை பாடு ஏன் என்பதற்கான புத்தகம். கலைஞர் அல்லது அண்ணா அபிமானிகளிடம் இதற்கு நேர் எதிரான தங்கள் நிலை சார்ந்த கருத்துகள் இருக்க கூடும்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நடக்கும் சம்பவங்களை இவ்வளவு விரிவாக பேசிய புத்தகம் என்கிற அளவில் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட புத்தகமே !

Series Navigationபாதியில் நொறுங்கிய என் கனவுஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ